மு இராமனாதன்
வீட்டு வேலை பெண்களின் கடமை. கடமையைச் செய்தால் பலனை எதிர்பார்க்கக் கூடாது. ஆகவே இந்தியப் பெண்கள் வீட்டு வேலைகளுக்கு எந்த ஊதியமும் கோருவதில்லை.
நாளாந்தம் இந்தியப் பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளுக்கான மதிப்பு நமது உள்நாட்டு உற்பத்தியில் 7.5% ஆக இருக்கும் என்கிறது ஒரு மதிப்பீடு (SBI’s Ecowrap report). இந்தியப் பெண்கள் ஒவ்வொரு நாளும் எந்தப் பிரதிபலனும் கருதாமல் 352 நிமிடங்கள் வீட்டு வேலை செய்கிறார்கள். இது இந்திய ஆண்கள் வீட்டு வேலைகளில் செலவழிக்கும் 52 நிமிடங்களைவிட சுமார் ஏழு மடங்கு அதிகம் என்கிறது இன்னொரு ஆய்வு (OECD data).
இந்தியாவெங்கும் இதுதான் நிலை. இது பாலின சமத்துவத்திற்கு எதிரானது. இதை நேராக்க வேண்டுமெனில் பெண்கள் சக்தியுள்ளவர்களாக உருவாக வேண்டும். அதற்கான அடிவைப்புகளில் ஒன்றுதான் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குவது.
பல முற்போக்குத் திட்டங்களுக்குத் தொடக்கம் குறித்த தமிழகம்தான் இந்தத் திட்டத்தையும் தொடங்கி வைத்திருக்கிறது. வீட்டு வேலை செய்யும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை 2023 செப்டம்பர் 15ஆம் நாள் அறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதுவரை ஒரு கோடி ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இரண்டு மாத உரிமைத் தொகை வழங்கப்பட்டுவிட்டது. தமிழகத்தின் நலத் திட்டங்களிலேயே இதுதான் ஆகப் பெரிய திட்டமாக இருக்கப் போகிறது.
சும்மா இருக்கும் பெண்கள்
இந்தியப் பெண்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்? வீதி பெருக்கி, வீடு சுத்தமாக்கி, விளக்கேற்றி, பண்டமெலாம் சேர்த்து வைத்து, பால் வாங்கி, காய் வாங்கி, வேளைக்கோர் உணவு சமைத்து, பாத்திரம் கழுவி, துணிமணிகள் துவைத்து, பிள்ளைகளைப் பெற்று வளர்த்து, அவர்களுக்கு வாத்தியாய் வைத்தியனாய் மாறி, தற்கொண்டான் பேணி, வீட்டில் முதியோரைக் காத்து, எல்லாப் பிறப்பும் பிறந்து இளைக்கிறார்கள். எனினும், ‘யாராவது என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘வீட்டில் சும்மாதான் இருக்கிறேன்’ என்று பதிலளிக்கிறார்கள்.
அவர்களது பிள்ளைகளிடம் ‘அம்மா என்ன செய்கிறார்?’ என்று கேட்டால் அவர்களும் அதையேதான் சொல்வார்கள். ‘அம்மா வீட்டில் சும்மா இருக்கிறார்.’ ஏனெனில், நமது பிள்ளைகளின் பாடப்புத்தகத்தில் அப்படித்தான் இருக்கிறது. குடும்பம் என்கிற பாடத்தில் வரையப்பட்டிருக்கும் சித்திரத்தில் அப்பா நாளிதழ் வாசித்துக் கொண்டிருப்பார்; அம்மா அகப்பையுடன் அடுப்பின் முன் நின்று கொண்டிருப்பார். குடும்பத்தில் பொருள் ஓங்கி வளர்ப்பவன் தந்தை; மற்றைக் கருமங்கள் செய்பவள்தான் அன்னை.
நமது பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளுக்கு எந்த மதிப்புமில்லை. இந்தியாவில் பெண்கள் செய்யும் வேலைகளில் 84% இந்த ஊதியமற்ற வேலைகளின் கீழ்தான் வரும். மாறாக ஆண்கள் செய்யும் 80% வேலைகளுக்கு ஊதியம் கிடைத்துவிடுகிறது (Time Use Survey 2019, NSO). இதனால்தான் நம் சமூகத்தில் பெண்களின் கரம் தாழ்ந்திருக்கிறது. மகளிர்க்கு வழங்கப்படும் உரிமைத்தொகை இந்த நிலையை மாற்ற உதவும்.
2021 தேர்தலின் போது திமுக வழங்கிய பிரதான வாக்குறுதிகளுள் இந்த உரிமைத்தொகையும் ஒன்று. தேர்தல் பரப்புரைக் காலத்தில் இந்த வாக்குறுதியைச் சுற்றி நிறைய விவாதங்கள் நடந்தன.
இதைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சசி தரூர் ஆதரித்தார். ‘இந்த ஊதியத்தால் பெண்களின் மதிப்பு உயரும், அவர்தம் சுதந்திரமும் அதிகரிக்கும்’ என்று அவர் ட்விட்டரில் எழுதினார்.
உரையாடல் நடப்பது அரசியல் வெளியல்லவா? நடிகை கங்கனா ரனாவத் எதிர்வினை ஆற்றினார். ‘குடும்பம் எனும் எங்கள் சிற்றரசுக்கு நாங்களே மகாராணி. எமக்கு யாரும் ஊதியம் வழங்கத் தேவையில்லை’ என்று சீறினார் கங்கனா. இந்த உரையாடலில் கலந்து கொண்ட சில பெண்கள் ‘எத்தனை குடும்பங்களில் பெண்கள் ராணிகளாக உலவுகிறார்கள்?’ என்று கேட்டார்கள். கங்கனா பதிலளித்ததாகத் தெரியவில்லை.
கங்கனா ஏன் பதற்றப்பட்டார்? அவர் பெண்ணாக இருக்கலாம். ஆனால் அவர் ஆணாதிக்க சமூகத்தின் குரலைத்தான் ஒலித்தார். பெண்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டால், அவர்கள் தலை நிமிர்ந்து நடக்கத் தொடங்கினால், அது இப்போதைய சமூகக் கட்டுமானத்தை அசைத்துப் பார்க்கும் என்கிற அச்சம்தான் கங்கனாவின் பதற்றத்துக்குக் காரணமாக இருக்க வேண்டும்.
ஊதியமற்ற வேலை
வீட்டு வேலைக்கு ஊதியம் என்கிற இந்தக் கோரிக்கை புதியதன்று. 1972ஆம் ஆண்டு செல்மா ஜேம்ஸ் என்பவரால் இத்தாலியில் இதற்காக ஓர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. விரைவில் இது பல மேற்கு நாடுகளுக்கும் பரவியது. இந்தியாவில் 2012ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அரசில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த கிருஷ்ணா திராத் வீட்டு வேலை செய்யும் மனைவிமார் ஊதியம் பெற வேண்டுமென்றார்; ஆனால் அதைக் கணவன்மார்தான் வழங்க வேண்டுமென்றார்.
இந்த ஆலோசனையில் இரண்டு பிரச்சினைகள் இருந்தன. முதலாவது, மனைவி இப்போதும் கை நீட்டிப் பெற்றுக்கொள்பவராகத்தான் இருப்பார்; இந்த நிலை மாறாது. இரண்டாவது, இதனால் குடும்பத்தின் வருமானம் உயராது. கிருஷ்ணா திராத்தின் ஆலோசனை முன்னெடுக்கப்படாததில் வியப்பில்லை.
வழக்கும் வழக்கமும்
பொது வெளியில் இந்தப் பிரச்சினை மீண்டும் பேசப்படுவதற்கு ஜனவரி 2021இல் வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்பொன்று காரணமாக அமைந்தது. அது வீட்டு வேலையையும் ஒரு தொழிலாகக் கருதவேண்டும் என்று கருத்துரைத்தது. வழக்கு இதுதான்.
2014ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த சாலை விபத்தில் ஸ்கூட்டரில் பயணித்த ஒரு தம்பதி உயிரிழந்தனர். கணவன்- ஆசிரியர். மனைவி- இல்லத்தரசி. இவர்களின் இரண்டு பிள்ளைகள் தாத்தாவின் பராமரிப்பில் இருந்தார்கள். இவர்கள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ. 40.7 இலட்சம் இழப்பீடு கோரினார்கள்.
டெல்லி உயர்நீதிமன்றம் இதை ரூ. 22 இலட்சமாகக் குறைத்தது. இவர்கள் மேல்முறையீட்டுக்குப் போனார்கள். உச்சநீதிமன்றம் தம்பதிகளுக்கான இழப்பீட்டைக் கணக்கிடும்போது மனைவியின் வீட்டுப் பணிகளுக்கும் ஊதியத்தை கணக்கிட்டு, இழப்பீட்டை ரூ. 33.20 இலட்சமாக உயர்த்தி உத்தரவிட்டது. பெண்களின் வீட்டு வேலைக்குச் சமூக மதிப்பும் பொருளாதார மதிப்பும் உண்டு என்று கூறிய நீதியரசர்கள், பெண்கள் வீட்டுச் சிறைக்குள் அடைபடுவதற்கு நமது சமுகப் பண்பாட்டு வழக்கங்களே காரணமாக அமைகின்றன என்றும் குறிப்பிட்டனர்.
இந்த ‘வழக்கங்கள்’ காலங்காலமாக இருந்து வருகின்றன. அதனால்தான் பாண்டவர்களால் பாஞ்சாலியைப் பணயமாக வைத்துச் சூதாட முடிந்தது. ஆட்டத்தில் தோற்றதால் அவைக்கு இழுத்து வரப்பட்ட பாஞ்சாலி, அந்தப் புகழ் பெற்ற கேள்வியைக் கேட்டாள்: தன்னைப் பணயமாக வைத்துச் சூதாடித் தோற்றபின் என்னைப் பணயமாக வைக்கும் உரிமையை தருமனுக்கு யார் தந்தது?
பீஷ்மர் பாஞ்சாலிக்கு பதில் சொன்னார்: “தன்னை அடிமையென விற்ற பின்னும் தருமன் நின்னை அடிமையெனக் கொள்வதற்கு நீதியுண்டு.” அது எப்படி நீதியாகும்? பீஷ்மர் சொல்கிறார்: “ஆடவருக்கு ஒப்பில்லை மாதர்; ஒருவன் தன் தாரத்தை விற்றிடலாம்; தானமென வேற்றுவர்க்குத் தந்திடலாம்.”
இந்த ‘நீதி’தான் பெண்களை நுகத்தடியாக அழுத்தி வருகிறது. இது நீதியன்று, அநீதி என்பது பீஷ்மருக்கும் தெரிகிறது. ஏனெனில் அவர் பாரதியின் பீஷ்மர். அவர் பாஞ்சாலியிடம் மனம் வருந்திச் சொல்கிறார்: “தீங்கு தடுக்கும் திறமிலேன்.”
புராண காலத்துப் பீஷ்மருக்குத் திறனில்லாமல் இருக்கலாம். ஆனால் நம் காலத்து அரசாங்கங்களுக்கு அந்தத் திறன் இருக்க வேண்டும். அவை இந்தத் தீங்கைத் தடுத்தாக வேண்டும். அதற்குப் பெண்களை சக்தியுள்ளவர்களாக மாற்ற வேண்டும். அதற்கு பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் இருக்க வேண்டும். அதாவது அவர்கள் உற்பத்தியில் பங்கெடுக்க வேண்டும். இந்த இடத்தில் பழமை விரும்பிகள் ஒரு கேள்வியை முன் வைப்பார்கள். கணவனும் மனைவியும் வேலைக்குப் போனால் வீட்டு வேலைகளை யார் பார்ப்பது? பதில்: இருவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும். பல வளர்ந்த சமூகங்களில் அப்படித்தான் நடக்கிறது.
உற்பத்தியில் பெண்கள்
பெண்கள் ஊதியம் தரும் பணிகளில் ஈடுபட்டால் அவர்கள் வாழ்நிலை உயரும். கூடவே நாட்டின் பெருளாதாரமும் வளரும். இதனால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 18% உயரும். அதாவது 770 பில்லியன் டாலர் (ரூ. 64 இலட்சம் கோடி) உயரும் (McKinsey Power of Parity Report 2018).
பொருளாதார வளர்ச்சியை யார் வேண்டாம் என்பார்கள்? 2027இல் இந்தியாவை ஐந்து டிரில்லியன் டாலர் (ரூ.416 இலட்சம் கோடி) பொருளாதாரமாக உயர்த்துவதை தனது இலக்காக முன் வைத்திருக்கிறது ஒன்றிய அரசு. அதற்கான பல திட்டங்களையும் முன் வைத்திருக்கிறது. அந்தப் பட்டியலில் பெண்களை உற்பத்தியில் ஈடுபடுத்தும் எந்தத் திட்டமும் காணக் கிடைக்கவில்லை. பெண்கள் உற்பத்தியில் பங்கெடுப்பதைத் தரப்படுத்தும் 131 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 120ஆவது இடத்தில் இருக்கிறது (World Bank, 2018).
மக்கள் தொகையில் சரிசமமாக இருக்கும் மனித வளத்தை விலக்கி வைத்துவிட்டு ஒரு நாட்டின் பொருளாதரம் எப்படி வளர முடியும்?
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
‘பெரிதினும் பெரிது கேள்’ என்கிறது நமது புதிய ஆத்திச்சூடி. ஆகவே தமிழக அரசு 2030இல் நமது மாநிலத்தை ஒரு-டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதை தனது இலக்காக மேற்கொண்டிருக்கிறது. இதற்குப் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். கூடவே பெண்கள் உற்பத்தியில் பங்கெடுக்க வேண்டும். அதற்கான முக்கியமான அடிவைப்புதான் மகளிர் உரிமைத் திட்டம். இதுகாறும் கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பு இனி அங்கீகரிக்கப்படும் என்பதுதான் இந்தத் திட்டம் சொல்லும் செய்தி. அதைத்தான் திட்டத்திற்கான அரசாணையும் சொல்கிறது. பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, அவர்தம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, அவர்களைச் சுயமரியாதையோடு சமூகத்தில் வாழச் செய்வதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்கிறது அந்த அரசாணை. இந்த நோக்கம் நிறைவேறட்டும். இதன் அடுத்த கட்டமாக பெண்கள் உற்பத்தியில் பங்காற்றுவார்கள். ஆண்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள்.
கட்டுரையாளர் குறிப்பு
மு இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
தசரா கொண்டாட்டம் : சனாதன எதிர்ப்பாளர்கள் உருவபொம்மைகள் எரிப்பு!