இளம் தலைமுறையினர் சிகையலங்கார சிக்கல்கள்: தீர்வுகளை நோக்கிய முயற்சிகள்!

சிறப்புக் கட்டுரை தமிழகம்

நா.மணி

அனைவரும் தலைமுடியை சீராக வெட்டிக்கொண்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு வருவது ஒரு பெரிய சவாலாக மாறி உள்ளது. ஒரு மாணவனின் தலையை பார்த்தவுடன், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், சீற்றம், எரிச்சல் அடையும் நிலைக்கு சென்று விடுகிறார்கள். சில பள்ளிகளில் இதனைக் கட்டுப்படுத்த முடிகிறது. சிலவற்றில் சாத்தியமாவதில்லை. கல்லூரிகளிலும் அதே நிலைதான்.

கல்லூரிகளை பொறுத்தவரை, கட்டுப்பாடுகள் குறைவு அல்லது கட்டுப்படுபவர்கள் குறைவு. முடியை சீராகப் பராமரிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதன் விளைவாக, பள்ளியை விட்டு நின்றவர்கள், வேறு பள்ளிக்கு மாற்றமடைந்தவர்கள் நிறைய இருக்கிறார்கள். இந்த கல்லூரி, நம் சிகைக்கு சரிப்பட்டு வராது என கல்லூரியை மாற்றிக் கொண்டவர்கள் பலர்.

சிகை அலங்காரத்திற்கு ஏற்ப கல்லூரியை தேர்வு செய்தவர்கள் நிறைய இருக்கிறார்கள். தலைமுடியால் அகமதிப்பீட்டு எண்களில் கூட ஆதிக்கம் செலுத்த முடிகிறது. சிகை அலங்கார சிக்கல்கள், மேலும் மேலும் சிக்கலாகி கொண்டே வருகிறதே தவிர, தீர்ந்தபாடாய் இல்லை.

சிக்கல்களின் வேர்கள்

உடை அலங்காரம், சிகை அலங்காரம், போன்றவை, பண்பாட்டு விழுமியங்கள். பாரம்பரிய மதிப்பீடுகள், ஒழுக்க நெறிகள், ஆகியவற்றின் வெளிப்பாடாக இவை பார்க்கப்படுகிறது. நம்மிடம் உள்ள மதிப்பீடுகள், அளவீடுகளிலிருந்து, ஒரு விசயம் எவ்வளவு தூரம் மாறி இருக்கிறது என்ற அளவிலேயே அதனை மதிப்பீடு செய்கிறோம். கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதார நிலைகள் அவற்றில்  ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நடை, உடை, பாவனைகள், சிகை ஆகியவற்றில் பெரும் மாற்றங்கள் நிகழ்த்தி வருகிறது.

உலகத்தோடு தொடர்பு கொள்ள, உலகில் நடப்பதை நொடிப்பொழுதில் அறிந்து கொள்ள, உள்ளங்கையில் உள்ள அலைபேசி போதுமானது ஆகிவிட்டது. திரைப்படங்கள், சமூக ஊடகங்கள், தாங்கள் விரும்பும் நட்சத்திர நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தங்கள் விளம்பரத்திற்காக பயன்படுத்தும் சிகை அலங்காரங்களை, தங்கள் வாழ்க்கைக்கானதாக வரித்துக் கொள்கிறார்கள். மாணவர்கள், நண்பர்களின் தாக்கம், அழுத்தம், தங்களையும் சேர்த்து அழுத்தி விடுகிறது.

எப்போது பிரச்சனையாக உருவெடுக்கிறது?

இன்றைய தலைமுறையின் புதிய பாணிகள், அல்லது ஸ்டைல் என்ற பெயரில் கடைபிடிக்கும் ஒரு செயல்பாடு, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பண்பாடு, கலாச்சாரம், ஆகியவற்றோடு ஒத்துப்போகாத போது, அது பிரச்சினையாக உருமாறுகிறது. கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாடும், தனிமனித சுதந்திரமும் ஒன்றுக்கொன்று முரண்படும் போது அது சிக்கல் என்று உணரப்படுகிறது. தனது சுயத்தை வெளிக்காட்டி, தன்னைக் கவரும் உத்தியாக, சமூகத்தில் அங்கீகாரம் பெற துடிக்கும் இளைய தலைமுறை. ஏற்கனவே உருவாக்கி, கட்டிக்  காக்கப்பட்டு வரும் பழக்கவழக்கங்களை, பாரம்பரியத்தை, காப்பாற்ற வேண்டும் என விரும்பும் மூத்த தலைமுறை. இந்த இரண்டு தலைமுறைக்கும் இடையேயான ‘தலைமுறை இடைவெளி’ என்ற சிக்கல் இந்த பிரச்சனையை அடுத்த பரிமாணத்திற்கு எடுத்துச் செல்கிறது.

தீர்வுகளுக்கான முயற்சிகள்

கல்வி நிறுவனங்கள், அதில் பணி புரியும் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் அவர்களின் பலம், அதிகாரத்தை பொறுத்து, இதற்கு ஆங்காங்கே சில தீர்வுகள் எட்டப்பட்டு வருகிறது. “முடியை  வெட்டிக்கொண்டு வரவில்லை என்றால் பள்ளிக்கு/ கல்லூரிக்கு வராதே. அப்பா, அம்மாவை அழைத்துக் கொண்டுதான் வர வேண்டும்”. என்ற மிரட்டலுக்கு அடி பணிந்தே, சிகை அலங்காரம் சீர்பட்டு வருகிறது. பெற்றோர் கண்டிப்பு செல்லுபடியாகும் இடத்தும், இந்த பிரச்சனை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. மீதமுள்ள இடங்களில் இது பெரும் பிரச்சனையாக தொடர்கிறது.

“மாணவர்களின் சிகை அலங்காரம், தன்பால் கவனத்தை ஈர்க்க அவர்கள் எடுக்கும் முயற்சியின் வெளிப்பாடு” என்ற அளவிலேயே இந்தப் பிரச்சனையை நான் புரிந்து கொண்டுள்ளேன். இத்தகைய மாணவர்கள் சந்திக்கும் போதும் வகுப்பறையிலும், இதனை அடிப்படையாகக் கொண்டே அவர்களுக்கு ஆலோசனைகளை முன் வைப்பேன். “முடியை காட்டி கவனத்தை ஈர்க்காதே, முடிக்கும் கீழே இருக்கும் மூளையை பயன்படுத்தி, கவனத்தை ஈர்க்க முயற்சி செய்ய வேண்டும். வகுப்பறை ஒழுங்கில், பாடத்தை கவனிப்பதில், ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதில், வகுப்பில் புதிய புதிய கோணத்தில் கேள்விகளை கேட்பதில், ஒழுக்கத்தில், உன் தனித்துவத்தை காட்டு” எனக்கூறி இருக்கிறேன்.

“இப்படிப்பட்ட சிகை அலங்காரத்தோடு ஒருவரிடம் உதவி கேட்க  செல்கிறாய். உனக்கு உதவ வேண்டும் என்று எப்படி தோன்றும்? உதவி செய்ய விரும்புவர்கள் கூட உதவ மாட்டார்கள். எனவே, சிகையை  சீர்திருத்தம் செய்து கொள்.” என்ற உபதேசங்களை செய்திருக்கிறேன். எத்தனை பேர்  உள்வாங்கி  சீர்படுத்திக் கொண்டார்கள் எனத் தெரியவில்லை. இது போன்ற ஆலோசனைகளை கூறுவது. இதனையும் மீறி சிகை அலங்காரத்தை சீராக்க முயற்சி செய்யவில்லை எனில், விட்டுவிட வேண்டும் என்பதே இந்த சிக்கல் மீதான பொதுக் கருத்தாகப் படுகிறது. இத்தகைய ஆலோசனைகளை கூட, எப்படி முன் வைத்தால் மாணவர்கள் கேட்பார்கள் என்பதற்கு சமீபத்தில் ஒரு சிறந்த உதாரணத்தை காண நேரிட்டது.

தர்மபுரியில் ஓர் முன்மாதிரி செயல்திட்டம்

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி. 140 மாணவர்கள் 19 பேர் ஆசிரியர்கள். மாவட்டத்தில் உள்ள 108 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், இந்தப் பள்ளிதான் தேர்ச்சி விகிதத்தில் கடைசி. இதுபற்றி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்கிறார் முதன்மை கல்வி அலுவலர்.

“ஒரு பையனும் சொன்ன பேச்சு கேட்பதில்லை. மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிகை அலங்காரத்தை பாருங்கள் என ஒரு புகைப்படத்தை காட்டுகிறார். இதனை தட்டி கேட்டால், பெற்றோர்களே வந்து, எங்கள் பிள்ளைகள் அப்படித்தான் வருவார்கள். உங்களுக்கென்ன?” என்று கேள்வி கேட்கிறார்கள். இத்தகைய சூழ்நிலைகளால் மாணவர்களை படிக்க வைக்க முடியவில்லை” என்பது தலைமை ஆசிரியரின் பதில்.

அடுத்த நாள் காலையில் இறைவணக்க நேரத்திற்கே முதன்மை கல்வி அலுவலர் அப்பள்ளிக்கு சென்று விடுகிறார். அதில் கலந்து கொண்டு, சில வார்த்தைகள் பேசிவிட்டு, மேல்நிலை வகுப்பு மாணவர்களை தனியாகப் பிரித்து, அவர்களோடு உரையாடுகிறார். மொத்தமுள்ள 71 மேல்நிலை மாணவர்களில், 41 பேருடன் உரையாடினார். 20 பேருக்கு மேல் காலை உணவு இல்லாமல் பள்ளிக்கு வந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். அப்போதே அரிசி 25 கிலோ வாங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார். இதர மளிகை செலவுகளுக்கும் பணம் தருகிறார். அடுத்த நாள் முதல், பள்ளியில் உள்ள சத்துணவு‌ ஊழியரைக் கொண்டு, அம்மாணவர்கள் அனைவருக்கும் காலை உணவுக்கு ஏற்பாடு செய்கிறார்.

தொடர்ச்சியாக பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் பங்களிப்பு செய்து அந்தப் பணியை தொடர்ந்து கொண்டு வருகின்றனர். அடுத்து, ஏன் இப்படி முடி வெட்டிக் கொண்டு பள்ளிக்கு வருகிறீர்கள்? ஏன் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் சொல்வதை கேட்க மறுக்கிறீர்கள்? என்று தனது உரையாடலை தொடங்குகிறார்.‌

ஆளுக்கு ஒரு பதிலை சொல்லுகிறார்கள். “இப்படிப்பட்ட தலைமுடியோடு இருந்தால், உங்கள் வாழ்க்கையில் இரண்டு ஆழமான பாதிப்புகள் ஏற்படலாம். ஒன்று, நீங்கள் சிறைக்குச் செல்லவும் கூட வாய்ப்பு இருக்கிறது. இரண்டு, நல்ல வாழ்க்கைத் துணை கிடைப்பதும் கடினம்” என்கிறார்.‌ எப்படி என்ற ஆவலோடு எல்லா மாணவர்களும் பார்க்கிறார்கள். சில மாணவர்கள் கேட்கவும் செய்கிறார்கள்.  எப்படி என்பதை விளக்கி கூறினார்.

“யாருக்கெல்லாம் உங்க அப்பா அம்மாவை ரொம்பப் பிடிக்கும்? என்று முதலில் கேட்கிறார். எல்லோரும் கையை  உயர்த்துகிறார்கள். நீங்கள் இந்த தலையோடு ரோட்டில் நடந்து செல்கிறீர்கள். அல்லது, பொதுவெளியில் அலைந்து திரிகிறீர்கள். சர்வசாதாரணமாக ஒருவர், ‘புள்ளைய வளர்த்தி வச்சிருக்கிறாங்க பாரு’ என்று உங்கள் காதுபட, உங்கள் அப்பா அம்மாவை தரக்குறைவாக பேசலாம். அதைத் தொடர்ந்து முற்றிப் போகும் பேச்சுக்கள், பெற்றோரை தரக்குறைவாக பேசியதால் ஏற்பட்ட கோபம், எல்லாம் சேர்ந்து, ஏற்படும் விபரீதங்கள், நீங்கள் சிறை செல்லும்  நிலை ஏற்படலாம். வாழ்க்கையே திசை மாறி போகலாம்.

அடுத்து, உங்களுக்கு சரியான வாழ்க்கை தேடும் பொழுது உங்கள் தலை முடிக்காகவே நல்ல துணை அமையாமல் போகலாம். உங்கள் தலையை பார்ப்பவர்கள் தட்டிக் கழித்து விடலாம் என உதாரணங்களோடு எடுத்துக் கூறினார். இப்படி சொன்னதும் அந்த மாணவர்களின் முகம் மனமும் மாறிப் போய்விட்டது. தங்கள் சிகை அலங்காரம் சீரிய வாழ்க்கையை வாழ உகந்ததல்ல என்பதை உணர்வுபூர்வமாக உணர்ந்து கொள்கிறார்கள்.

“சிகையை சீராக்கிக் கொள்ள வேண்டும்” அது சரியானது என்று எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர். “நாளை முதல் எல்லோரும் முடி வெட்டிக் கொண்டு பள்ளிக்கு வாருங்கள்” என்கிறார். ”எல்லோரும் ஒரே நேரத்தில் முடிவெட்டிக் கொள்ள முடியாது. எல்லோர் வீட்டிலும் உடனடியாக 100 ரூபாய் கிடைக்காது” என்கிறார்கள். “அது ஒரு பிரச்சனை இல்லை. நான் உங்களுக்கு தருகிறேன். முடியை வெட்டிக்கொண்டு வாருங்கள். முடி வெட்டிக் கொண்டு வரும் அனைவரையும் சுற்றுலா அழைத்துச் செல்கிறேன்” என்கிறார்.

மறுநாள் 34 மாணவர்களும் தலைமுடி வெட்டி, பளிச்சென சீவிக் கொண்டு வந்து, முதன்மை கல்வி அலுவலர் முன்னிலையில் நிற்கிறார்கள். அடுத்த நாள் மீதமுள்ள 7 மாணவர்களும் தலைமுடியை சீர் செய்து கொண்டனர்.‌ ஒரு நாள் முழுவதும் ஆகும் செலவு, போக்குவரத்து செலவு, எல்லாவற்றையும் அவரே பொறுப்பேற்று சுற்றுலா அழைத்து சென்று வந்து திரும்புகிறார்.

இப்போது இம்மாணவர்கள் நன்கு படித்து வருகிறார்கள்.‌ 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து விடுவோம் என சபதம் ஏற்று உள்ளனர். இத்தகைய சிகை அலங்காரம், சீர்திருத்தம் தங்களுடைய பெற்றோர்களுக்கும் மிகவும் பிடித்துள்ளதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். சிகை அலங்காரம் என்ற பெயரில் சீர்கேடு எப்படி தொடங்கி, தீராத்  தலைவலியாக  நீடித்து வந்தாலும், மாணவர்களின் மனதைத் தொட்டு பேசினால், சிக்கலுக்கு தீர்வு எளிதாக கிட்டி விடுகிறது. இந்த சிக்கலை தீர்க்க மேலும் பல வடிவங்களில், பல உத்திகள் இருக்கலாம் அது கல்வித்துறையில் பல்வேறு நிலையில் பொறுப்பில் உள்ளவர்களின் கடமை உணர்வை பொருத்தது. தொடர் முயற்சிகளை பொறுத்தது.

கட்டுரையாளர் குறிப்பு:

Young Generation's Hairstyle Problems in Tamil Nadu Schools and Colleges : Efforts Towards Solutions By Professor N Mani Article in Tamil
நா.மணி, பேராசிரியர், மேனாள் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம். “பள்ளிக் கூடத் தேர்தல்” உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

படித்த பள்ளிக்கு பங்களிப்பு செய்ய ஓர் அரிய வாய்ப்பு!

வாரியத் தேர்வு மதிப்பெண்கள் வாரி வழங்கப்படுகிறதா? விளைவுகள் என்ன? ஏன் அதன் மீது வினையாற்ற வேண்டும்?

ஓர் ஆசிரியர் எப்படி வாழ வேண்டும்?

டாப் 10 நியூஸ் : ஆசிரியர்கள் போராட்டம் முதல் ஜெயம் ரவி பிறந்தநாள் வரை!

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து திமுக வெற்று விளம்பரங்களை செய்கிறது: அன்புமணி ராமதாஸ்

அறிமுகமான ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10: உடல்நலனை காக்க இவ்வளவு அம்சங்களா?

ஹெல்த் டிப்ஸ்: ஃபுட் பாய்ஸனில் இருந்து தப்பித்துக் கொள்வது எப்படி?

+1
0
+1
0
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *