உங்கள் சேமிப்பே உங்கள் சிறை !

சிறப்புக் கட்டுரை

சத்குரு

வாழ்க்கை முழுவதும் எல்லோருமே சேமித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒருவர் பொருள் சேமிக்கிறார்; இன்னொருவர் உறவுகளைச் சேமிக்கிறார்; மற்றொருவரோ
அறிவைச் சேமிக்கிறார். அவரவருக்கு விருப்பமான ஏதோ ஒன்றை சேமிப்பதை பொதுவாக அனைவருமே செய்கிறார்கள்.

இப்படி நீங்கள் சேமித்ததைத்தான், ‘நான்’ என்று உணர்கிறீர்கள். பிரச்சனை இங்குதான் எழுகிறது. நீங்கள் சேமித்ததோடு உங்களை அடையாளப்படுத்திவிட்டீர்கள்.
அதனால் உங்களது இயல்பான அடையாளம் கரைந்துபோய்விட்டது. சேமிப்பு உங்கள் வாழ்வை வளமாக்குகிறது என்பது உண்மைதான்; அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.

உங்களில் யார் செல்வந்தர்? அதிகம் சேமித்தவர்தானே! ஆனால் இப்போது என்ன சிக்கல் என்றால், நீங்கள் சேமித்த பொருட்களோடு உங்களையும் அடையாளப்படுத்திக்
கொண்டு, நீங்களும் ஒரு பொருளாக மாறிவிட்டீர்கள். உங்களது உயிர்ப்பு அந்த நிமிடமே காணாமல் போய்விடுகிறது.

நீங்கள் உறவுகளாக, நட்புகளாக மனிதர்களையும் சேமிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் அவர்களையும் பொருட்களைப் போலத்தானே நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்? அவர்கள் உங்கள் உடைமைகள்தானே? உங்கள் கணவன் அல்லது மனைவி, குழந்தைகள் அனைவரும் உங்கள் சொத்துதானே? உயிரற்ற பொருட்களைச் சேமித்துப் பார்த்து, அதில் திருப்தி ஏற்படாதபோது உயிருள்ளவற்றையும் சேமிக்க ஆரம்பிக்கிறீர்கள், அப்படித்தானே?,

Your savings is your prison Sadhguru

சேமிப்பதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அவற்றோடு உங்களை அடையாளப்படுத்திக் கொண்டதால், உங்கள் உயிரின் தன்மையான ஆனந்தத்தை இப்போது உங்களால் உணரமுடியாமல் போய்விட்டது. இப்போதைக்கு உங்களது அனுபவத்தில் உள்ளது எல்லாமே பொருட்கள்தான். உயிரை, வாழ்வை நீங்கள் உணராததால், நீங்களும் ஏதோ ஒரு பொருளாகவே வாழ்கிறீர்கள்.

இந்த உலகத்தில் ஏதோ ஒரு பொருளோடு முதலில் உங்களை அடையாளப்படுத்திக் கொண்டீர்கள். பிறகு அதுவாகவே மாறினீர்கள். சிறிது காலம் சென்றபின் அது உங்களுக்குப் போதுமானதாக இல்லை என உணர்ந்தீர்கள். அதனால் இன்னொன்றையும் சேர்த்துக்கொண்டீர்கள்.

உங்கள் அடையாளம் மாறியது. சில காலம் நன்றாகப் போனது. பிறகு அதுவும் உங்களுக்குப் போதவில்லை. மீண்டும் இன்னொன்றை சேர்த்தீர்கள். பிறகு மற்றொன்று! இப்படியே இந்த பிரபஞ்சம் முழுவதையுமே உங்களுடையதாக்கினாலும், நீங்கள் நிறைவடைய மாட்டீர்கள்.

ஏன் இப்படி? உங்களுக்குள் இருக்கும் உயிர்த்தன்மை இதுபோன்ற சின்னச்சின்ன விஷயங்களில் திருப்தியடைந்து விடுவதில்லை. அதனுடைய இயல்பும், இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவனுடைய இயல்பும் ஒன்றே.

இரண்டுமே எல்லையற்றது. உங்களுக்குள் இருக்கும் படைப்பின் மூலமான உயிர்த்தன்மையை எந்த அடையாளங்களுக்குள்ளும் சுருக்கிவிட முடியாது.
எதனோடு நீங்கள் அதை அடையாளப்படுத்தினாலும், அது கஷ்டப்படுகிறது; இருப்பு கொள்ளாமல் தவிக்கிறது. அந்த அடையாளங்களிலிருந்து விடுபட முயற்சிக்கிறது.

எல்லையற்ற அதன் சுபாவத்தை ஒரு எல்லைக்குள் அடையாளப்படுத்த நீங்கள் முயன்றால், அது போராடும். அந்த போராட்டம்தான் நீங்கள் அனுபவிக்கும் துயரம்.
பலவிதமான அடையாளங்களில் உங்களை நீங்களே கட்டிப் போட்டு வைத்திருக்கிறீர்கள். இந்தக் கட்டுகளை அவிழ்த்தாலே போதும்… ஆனந்தத்தைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். ஆனந்தம் உங்கள் காலடியில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கும்!

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்….

எது இருந்தால் சிறப்பு… தன்னம்பிக்கையா? தெளிவா?சத்குரு

நடிகையிடம் அத்துமீறிய கல்லூரி மாணவர் சஸ்பெண்ட்!

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: விசாரணைக் குழு அமைப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *