சத்குரு
இறந்த உடலை உடனே எரிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. ஆனால் சில கலாச்சாரங்களில் புதைக்கும் வழக்கம் உள்ளது. எது சரியான வழக்கம்- எரிப்பதா? புதைப்பதா? இதற்கு சத்குரு தரும் விளக்கம் உள்ளே.
நமது கலாச்சாரத்தில், இறந்தவர் உடலை எரிக்க வேண்டும் என்ற பழக்கம் எப்படி வந்தது?
நமது கலாச்சாரத்தில் இறந்தவர் உடலைப் பாதுகாக்கும் வழக்கம் இல்லை. இந்தத் தேசத்தின் கலாச்சாரம், வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் மனிதனை மேல்நோக்கிக் கொண்டுசெல்வதாக அமைய வேண்டும் என்றே நினைக்கிறது. உடலை எரிப்பது என்ற சடங்கும் அந்த நோக்கத்திலேயே அமைக்கப்பட்டது.
இறந்தவர் இந்த உடல்தான் தனது உயிர் என்று வாழ்ந்திருப்பார். அந்த உடலோடு மிகவும் ஆழமான தொடர்போடு வாழ்ந்திருப்பார். உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந்துவிட்டார்.
ஆனால் அந்த உயிரைப் பொறுத்தவரையில் உடலை விட்டு நழுவிவிட்டதாகத்தான் நினைத்துக்கொண்டு இருக்கும். எனவே மீண்டும் அந்த உடலுக்குள் நுழைந்துவிடலாம் என்றே அந்த உயிர் துடிக்கும்.
எனவே, வாய்ப்பை எதிர்நோக்கி அந்த உடலைச் சுற்றியே உயிர் சுற்றிக்கொண்டு இருக்கும். உடல் முழுமையாக இருக்கும் வரை அந்த உயிரால் அங்கிருந்து நகர முடியாது.
அந்த மனிதர் ஞானம் அடைந்திருந்தால், அந்த உடலைவிட்டு நீங்கிய கணத்திலேயே அந்த உயிர் மகிழ்ச்சியாக அங்கிருந்து வெளியேறிவிடும். ஆனால், சரியான புரிதல் இல்லாத உயிர் அந்த உடலையே சுற்றிவரும். இது அந்த உயிருக்கும் நல்லதல்ல.
இறந்தவருடன் பழகியவர்க்கும் அந்த உடலைப் பார்த்துப் பார்த்து பல நினைவுகளால் வருத்தம் அதிகமாகியே போகும். உயிரை விட்டவரும் சரி, உறவினர்களும் சரி, உடல் அங்கிருக்கும் வரை, வேதனையோடு இருப்பர்.
எனவே விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அந்த உயிர் உணர வேண்டும் என்பதால், அந்த உடலை முழுமையாகவும் விரைவாகவும் அழிக்க வேண்டும் என்னும் நடைமுறை உண்டாக்கப்பட்டது.
எனவேதான் இறந்த ஒன்றரை மணி நேரத்துக்குள் உடலை எரிக்க வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டது.
அவசரத்திலும் பதற்றத்திலும் தவறான முடிவெடுத்து உயிருடன் இருக்கக்கூடியவரை தவறுதலாக எரிக்கப்பட்டுவிடலாம் என்பதால், அதை நான்கு மணிநேரம் என பிற்பாடு மாற்றி அமைத்தார்கள்.
தாம் அறிந்த அந்த உடல் இனி இல்லை, அடையாளமற்று எரிந்து கையளவு சாம்பலாகிவிட்டது என்னும் உண்மையை அறியும்போது, இறந்த உயிரும் அந்த இடத்திலேயே பரிதவித்துக்கொண்டு இருக்காது. இங்கு உயிருடன் இருப்பவர்களும் மாண்டவன் இனி மீளப்போவதில்லை என்று ஒருவித அமைதி கொள்வார்கள்.
எனவேதான் ஒருவர் இறந்துவிட்டால் அவரை உடனடியாக எரிப்பது நமது கலாச்சாரத்தில் இருந்து வருகிறது.
போதிய விறகு இல்லாத பாலைவனங்களிலும், நெருப்பு நின்று எரியாத குளிர்ப் பிரதேசங்களிலும் எரிப்பதைவிட புதைப்பது சுலபமாக இருந்தது. எனவே அத்தகைய நாடுகளில் அதுவே அவர்களது நடைமுறையாக மாறிவிட்டது!
மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…
நீரிழிவு நோயை குணப்படுத்த யோகா உதவுமா? – சத்குரு
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் லட்டு!