பாஸ்கர் செல்வராஜ்
மனிதர்களின் உருவாக்கத்துக்கும் இயக்கத்துக்கும் பொருட்கள் தேவை. அந்தப் பொருட்களின் உற்பத்திக்கும் இயக்கத்துக்கும் தேவையான மூலதனம், தொழில்நுட்பம், எரிபொருள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றிக் கட்டுப்படுத்தும் அமெரிக்க பார்ப்பனிய ஏகாதிபத்தியங்கள் நம்மை ஆதிக்கம் செய்து வருகின்றன. இவர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமெனில் இவற்றில் நாம் தற்சார்பை அடையவேண்டும்.
தற்சார்புக்கான புவிசார் பொருளாதாரக் கொள்கை
உலக உற்பத்தி இரும்பாலும் சிலிக்கானாலும் உருவாகி மரபுசாரா எரிபொருள், மின்சாரம், மின்கலங்களின் மூலம் இயங்கி இணையத்தினால் இணைந்திருக்கும் பொருட்களாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்தை வரித்துக்கொண்டு நாம் அவர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். எனவே பொருட்களின் இயக்கத்தை எண்ணெயில் இருந்து எரிவாயு, ஹைட்ரஜன் மற்றும் மின்கலங்களுக்கு மாற்றுவதை இடைக்கால இலக்காகக் கொள்ளவேண்டும்.
நீண்டகால நோக்கில் சிலிக்கன் உற்பத்தியைக் கைக்கொண்டு அதன்மூலம் உருவாகும் சூரிய மின்னாற்றல் தகடுகள் மற்றும் மின்னணு சாதனங்களை உருவாக்கும் திறனை அடையவேண்டும். ஆனால் இவை எதுவும் தற்போது நம்மிடமில்லை. எரிவாயுவும் சிலிக்கன் உற்பத்திக்கான மூலப்பொருட்களும் கிழக்கில் இருக்கிறது. சிலிக்கன் தொழில்நுட்பம் கிழக்கிலும் மேற்கிலும் விரவிக்கிடக்கிறது. இதனை அடைவதற்கான நமது செயல்தந்திர உத்தி (strategy) முதலில் இந்த உற்பத்தியில் நாம் தவிர்க்கமுடியாத அங்கமாக மாறுவதாக இருக்கவேண்டும்.
இதற்கான செயல்நெறிமுறையாக (tactics) அவர்களின் மூலப்பொருட்களும் தொழில்நுட்பமும் நம்மிடம் குவிந்திருக்கும் நிலமும் தொழிலாளர்களும் இணைந்து பொருள் உற்பத்தியாகும் மையமாகத் தென்னகத்தை மாற்றவேண்டும். எனவே,
நமது புவிசார் பொருளாதாரக் கொள்கை (geo-economic policy): கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் பாலமாக உற்பத்தி மையமாகத் தென்னகத்தை மாற்றுவது.
கிழக்கு மேற்குடனான நமது வர்த்தக வரலாறு
மேற்குக்கும் கிழக்குக்கும் இடையில் நடந்துவரும் ஆயிரக்கணக்கான ஆண்டு வர்த்தக வரலாறு நமக்குத் தெரியும்.
இந்திய, சீனப் பகுதிகள் உற்பத்தி மையங்களாகவும் மத்திய, மேற்கு ஆசியப் பகுதிகள் வர்த்தக வழிகளாகவும் இருந்து வருகின்றன. மேற்குடனான நிலவழி வர்த்தகத்திற்கு இந்தியாவின் வடக்குப் பகுதியும் நாடுகளின் இடையீடற்ற நீர்வழி வர்த்தகத்திற்கு தெற்குப் பகுதியும் சாதகமாக இருந்து வருகிறது.
மேற்கு, மத்திய ஆசியப் பகுதிகள் ஒருங்கிணைந்து இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளை இந்திய ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்திய மௌரிய, குப்தர்களின் காலத்தில் நிலவழிக்கு சாதகமான வடக்கின் வர்த்தகம் செழித்தது. அது உடைபட்ட முற்கால, பிற்கால சோழ, பாண்டியர்களின் காலங்களில் கடல்வழியாக தென்னகம் கிழக்கையும் மேற்கையும் இணக்கும் வர்த்தக மையமாக வலுப்பெற்றதுநமது புவிசார் பொருளாதார வரலாறு.
இசுலாமிய காலிபேட்டுகள், மங்கோலிய பேரரசுகளின் காலத்தில் ஆசியா முதல் மேற்கு ஐரோப்பா வரை ஒருங்கிணைக்கப்பட்டு வலுப்பெற்ற அவர்கள் பட்டுச்சாலை வழியான இந்திய, சீன ஏற்றுமதியை கட்டுப்படுத்தி வளமடைந்தார்கள். பின்னர் மேற்கு ஐரோப்பிய நாடுகள் அட்லாண்டிக் கடல் வழியாக புதிய வர்த்தக வழியைக்கண்டு அமெரிக்க, இந்திய, சீன, தென்கிழக்கு ஆசிய வர்த்தகத்தைக் கைப்பற்றி இவர்கள் அனைவரையும் ஒடுக்கி வளமடைந்தார்கள்.
பனிப்போர் காலத்தில் மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பாவை ஒருங்கிணைத்த சோவியத் ரசியா இந்த ஆதிக்கத்தை உடைத்து வலுப்பெற்றது. அமெரிக்கா நேட்டோ கூட்டணி அமைத்து அதனை உடைத்து ஆசிய, ஐரோப்பாவின் முடிசூடா மன்னனாக விளங்கி வந்தது. 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு ரசியாவும், சீனாவும் இணைந்து தென்கிழக்காசியா, மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ஒருங்கிணைத்து வந்தன.
வலுப்பெற துடிக்கும் வடக்கு
வண்ணப்புரட்சிகள், சிரிய, யேமன், ஆப்பிரிக்க, தைவான் ஆகிய உள்நாட்டுப் பிரச்சனைகளின் வாயிலாக அமெரிக்கா அதனை உடைக்கும் வேலைகளைச் செய்துவந்தது. இதன் உச்சமாக உக்ரைன் போர் வெடித்தது. இதன்மூலம் அமெரிக்கா ரசியாவை உடைத்து சீன, மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் பிரித்துத் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்பட்டது. அதில் தோல்வியை சந்தித்து தற்போது ரசிய-சீன நாடுகளின் தலைமையில் மொத்த ஆசியாவும் ஒருங்கிணைந்து வருகின்றன.
நிலவழி வர்த்தகத்துக்குச் சாதகமான இந்த ஒருங்கிணைவில் ஆதாயம் பெறும் வகையில் வடக்கின் பார்ப்பனியம் நகர்வுகளைச் செய்துவருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆதிக்கம் பெறுவது ஆகாத காரியம் ஆதலால் குஜராத்தை மையமாகக்கொண்டு ஈரான், இந்தியா, காஸ்பியன் கடல் வழியாக ரசியாவின் எரிபொருளை இறக்குமதி செய்ய உதவும் சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து மண்டல (INSTC) திட்டத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறது.
அதேசமயம் மேற்குடன் இணைந்து சூரிய மின்னாற்றல் உற்பத்தி மற்றும் மின்னணு சாதன உற்பத்திக்கான சில்லுகளின் உற்பத்தியையும் குஜராத்தில் நிறுவவும் முனைப்புடன் செயல்படுகிறது. இது பொருட்களின் உற்பத்திக்கும் இயக்கத்துக்குமான மையமாக குஜராத்தை மாற்றி மொத்த இந்தியாவையும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும். அவற்றைப் பயன்படுத்தி பொருள் உற்பத்தி செய்யும் நாம் அவர்களின் வழியாகவே அப்பொருட்களை வர்த்தகம் செய்து அவர்களின் அடிமைகளாகவே வாழவேண்டி இருக்கும்.
நமது தற்சார்புக்கான புவிசார் அரசியல்
இந்த குஜராத் பனியா வர்த்தக வர்க்கத்துக்கு போட்டியாக அமெரிக்க வர்த்தக வர்க்கம் இந்தியாவில் வலுவாகக் காலூன்றி இருக்கிறது. அவர்களின் நலன்களை முன்னிறுத்தி தென்னாட்டில் உற்பத்தியைப் பெருக்கி மேற்குடன் வர்த்தகம் செய்யும் நகர்வுகள் நடக்கிறது. அதில் முழுமையாகக் காங்கிரசும், தமிழகம் இணைத்துக்கொண்டு செயல்படுவதைக் காணமுடிகிறது. இந்த வழியில் பார்ப்பனியத்தை எதிர்கொள்வது சரியான செயல்தந்திரமாகத் தோன்றலாம். ஆனால் இது நமக்கான தற்சார்பை பெற்றுத்தருமா? என்று கேட்டால் நிச்சயம் தராது.
எந்த ஆதிக்கவாதியும் தனது ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒன்றை அடைய அனுமதிக்கமாட்டான். எனவே, நாம் முழுமையான மேற்குலக சார்பு நிலைப்பாட்டை மாற்றி சில்லுகளுக்கு மேற்குடன் கூட்டு எரிபொருள், மூலப்பொருட்களுக்கு கிழக்குடன் இணைவு என்பதாக நமது நிலைப்பாட்டை சமப்படுத்திக் கொள்ளவேண்டும்.
வடக்கின் எரிவாயுக்குழாய், INSTC திட்டத்திற்கு மாற்றாக ரசியா முன்மொழிந்த விலாடிவோஸ்டாக்-சென்னை கடல்வழியை நடைமுறைக்குக் கொண்டுவந்து எரிவாயுவை இறக்குமதி செய்யும் முனையத்தை நிறுவவேண்டும்.
முக்கியமாக எரிவாயு இறக்குமதி, விநியோகத்தை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். இதற்கு ஏற்ற வகையில்,
நமது புவிசார் அரசியல் கொள்கை (geopolitical policy): கிழக்கையும் மேற்கையும் சமமாக நடத்தும் சார்பிலா வெளியுறவுக்கொள்கை
என்பதாக மாற்றிக் கொள்ளவேண்டும். மேற்கின் சிலிக்கன் தொழில்நுட்பமும் கிழக்கின் மூலப்பொருட்களும் நமது நிலத்தையும் தொழிலாளர்களையும் கொண்டு உருவாக்கும் சூரியமின்னாற்றல், விவசாயத்துக்கான உரம், பொருட்களின் இயக்கத்துக்கான ஹைட்ரஜன் ஆகியவற்றின் விலைகளைத் தீர்மானிக்கும் ஆற்றலை பெற நமக்கு இது வழிவகுக்கும். இதன்மூலம் தென்னகத்தில் உற்பத்தியாகும் விவசாய, தொழில்துறை பொருட்கள் இந்திய, பசிபிக், அட்லாண்டிக் கடல்களின் வழியாக கிழக்கையும் மேற்கையும் அடையும்.
இதற்கான வர்த்தகத்தில் பார்ப்பனியத்தை விலக்கி கிழக்கு-மேற்கின் வர்த்தக வர்க்கத்துக்கு சமமாக வாய்ப்பு அளிப்பதன் மூலம் சமநிலையைப் பேணி நம்மீதான வடக்கின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும். இதன்மூலம் ரசியாவின் நிறைவேறாமல் தடுக்கப்பட்ட விலாடிவோஸ்டாக்-லிஸ்பன் நிலவழி வர்த்தகப் பாதைக்கு மாற்றான விலாடிவோஸ்டாக்-சென்னை-லிஸ்பன் நீர்வழி வர்த்தகப் பாதையாக நம்மால் மாற்றியமைக்க முடியும்.
சந்தை, அரச முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகள்
இப்படி உலக உற்பத்தி மாற்றத்திற்கு ஏற்பவும் கிழக்கையும் மேற்கையும் நோக்கிய நகர்வுக்கு ஏற்ற பொருளாதாரக் கட்டமைப்பும் இருக்கிறதா? என்று கேட்டால் வடக்கிடம் வலுவாக இருக்கிறது. தெற்கு இனிமேல்தான் அப்படியான ஒன்றைக் கட்டியெழுப்ப வேண்டும்.
உற்பத்தி ஓரிடத்தில் குவிந்து உலக சந்தைக்கு போட்டியிடும் ஏகாதிபத்தியங்களாக மாறி உலகப்போர் வெடித்தபோது உற்பத்தி உலகம் முழுக்கப் பரவி நாடுகள் விடுதலை பெற்றன. அந்த ஏகாதிபத்திய கட்டமைப்புக்கு மாற்றாக அரச முதலாளித்துவ கட்டமைப்பு உருவானது. அதன்பிறகான பனிப்போர் காலத்தில் இந்திய பார்ப்பனியம் தனது சாதிய சமூக ஏகாதிபத்தியத்துக்கான சோசலிச அரச முதலாளித்துவ கட்டமைப்பை இந்தியாவில் ஏற்படுத்தியது.
சோவியத் உடைந்து மீண்டும் உற்பத்தி ஓரிடத்தில் குவிந்த உலகமய காலத்தில் ரசியா, சீனா உள்ளிட்ட கிழக்குலகம் அரச முதலாளித்துவமும் சந்தைப் பொருளாதாரமும் கலந்த சமூகச் சந்தை பொருளாதாரத்துக்கு மாறின (வெவ்வேறு அளவுகளில்). இந்தியா அரச முதலாளித்துவத்தைப் படிப்படியாக கைவிட்டு முழுமையாக சந்தைப் பொருளாதாரத்திற்கு மாறிவந்தது. சில அரச முதலாளித்துவ நிறுவனங்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன.
அவர்களைப் பின்பற்றி தமிழகமும் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தையும் தனியாரிடம் விட்டது.
நமது தற்சார்புக்கான பொருளாதாரக் கொள்கை
எழுபதுகளைப்போல இப்போது மீண்டும் உற்பத்தி உடைந்து உலகம் பல்துருவங்களாக பரிணமித்து வருகிறது. மின்னல் வேகத்தில் அதனை உள்வாங்கும் பார்ப்பனியம் அரச முதலாளித்துவ காலத்தில் உருவாக்கப்பட்டு உடைக்காமல் வைத்திருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பையும் உள்கட்டமைப்பு, இணையத்தில் கொண்டிருக்கும் முற்றோருமையையும் பயன்படுத்தி ஒருசில பார்ப்பனிய பனியாக்களுக்கான எதேச்சதிகாரச் சந்தை பொருளாதார கட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
பொருளாதார ஜனநாயகமற்ற நிலையில் எதிர்ப்பவர்களை அரசியல்ரீதியாக ஒடுக்கி வருகிறார்கள். எழுபதுகளில் ஒன்றிய பார்ப்பனியம் தனிநபர்களின் நலனை முன்னிறுத்திய போது பார்ப்பனியத்தை தமிழகத்தில் வீழ்த்தி அதற்கு மாற்றாக சமூகத்தின் நலனை முன்னிறுத்தி அனைவருக்குமான சோசலிச கூறுகளும் சந்தைப் பொருளாதாரமும் இணைந்த கலப்புப் பொருளாதாரத்தைத் தமிழகம் கட்டமைத்தது. அப்போது ஏற்படுத்திய அடிக்கட்டுமானத்தின் மூலம் ஏற்பட்ட பலன்களைத்தான் இந்த அரசு சாதனைகளாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
இப்போதும் அன்றுபோலவே உலகமும் இந்தியாவும் மாற்றத்தை எதிர்கொள்கிறது. அதனை உள்வாங்கி முக்கிய துறைகளில் முதலீடுகளை இட்டு அரச முதலாளித்துவ கட்டமைப்பை ஏற்படுத்தி அதன் கட்டுப்பாட்டில் சந்தை இயங்குவதை உறுதிசெய்வதை நோக்கி நகராமல் காலாவதியாகிக் கொண்டிருக்கும் உலகமயகால அந்நிய முதலீடுகளை ஈர்க்கிறோம்; அதன்மூலம் வேலைவாய்ப்பைப் பெருக்குகிறோம் என்று இந்த அரசு பலனற்ற பல்லவியைப் பாடிக்கொண்டிருக்கிறது.
முரணான உலக-ஒன்றிய பொருளாதார நகர்வுகளில் குழம்பி நிற்கிறது. உலகம் ஏகாதிபத்திய கட்டமைப்பில் இருந்து சோசலிச கட்டமைப்புக்கு மாறிச்செல்ல முடியாமல் முரண்பாட்டில் சிக்கிக் கொண்டிருக்கிறது. நமது நோக்கமான சாதிய சமத்துவத்துக்கும் தொழில்மயமாக்கத்தையும் சாதிய ஒழிப்புக்கு சோசலிச பொருளாதார கட்டமைப்பையும் கோருகிறது.
இந்த உலக முரண்பாடு கொண்டுவரும் மோதலில் சிக்காமல் நமது இலக்கை நோக்கிய பயணத்துக்கு கிழக்கு மேற்குடன் இணைந்து இயைந்து செல்வதையே நடைமுறை கோருகிறது. கிழக்கு கலப்பு அரச முதலாளித்துவ சந்தை பொருளாதாரத்தையும் மேற்கு முற்றுமுழுதான சந்தைப் பொருளாதாரத்தையும் கொண்டிருக்கிறது. இரண்டுடனும் இயைந்து சென்று நமது நோக்கமான சாதிய சமூக மாற்றத்தைச் சாதிக்க எழுபதுகள்கால சமூக சந்தைப் பொருளாதாரத்துக்கு அல்லது உண்மையான திராவிட மாதிரிப் பொருளாதாரத்துக்கு மாறுவதே தற்போதைய அவசர அவசிய தேவையாக இருக்கிறது.
நமது பொருளாதாரக் கொள்கை: அரச முதலாளித்துவமும் சந்தைப் பொருளாதாரமும் கலந்த சமூக சந்தைப் பொருளாதாரம் அல்லது திராவிட மாதிரிப் பொருளாதாரம்.
இந்த பொருளாதாரக் கொள்கைக்கு ஏற்ற பணக்கொள்கை என்ன? நம்மிடம் இருந்து ரூபாய் மூலதன வரி, நிதி, உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்ட நிலையில் அரசு மூலதனத்தை எப்படி திரட்டும்? எங்கே முதலீடும்? யாரிடம் தொழில்நுட்பத்தை வாங்கும்?.
அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு
பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர். அவற்றை நல்ல தமிழில் கட்டுரைகளாக வடித்து வருகிறார்.
எதில் தன்னாட்சியும் தற்சார்பும் வேண்டும்?: பகுதி 12
சாதி எப்போது ஒழியும்? பகுதி 11
சாதிக்கும் தொழில்மயமாதலுக்குமான தொடர்பு என்ன? – பகுதி 10
எழுபதுகளையும் தொண்ணூறுகளையும் ஒத்த சூழலை எதிர்கொள்ளும் இந்தியா- பகுதி 9
சிறப்புக் கட்டுரை: உலகை மாற்றிக்கொண்டிருக்கும் உக்ரைன் போர் பகுதி 8
சிறப்புக் கட்டுரை: உடையும் ஒற்றைத் துருவம்… உருவான சமூக ஏகாதிபத்தியம்: பகுதி -7
சிறப்புக் கட்டுரை: இந்தியா சீனாவின் வேறுபட்ட பாதையும் வளர்ச்சியும் – பகுதி 6
சிறப்புக் கட்டுரை: பெருகிய உற்பத்தித்திறனும் உடைந்த சமூக ஏகாதிபத்தியங்களும் பகுதி 5
சிறப்புக் கட்டுரை: டாலர் உலகப் பணமானதும், இந்தியா சோசலிசத்திற்கு மாறியதும் எப்படி? பகுதி -4
சிறப்புக் கட்டுரை: விலையை உயர்த்தி உழைப்பை உறிஞ்சும் பொறிமுறை என்ன? பகுதி-3
சிறப்புக் கட்டுரை: பெருநிறுவனங்களின் முற்றொருமையை மட்டும்தான் உடைக்கவேண்டுமா? பகுதி-2
சிறப்புக் கட்டுரை: ஐந்து பெருநிறுவனங்களை (Big 5) மட்டும்தான் உடைக்கவேண்டுமா?