சென்னையில் ஒரு துவக்கப்புள்ளி : இந்தியாவிற்கு ஏன் உயிரியல் நகரங்கள் தேவை?

சிறப்புக் கட்டுரை தமிழகம்

கே. அசோக் வரதன் ஷெட்டி

கிண்டியில் இருந்த ரேஸ் கோர்ஸ் மைதானத்தில், 118 ஏக்கர் பரப்பளவில், தமிழ் நாடு அரசு அமைக்க இருக்கும் நகர்புற பூங்கா விலை மதிக்க முடியாதது. வளர்ந்த நாடுகளில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் ஒரு மிகப் பெரிய பூங்கா அமைந்துள்ளது. சில நகரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெரிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐகானிக் மத்திய பூங்கா 843 ஏக்கரில் அமைந்துள்ளது. 1858 உருவாக்கப்பட்ட இந்தப் பூங்கா நியுயார்க் நகரில் இருக்கும் ஆறாவது பெரிய பூங்கா.

ஐரோப்பிய தலைநகரங்களில் இருக்கும் ஒவ்வொரு பெரிய பூங்காவும் ஒருகாலத்தில் அந்த நாட்டின் அரசர்களின் வேட்டை மைதானங்களாக இருந்தன. லண்டனில் உள்ள ஹைடு பூங்கா 350 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1637ல் உருவாக்கப்பட்டது. ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகரில் அமைந்துள்ள டைகர்கார்டன் பூங்கா 542 ஏக்கரில் விரிந்து பரவியுள்ளது. 1742ல் கட்டப்பட்டது. மாட்ரிட் ஈ ரிட்ரியோ பூங்கா 350 ஏக்கர் பரப்பளவு உள்ளது.‌1868ல் உருவாக்கப்பட்டது. இது போன்ற பெரிய பூங்காக்கள் தவிர அனைத்து வளர்ந்த நாடுகளின் நகரங்களும் ஏராளமான சிறிய பூங்காக்களை உள்ளடக்கியது.

அமெரிக்காவின் பூங்கா குறியீட்டு எண் (park score index) மதிப்பீட்டின் படி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள நூறு விழுக்காடு மக்களும் தங்கள் வீடுகளிலிருந்து பத்து நிமிட நடையில் அருகில் உள்ள பூங்காவிற்கு சென்று விடலாம். அதேபோல் சான் பிரான்சிஸ்கோ, வாசிங்டன், நியூயார்க், சியாட்டில் நகரங்களில் வசிப்போரில் 99 விழுக்காடு மக்கள் பத்து நிமிட நடையில் அருகில் உள்ள பூங்காவிற்குச் சென்றுவிடலாம்.

“அட்டல் நகர்புற மறு உருவாக்கம் மற்றும் நகர்புற மறுமலர்ச்சி திட்டம்” ( Atal Mission for Rejuvenation and Urban Transformation) இந்திய அரசின் முதன்மைத் திட்டங்களில் ஒன்று. இந்தத் திட்டத்தின் கீழ் நகரங்களில் பூங்காக்கள் உருவாக்கவும் தோட்டங்கள் அமைக்கவும் 2 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலாண்மை இயலின் குருவாக கருதப்படும் பீட்டர் டிரக்கர் “எது அளவிடப்படுகிறதோ அதுவே நிர்வகிக்கவும் படுகிறது” என்கிறார். அதன் அடிப்படையில் பார்த்தால், ஓர் வருத்தமான உண்மை என்னவெனில், இந்திய நகரங்களில், பசுமையை உருவாக்க இடங்கள் பற்றிய நம்பகமான புள்ளிவிபரங்கள் இல்லை என்பதே.

இந்திய வனத்துறை நடத்திய “2021 ஆம் ஆண்டில் வனங்களின் நிலை” என்ற அறிக்கை வழியாக தோராயமாக சில விசயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. நகர்புறங்களில், ஒரு ஏக்கருக்கு மேல் உள்ள நிலங்களில், பத்து விழுக்காடு அளவிற்கு மரங்கள் இருந்தாலும் அதனை ‘காடு’ என கணக்கில் கொள்கிறது இந்த அறிக்கை. இதன் படி நாட்டிலேயே அதிக பசுமை பரப்பை கொண்டது மும்பை நகரம். இங்கு 25.4 விழுக்காடு நிலம் பசுமை போர்த்தி உள்ளது. அதற்கு அடுத்து ஐதராபாத் நகரில் 12.9 விழுக்காடும், டெல்லியில் 12.6 விழுக்காடும், பெங்களூரில் 6.8 விழுக்காடும் பசுமை பரப்பு உள்ளது. சென்னை நகரம் 5.3 விழுக்காடு பசுமை பரப்பை கொண்டது. அகமதாபாத் நகரில் 2.0 விழுக்காடே உள்ளது. கொல்கத்தாவில் வெறும் ஒரு விழுக்காடு பரப்பளவு மட்டுமே பசுமை பரப்பு.

நகர்புற உளவியல் தண்டனைகள்

நகரங்களின் இரைச்சல், நெரிசல், இயற்கைக்கு மாறான விளக்குகள், மாசுபாடு, அந்நியமாதல், வேகமாக சுருங்கி வரும் பசுமைப்பரப்பு போன்றவற்றின் காரணமாக, கிராமப் புற மக்களோடு ஒப்பிடும்போது, நகர்புற மக்கள் பல்வேறு உடல்நல மனநல பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்கள். இது நகர்புற உளவியல் தண்டனை என அழைக்கப்படுகிறது. சர்வதேச அறிவுஜீவிகள் நடத்தி வரும் “நகர்புற வடிவமைப்பு மற்றும் மனநல மையத்தின் கூற்றுப்படி, நகர்புற மக்களின் மன அழுத்தம் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. கவலைகள் 20 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஸ்கிசோபிரனியா போன்ற கொடிய மனநோயாளிகளுக்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்கிறது.

நகர்புற உளவியல் தண்டனைகளுக்கு தீர்வு, “நகர்புறங்களில் போதுமான பசுமை உள்கட்டமைப்பை அதிகரிக்க செய்தல்” என்பது சமீபத்திய காத்திரமான ஆய்வு முடிவுகள் சொல்லும் சேதி. புதிய விஞ்ஞானி என்னும் இதழில், 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி வெளியான கட்டுரையின் சாராம்சம் இது. “பசுமைப் பரப்பை அதிகரித்தல், இயற்கையை வளப்படுத்துதல் மட்டுமல்ல, மனநலத்தை அதிகரிக்கவும் செய்கிறது ” இதனை அடிப்படையாகக் கொண்டு, இயற்கைக்கும் மனநலத்திற்கும் உள்ள தொடர்பை உலகளாவிய பூங்காக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தெற்கு இங்கிலாந்தில் டி.டி.கோக்ஸ் என்பவர் மேற்கொண்ட ஆய்வில், நகரங்களில், 250 மீட்டர் சுற்றளவில் உள்ள, பூங்காக்கள் அல்லது பசுமைப் பரப்பு அருகில் குடியிருப்போரின் மனநல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது என அந்த ஆய்வு கூறுகிறது.மன அழுத்தம் மற்றும் மனக்கவலைகள் இதனால் 20 விழுக்காடு குறைகிறது என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அதேபோல், 2018 ஆம் ஆண்டு, ஆர். மெக்டொனால்ட் என்பவர் தொகுத்த, ‘இயற்கை பாதுகாப்பு’ என்ற நூலின் ஆய்வுக் கட்டுரையும் இதற்கு வலு சேர்க்கிறது. உலகின் 245 நகரங்களில் வாழும் மக்கள் 87 விழுக்காட்டினர், 20 விழுக்காடு பசுமைக்குக் கீழே உள்ள நகரங்களில் வசிக்கிறார்கள். இவர்கள் நகர்புற உளவியல் தண்டனைகளுக்கு ஆட்பட அதிக வாய்ப்பு உள்ளது என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உயிரியலாளர் ஈ. ஓ. வில்சன் 1980ல் ‘பயோபிலியா’ என்ற‌ சொல்லாடலை பிரபலம் ஆக்கினார். நமது பரிணாம வளர்ச்சி பாரம்பரியத்தின் வழியாக நம்முள் உள்ளார்ந்து உள்ள இயற்கையின் மீதான காதலை, ஈடுபாட்டை ஒட்டி அந்த சொல்லாட்சியை பயன்படுத்தினார். போதுமான பசுமைப் பரப்பு உள்ள நகரங்களில் வாழும் மக்கள் மற்றவர்களோடு ஒப்பிடும்போது உடல் மனம் ஆரோக்கியத்தோடு இருக்கிறார்கள். இதன் அடிப்படையில், நகர்புற திட்டமிடலின் போது குறைந்தபட்சம், நிலப்பரப்பை 20 விழுக்காட்டை பசுமைப் பரப்புக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்போது உள்ளது போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கக் கூடாது என்கிறார்.

தற்போதைய நிலையில், நகர்புறங்களில் பசுமைப் பரப்பை உருவாக்க போதுமான நிலம் இல்லை. எனவே பசுமைப் பரப்பை உருவாக்க ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். ஏற்கனவே உள்ள கட்டமைப்பு தளங்களில் பசுமைப் பரப்பை உருவாக்கம் பற்றி சிந்தித்து செயலாற்ற வேண்டும். இடைநிலை இடைவெளிகள் மற்றும் நகரின் சீரழிந்த பகுதிகளை எப்படி பயன்படுத்துவது என்றும் சிந்திக்க வேண்டும். நகர்புற கட்டிடங்களில் பச்சை கூரைகள், பச்சை சுவர்களை உருவாக்கலாம். கட்டிடங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடம் இடங்களில் மழைத் தோட்டங்கள் மற்றும் இயற்கைத் தீவுகளை உருவாக்கலாம். கான்கிரீட் மீடியன்களுக்கு பதிலாக சாலைகளின் நடுவே பசுமைப் பரப்பை வளர்த்தெடுக்கலாம். தெருக்களில் உள்ள கான்கிரீட் வடிகால்களுக்குப் பதிலாக உயிரி சுவர்களை உருவாக்கலாம்.

பாக்கெட் பூங்காக்கள்

சாத்தியமான இடங்களில் மரம் நடுதல், எங்கெல்லாம் மிகக் குறைந்த அளவிலேனும் நகர்புற நிலங்கள்/ இடங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் பாக்கெட் பூங்காக்கள் முதல் பெரிய பூங்காக்களை உருவாக்குதல். அந்தப் பகுதியில் உள்ள இயற்கை தாவரங்களை வளர்தெடுத்தல், ஈர நிலங்களை உருவாக்குதல் அதில் பசுமையை வளர்த்தெடுத்தல், ஆறுகள், கால்வாய், ஏரிகள் ஓரங்களில் பசுமை பரப்பை அதிகரித்தல், சீரழிந்த இயற்கை நிலப்பரப்பை சரிசெய்தல் போன்ற பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.

தற்போது சிங்கப்பூர் ஒரு பசுமை அளவீட்டை உருவாக்கியுள்ளது. பசுமை மனை விகிதாச்சாரம் என்று அதற்குப் பெயர். இந்த விகிதாசாரத்தின் படி புதிதாக வீடு கட்டும் ஒருவர் பசுமைப் பரப்புக்கு வீட்டுமனையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த விதியை ஒவ்வொரு புதிய வீட்டுமனையும் நூறு விழுக்காடு கடைபிடித்தல் அவசியம். சிங்கப்பூர் எவ்வளவு இயற்கையை அழித்ததோ அதே அளவு மீட்டெடுக்க வேண்டும் என்பது இதன் அடிநாதம். உதாரணமாக 36 மாடி குடியிருப்பு பகுதி, கட்டிடப் பகுதியைப் போல் 130 விழுக்காடு பசுமைப் பரப்பிற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். 16 ஹோட்டல் கட்டிடத்தில் 240 விழுக்காடு இந்த பசுமைப் பரப்பு இருத்தல் அவசியம். ஹோட்டல் அலுவலகங்கள் எல்லாம் இணைந்த கட்டிடத்திற்கு 1110 விழுக்காடு பசுமை பரப்பு இருத்தல் அவசியம்.

குன்றாத வளர்ச்சிக்கான கட்டமைப்பு வசதி ஏன் அவசியம்?

நகர்புறங்களில் பசுமைக் கட்டமைப்பை மேம்படுத்துவதால் உளவியல் நன்மைகள் மட்டுமல்லாது, கணிசமான பொருளாதார மற்றும் சூழலியல் நன்மைகளையும் வழங்குகிறது. இது நமது தற்போதைய கட்டமைப்புகளால் சாத்தியமாகாது. பசுமைக் கட்டமைப்பை மேம்படுத்தும் போது, நகர்புறங்களில் அதிகரித்து வரும் கார்பன் உமிழ்வை உள்வாங்கும் திறனும் அதிகரிக்கும். இதன் காரணமாக காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு எதிரான மீள் தன்மையை அதிகரிக்க இயலும். அதுமட்டுமின்றி, ஆறுகள் ஏரிகள் போன்ற நீர் நிலைகளை வெள்ள நீர், வேளாண்மை மாசுபாடு, மண் அரிப்பை தடுத்தல், நிலத்தடி நீர் பாதிப்பு, கடற்கரை பாதுகாப்பு, புயல், சுனாமி போன்றவற்றிலிருந்து பாதுகாக்க இயலும்.

ஈரம் ஆவியாதலைத் தடுத்து நகரங்களில் வெப்பத்தைத் தணிக்க முடியும். எரிசக்தி கட்டணங்கள் குறையும். சுத்தமான காற்று கிடைக்கும். இரைச்சல் மாசை அடையாளம் காணலாம். பறவைகள் விலங்குகளுக்கு வாழிடம் கிடைக்கும். உயிரினப் பன்பயம் அதிகரிக்கும். நகரின் அழகு கூடும். சொத்து மதிப்பும் உயரும். தற்போதைய கட்டமைப்புத் திட்டங்கள் பொதுவாகவே அளவில் பெரியவை. அதிக செலவு பிடிப்பவை. பொது முதலீடுகள் அதிகம் தேவைப்படும். ஆனால் பசுமைக் கட்டமைப்பு திட்டங்கள் பொதுவாகவே அளவில் சிறியவை. உரிமையாளர்களின் பரவலான பங்கேற்பை உள்ளடக்கியது.‌ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், கார்ப்பரேடுகள் என‌ அனைவரையும் உள்ளடக்கியது. குறைந்தபட்சம் 60 விழுக்காடு தனியாருக்கு சொந்தமானது என்பதால் அரசு சாரா நிறுவனங்கள் நல்ல பங்களிப்பு செய்ய இயலும்.

நகர வெள்ளம்

மழை, வெள்ளம்..யார் யாருக்கெல்லாம் நிவாரணம்? - அரசாணை வெளியீடு! - மின்னம்பலம்

தற்போதைய கட்டமைப்பு வசதிகள் வழியாகப் பல நகர்புற பிரச்சினைகளைத் தீர்க்க இயலாது. மரபார்ந்த கட்டமைப்பு முறை மற்றும் பசுமைக் கட்டமைப்பு முறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவைப்படுகிறது. அத்தகைய பிரச்சினைகளில் ஒன்று நகர வெள்ளம். நகர்புறங்களில் வடிகால் அமைப்புகளை கடும் மழை வெள்ளம் மூழ்கடிக்கும் போது, அது சொத்துக்களை அழிக்கிறது. பொருளாதாரத்தை சீர்குழைக்கிறது. மனித நல்வாழ்வை குறைந்த மதிப்புக்கு உள்ளாக்குகிறது. இத்தகைய வெள்ளங்கள் ஒரு மாநில அரசுகளின் உள்ளாட்சி நிர்வாகத் தரத்தையே கேள்விக்குள்ளாக்கிறது.

காலநிலை மாற்றத்தின் காரணமாக தட்பவெப்ப நிலையில் அதீத மாற்றம், புயல், வெள்ளம்,வறட்சி, வெப்பக் காற்று வீசுதல், காட்டுத் தீ போன்றவை அதிகரித்துள்ளது உண்மை. ஆனால் நகர்புறங்களில் ஏற்படும் இந்த வெள்ளப்பெருக்கிற்கு இரண்டாவது காரணமும் உள்ளது. இது அரிதாகவே தெரியவருகிறது அல்லது செய்தியாக மாறுகிறது. நகர்புற நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் கான்க்ரீட் பரப்புகள், கட்டிடங்கள், சாலைகள், நடைபாதைகள், வாகன நிறுத்துமிடங்கள் போன்றவற்றில் மழை நீர் ஊடுருவாது. வெள்ள நீர் சாதாரண நிலப்பரப்பில் ஓடுவதைக் காட்டிலும் இந்த கான்கிரீட் தளங்களில் ஐந்தரை மடங்கு வேகமாக ஓடுகிறது. கட்டுப்பாடு அற்ற நகர்மயமயமாதல் காரணமாக வெள்ள நீர் வேகம் அதிகரித்துள்ளது. அதேசமயம், நீர்நிலைகள் சதுப்பு நிலங்கள் மற்றும் வெள்ளச் சமவெளிகள் கண்மூடித்தனமாக அமைக்கப்பட்டது. மழைநீர் ஊடுருவ முடியாத ஒரு விழுக்காடு பகுதியின் வழியாக மூன்று விழுக்காடு வெள்ளம் அதிகரிக்கிறது என ஓர் ஆய்வு கூறுகிறது.

நடைபாதை மேற்பரப்புகள் ஏன் நகர்புற வெள்ளத்தை ஏற்படுத்துகிறது?

ரூ.738 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரம்: இம்முறை வெள்ள பாதிப்பின்றி தப்புமா சென்னை? | Rs 738 crore Stormwater drain works in chennai - hindutamil.in

நகர்புறங்களில் மழைநீர் ஊடுருவ முடியாத இடங்களில் வெள்ளம் ஏற்படுகிறது. சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களின் தனித்துவமான தன்மைகளைக் கருத்தில் கொள்ளாமல் உருவாக்கப்பட கட்டமைப்பு வசதிகள் காரணமாக வெள்ள நீர் வடிகால் மோசமாகி உள்ளது. இதற்கு புவியீர்ப்பு விசையை மையமாகக் கொண்ட மரபார்ந்த கட்டமைப்பு வசதிகள் மூலம் அருகிலுள்ள ஏரி கால்வாய் மூலம் கடலுக்கு கடத்த முடியும். புயல் நீர் வடிகால் வசதி அவசியம்.

ஆனால் அதுமட்டுமே போதுமானதல்ல. மேலும் அவை பல நேரங்களில் செயல்படாமல் போய்விடுகிறது அல்லது தோல்வி அடைய வாய்ப்பு இருக்கிறது. சீரற்ற நிலங்கள்,மிகவும் ஏற்றத்தாழ்வான நிலங்கள், தாழ்வான நிலங்கள், புயல் வெள்ளத்தை வெளியேற்ற வேண்டிய நீர் நிலைகள் வெகு தொலைவில் இருக்கும்போது, முறையற்ற வடிகால், தரமற்ற வடிகால், புயல் நீர் அகற்றும் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், வடிகால் வசதிக்கு மிஞ்சும் மழை , பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் ஏரிகள் போன்ற காரணங்களால் வெள்ளநீரை வெளியேற்றுவதில் காலதாமதம் ஏற்படலாம்.

உலகளாவிய பிரச்சினை

மழை,வெள்ளம், வெள்ள நீர் வடிகால் வசதிகள் பயன் அளிக்காமல் போதல், கட்டமைப்பு வசதிக்கும் மேல் அதீத வெள்ளம் என தொடரும் பிரச்சினை, தமிழ் நாட்டில் உள்ள சென்னைக்கோ அல்லது இந்தியாவில் உள்ள பெருநகரங்களுக்கோ உள்ள பிரச்சினை அல்ல. இது ஓர் உலகளாவிய பிரச்சினை. உதாரணமாக, அமெரிக்க நாட்டின், “சிவில் பொறியியலாளர்கள் சங்க அறிக்கையில்” அமெரிக்க நாட்டிற்கே டி தரச் சான்றிதழ் வழங்கியுள்ளது. புயல்,வெள்ளம் அளவு ரீதியான மற்றும் தர ரீதியான பிரச்சனைகளை உள்ளடக்கியது. வெள்ளப் பெருக்கு எடுக்கும் போது, வெள்ளப் பெருக்கு பகுதியில் படிந்துள்ள மண், குப்பைகள், எண்ணெய், உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் இதர மாசுபட்ட பொருட்களை அடித்து கொண்டு வருகிறது. அவற்றை ஆறுகள் குளங்களில் தள்ளிவிட்டு விட்டு போய்விடுகிறது.

நகரங்களில் ஓடும் ஆறுகள் குளங்கள் சீரழிவதற்கு இதுவே முதன்மைக் காரணமாகிவிடுகிறது. தனது நீர் கொள்ளவில் 10 விழுக்காடு மேற்பரப்பு நீர் புகாத பகுதிகளாக இருக்கிறதோ அங்கே அங்கே புயல் வெள்ளத்தால் சிதைவு ஏற்படுகிறது.‌ நீர் வாழ் உயிரினங்களும் வெகுவாக குறைக்கப்படுகிறது என ஓர் ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. எனவே வெள்ள நீர் வடிகால் வசதி மட்டுமே நிரந்தர தீர்வு அல்ல. சர்வரோக நிவாரணி அல்ல. வடிகால் வசதி மட்டுமே வெள்ளம் புயல் மழை நீர் பிரச்சினையைத் தீர்த்துவிடும் ‌என நம்புவது தவறான புரிதல்.

புயல் வெள்ளத்தின் அளவை குறைக்க ஒரே வழி ஊடுருவாத மேற்பரப்பு பகுதிகளின் அளவை குறைப்பது, உறிஞ்சும் தன்மையுள்ள நிலப்பரப்பை அதிகரித்தல் ஆகிய இரண்டுமே முக்கியம். குறிப்பாக நகர்புறத்தை பசுமை இடங்களாக மாற்ற வேண்டும். மரங்கள்,பூங்காக்கள், நகர்புற காடுகள், பச்சை கூரைகள், பச்சை சுவர்கள், மழைத் தோட்டங்கள் போன்றவை பசுமை கட்டமைப்புக்கு ஏற்ற வடிவங்கள் எனக் குறிப்பிடலாம். இவை மழை/ புயல் வெள்ளத்தை மெதுவாக்கவும், வடிகட்டவும், மழைநீர் விழும் இடத்தில் தேக்கவும் உறிஞ்சவும் பயன்படும்.

இத்தகைய செயல்திட்டம் புயல் வெள்ளத்தை நிர்வகிப்பதோடு மட்டுமல்லாமல், மண்ணில் விழும் மழைநீர் தரமான நீராக ஆறு, குளம், கடலுக்கு சென்று சேரும். எனவே வளர்ந்த, வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் உள்ள பெருநகரங்களில் மரபார்ந்த மற்றும் பசுமைக் கட்டமைப்பு முறைகளை ஒருங்கிணைத்து நகர்புற வெள்ளத்தை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு கண்கூடான சாட்சியங்களாக இருக்கும் பல நகரங்களைக் கூற முடியும்.

வாசிங்டன், நியூயார்க், பிலடெல்பியா, போர்ட்லேண்ட், வான்கூவர், டொராண்டோ, லண்டன், பாரிஸ், பெர்லின், கோபன்ஹேகன், ரோட்டர்டேம், டோக்கியோ, சிங்கப்பூர்,மெல்போர்ன் ஆகியவையே இந்த உதாரணங்கள். 2014 ஆம் ஆண்டு முதல் ஓர் மிகச் சிறந்த திட்டத்தை முன்னெடுத்து வந்து கொண்டு இருக்கிறது. 70 விழுக்காடு மழைநீரை விழும் பகுதியிலேயே தேக்க வேண்டும். 80 விழுக்காடு நகரங்களில் இத்திட்டத்தை 2030 ஆம் ஆண்டிற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. இந்தத் திட்டத்திற்கு “ஸ்பான்ஞ்ச் சிட்டி திட்டம்” என்று பெயரிட்டுள்ளனர்.

செயல் திட்டம்

தற்போதைய நிலையில் இந்திய நகரங்களில் புயல், மழைவெள்ள நீரை நிர்வகிக்க மரபார்ந்த கட்டமைப்பு முறைகளையே கைக் கொண்டு வருகிறது. வெள்ளநீர் வடிகால் கால்வாய்களையே நம்பி உள்ளது. இது தற்போதைய சவால்களை சமாளிக்க போதுமானதல்ல. மரபார்ந்த மற்றும் பசுமைக் கட்டமைப்பு முறைகளை இணைத்து வெள்ளத் தடுப்பு அணுகுமுறையை சீனாவின் ஸ்பான்ஞ்ச் சிட்டி திட்டம் போல் வடிவமைக்க வேண்டும்.

வெள்ளத்தடுப்புக்கான பேராயுதம் நீர் நிலைகள். அவற்றின் முக்கியத்துவம் உணர்ந்து, அனைத்து நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். அதன் மீதான ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆக்ரமிப்புக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்புகளை அமலாக்கம் செய்வது மட்டுமே போதுமானதல்ல. அனைத்து நீர் நிலைகளிலும் பல்வேறு விதமான பசுமைக் கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலமே நிரந்தரமாக ஆக்கிரமிப்புகளைத் தடுக்க முடியும். அத்தோடு மட்டுமல்லாமல், அத்தகையக் கட்டமைப்புகள் மனமகிழ் இடங்களாகவும், நடைபயிற்சி மையங்கள், சைக்கிள் ஓட்டும் பகுதியாகவும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் பொதுமக்களே நீர் நிலைகளைப் பாதுகாக்கும் கடமையை கைக்கொள்ளப் பழகுவார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திலும், ஒரு லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை உள்ள நகரங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மரங்கள் பற்றியக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஒவ்வொரு ஐந்து ஆண்டிலும் ஐந்து விழுக்காடு பசுமை பரப்பு அதிகரிக்கிறதா என்பதையும் மதிப்பீடு செய்ய வேண்டும். அளவு ரீதியாகவும் தர ரீதியாகவும் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நகரங்களுக்கு மாநில அரசுகள் நல்ல பரிசுகளை அறிவித்து ஊக்கம் ஊட்டலாம். நீர் நிலைகளைப் பாதுகாக்கவும்,உருவாக்கவும் ஒவ்வொரு நகராட்சியும், ஐந்து விழுக்காடு தனது வரவு செலவு அறிக்கையில் ஒதுக்கீடு செய்ய உற்சாகம் ஊட்டலாம். பசுமைக் கட்டமைப்பை உருவாக்கும் நகராட்சிக்கு 1:1 அல்லது 2:1 என‌ மேட்சிங் கிரான்ட் வழங்கலாம்.

பசுமைக் கட்டமைப்பை உருவாக்கவும் மேம்படுத்தவும் விரிவாக்கம் செய்யவும் தேவையான துணை விதிகளை,உத்தரவுகளை வரைமுறைகளை உருவாக்கலாம். ஊக்கத் தொகைகளை வழங்கலாம். ஒவ்வொரு புதிய கட்டிடத்தின் முன்பும் ஒவ்வொரு 25 அடிக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கலாம். 2000 சதுர அடியில் உருவாக்கபடும் ஒவ்வொரு புதிய கட்டிடம், வீட்டுமனைகள்,வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், அலுவலகக் கட்டிடங்கள் என எதுவானாலும் பசுமைக் கூரை அமைப்பதைக் கட்டாயம் ஆக்கலாம். பசுமைச் சுவர்கள் அமைப்பதையும் ஊக்குவிக்கலாம். பசுமைப் பரப்பு குறியீட்டை எட்டிய புதிய,பழைய கட்டிடங்கள் அனைத்திற்கும் சொத்து வரியில் 33 விழுக்காடு வரிச்சலுகை வழங்கலாம்.

1986 ஆம் ஆண்டு முதல் 2007 வரை சிங்கப்பூர் மக்கள் தொகை 68 விழுக்காடு மக்கள் தொகை அதிகரித்துள்ளது. அதேசமயம் பசுமை பரப்பு 36 விழுக்காட்டிலிருந்து 47 விழுக்காடு அதிகரித்துள்ளது. சூழலியல் நிபுணர் டிமோதி பீட்லியின் கூற்றுப்படி “நகர்புற வாழ்கையை இயற்கைக்கு நெருக்கமாக இணைப்பது சாத்தியமே. நகரத்திற்கும் இயற்கைக்குமான தேர்வு தவறானதாக போய்விடக் கூடாது.‌ தேவையற்ற மற்றும் காலாவதியான இரு வேறுபட்ட நிலைகளாக ஆகிவிடக் கூடாது” என்கிறார்.

உலக நகரங்களில் ஒன்றான சிங்கப்பூர் எங்கு பார்த்தாலும் இயற்கை எழில் கொஞ்ச வேண்டும் என்று செயலாற்றி வருகிறது. இந்த தொலைநோக்கு பார்வையில் சிங்கப்பூரை “பூங்கா நகரம் என்பதற்கு பதிலாக பூங்காவில் அமைந்துள்ள நகரம்” என மாற்றம் அடைய செய்ய செயலாற்றி வருகிறார்கள்.

சிங்கப்பூரின் சிறந்த பசுமைக் கட்டிடங்கள்

சிங்கப்பூரைப் போலவே இந்திய நகரங்களும் இந்த இரு வேறுபாட்டை கடந்து செல்ல முயல வேண்டும். 2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக இந்தியா மாற வேண்டும் என தனது தொலைநோக்கு பார்வையில் ஒருங்கிணைந்த பகுதியாக பயோஃபிலிக் நகர்புறமாக மாற வேண்டும். இத்தகைய பரந்து பட்ட செயல்திட்டத்தை உருவாக்கவும் செயல்படுத்தவும் இந்திய நகரங்கள் நெடுந்தொலைவு செல்ல வேண்டும் என்பதில் அய்யம் இல்லை. ஆனால் கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதான நகர்புற பூங்காவிற்கான திட்டமிடல் ஓர் ஆகச் சிறந்த துவக்கப் புள்ளியாக அமைய வாய்ப்புள்ளது‌.

கட்டுரையாளர்

கே. அசோக் வரதன் ஷெட்டி, தமிழ் நாடு பிரிவைச் சேர்ந்த பணி நிறைவு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர்.

தமிழில்

நா.மணி, பேராசிரியர். மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.

27/10/24 / DT.NEXT
இணைய இதழ்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கல்வி ஆலமரம்: காத்மண்டுவை திரும்பிப்பார்க்க வைத்த இந்திய பேராசிரியர்!

சுற்றுச்சூழல் நெருக்கடி Vs பருவநிலை மாற்றம்… சவால்களும் தீர்வுகளும்

இளம் தலைமுறையினர் சிகையலங்கார சிக்கல்கள்: தீர்வுகளை நோக்கிய முயற்சிகள்!

ஓர் ஆசிரியர் எப்படி வாழ வேண்டும்?

டெபாசிட் போனது மட்டும் 1 கோடி… 245 வது முறையாக களம் இறங்கும் பத்மராஜன்

குடலில் ஒரு சொட்டு பருக்கை இல்லை… மைனர் பணிப்பெண் கொலையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

ஹெல்த் டிப்ஸ்: யாரெல்லாம் எக்ஸ்-ரே (X-ray) எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்?

+1
0
+1
0
+1
0
+1
8
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *