சத்குரு
என் வாழ்க்கைக்கான சரியான துணையை நான் தேர்வு செய்யவில்லை என்று என் தாய் எப்போதும் வருத்தப்படுகிறார். என் மனைவியைச் சிறந்த தேர்வாக அவர் உணரவில்லை. மாமியார்களும், மருமகள்களும் ஏன் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருப்பதில்லை?
பெரும்பாலான மனிதர்களுக்கு இது ஒரு அடிப்படையான பிரச்சனையாக இருக்கிறது. அவர்கள் எப்போதும் சிறந்த நபரைத் தேடுகின்றனர் அல்லது வாழ்க்கையில் சிறந்த செயல்களைச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். இவர்தான் சிறந்த நபர் என்றோ அல்லது இதுதான் சிறந்த செயல் என்றோ அப்படி எதுவும் கிடையாது. நீங்கள் செய்வது எதுவாக இருந்தாலும், அதை மனப்பூர்வமாக செய்தால், முழுமையாக அதில் ஈடுபட்டால் அதுவே மகத்தான செயலாக இருக்கும்.
உங்கள் அருகில் இருப்பவர் யாராக இருந்தாலும், நீங்கள் உங்களை முழுமையாக வழங்கினால், நீங்கள் அவரிடம் முழு ஈடுபாடு காண்பித்தால், எவரொருவரும் சிறப்பாகத்தான் இருக்கின்றனர் என்பதை நீங்கள் காண்பீர்கள். “இவர் சிறந்த நபர்தானா?” என்று நீங்கள் சிந்தித்தால், உலகத்தில் ஒருவர்கூட சிறந்த நபர் இல்லை. நீங்கள் கடவுளையே திருமணம் செய்திருந்தாலும், அவர் மீதும் புகார் கூறுவீர்கள். உங்கள் தாய் மட்டுமல்ல, நீங்களே கூட புகார் செய்வீர்கள்.
‘தாய்’ என்று நீங்கள் குறிப்பிடுபவர், அடிப்படையில் ஒரு பெண்தான். பிறகு ஒரு தாயாக ஆனார். ‘மனைவி’ என்று நீங்கள் கூறுபவரும், அடிப்படையில் ஒரு பெண்தான். அதன்பிறகு அவர் ஒரு மனைவியாக ஆனார். மனைவி என்பது இரண்டாவது அவதாரம்தான். ஒரு பெண்ணாக இருப்பதுதான் அவரது அடிப்படை அடையாளம். ஒரு மனைவியாகவும், பிறகு ஒரு தாயாகவும் இருப்பது அடுத்தடுத்த அடையாளமாக இருக்கக்கூடும். இந்த வரிசைப்படிதான் பெண்ணின் பங்களிப்பு நிகழ்கிறது.
அமெரிக்காவிலுள்ள ஓஹையோவில் ஒருமுறை இது நிகழ்ந்தது. ஒரு இளைஞன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தான். தான் மணம் செய்ய விரும்பும் பெண்ணை வீட்டிற்கு அழைத்துவர விரும்புவதாக தன் தாயிடம் கூறினான். திருமண விஷயத்தில் தாயின் சம்மதம் அவனுக்குத் தேவையிருக்கவில்லை என்றாலும் எதிர்கால மனைவியை தாயிடம் அறிமுகப்படுத்தி சிறிது ஆசிர்வாதம் அல்லது சம்மதம் பெற விரும்பினான். ஏனெனில் எதிர்காலத்தில் ‘பூனையும் நாயும்’ விளையாட்டை தவிர்க்க நினைத்தான்.
அவன் தன் தாயை மிகவும் நேசித்தமையால், அந்த சந்திப்பை சிறிது சவாலாகவும், வேடிக்கையாகவும் அவருக்கு நிகழ்த்த விரும்பினான். அவன் தன் இளம் அலுவலகத் தோழிகள் மூன்று பேருடன் சேர்த்து தனது பெண் சிநேகிதியையும் அழைத்து வந்தான். அவர்கள் அனைவரும் விருந்துக்கு வந்த நிலையில், அவன் விரும்பும் பெண் யார் என்பதை, தாய் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. எந்தப் பெண் என்று குறிப்பிட இயலாதவாறு நான்கு பெண்களிடமும் அவன் நெருங்கிப் பழகினான். அவர்களனைவரும் சென்றபிறகு, அவன், “அம்மா, எந்தப் பெண் உங்களது வருங்கால மருமகள் என்று கண்டுபிடித்தீர்களா?” என்றான்.
தாய் சொன்னாள், “சிவப்பு கவுன் போட்டிருந்தாளே, அவள்தானே-”
மகன் சொன்னான், “அம்மா, எப்படி கண்டுபிடித்தாய், நான் அவளிடம் முகம் கொடுத்துக் கூட பேசவில்லையே, நீ குழப்பமடைய வேண்டும் என்பதற்காகவே மற்றவர்களிடம்தானே அதிக நேரம் செலவழித்தேன்” என்றான்.
அதற்கு அந்த தாய் சொன்னாள், “அவள் உள்ளே நுழைந்தவுடனேயே அவளை எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது, ஆகவே அது அவளாகத்தான் இருக்க வேண்டும்.”
வீட்டிற்குள் புதுப்பெண் அடியெடுத்து வைக்கும்போது, இந்தத் தாய்க்கு உள்ளுணர்வில் ஒரு மறுப்போ அல்லது எதிர்ப்போ ஏற்படுகிறது. ஏனென்றால், தனக்குச் சொந்தமான ஒருவரை வேறு ஒருவருடன் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது, அதுவும் சமமான விகிதத்தில் கூட அல்ல. ஒரு தாய் என்ற நிலையில், அவர் தனது மகன் மணம்புரிய வேண்டும் என்று விரும்புகிறார்,
அவனுக்கு ஒரு மனைவி வேண்டும் என்று விரும்புகிறார், அவன் மகிழ்ச்சியாக இருப்பதையும் விரும்புகிறார், எல்லாமே உண்மைதான். ஆனால் மற்றொரு நிலையில், தாய் என்பவள் இன்னமும் ஒரு பெண்தான். இதுவரை தன் உடைமையாக இருந்தவனிடம் எதையோ பகிர்ந்து கொள்ள அவள் இப்போது ஒரு புதுப் பெண்ணிடம் அனுமதி கேட்க வேண்டியிருக்கிறது. அதுவே விஷயங்களைச் சற்று சிக்கலாக்குகிறது. துரதிருஷ்டவசமாக, முடிவில்லாமல் பல நூற்றாண்டுகளாக, இதே முட்டாள்தனமான உறவுநிலைப் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதை மாற்ற முடியும். ஆனால், மக்கள் இன்னமும் அதற்குத் தயாரில்லை.
கேள்வி: இது ஏதோ விலங்குகளின் இயல்பு என்பது போல நீங்கள் விளக்குகிறீர்கள்!
பதில்
இது ஒருவகையில் விலங்கியல்புதான். ஏனெனில் இது, அடிப்படையில் ‘இனப்பெருக்கம் மற்றும் இனத்தைப் பாதுகாத்தல்’ குறித்ததுதான். ஏனெனில் ஒரு பெண் தனக்கு உரியதின் மேல் சொந்தம் கொண்டாடும் ஒரு விருப்பம் இல்லையென்றால், பிறகு அவள் தனது குழந்தையைப் பராமரித்துக் கவனிக்க மாட்டாள். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அப்படியே போட்டுவிட்டுச் சென்றிருப்பாள். நீங்கள் ஒரு விலங்கை உதாரணமாக எடுத்துக் கொண்டால், ஒரு யானை தன் குட்டியை ஈன்ற பிறகு, மூன்று நாட்களுக்கு ஒருவரையும் அருகில் நெருங்க விடுவதில்லை. ஏனெனில், அது தனக்குச் சொந்தமானதை அவ்வளவு உடைமை கொண்டாடுகிறது. யானையின் கர்ப்பத்திற்குக் காரணமான ஆண் யானை போய்விடுகிறது. பிறந்துவிட்ட யானைக் குட்டியைப் பற்றி அது ஏதும் அக்கறை கொள்வதில்லை.
ஆனால் ஒரு பெண் எப்போதும் சொந்தம் கொண்டாடுவாள். ஒரு பெண் என்பவள் அப்படி சொந்தம் கொண்டாடாமல் இருந்தால், எந்தக் குழந்தைக்கும், குழந்தைப் பருவத்தின் ஆரம்பப் பகுதி பாதுகாப்பாக நிகழாது. எனவே இது விலங்கியல் தன்மைதான். ஆனால் இந்த உடைமைத் தன்மை என்பது அந்தத் தாய்க்குள் வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒரு வகையில் நீடித்துவிடுகிறது. பொதுவாக, எண்ணற்ற பெண்கள் அதைக் கடந்து வளர்வது கிடையாது. ஆனால் பக்குவமும், விழிப்புணர்வும் கொண்டுள்ள ஒரு பெண்ணால் அதைத் தாண்டி வளர முடியும்.
மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அக்காவுக்கு ஸ்டாலின் மெசேஜ், அவருக்கு மோடி மெசேஜ்: அப்டேட் குமாரு
கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு : ரூ.30 லட்சம் இழப்பீடு!
Fantastic explanation as usual , Sadhguru. The relationship between the Mother in law and Daughter in law is a complex issue atleast in this part of the world and not in the West. The teens in America leave their parents and choose their own way. As Sadhguru explains we must develop the habit to like, love everything without weighing in the balance. This is true for family relationships also. Ofcourse, today excepting a small percentage of families, mostly parents, don’t depend too much on Children, not only because parents have Economic independence and also our Children don’t find employment in their brought up city, and the technology spread across the globe. Further in avoiding after marriage friction, Girls talk freely and plainly to the Boy before marriage, what she would want him to be, in creating the atmosphere for an independent living, even when living with inlaws for some reasons.