With money comes hardship - Is it true? by Sadhguru Article in Tamil

பணம் வந்தால் கஷ்டமும் கூட வரும்! – இது உண்மையா?

சிறப்புக் கட்டுரை தமிழகம்

சத்குரு

துன்பம் செழுமையால் வரவில்லை. பணம் அவர்களின் சட்டைப் பைக்குள் போவதற்கு பதிலாக அவர்கள் தலைக்குள் போனதால்தான் துன்பம். பணத்தை சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டு இந்த உலகில் அற்புதமான பணிகள் பலவற்றைச் செய்ய முடியும்.

பொருள் சேர்க்கத் துவங்கிவிட்டால் பிறகு வாழ்க்கையில் துன்பங்களும் சேர்ந்துவிடுமா? பணம் உங்களுக்குத் துன்பத்தை வரவழைப்பதில்லை. முட்டாள் தனம் தான் துன்பத்தை வரவழைக்கிறது. பணம் உங்கள் வாழ்க்கையில் நுழையும்போது, முட்டாள்தனமும், அதனால் துன்பமும் சேர்ந்து வரலாம்.

அதற்காக, பணம் வந்துவிட்டாலே துன்பமும் வந்தாக வேண்டும் என்று கிடையாது. ஆனால், வசதிகள் ஏன் துன்பமாக மாற வேண்டும்? நாம்தானே வசதியை நாடினோம்? நாம் விரும்பியதே நமது துன்பத்துக்கு ஏன் காரணமாக வேண்டும்? மனிதர்களின் பெரிய பிரச்சனை இது.

பல நேரங்களில் இரண்டு விஷயங்கள் சேரும்போதுதான் சமநிலை கிடைக்கிறது. ஆனால் நாம் ஒன்றை வைத்துக்கொள்கிறோம். அதனுடன் இணைந்த மற்றொன்றை முழுவதுமாய் மறந்து விடுகிறோம். காலையில் சாப்பிட உட்காருகிறீர்கள். ஊறுகாய் சுவையாக இருக்கிறது. மற்றவற்றை மறந்துவிட்டு, ஊறுகாயை மட்டுமே வயிறு நிரம்பச் சாப்பிட்டால், மாலையே பிரச்சனை ஆரம்பித்துவிடும்தானே. அதேபோலத்தான் செல்வமும் செழுமையும்!

ஏராளமானோர் தினமும் கோவில், மசூதி, தேவாலயம் செல்கிறார்கள். அங்கிருந்து திரும்பி வரும்போது அவர்கள் முகத்தைக் கவனித்திருக்கிறீர்களா? அவர்கள் முகம் மகிழ்ச்சியாக மாறியிருக்கிறதா? நான் 11 வயதாக இருக்கும்போது இது என்னை மிகவும் குழப்பியிருக்கிறது.

அந்த வயதில் நான் ஒரு பெரிய கோவில் வாசலில் நிறைய நேரம் உட்கார்ந்துகொண்டு கோவிலிலிருந்து திரும்பி வருபவர்களைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். கடவுளைப் பார்த்து வந்த பின் அவர்கள் முகம் பிரகாசமாக மாறியிருக்கிறதா என்று கவனிப்பேன்.

கோவிலிலிருந்து திரும்பி வரும்போது கடவுளைப்பற்றி பேசுவதைவிட கோவிலில் பார்த்த மற்ற மனிதர்களைப் பற்றிய வம்புகளுடன் வெளிவருவதைத்தான் நான் அப்போது கவனித்தேன். அல்லது அவர்கள் விட்டுச்சென்ற செருப்பு வேறு யாரோடாவது நடந்து போய்விட்டால் இந்த உலகத்தை, ஏன் கடவுளைக்கூட சபிக்க ஆரம்பித்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன்.

கோவிலிலிருந்து வெளிவரும் மனிதர்களின் முகத்தைவிட ஹோட்டலிலிருந்து வெளிவரும் மனிதர்களின் முகம் அதிகப் பிரகாசமாக இருக்கிறது. அதிக மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் வெளிவருகிறார்கள். இது மிகவும் வெட்கக்கேடானது இல்லையா? தெய்வீகத்தைவிட தோசை அவர்களுக்கு அதிக திருப்தியைத் தந்திருக்கிறது. எனவே தெய்வீகமா, தோசையா என்பதல்ல கேள்வி. மனிதர்கள் விஷயங்களை மோசமாகக் கையாண்டால் எப்படியும் துன்பம் நிச்சயம் வருகிறது.

துன்பம் செழுமையால் வரவில்லை. பணம் அவர்களின் சட்டைப் பைக்குள் போவதற்கு பதிலாக அவர்கள் தலைக்குள் போனதால்தான் துன்பம். பணத்தை சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டு இந்த உலகில் அற்புதமான பணிகள் பலவற்றைச் செய்ய முடியும்.

உலகில் மனிதர்களுக்கிடையே இதுதான் பெரிய போராட்டமாக இருக்கிறது. உலகின் மேற்குப் பகுதியையும், கிழக்கு பகுதியையும் பார்த்தீர்கள் என்றால், மேற்குப் பகுதியில் உள்ளவர்கள் உள்நிலையைச் சரியாகக் கையாள்வதில்லை. அமெரிக்க நாட்டில் உள்ளவர்களில் 40 சதவிகித மக்கள் அவர்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு முறையாவது மன அழுத்தத்துக்கான மருந்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்று அறிகிறோம்.

சமநிலையில் இருப்பதற்கு 40 சதவிகித மக்கள் மருந்து உட்கொள்கிறார்கள். இது மனித நலனுக்கு உகந்த விஷயமாக இல்லை. மேற்குப் பகுதியில் உள்ளவர்களோ, வெளியில்தான் அனைத்தும் இருக்கின்றன என நினைத்து உள்சூழ்நிலையைக் கவனிக்க மறந்துவிடுகிறார்கள். எனவே, அவர்களுக்கு வாழ்க்கையே குழப்பமாகிவிடுகிறது.

இங்கு, இந்தியாவில் வேறுவிதமான தவறு நடக்கிறது. எல்லாவற்றையும் சொர்க்கமாக நினைத்து வாழ்க்கையை மறந்துவிடுகிறார்கள். இங்கு பெரிய கோவிலைக் கட்டுவார்கள், ஆனால், சரியான கழிவறை இருக்காது. இது இந்தியர்களின் பிரச்சினை. எல்லாமே சொர்க்கத்தில் இருக்கிறது என்று நினைத்து வாழும் உலகை மறந்துவிடுகிறார்கள், எனவே அதற்கான விலையைக் கொடுக்கிறார்கள். எனவே, இந்த இரண்டுக்கும் இடையிலான ஒரு சமநிலை இருந்தால், துன்பத்தின் கதவுகளை செல்வம் திறக்காது!

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

குற்றவுணர்ச்சி உங்களைக் கொல்கிறதா?

சரியாக உட்காராவிட்டால் என்ன பிரச்சனை?

ஏன் சைவ உணவு உண்ண வேண்டும்?

பிக் பாஸ் 8 ; வைல்டு கார்ட் எண்ட்ரி தரும் பிரபலங்கள் !

14 மாவட்டங்களில் மழை… வானிலை அப்டேட்!

ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா: சி.வி.சண்முகம் கைது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *