சத்குரு
இந்தியாவில், ஒரு தொற்றுநோய் போல பரவி வரும் நீரிழிவு நோயிலிருந்து விடுபட யோகா எவ்வாறு உதவ முடியும்? என்ற கேள்விக்கு சத்குருவின் விளக்கம்.
கேள்வி: எனது நீரிழிவு நோயைப் போக்க யோகா உதவுமா?
சத்குரு: நாட்பட்ட வியாதி என்று வரும்போது, வியாதி எதுவாக இருந்தாலும், அதற்கான மூலக் காரணம் எப்போதும் சக்தி உடலில்தான் இருக்கிறது. உங்கள் சக்தி உடல் இப்போது ஏன் இப்படி இயங்குகிறது என்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. நீங்கள் வாழும் சூழ்நிலை, உண்ணும் உணவு, வைத்திருக்கும் உறவு முறைகள் அல்லது உங்கள் உணர்ச்சிகள், அணுகுமுறைகள், எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் போன்றவையும்கூட காரணமாக இருக்கலாம்.
சில வெளிப்புற சக்தி சூழ்நிலைகளாலும் உங்கள் உள்சக்திநிலையில் பாதிப்பு ஏற்படலாம். ஏதோ ஒரு வகையில் உங்கள் சக்திநிலை பாதிப்படையும்போது இயற்கையாகவே அது உடலியல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனையாக வெளிப்படும்.
உடலின் இந்த ஒரு அடுக்கில் – சக்தி உடல் – பாதிக்கப்படும்போது, மன உடலும் பொருள் உடலும் பாதிக்கப்படுவது நிச்சயம் நிகழும். மருத்துவ ரீதியாக பிரச்சனை உணரப்படும் போதுதான் மருத்துவர் இதனை கவனிக்கவே துவங்குவார். பொருள் வெளிப்படாதவரை, மருத்துவருக்கு இதனால் எந்த பிரச்சனையும் இல்லை.
துரதிர்ஷ்டவசமாக, மருத்துவ அறிவியல் நோயை மட்டுமே புரிந்துகொள்கிறது. ஆரோக்கியம் எங்கிருந்து வருகிறது, அதன் அடிப்படை என்ன என்பது போன்ற ஆரோக்கியத்தின் வேர்களை அது புரிந்துகொள்வதில்லை.
நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால், சர்க்கரை உங்களுக்கு பிரச்சனை இல்லை, உங்கள் கணையம் சரியாக செயல்படவில்லை என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது. அவசரகால நடவடிக்கையாக நீங்கள் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைக்கிறீர்கள். ஏனென்றால், அலோபதி மருத்துவ முறையில், உங்கள் கணையத்தை செயல்படுத்த அவர்களிடம் வேறு எந்த வழியும் இல்லை.
எனவே, அவர்கள் உங்களுக்குப் பரிந்துரைக்கும் ஒரே நடவடிக்கை இதுதான் – “ஒவ்வொரு நாளும் உங்கள் சர்க்கரையை சரிபார்த்து இன்னும் கொஞ்சம் இன்சுலின் எடுத்துக் கொள்ளுங்கள்.” அலோபதி சிகிச்சை முறை அறிகுறிகளை மட்டுமே சார்ந்தது; மருத்துவர் உங்களிடம் ஏற்பட்டுள்ள அறிகுறிகளை பார்த்துதான் உங்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்.
எந்த நோய்தொற்றுகளை கட்டுப்படுத்துவதற்கும் அலோபதி மருத்துவமுறை ஒரு அற்புதமான வழி. உங்கள் உடலுக்கு வெளியில் இருந்து ஏற்படக்கூடிய எந்த நோயாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரையில், அலோபதி மருத்துவ முறைதான் மிகச் சிறந்த விஷயம். ஆனால் நீரிழிவு, இரத்த அழுத்தம் அல்லது ஒற்றைத் தலைவலி போன்ற மனிதன் தனக்குள்ளேயே உருவாக்கும் எளிமையான நோய்களுக்கு அது எந்தத் தீர்வையும் வழங்கவில்லை.
நவீன மருத்துவ விஞ்ஞானம் இதுபோன்ற நோய்களை கட்டுக்குள் வைத்திருப்பதை மட்டுமே தீர்வாக வழங்குகிறது, அந்த நோய்களிலிருந்து உங்களை விடுவிப்பதைப் பற்றி ஒருபோதும் கூறுவதில்லை. நோய்களை சில வரம்புகளுக்குள் கட்டுப்படுத்தி வைக்கத்தான் முழு மருத்துவ முறைகளும் பலவகையான நிபுணர்களும் இங்கே உள்ளனர்.
அந்த நோய்களை அப்படியே ஒரு கட்டுக்குள் நிர்வகிக்க மட்டுமே பெரும் பொருள் மற்றும் நேரம் செலவிடப்படுகிறது. இது, மன அழுத்தத்தை நிர்வகிப்பதைப் பற்றி மக்கள் பேசுவதைப் போலவேதான். மக்கள் தங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்க விரும்புகிறார்கள், தங்கள் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க விரும்புகிறார்கள், நீரிழிவு நோயையும் நிர்வகிக்கவே விரும்புகிறார்கள். இது வேடிக்கையான வேதனையாக இருக்கிறது. இப்படிப்பட்ட முட்டாள்தனம் ஏன் நுழைந்திருக்கிறது என்றால், தங்கள் உயிர்சக்தி எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றிய அடிப்படைகளை மக்கள் புரிந்துகொள்ளவில்லை.
யோகாவில், நீரிழிவு நோய் ஏற்பட்டால், அதை உடலுக்கு ஏற்பட்டிருக்கும் மிக அடிப்படையான ஒரு இடையூறாகவே பார்க்கிறோம். நீரிழிவை ஒரு சாதாரண நோயாக எடுத்துக்கொள்வதில்லை. உடலின் அடிப்படை கட்டமைப்பே தொந்தரவு செய்யப்பட்டிருக்கிறது என்பதாகவே பார்க்கிறோம். அடிப்படையில் ஏற்பட்ட அந்த தொந்தரவின் காரணமாகத்தான் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
மேலும், ஒவ்வொருவரிடமும் இது வேறுபடுகிறது. ஒவ்வொரு நபருக்கும், அவருடைய உடலமைப்பில் ஏற்படும் இடையூரின் அளவும், இடையூரின் வகையும் வேறு மாதிரியாக இருக்கிறது. எனவே, நீரிழிவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரையும் தனித்தனியாகதான் கையாள வேண்டும்.
இருப்பினும், எந்த நோயாக இருந்தாலும், சக்தி உடலை சமநிலைப்படுத்தி, புத்துயிர் அளிக்கவோ அல்லது சக்தி உடலை செயல்படுத்தி விடுவதை மட்டுமோ யோகா நோக்கமாகக் கொண்டுள்ளது. சக்தி உடல் சமநிலையுடன் முழுவீச்சில் தூண்டப்பட்டு செயல்படும் பட்சத்தில், உங்கள் பொருள் உடலிலும், மன உடலிலும் எந்தவொரு நாட்பட்ட நோயும் இருக்க முடியாது. இங்கே நாம் எந்த நோயையும் நேரடியான பிரச்சனையாக பார்க்காமல், உங்கள் சக்தி உடலில் நிகழ்ந்திருக்கக்கூடிய இடையூற்றின் வெளிப்பாடாக மட்டுமே அந்த நோயைப் பார்க்கிறோம்.
மக்கள் தங்கள் சக்தி உடலை சமநிலைப்படுத்தவும், செயல்படுத்தவும் ஒரு குறிப்பிட்ட அளவு சாதனா செய்ய தயாராக இருந்தால், அவர்கள் நிச்சயமாக அனைத்து நாள்பட்ட நோய்களிலிருந்தும் விடுபடலாம். சக்தி சலன கிரியா போன்ற யோகப் பயிற்சி செய்வதன் மூலம் பஞ்சவாயுகள் மீதும் நீங்கள் ஆளுமை பெறும்போது அனைத்துவிதமான நோய்களிலிருந்தும், குறிப்பாக மனநிலை சம்பந்தமான பிரச்சனையிலிருந்தும் நீங்கள் விடுபட முடியும்.
மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…
மன வலிமை தரும் மலையேற்றம்! – சத்குரு
இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு? சர்வே ரிப்போர்ட்!