மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? – 7 – உதய் பாடகலிங்கம்

Published On:

| By Balaji

உதய் பாடகலிங்கம்

புத்தாயிரத்துக்கான கொண்டாட்டங்கள் தொடங்கப்படுவதற்கு முன்னும் பின்னுமாக, குர்மீத் சிங்கினால் இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்தே அது பற்றிய விவரங்கள் வெளியுலகுக்குத் தெரியவந்தன. இந்தக் காலகட்டத்தில், விவகாரத்தை வெளிக்கொண்டுவந்த பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி, தேரா சச்சா சவுதா ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங், பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். ராம்சந்தரின் மகன் அன்சுல் நீதி கேட்டுக் காவல்நிலையம் சென்றபோது, அங்கிருந்தவர்கள் குற்றச்சாட்டைப் பதிவு செய்யவில்லை. விடாமல் போராடிய அன்சுல், ஹரியானா நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கியதன் விளைவாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

2007ஆம் ஆண்டில் நடந்த விசாரணையின் பலன், 2017ஆம் ஆண்டுதான் தெரிந்திருக்கிறது. இரு பெண்களுக்கும் நீதி தாமதமாகக் கிடைத்ததன் பின்னணியில் வலுவாக இருப்பது, குர்மீத் சிங் திட்டமிட்டு வளர்த்துக்கொண்ட அவரது அரசியல் செல்வாக்கு.

குர்மீத்தின் இரண்டு முகங்கள்

தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகமுள்ள சிர்ஸா மாவட்டத்தில், அவர்களது வாழ்வைச் சிறிதளவாவது முன்னேற்றுவதுதான் தேராவைத் தொடங்கிய மஸ்தானா ஜியின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். அவர் வழிவந்த சத்னாம் சிங்கும் அதைத் தொடர்ந்தார். ஆனால், அந்தப் பாதையில் விஸ்வரூப வளர்ச்சியை முன்னெடுத்தவர் குர்மீத் சிங். அவர் ஒரு குற்றவாளி என்பதால், இதைச் சொல்லாமலிருக்க முடியாது. ஒருபுறம் குற்றச் செயல்களைப் புரிந்துகொண்டே, மறுபுறம் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்தாரா என்ற சந்தேகத்தையும் புறந்தள்ள முடியாது.

1970-80களுக்குப் பிறகு, பசுமைப் புரட்சியினால் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் நிறைய விளைவுகள் உண்டாயின. அவற்றுள் ஒன்று, அந்த வட்டாரத்தைச் சேர்ந்த நில உரிமையாளர்களுக்கும், அங்கு நிலத்தில் வேலை செய்த ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் இடையேயான மோதல். இதன் தொடர்ச்சியாக, நில உரிமையாளர்கள் அருகிலிருந்த உ.பி., பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயத் தொழிலாளர்களை அழைத்துவந்தார்கள்.

அதன் பிறகு, உள்ளூர் தொழிலாளர்களின் தினசரி வாழ்வும் பறிபோனது. அப்போது, சொந்தமாக வீடில்லாத அந்த மக்களுக்குப் புகலிடம் தந்தது தேரா சச்சா சவுதா. அவர்களில் சிலர், வேலை தேடி வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். குருத்வாராவில் உரிய மரியாதை கிடைக்காததால், தங்களுக்கான ஆன்மிக மார்க்கத்தைத் தேடினர். சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் எதிர்பார்த்தனர். இந்த வெற்றிடத்தைப் பயன்படுத்திக்கொண்டார் குர்மீத்.

தன்னைக் கடவுளின் அவதாரமாக முன்னிறுத்திக்கொண்டு, எளியவர்களுடன் எளியவனாகக் காட்சி தந்தார். கடவுளை வழிபடுவதில் எந்த பேதமும் இல்லை என்ற நிலையை உருவாக்கினார். சீக்கியர்கள் மட்டுமல்லாமல், அந்தப் பகுதியிலிருந்த இந்து மக்களும் தேராவை நோக்கி வரத் தொடங்கியது இதன் பிறகுதான். தற்போது நாடெங்கும் 46 இடங்களில் கிளை பரப்பியிருக்கிறது தேரா.

ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக அங்கீகாரம் பற்றிய குறைகள், தேராவினால் சரிசெய்யப்பட்டன. அதோடு நில்லாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. உயர் சமூகத்தினரின் நிலங்களில் வேலை கிடைக்காதவர்களுக்கு, தேரா வளாகத்தினுள் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டன. வெளியில் கிடைக்கும் கூலியைவிட அதிகமான கூலி அங்கே கொடுக்கப்பட்டது. சொந்தமாகத் தொழில் தொடங்க முயன்றவர்களுக்கும் தேரா கைகொடுத்தது. சிலர் வெளிநாடுகளுக்குச் செல்லவும் உதவியதாகச் சொல்லப்படுகிறது.

குர்மீத் தலைவரான பிறகு, இதுபோன்ற செயல்பாடுகளால் அந்தப் பிரதேசம் முழுவதும் அவரது கட்டுப்பாட்டினுள் வந்தது. தேரா தலைமையக வளாகத்தினுள் கல்வியும் சுகாதாரமும் பரிபூரணமாகக் கிடைக்க, அங்கு மருத்துவமனைகளும் பள்ளிகளும் தொடங்கப்பட்டன. ஆதரவற்ற ஆண், பெண் குழந்தைகளுக்குத் தனித்தனி விடுதிகள் கட்டப்பட்டன. குர்மீத் பிறந்த ஊரான குருசார் மோடியாவிலும் ஒரு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு, மிகக் குறைந்த தொகையே கட்டணமாகப் பெறப்படுகிறதாம்.

இதுபோக, தன் தாய் நசீப் கவுர் பெயரில் ரத்த தான முகாம்களையும், தந்தை மஹார் சிங் பெயரில் சர்வதேச ரத்த வங்கியையும் செயல்படுத்தினார் குர்மீத். வெளிநாடுகளில்கூட குர்மீத்தின் பக்தர்கள் ரத்த தான முகாம்களை நடத்தியிருக்கிறார்கள். இதில் சில கின்னஸ் சாதனையில் இடம்பிடித்திருக்கின்றன.

தேரா சவுதாவின் இணையதளம், குர்மீத் 112 மக்கள் நலப்பணிகளை முன்னெடுத்ததாகச் சொல்கிறது. அவரது தனிப்பட்ட தளத்தில், இந்த எண்ணிக்கை 133 என்று சொல்லப்பட்டிருக்கிறது. எது எப்படியாயினும், எதுவுமற்ற மக்கள் சிலருக்கு ஆபத்பாந்தவனாக வழிகாட்டியிருக்கிறது தேரா. அதனால்தான், குர்மீத் தன்னைக் கிருஷ்ணனாக வெளிப்படுத்திக்கொண்டதை அவரது பக்தர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையென்று தோன்றுகிறது.

அரசியல் அரங்கிலும் தாக்கம்

கடந்த இருபது ஆண்டுகளில், பல மதத்தினரும் தேராவுக்கு வருவதாகச் சொல்லப்படுகிறது. சமூகத்தில் ஒருவரது செல்வாக்கு ஒவ்வொரு நாளும் பெருகினால், எந்த அரசியல் கட்சிதான் அந்த நபரை விட்டுவைத்திருக்கும்? போதாக்குறைக்கு, தேரா வளாகத்தினுள் ஒரு அரசியல் பிரிவை வேறு உருவாக்கியிருந்தார் குர்மீத். இதன் வழியாக, எந்தக் கட்சிக்கு அங்குள்ள மக்கள் ஓட்டுப்போட வேண்டுமென்பது மிக வெளிப்படையாக முடிவு செய்யப்பட்டது.

பஞ்சாபில் சிரோன்மணி அகாலிதளம் சில உயர் சமூகத்தினரின் ஆதரவைப் பெற்றிருக்க, தேராவின் ஆதரவு காங்கிரஸுக்குக் கிடைத்தது. ஹரியானா மாநிலத்தைப் பொறுத்தவரை இந்திய தேசிய லோக்தளத்துக்கும் காங்கிரஸுக்கும் தனது ஆதரவை மாறிமாறித் தந்தது தேரா. ஒருகட்டத்தில், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் ஆட்சியை யார் கைப்பற்றுவது என்பதை நிர்ணயிக்கும் நபராக அடையாளம் காணப்பட்டார் குர்மீத்.

வளர்ச்சி இருந்தால் தாழ்ச்சியும் இருக்கும்தானே? தேரா ஆதரவாளர்களுக்கும் சில சீக்கிய அமைப்புகளுக்கும் இடையே நடந்த மோதல்களும், கடந்த 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு முடுக்கப்பட்ட சிபிஐ விசாரணையும் குர்மீத்தின் அரசியல் அதிகாரத்தில் பொத்தலை உண்டாக்கியது.

நாளை…

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 1

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 2

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 3

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 4

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 5

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 6

Who is this Gurmeet Ram Rahim Singh Mini Series 5

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel