இந்த வார தியேட்டர் ரிலீஸ்… என்ன படம் பார்க்கலாம்?

Published On:

| By uthay Padagalingam

பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் திரைப்படங்கள் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும்? திரையுலகில் பலரை ஆட்டுவிக்கும் கேள்வி இது. பொங்கல், குடியரசு தின வெளியீடுகள் தியேட்டரில் இருக்கும் நிலையில் எப்படிப்பட்ட திரைப்படங்கள் வரவேற்பைப் பெறும் என்கிற கேள்வி அதன் பின்னிருக்கும். February theatre movie release

அது போதாதென்று ‘குழந்தைங்க பரீட்சைக்கு படிக்கிறாங்க’ என்று குடும்பத்துடன் படம் பார்க்க வரும் ஆடியன்ஸ் ‘கும்பிடு’ போடுவார்கள். அப்படியிருக்க, பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தில் வெளியாகும் படங்களில் எது வெற்றியைப் பெறும், ரசிகர்களைக் குதூகலிக்க வைக்கும்? மிகச்சிறப்பான உள்ளடக்கத்தைக் கொண்ட படங்கள் அதனைச் சாதிக்கும்.

சரி, இந்த வாரம் தமிழில் என்னென்ன படங்கள் வெளியாகின்றன?

டிராகன்

’லவ் டுடே’வின் பெருவெற்றிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்திருக்கும் படம் இது. ‘ஓ மை கடவுளே’ தந்த அஸ்வத் மாரிமுத்து இதனை இயக்கியிருக்கிறார். அனுபமா பரமேஸ்வரன், காயாடு லோஹர் இதில் நாயகிகளாக நடித்திருக்கின்றனர்.

இவர்களோடு மிஸ்கின், கௌதம், கே.எஸ்.ரவிக்குமார், ஜார்ஜ் மரியான், விஜே சித்து, ஹர்ஷத்கான் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். சினேகாவோடு சேர்ந்து இன்னொரு பிரபலம் இதில் ‘கேமியோ’ செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

லியோன் ஜேம்ஸ் இசையில் வெளியான பாடல்கள் இளைய தலைமுறையின் பிளேலிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கிறது.

இதன் ட்ரெய்லர் பார்த்துவிட்டு ‘டான்’ படத்தின் சாயல் இதிலிருக்கிறது என்ற கணிப்புகள் சமூகவலைதளங்களில் வந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தின் கடைசி 20 நிமிடங்கள் ரசிகர்களை இருக்கை நுனியில் இருக்க வைக்கும் என்று பேட்டிகளில் குறிப்பிட்டு வருகிறது படக்குழு. மேற்சொன்ன தகவல்களே ‘டிராகன்’ குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கின்றன.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய புகழ் பெற்ற பாடலின் முதல் வரிகளை ‘டைட்டில்’ ஆக அமைத்திருக்கிறார் நடிகர் தனுஷ். சுருக்கமாக ‘NEEK’ என்கிறது படக்குழு.

இப்படத்தின் இயக்குனர் என்றபோதும், இதில் தனுஷ் முழுநீளப் பாத்திரத்தில் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை ‘கதைசொல்லி’யாகத் திரைக்கதையில் தனக்கான இடத்தை அவர் எடுத்துக் கொண்டிருக்கலாம்.

அவருக்கே பிரதான இடம் இல்லாத அளவுக்குத் திரைக்கதையில் அப்படி என்ன விஷயம் புதிதாக இருக்க முடியும்? அதற்குப் பதிலாக, 2கே கிட்ஸ்களின் காதலை இப்படம் பேசியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தனுஷின் சகோதரி மகனும், அவரிடத்தில் உதவி இயக்குனராகவும் இருந்த பவிஷ் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். லியோவில் விஜய் மகனாக நடித்த மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா, ரம்யா ரங்கநாதன், வெங்கடேஷ், சித்தார்த் சங்கர் உள்ளிட்ட இளைய தலைமுறையோடு சரத்குமார், ஆடுகளம் நரேன் சரண்யா உள்ளிட்ட மூத்த கலைஞர்களும் இதில் நடித்துள்ளனர்.

பிரியங்கா மோகன் இப்படத்தில் வரும் ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடலில் தோன்றியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே சூப்பர்ஹிட் அந்தஸ்தை பெற்றுவிட்டன.

இவையனைத்தையும் தாண்டி, இப்படத்தின் ட்ரெய்லரில் ‘ஜாலியா வாங்க ஜாலியா போங்க’ என்று தனுஷ் பேசியிருக்கும் வசனம் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இன்னொரு ‘பிரேமலு’வாக நல்லனுபவம் தரும் என்கிற எண்ணத்தைத் தந்திருக்கிறது இந்த ‘NEEK’.  

டிராகன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இரண்டுமே காதலர் தின வெளியீடாக வந்திருக்க வேண்டியவை என்பது உபதகவல்.

ராமம் ராகவம்

தெலுங்கு திரையுலகில் நகைச்சுவை நடிகராகத் திகழும் இளையவர்களில் ஒருவர் தன்ராஜ் கொரனானி. ’விமானம்’ படத்தில் சமுத்திரக்கனி உடன் இணைந்து நடித்திருந்தார். அந்த நட்பின் வெளிப்பாடாக, இப்போது மீண்டும் இருவரும் ‘ராமம் ராகவம்’ படத்தில் இணைந்திருக்கின்றனர். அதனால், இப்படம் தமிழிலும் வெளியாகிறது.

‘ராமம் ராகவம்’ படத்தில் சமுத்திரக்கனியும் தன்ராஜும் தந்தை – மகனாக நடித்திருக்கின்றனர். ’கண்டிப்பான அப்பா, பொறுப்பில்லாமல் திரியும் மகன்’ என்ற வழக்கமான ஒருவரிக் கதையை இப்படம் கொண்டிருப்பதாகக் காட்டியது இதன் ட்ரெய்லர். அதேநேரத்தில், திரையில் உணர்ச்சியமயமான தருணங்கள் பலவற்றைக் கொண்டிருக்கும் என்கிற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

திரைக்கதை சிறப்பாக இருக்கும் பட்சத்தில், இப்படம் நல்ல கவனிப்பைப் பெறக்கூடும். அது நிச்சயம் நிகழும் என்ற நம்பிக்கையில், ‘சின்ன பட்ஜெட்டில் உருவான ராமம் ராகவம் படத்திற்குப் போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை’ என்று வருத்தம் தெரிவித்திருந்தார் சமுத்திரக்கனி.

ஹரிஷ் உத்தமன், மோக்‌ஷா, சுனில், சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அருண் சிலுவெரு இசையமைத்திருக்கிறார்.

இன்னும் சில படங்கள்!

ஜித்து அஷ்ரப் இயக்கத்தில், ஜேக்ஸ் பிஜோய் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘ஆபிசர் ஆன் டியூட்டி’ எனும் மலையாளத் திரைப்படம் வரும் 20ஆம் தேதியன்று வெளியாகிறது. குஞ்சாக்கோ போபன், ஜகதீஷ், பிரியா மணி, விஷாக் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். குற்ற விசாரணை மேற்கொள்ளும் ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்வில் நடக்கும் ‘த்ரில்’ சம்பவங்களை முன்வைத்து இப்படத்தின் கதை அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

’மார்கோ’ எனும் படத்தின் வழியே பெரும் வெற்றியைச் சுவைத்திருக்கிறார் நடிகர் உன்னி முகுந்தன். அதையடுத்து, அவர் நடித்துள்ள ‘கெட் செட் பேபி’ திரைப்படம் வரும் 21ஆம் தேதியன்று வெளியாகிறது. நிகிலா விமல், மீரா வாசுதேவன், செம்பன் வினொத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.

மகப்பேறு மருத்துவராக வேண்டுமென்ற முனைப்புடன் படித்து வெற்றி பெற்ற இளைஞர், அத்துறையில் எதிர்கொள்ளும் அனுபவங்களை நகைச்சுவையாகச் சொல்வதாக இப்படம் இருக்கிறதாம்.

அர்ஜுன் கபூர், பூமி பேத்னேகர் உடன் ரகுல் பிரீத்சிங் நடித்துள்ள ‘மேரி ஹஸ்பெண்ட் கி பீவி’ இந்திப்படமும் இந்த வாரம் வெளியாகிறது. ’எனது கணவனின் மனைவி’ என்பது இந்த டைட்டிலுக்கான அர்த்தம். அதுவே, இப்படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது போக இன்னும் சில படங்கள் கடைசிநேரத்தில் இந்தப் பட்டியலில் இணையக்கூடும். இவற்றில் எதனை நாம் பார்க்கலாம்? மேற்சொன்ன படங்கள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் கவனம் ஈர்க்கும் என்பது நமது அனுமானம். அது சரிதானா என்பது வரும் வெள்ளிக்கிழமையன்று தெளிவாகத் தெரிந்துவிடும். February theatre movie release

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share