ரவிக்குமார்
சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வகைசெய்யும் சட்ட மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை எந்த அரசியல் கட்சியும் எதிர்க்கவில்லை, ஆனாலும் அதற்கான சட்டத்தை நிறைவேற்ற பாஜக அரசு தயக்கம் காட்டிவந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளும் மகளிர் அமைப்புகளும் வலியுறுத்திய போதிலும் ஒன்பது ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டிருந்தது.
அவ்வாறிருந்த பாஜகவுக்கு திடீரென ஞானம் பிறந்து விட்டதா? கருணை சுரந்துவிட்டதா? என்ற கேள்விகள் எவருக்கும் எழவே செய்யும். இது பெண்களின் வாக்குகளைக் குறி வைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கையே தவிர அவர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கானது அல்ல என்பது மசோதாவைப் படிக்கும்போது தெரிகிறது.
மகளிருக்கு இட ஒதுக்கீடு அவசியம்
மக்கள்தொகையில் 50% ஆக இருக்கும் பெண்கள் நாடாளுமன்றத்தில் 20% கூட இல்லை. 2014-ல் மக்களவையில் 11.6% ஆக இருந்த பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை 2019-ல் 14.6% ஆக சற்று உயர்ந்துள்ளது. அதாவது 63 ஆக இருந்த பெண் எம்.பிக்களின் எண்ணிக்கை 2019 இல் 79 ஆக அதிகரித்துள்ளது. அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு இட ஒதுக்கீடு வழங்குவதே சரியான தீர்வாகும்.
இந்தியா கூட்டணிக்குள் குழப்பம் வருமா?
மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அதில் ஓபிசி பெண்களுக்கு உள் ஒதுக்கீட்டுடன் சேர்த்துதான் வழங்கப்பட வேண்டும் என சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட் ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இல்லாவிட்டால் மகளிருக்கான ஒதுக்கீட்டை உயர்சாதியினரே நிரப்பிக்கொண்டு விடுவார்கள் என அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அந்தக் கட்சிகள் மட்டுமின்றி பாஜகவில் இருக்கும் உமாபாரதி முதலானவர்களும் இந்தக் கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டபோது அங்கு பல்வேறு கட்சிகளின் கருத்துகள் கேட்கப்பட்டன. தமிழ்நாட்டைச் சார்ந்த திமுக, பாமக, தேமுதிக, மதிமுக முதலான கட்சிகள் அப்போது தங்களது கருத்துகளைத் தெரிவித்து இருந்தன. எல்லாமே மகளிர் இட ஒதுக்கீட்டில் எஸ் சி ,எஸ் டி ,ஓ பி சி மற்றும் சிறுபான்மையினப் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தன. அது மட்டுமின்றி மாநிலங்களவை, மேலவைகளிலும் அதேபோல மகளிருக்கு இட ஒதுக்கீடும் அதில் உள் ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும் என அவை வலியுறுத்தியிருந்தன.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் சமர்ப்பித்த அறிக்கையில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு ஒரு விரிவான அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தது. பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் (முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிறர்) மற்றும் தலித்துகளுக்கு (SC/ST) இந்த இடஒதுக்கீட்டுக்குள் உள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தது. அதேபோல், சமாஜ்வாடி கட்சி, ‘ மகளிருக்கான இடஒதுக்கீட்டில் ஓபிசி மற்றும் முஸ்லீம் பெண்களுக்கான உள் ஒதுக்கீட்டை சேர்க்க வேண்டும் என்று கோரியது.
இதற்கு நேர்மாறாக, பாரதிய ஜனதா கட்சி சமர்ப்பித்த மனுவில், இந்தக் கோரிக்கையை வெளிப்படையாக நிராகரித்து, “ஒதுக்கீட்டிற்குள் ஒதுக்கீடு” என்ற கருத்தை உறுதியாக எதிர்ப்பதாகத் தெரிவித்தது.
சிபிஐ எம் கட்சியின் பிரதிநிதிகள் இந்த இடஒதுக்கீடு வசதியை ஓபிசி பிரிவினருக்கு விரிவுபடுத்துவதில் தங்கள் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தினர். ஓபிசி பிரிவினருக்கு அரசியல் இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்பாடு செய்யப்படாததை அவர்கள் சுட்டிக் காட்டினர். நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், அது தொடர்பான பிற விஷயங்களை எதிர்காலத்தில் பரிசீலிப்பதற்கு விட்டுவிட வேண்டும் என்றும் அவர்கள் நிலைக் குழுவை வலியுறுத்தினர்.
இப்படி பல்வேறுபட்ட நிலைப்பாடுகள் இருப்பதால் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்தி இந்தியா கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதே பாஜகவின் திட்டம் என ஒரு யூகம் கூறப்படுகிறது. இப்படியான முரண்பாடுகளால் கூட்டணிக்குள் குழப்பம் வந்துவிடப்போவதில்லை. எந்த விதத்திலும் பாஜகவின் சதி முயற்சிக்கு இடம் அளித்துவிடக்கூடாது என்ற புரிதல் அந்தக் கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது.
இட ஒதுக்கீட்டால் ஏற்படும் மாற்றம்:
மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டு அது நடைமுறைக்கு வந்தால் இந்திய அளவில் 192 மக்களவை இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்படும். அதில் எஸ்சி பிரிவினருக்கான ரிசர்வ் தொகுதிகளில் 32 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கான ரிசர்வ் தொகுதிகளில் 20 இடங்களும் அதில் உள்ளடங்கும்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 13 தொகுதிகள் மகளிருக்கு ஒதுக்கப்படும். ரிசர்வ் தொகுதிகளில் இரண்டு தொகுதிகளும், பொதுத் தொகுதிகளில் 11 தொகுதிகளும் மகளிருக்கு ஒதுக்கப்படும். தற்போது தமிழ்நாட்டில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள உறுப்பினர்களில் மூன்று பேர் மட்டுமே பெண்கள் உள்ளனர். எனவே இந்த இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால் மேலும் 10 தொகுதிகளைப் புதிதாகப் பெண்களுக்கு ஒதுக்க வேண்டி இருக்கும்.
பாஜக அரசின் மாபெரும் ஏமாற்று
மகளிருக்கு உரிமை வழங்குவதற்கான இந்து சட்ட மசோதாவை அண்ணல் அம்பேத்கர் கொண்டுவந்தபோது அதை எதிர்த்தவர்கள், இப்போதும்கூட மரபு என்பதன் பெயரால் பெண்களை முடக்கி வைக்க முயல்பவர்கள் திடீரென எப்படி சனாதனக் கொள்கையைக் கைவிட்டு சனநாயகத்தை ஏற்றுக்கொண்டார்கள்? என்ற நியாயமான சந்தேகம் இந்த மசோதாவைப் பார்க்கும் வரை பலருக்கும் இருந்தது . அதற்கான விடை மசோதாவில் கிடைத்துவிட்டது. இந்த மசோதா சட்டமாக ஆனாலும் அது இப்போதைக்கு நடைமுறைக்கு வரப்போவதில்லை என்பதே அந்த விடை ஆகும். இட ஒதுக்கீடு வழங்குவதாக மாபெரும் ஏமாற்று வேலையை மோடி அரசு செய்துள்ளது.
“அரசியலமைப்பு (நூற்று இருபத்தெட்டாவது திருத்தம்) சட்டம், 2023 இயற்றப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்புடைய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்ட பின்னர், இந்த நோக்கத்திற்காக தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பிறகு இந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும். அப்போதிலிருந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் அது காலாவதியாகும்” என மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
2021 சென்சஸ் கணக்கெடுப்பை பாஜக அரசு நிறுத்தி வைத்துள்ளது. கோவிட் பெருந்தொற்றை அதற்குக் காரணமாக ஒன்றிய அரசு கூறினாலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்கொள்ள முடியாமல்தான் இப்படி செய்கிறது. எனவே, அடுத்த சென்சஸ் என்றால் அது 2031 சென்சஸ்தான். அந்த சென்சஸ் விவரங்கள் 2035 இல்தான் வெளியாகும். அதன் அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்யப்பட்டு மகளிருக்கான இடங்கள் ஒதுக்கப்படுவதென்றால் அது 2039 பொதுத் தேர்தலில்தான் நடக்கும். அதாவது, இட ஒதுக்கீட்டைப் பெற இன்னும் 16 ஆண்டுகள் பெண்கள் காத்திருக்க வேண்டும். இது எவ்வளவு பெரிய ஏமாற்று!
பாஜக அரசு இபோது கொண்டுவந்திருக்கும் மசோதா 2010 இல் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட அதே மசோதாதான். ‘ஓபிசி பிரிவினருக்கும், சிறுபான்மை பிரிவினருக்கும் உள் ஒதுக்கீடு வழங்கவேண்டும், மேல் அவைகளுக்கும் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்த வேண்டும், 15 ஆண்டுகள் மட்டும்தான் என்ற கால வரம்பை நீக்கவேண்டும்’ என்ற கோரிக்கைகள் எதுவும் இந்த மசோதாவில் சேர்க்கப்படவில்லை.
2014 தேர்தலின்போது ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவோம்’ என பாஜகவினர் பரப்புரை செய்தனர். அதே போன்றதொரு ஏமாற்றுதான் இந்த இட ஒதுக்கீடு மசோதாவும். 2014 இல் ஏமாந்ததுபோல இம்முறை மக்கள் ஏமாற மாட்டார்கள்.
கட்டுரையாளர் குறிப்பு:
ரவிக்குமார் – கவிஞர், மொழிபெயர்ப்பாளர், அரசியல், இலக்கிய விமர்சகர். ‘மணற்கேணி’ ஆய்விதழின் ஆசிரியர், நாடாளுமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்.
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
பாஜகவுக்கு சமூகநீதியில் அக்கறை உள்ளதா? – ஸ்டாலின் கேள்வி!
வேலைவாய்ப்பு: சென்னை மாநகராட்சியில் பணி!