மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? – 6 – உதய் பாடகலிங்கம்

Published On:

| By Balaji

உபதேசங்கள், நலப் பணிகள், அத்துமீறல்கள்…

ஆங்கிலத்தில் ‘ODD MAN OUT’ என்று சொல்வார்கள். தனித்துத் தெரிதல் என்று இதற்குப் பொருள். தனித்துத் தெரியும் இயல்புகொண்ட சில மனிதர்கள், சமூகத்தில் தங்களை ODD MAN ஆகக் காட்டிக்கொள்வார்கள். எங்கும் எதிலும் வித்தியாசம் என்பது இவர்களது பாலிசி. அப்படியொருவராகத்தான், ஆரம்பத்தில் இருந்தே தன்னை வெளிப்படுத்திக்கொண்டார் குர்மீத். அதனால்தானோ என்னவோ, காவிக்குப் பதிலாக கலர்புல் காஸ்ட்யூம்களில் வலம்வந்தார். ஆடம்பரமான கார்களில் வந்திறங்கி, எளிமையைப் பற்றி மக்களிடையே பிரசங்கம் செய்தார். ‘இலக்கணம் மாறுதோ’என்று பாட்டுப் பாடாத குறையாக, அதைச் சிலாகித்தனர் மக்கள். இதனால் சிர்ஸா தலைமை ஆசிரமம் ரகசியக்கூடமாக மாறியதை எவரும் கண்டுகொள்ளவில்லை.

சிர்ஸா தலைமை ஆசிரமத்தில், குர்மீத்தின் தனியறையான கூஃபாவினுள் யாரும் அத்துமீறி நுழைய முடியாது. அந்த அளவுக்கு, அங்குள்ள பெண் பாதுகாவலர்கள் பொறுப்பாக இருப்பார்கள். ஒருநாள் அங்கு காவலுக்கு இருந்திருக்கிறார் 15 வயதுச் சிறுமி ஒருவர். அவரை உள்ளே வருமாறு அழைத்திருக்கிறார் குர்மீத். சிறிது நேரம் கழித்து கூஃபாவினுள் நுழைந்த அந்தச் சிறுமிக்குப் பலத்த அதிர்ச்சி. அங்கு நிர்வாணமாக உட்கார்ந்திருந்தாராம் குர்மீத். கூடவே, டிவியில் ஆபாசப் படம் ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. அதிர்ச்சியின் உச்சத்தில் அங்கிருந்து வெளியேற முயற்சிக்க, அந்தச் சிறுமிக்குத் தோல்வியே கிடைத்திருக்கிறது. அன்று, தன் வாழ்க்கையின் மோசமான அனுபவத்தைப் பெற்றிருக்கிறார் அந்தச் சிறுமி. அடுத்தடுத்த நாள்களிலும் இது தொடர்ந்திருக்கிறது.

இதேபோன்ற பாலியல் அத்துமீறலை, இன்னொரு பெண்ணும் சந்தித்திருக்கிறார். அதற்குமுன், “நீ பாபாகிட்ட மன்னிப்பு (மாஃபி) வாங்கினீயா” என்று சில பெண்கள் அவரிடம் கேட்பார்களாம். அது என்னவென்று தெரியாமல் முழித்தவருக்கு, அந்தத் தனியறை அது எப்படிப்பட்ட மன்னிப்பு என்று புரியவைத்திருக்கிறது. நடந்த கொடூரம் பற்றி, அப்போது பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதியிருக்கிறார் அந்தப் பெண். இந்தத் தகவல் எப்படியோ வெளியே கசிந்து, ‘பூரா சச்சா’என்ற பத்திரிகையை நடத்திவந்த ராம்சந்தர் சத்ரபதி என்ற பத்திரிகையாளரைச் சென்றடைந்திருக்கிறது. அதன் பிறகே, இந்த விஷயம் வெளியுலகுக்குத் தெரியவந்திருக்கிறது.

அம்பலப்படுத்தியவர் படுகொலை

இந்தச் செய்தி வெளியானதன் தொடர்ச்சியாக, கடந்த 2002ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி ராம்சந்தர் படுகொலை செய்யப்பட்டார். இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில், சிர்ஸா மண்ணில் அவரது ரத்தம் உறைந்தது. ஆனால், கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்தே இந்த குற்றச்சாட்டு பற்றிய விசாரணையில் இறங்கியது சி.பி.ஐ. இடைப்பட்ட காலத்தில், அந்தப் பெண்ணின் சகோதரரும் ஆசிரம மேலாளரும் கொல்லப்பட்டது தனிக்கதை.

‘ஆசிரமத்திலிருக்கும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு மாதத்தின் எந்தெந்த தினங்களில் குர்மீத்தின் அறைக்கு வர வேண்டும் என்று அட்டவணையே இருந்தது’என்று அந்தப் பெண் சி.பி.ஐ. விசாரணையில் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது சக மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுப் பள்ளியிலிருந்து குர்மீத் வெளியேற்றப்பட்டார் என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது.

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டைத் தொடர்ந்து கொலை, கடத்தல் மற்றும் இதர குற்றங்களும் குர்மீத் மீது அடுக்கப்பட்டன. அரசின் நடவடிக்கை மந்த கதியில் இருந்தது ஓர் ஆச்சரியம் என்றால், அவரது பக்தர்களின் கண்மூடித்தனமான ஆதரவு கூடுதலாகச் சேர்ந்துகொண்டது. வெறும் பேச்சு மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாகத் தொடர்ந்த தேராவின் மக்கள் நல நடவடிக்கைகளாலும் இதைச் சாத்தியப்படுத்தியிருந்தார் குர்மீத்.

உபதேசங்கள், நலப் பணிகள்

எங்கு உரை நிகழ்த்தினாலும், மிகவும் கட்டுப்பாடான, ஒழுக்கமான வாழ்க்கை வாழ வேண்டியதன் அவசியம் பற்றிக் குறிப்பிடுவார் குர்மீத் சிங். இது தவிர, மது, சிகரெட் உள்ளிட்ட போதைப் பொருள்களைக் கைவிடுவது, இறைச்சியைப் புறக்கணிப்பது, ஓரினச் சேர்க்கையைக் கைவிடுவது போன்ற பல விஷயங்களைத் தன் பிரசங்கத்தில் புகுத்தினார். எளிமை, உண்மை போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார் குர்மீத். ஆனால், அவரது நடை, உடை, பாவனைகளில் ஆடம்பரம் கலந்திருக்கும். மக்கள் இந்த முரணைக் கண்டுகொள்ளவில்லை. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் தேரா சச்சா சவுதா இறங்கி வேலை செய்தது தான் இதற்கான காரணம்.

தேராவின் நலத்திட்டங்களுக்காக ஒவ்வொரு மாநிலமும் பல பிளாக்குகளாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிளாக்கும் சுமார் 30 கிராமங்களை உள்ளடக்கியது. இந்தப் பகுதிகளில், குறைந்தபட்சம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை தேராவின் பக்தர்கள் இருப்பது கட்டாயம். இவர்களில் இருந்து 15 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கிருக்கும் மக்கள் பிரச்னைகள் சரிசெய்யப்படும்.

ஏழைப் பெண்களுக்குத் திருமணம் செய்துவைப்பது, மருத்துவ உதவிகள் அளிப்பது, வீடு கட்ட உதவி, உடலுறுப்புகள் தானம் செய்வதை அறிவுறுத்துவது, நீதிமன்றம் செல்லாமலேயே மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது என்று பல விஷயங்களை முன்னெடுத்திருக்கிறது இந்த 15 பேர் கொண்ட கமிட்டி.

இப்படி மாநிலம் முழுவதுமுள்ள பிளாக்குகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளைக் கண்காணிப்பதற்கென்றே, 45 பேர் கொண்ட குழுவும் இருந்திருக்கிறது. என்ன, கேட்டாலே மலைப்பாக இருக்கிறதா? கிட்டத்தட்ட அரசு செய்யும் பணிகளை, தன் சாம்ராஜ்யம் மூலமாக நிர்மாணித்திருக்கிறார் குர்மீத் சிங். இதனால் அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் பயனடைந்தனர். இதுபோக, அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் உண்டாக்கியிருக்கிறது தேரா சச்சா சவுதா.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது, குர்மீத்தின் அரசியல் செல்வாக்கு விஸ்வரூபமெடுக்கக் காரணமானது. அதுவே, அவர் மீதான குற்றசாட்டுகள் பல ஆண்டுகளாக நீர்த்துப்போக வழி செய்தது.

நாளை…

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 1

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 2

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 3

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 4

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 5

Who is this Gurmeet Ram Rahim Singh Mini Series 5

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel