சிறப்புக் கட்டுரை :ஏன் காலில் விழுந்து வணங்க வேண்டும்?

சிறப்புக் கட்டுரை தமிழகம்

சத்குரு

கேள்வி

கோவிலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கவேண்டும், ஒரு யோகியை பார்த்தால் காலில் விழவேண்டும், பெற்றோர், பெரியவர்களைப் பார்த்தால் அவர் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற வேண்டும், போன்ற வழக்கங்கள் உள்ளன. இவற்றில் ஏதேனும் விஞ்ஞானப்பூர்வமான அடிப்படை உள்ளதா?

பதில்

காலைத் தொட்டு வணங்குவது, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது போன்றவற்றில் கலாச்சார அடிப்படையும் உண்டு, விஞ்ஞான அடிப்படையும் உண்டு. கலாச்சாரம் என்று பார்த்தால், மனிதர்கள் தம் மனதில் உள்ள மரியாதை உணர்வினை வெளிப்படுத்தும் முறை என்று சொல்லலாம். பெரியவர்கள், குறிப்பாக தாய், தந்தையரின் காலில் விழுவது எதற்கென்றால், நாம் இவ்வுலகில் பிறப்பதற்கே அவர்கள்தான் காரணம். நாம் கடவுளை இன்னும் உணராமல் இருக்கலாம். ஆனால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று சொன்னது கூட பெற்றோர்தானே? எனவே நாம் இருப்பதற்கு மூலகாரணமான அவர்களை நாம் வணங்குகிறோம்.

இதன் விஞ்ஞானத்தைச் சொல்வதென்றால், உங்கள் உடலை வெறும் தசை, எலும்பு, நரம்பு என்று வெறும் உறுப்புகளாகப் பார்க்கலாம். அல்லது உடல் என்பதை சக்தி அடிப்படையிலும் பார்க்கலாம். இந்த சக்திதான் உங்கள் எல்லா உறுப்புகளையும் உருவாக்க அடிப்படையாக இருக்கும் சக்தி. இதை குறிப்பிட்ட வகையில் ஒருங்கிணைத்தால், ஒருவரின் உடலிலிருந்து சக்தி வெளிப்படும் விதமாகச் செய்ய முடியும்.

நம் பாதங்களில் மிகவும் அதிகமான சக்தி ஓட்டம் நடக்கிறது என்று விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்து இருக்கிறார்கள். அதை உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் காலில் விழும் பழக்கம். ஒரு யோகியையோ குருவையோ பார்த்தால் வெறுமனே போய் காலில் விழுந்தால் போதாது. எப்படி விழவேண்டும், எப்படி அவர் பாதங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கு குறிப்பிட்ட வழிமுறைகள் உண்டு. அதை அறிந்து அவர்களின் பாதம் பற்றினால், மிகுந்த சக்தியை அவரிடமிருந்து நீங்கள் எடுத்துக்கொள்ள முடியும். அதனால்தான் அந்த யோகியோ குருவோ விரும்பினால் மட்டுமே அவர் பாதங்களை நீங்கள் தொட அனுமதிப்பார்கள். எல்லா சமயங்களிலும் தொடுவதற்கு அனுமதி இல்லை.

கோவிலில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது எதற்கென்றால், அங்கு கடவுள் சக்திரூபமாக இருக்கிறார். அங்கிருக்கும் சக்தியை பெற்றுக் கொள்ளும் தன்மை இயல்பாகவே அனைவருக்கும் இருப்பதில்லை. எனவே அதனுடன் நீங்கள் தொடர்பில் வரவேண்டும். அதற்காகத்தான் கோவிலில் நீங்கள் தரையில் உட்காரவேண்டும் அல்லது உடல் தரையில் படும்படி விழுந்து வணங்க வேண்டும் என்றார்கள். அதுவும் ஆண்கள் என்றால் சட்டையைக் கழற்றிவிட்டு சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கலாம். பெண்கள் என்றால் ஈர உடையுடன் சாஷ்டாங்கமாக வணங்கவேண்டும் என்று வகுத்தார்கள்.

யோக முறைப்படி சொல்லப் போனால், சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது சூரிய நமஸ்காரத்தில் மிக முக்கியமான ஒரு நிலை. சாஷ்டாங்க நமஸ்காரம் என்றால் உடலின் எட்டு அங்கங்கள் மட்டுமே தரையில் பட வேண்டும்.ஆனால் தற்சமயம் பொத்தென்று உடலை கீழே போட்டு உடலின் அனைத்து பாகங்களும் தரையில் படுமாறு வணங்குகிறோம். கோவிலில் படுத்து உறங்குவது போல் கீழே கிடப்பதில் அத்தனை சுகமோ என்னவோ? ஆனால் பாரம்பரிய முறைப்படி சாஷ்டாங்கமாகத்தான் ஒருவர் விழுந்து வணங்க வேண்டும். இவ்வாறு செய்வதற்கு பல சிறப்புகள் உண்டு.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்...

+1
0
+1
1
+1
0
+1
1
+1
3
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *