WorldCupFinal2023: எங்கே தொடங்கியது இந்தியாவின் வீழ்ச்சி?… கேப்டனாக ரோஹித் செய்த மாபெரும் தவறு இதுதான்!

Published On:

| By Manjula

India why not lift the world cup trophy

மீண்டும் ஒருமுறை 130 கோடிக்கும் அதிகமான இந்திய மக்களின் நம்பிக்கை தவிடுபொடியாகி இருக்கிறது. இதயங்கள் உடைந்து சில்லு சில்லாக நொறுங்கி கிடக்கின்றன. கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத சிறு குழந்தைகள் தொடங்கி, முதிர்ந்த பெரியவர்கள் வரை இந்தியாவின் தோல்வி பாரபட்சம் இன்றி அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. India why not lift the world cup trophy

நேற்று தோல்வி அடைந்ததை விடவும் ஆஸ்திரேலிய அணி எளிதாக இந்த டார்கெட்டை கடந்ததை தான் ரசிகர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நேரத்தில் தோல்வியின் காரணம் குறித்து நாம் ஆராய்வது காயத்தில் கத்தியை விட்டு திருகுவது போல மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய ஒன்று. ஆனால் காயத்துக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் மொத்தமாக புரையோடி அது மேலும் பல சிக்கல்களுக்கு வழிவகுத்து விடும்.

எனவே ஒட்டுமொத்த அணியாக நாம் எங்கே சறுக்கினோம்? என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் தவறுகள் செய்வதை விட அதில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் தான் மிகவும் முக்கியம். அந்த வகையில் கேப்டன் ரோஹித் சர்மா எந்த இடத்தில் சறுக்கினார்? ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் வெற்றியை தனக்கு சொந்தமாக்கிய தருணம் எது? என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

இந்திய அணி

பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் சிறந்த ஒரு இந்திய அணியை நாம் இந்த உலகக்கோப்பை தொடரில் பார்த்தோம். அதனால் தான் தோல்வியே சந்திக்காமல் ரோஹித் தலைமையிலான இந்திய அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆஸ்திரேலிய அணி

அதே நேரம் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் ஆரம்பம் முதலே தட்டு தடுமாறி தான் மேலே வந்தது. லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா அணியும் சொதப்பியதால் மட்டுமே அந்த அணி இறுதிப்போட்டிக்கு வந்தது.

இரண்டில் ஏதாவது ஒரு அணி நன்றாக ஆடி இருந்தாலும் கூட இறுதிப்போட்டிக்கு அந்த அணி தகுதி பெற்றிருக்காது. குறிப்பாக ஒரு சிறந்த பேட்டிங் ஆர்டர் இல்லாத அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அதில் வெற்றியும் பெற்று கிரிக்கெட் ரசிகர்களின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.

டாஸ்

டாஸில் வென்று பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தபோது இந்திய அணியின் பேட்டிங்கை மனதில் வைத்து நாங்களும் அதைத்தான் செய்திருப்போம் என ரோஹித் கூறினார். ஆனால் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்த மைதானத்தில் நடைபெற்ற 4 லீக் சுற்று போட்டிகளில் 3 ஆட்டங்களில் சேஸிங் செய்த அணியே வென்றிருந்தது. இதை ரோஹித் ஒரு பெரிய விஷயமாக எடுத்து கொள்ளவில்லையா? இல்லை ஆஸ்திரேலிய பவுலிங்கை குறைத்து எடை போட்டு விட்டாரா? என்பது தெரியவில்லை.

பேட் கம்மின்ஸ் Vs ரோஹித் சர்மா

இரண்டாவது பாதியில் இந்த மைதானத்தின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதனால் பவுலர்களால் பந்து வீச முடியாது என்பதை பேட் கம்மின்ஸ் சரியாக கணித்திருந்தார். துல்லியமான கணிப்புகள் இதற்கு முன் நடைபெற்ற ஆட்டங்களின் முடிவில் பேட் கம்மின்ஸ் சரியான முடிவை எடுக்க, டாஸ் தோற்றால் என்ன செய்ய வேண்டும்? என்பதற்கான மாற்று திட்டம் எதுவும் பெரிதாக ரோஹித்திடம் இல்லை.

5 பவுலர்கள்

சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த தொடரில் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானம் என்னும் போது அதற்கு ஏற்ப ரோஹித் தன்னுடைய அணியை மாற்றி அமைத்திருக்க வேண்டும். தொடர் முழுவதும் 5 பவுலர்களுடன் விளையாடியதால் அப்படியே தான் இறுதி போட்டிக்கும் செல்வோம் என ஒரு மனதாக ரோஹித் முடிவு செய்தாரா? இல்லை வேறு ஏதேனும் காரணம் பின்னணியில் இருக்கிறதா? என்பது தெரியவில்லை. ஏனெனில் முதல் லீக் சுற்று மேட்சில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அஸ்வினை உள்ளே கொண்டுவந்த ரோஹித் அதற்குப்பின் எந்த வாய்ப்பையும் அவருக்கு வழங்கவில்லை.

அஸ்வின்

தோனி தலைமையில் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் அஸ்வின் இடம்பெற்று இருந்தார். அதோடு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவரின் பவுலிங் எகனாமியும் சிக்கனமாகவே உள்ளது. இதை மனதில் வைத்து சிராஜ்க்கு பதிலாக அஸ்வினை, ரோஹித் உள்ளே கொண்டு வந்திருந்தால் அது ஒரு நல்ல கேப்டன்ஷிப்பாக இருந்திருக்கும். ஏனெனில் பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அஸ்வின் பங்களித்திருப்பார். ஒருவேளை அஸ்வின் உள்ளே வந்து மேலும் ஒரு 20 ரன்களை எடுத்திருந்தாலும் கூட இந்த ஆட்டத்தின் முடிவே மாறிப்போயிருக்கும்.

ஆல் ரவுண்டர்கள்

இந்திய அணியை பொறுத்தவரை ஆல் ரவுண்டர்களை உருவாக்க வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட அதிகமாக இருக்கிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி மிட்செல் மார்ஷ், ட்ராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல் என மூன்று ஆல் ரவுண்டர்களுடன் களமிறங்கியது. India why not lift the world cup trophy

ஆனால் நம்மிடம் ரவீந்திர ஜடேஜா என்ற ஒரே ஒரு ஆல் ரவுண்டர் மட்டும் தான் இருந்தார். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பெரிதாக எந்த தாக்கத்தையும் அவரால் ஏற்படுத்த முடியவில்லை. ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக தொடரின் பாதியிலேயே வெளியேறியதால் வேறு ஆல் ரவுண்டர்கள் இன்றி பேட்டிங் பலத்தை மட்டுமே நம்பி இந்திய அணி இறுதி போட்டிக்கு சென்றது தான் ஒரு மாபெரும் வீழ்ச்சிக்கு அடித்தளமிட்டு விட்டது.

பொறுப்பான ஆட்டம்

இதற்கு முன் நாம் வெற்றி பெற்ற 10 போட்டிகளிலும் கோலி, ராகுல், ஸ்ரேயாஸ், கில் என ஒவ்வொரு போட்டியிலும் இரண்டு, மூன்று வீரர்கள் அதிக ரன்கள் குவித்து அதில் வெல்ல காரணமாக இருந்தனர். ஆனால் நேற்று அப்படி ஒரு நிகழ்வு நடைபெறவே இல்லை.

ராகுலின் 66 ரன்களும், கோலியின் 54 ரன்களும் இந்திய அணி 200 ரன்களை கடப்பதற்கு மட்டும் தான் உதவியது. நேற்றைய போட்டியில் கோலி-ராகுல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஒரு பெரிய ஸ்கோரை எடுத்திருக்க வேண்டும். அவர்கள் இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆனதும், விக்கெட்டுகள் விழுந்ததை மனதில் வைத்து அவர்கள் பெரிதாக அடித்து ஆடாததும் தான் இந்திய அணி பெரிதாக ஸ்கோர் குவிக்க முடியாமல் போனதற்கு காரணம்.

சூர்யகுமார் யாதவ்

இவ்வளவு பெரிய தொடரில் ஒரு பேட்ஸ்மேன் எப்படி ஆடக்கூடாது என்பதற்கு உதாரணமாக இவரை சொல்லலாம். டி20-யில் அடித்து ஆடுவது வேறு ஒருநாள் போட்டியில் ஆடுவது வேறு என்பதை உணராமல் பொறுப்பின்றி இவரின் ஆட்டம் நேற்று அமைந்தது.

அதிலும் பேட்ஸ்மேனாக ஸ்ட்ரைக்கை தக்க வைத்து கொள்ளாமல் அடுத்தடுத்து பவுலர்களுக்கு ஸ்ட்ரைக் அளித்து இரண்டு விக்கெட்டுகள் விரைவாக வீழ்வதற்கும் இவரே காரணமாக இருந்தார்.

சொல்லப்போனால் சுப்மன், ஸ்ரேயாஸ் இருவரும் இளம் வீரர்களாக இருந்தாலும் இந்த தொடரில் தங்களின் பங்களிப்பை சரியாக செய்திருந்தனர். நேற்று மட்டுமே விதிவிலக்காக அமைந்தது. ஆனால் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக வாய்ப்பு பெற்ற சூர்யகுமார் இந்த தொடர் முழுவதுமே பெரிய தாக்கம் எதுவும் ஏற்படுத்தவில்லை.

இதனால் ஐபிஎல்லில் மும்பை அணிக்காக ஆடிவரும் சூர்யகுமாருக்கு அதனால் தான் தொடர்ந்து சொதப்பிய போதும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்ததா? என்னும் கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு கேப்டன் ரோஹித் தான் பதில் அளிக்க வேண்டும்.

கேப்டன் ஆட்டம்

ஒவ்வொரு அணியிலும் கேப்டன்கள் நிலைத்து நின்று ஆடி தங்கள் அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது தான் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும். நியூசிலாந்து அணியின் கனே வில்லியம்சன், ஆப்கானிஸ்தான் அணியின் ஹஸ்மதுல்லா ஷகிடி ஆகியோர் நடப்பு தொடரில் இதைத்தான் செய்தனர். ஆனால் ஓபனிங் பேட்ஸ்மேன் என்ற ரோலை மட்டுமே ரோஹித் தொடர்ந்து இந்த தொடரில் செய்து விட்டார்.

கேப்டனாக அவர் அதிரடி ஆட்டத்தின் பக்கம் செல்லாமல் நிலைத்து நின்று ஸ்கோர் குவிக்க உதவியிருக்க வேண்டும். மாறாக அதிரடி ஆட்டம் ஆடி விரைவில் அவர் அவுட்டாக கோலியின் தலையில் மொத்தமும் விழுந்து அவரின் இயல்பான ஆட்டத்தை ஆட முடியாமல் போய் விட்டது.

ரோஹித்தை பார்த்து கில்லும் அதிரடி முயற்சி செய்தது தான் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக மாறிவிட்டது. குறிப்பாக நேற்று ரோஹித் -கோலி பார்ட்னர்ஷிப் அமைத்து இருந்தால் முதல் பாதியிலேயே கோப்பையை இந்தியாவின் பெயரில் எழுதி இருக்கலாம்.

India why not lift the world cup trophy

பவுலிங்

நியூசிலாந்து அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகளை எடுத்த ஷமியால் நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெரிதாக விக்கெட் எடுக்க முடியவில்லை. பும்ரா, ஷமி, குல்தீப் மூவரும் கூட நேற்றைய போட்டியில் விக்கெட்டுகள் எடுத்தனர். ஆனால் சிராஜ், ஜடேஜாவால் எந்த ஒரு விக்கெட்டும் எடுக்க முடியவில்லை.

விரைவில் விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்ற பிரஷரும் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஒருவேளை நேற்று இந்திய அணி 6 பவுலர்களுடன் விளையாடி இருந்தால் இறுதி போட்டியின் முடிவு கூட மாறியிருக்கலாம்.

பீல்டிங்

சிறப்பான பீல்டிங்கால் தான் இந்திய அணியை 240 ரன்களுக்கு உள்ளாக ஆஸ்திரேலிய அணியால் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் இந்திய வீரர்கள் அதற்கு மாறாக மோசமான பீல்டிங் செய்து ஆஸ்திரேலிய அணி விரைவாக ரன் எடுப்பதற்கு வழிவகுத்து விட்டனர்.

குறிப்பாக விக்கெட் கீப்பருக்கு பின்னால் ஸ்லிப்பில் ஒரு வீரரை ரோஹித் நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர் ஆட்டத்தின் முக்கியமான நேரங்களில் செய்ய தவறி நெருக்கடி கொடுக்க தவறினார். தமிழ் கமெண்டரியில் கூட ஸ்ரீகாந்த் இதை தொடர்ந்து சுட்டிக்காட்டியபடியே இருந்தார். ஆனால் அதனை கேப்டனிடம் எடுத்து சொல்வதற்கு தான் இந்திய அணியில் ஆள் இல்லாமல் போய் விட்டது.

India why not lift the world cup trophy

மன வலிமை

அணி எவ்வளவு மோசமான பார்மில் இருந்தாலும் தங்கள் உடல் மொழியில் அதை ஆஸ்திரேலிய வீரர்கள் எந்த இடத்திலும் காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் நம்முடைய இந்திய அணி அப்படியில்லை. முதல் 10 ஓவர்கள் முடிந்த உடனேயே இந்திய அணி வீரர்களின் உடல்மொழியானது தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு சென்று விட்டதை பார்க்க முடிந்தது.

ரன் அதிகம் குவிக்க முடியவில்லை அதனால் ஆஸ்திரேலியா தான் வெல்லும் என்பது போலவே இந்திய வீரர்களின் முகமும், உடல்மொழியும் நேற்று இருந்தது. வெற்றியோ? தோல்வியோ? கடைசி வரை சண்டை செய்யணும் என்பது போல இந்திய அணி நேற்று ஒரு முழுமையான அணியாக இணைந்து ஆடியிருந்தால் பார்க்கும் ரசிகர்கள் மத்தியிலும் ஒரு நல்ல மனநிலையை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் அப்படி ஒரு மனநிலையை கடைசி வரை ரசிகனுக்கு இந்திய அணி கடத்தவில்லை.

India why not lift the world cup trophy

சொல்வதை செய்வோம்

நாங்கள் இந்திய ரசிகர்களை அமைதி ஆக்குவோம் என அவ்வளவு ஆணித்தரமாக பேட் கம்மின்ஸ் சொல்லி அதை செயலிலும் காட்டியதற்கு ஒட்டுமொத்தமாக அந்த அணியின் திட்டமிடலும், கம்மின்ஸின் தலைமையும் தான் முக்கிய காரணம். அது இரண்டுமே இந்திய அணியில் மிஸ்ஸிங். India why not lift the world cup trophy

இதனால் தான் வெற்றிக்கு அருகில் வந்தும் இந்திய அணி இந்த உலகக்கோப்பையை கோட்டை விட்டிருக்கிறது. இந்த இமாலய தோல்வியில் இருந்து இந்திய அணி இனியாவது பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் இதுவரை கற்கவில்லை என்பதால் தான் 12 வருடங்களாக வெற்றிக்கு அருகில் சென்றும் நம்மால் உலகக்கோப்பையை கையில் ஏந்த முடியாமல் போய் விடுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

விஜயகாந்துக்கு செயற்கை சுவாச சிகிச்சையா? – தேமுதிக விளக்கம்!

உண்மை சரிபார்ப்பு குழு அமைத்ததில் என்ன தவறு?: நீதிபதி சரமாரி கேள்வி!

உலகக்கோப்பையின் மீது கால்.. சர்ச்சையில் சிக்கிய மிட்சல் மார்ஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel