கடவுளின் தூதரா இந்த (ஆ)சாமி! (அத்தியாயம் 1)
பிரியாணி பொட்டலம், அழைத்துவர வாகனம், கைச்செலவுக்குப் பணம், இது மட்டுமில்லாமல் ஊரையும் சுற்றிப் பார்க்கலாம் என்ற வாக்குறுதியைத் தந்தால்கூட, இன்று அரசியல் மாநாடுகளுக்குக் கூட்டம் வருவதில்லை. மாநிலம், கட்சிகள், அரசியல் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, தன்னை நல்லவன், வல்லவன், வீரன், சூரன், வள்ளல், வரலாற்று நாயகன் இத்யாதி என்று சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் எவரும், இப்போதைய நிலையில் கையிலிருக்கும் காசைக் கரைக்காமல் கூட்டம் சேர்க்க முடியாது. இவர்களது பொறாமையை ஒட்டுமொத்தமாகச் சம்பாதித்திருக்கிறார் ஒரு நபர். இவர், ஒரு வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளியும்கூட. ‘தேரா சச்சா சவுதா’ என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்தான் இந்த மனிதன்.
கவனிக்கவும், ‘ர்’ அல்ல, ‘ன்’ என்று அழுத்தமாக உச்சரிக்க வேண்டும். இதற்குக் காரணம், இவர் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர்தான். குரு டாக்டர் குர்மீத் ராம் ரஹீம் சிங் ஜி இன்சான் என்று தேரா சச்சா சவுதா அமைப்பின் அதிகாரபூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இன்சான் என்ற சொல்லுக்கு மனிதன் என்று அர்த்தம். வடமாநிலங்களில் இருப்பவர்கள் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரையோ, குடும்பப் பெயரையோ இணைத்துக்கொள்வது வழக்கம். அதுபோல, குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் பக்தர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் மனிதன் என்று சேர்த்துக்கொண்டவர்கள். அதாவது, மனிதர்கள் அனைவரும் சமம் என்ற உண்மையை உணர்த்துபவர்கள். ஆஹா! மனித முன்னேற்றத்தை ஒரு அங்குலம் முன்னோக்கி நகர்த்தியிருக்கிறாரே இவர் என்ற தோற்றம் உண்டாகலாம். ஆனால், இதுபோன்ற சில வார்த்தைகளைத் துணைக்கு வைத்துக்கொண்டு, தன்னைக் கடவுளாகப் போற்றும் ஒரு சாம்ராஜ்யத்தையே நிர்மாணித்திருக்கிறார் இந்த (ஆ)சாமி.
பாலியல் வழக்கில் குற்றம் உறுதிசெய்யப்பட்டு, 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட பிறகும், இவருக்கு ஆதரவான குரல்கள் குறையவில்லை. நீதிமன்றத் தீர்ப்பில் தண்டனை உறுதியான சில மணி நேரங்களில், ஹரியானா மற்றும் பஞ்சாப் என்ற இரு மாநிலங்களில் வெறியாட்டம் ஆடியிருக்கின்றனர் ராம் ரஹீமின் பக்தர்கள். இப்போதுவரை 40 உயிர்கள் பலியாகியிருப்பதாகவும், சுமார் 300 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஏதோ ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகி தனது பெயரை கெடுத்துக்கொண்ட பிரபலங்களில் இவரும் ஒருவர் என்று கடந்துவிட முடியாது. இவருக்காகத் திரண்ட கூட்டத்தின் இயல்பும் அவர்களது நியாயங்களும் நம்மை வேறு திசைக்கு அழைத்துச் செல்கின்றன. இவர் நல்லவரா, கெட்டவரா, ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல’ டைப்பில் பலரை வாழவைக்கும் நாயகரா என்றெல்லாம் கேள்விகள் நம்முள் தோன்றுகின்றன.
ராம் ரஹீம் சிங் மாதிரியானவர்கள் இப்படியொரு செல்வாக்கைப் பெற்றது எப்படி? குற்றம்சாட்டப்பட்ட பின்பும் அவர்களைத் தனித்துவமான தலைவர்களாகக் கொண்டாடும் அளவுக்கு சமுதாயம் மாறிப்போனது எதனால் என்பன உட்பட, எண்ணற்ற கேள்விகளை ஊற்றெடுக்க வைக்கிறது இவரது வாழ்வு. எந்தவித லாபமும் இல்லாமல், யாரோ ஒருவரின் பின்னால் திரள, இன்றைய தலைமுறை தயாராக இல்லை என்பதே உண்மை. அப்படி இருக்கையில் இவர் பின்னால் இத்தனை பேர் திரண்டிருக்கிறார் என்றால் அதன் காரணம் என்ன?
தொழில்நுட்பம் அசுரத்தனமாக வளர்ந்துவிட்ட காலகட்டத்தில், யாரோ ஒருவரின் வார்த்தைகளுக்குப் பத்தாம்பசலித்தனமாய் மூளையைப் பலி கொடுக்கும் மனிதர்கள் உருவாக வாய்ப்பில்லை. பக்தியைப் பகுத்தறிவோடு அணுகும் சுபாவம் இப்போது அதிகரித்துள்ளது. கல்வியறிவும் சுயசிந்தனையும் இன்று எல்லோரிடமும் பெருகிவிட்டன. ஆனாலும் மிகவும் கூர்மையாக, நுணுக்கமாகத் திட்டமிட்டு, தனக்கு வேண்டியதைச் சாதித்திருக்கிறார் குர்மீத் ராம் ரஹீம் சிங்.
ஆகஸ்ட் 25ஆம் தேதி, சண்டிகரில் உள்ள பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த சம்பவம் ஓர் உதாரணம்தான். 2002ஆம் ஆண்டு, ராம் ரஹீம் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக நடந்துவந்த வழக்கின் இறுதித்தீர்ப்பு வெளியாகும் நாள் அது. முடிவு என்னவாக இருந்தாலும், அதனால் சட்டம் ஒழுங்கு கெடக் கூடாது என்று காவல்துறை முன்கூட்டியே சில நடவடிக்கைகளை எடுக்கிறது. சண்டிகரில் உள்ள ஒரு பெரிய மைதானத்தையே தற்காலிகச் சிறையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அவற்றில் ஒன்று. அதாவது, ஒரு மைதானத்தை நிரப்பும் அளவுக்கு, ராம் ரஹீமின் பின்னால் மக்கள் அணி திரள்வார்கள் என்பது காவல்துறையின் கணிப்பு.
இப்படிச் சிந்தித்தவர்கள், இதற்கு நேர்மாறாக நடந்துகொண்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. தேரா சச்சா சவுதா தலைமையகமான சிர்ஸாவில் இருந்து கிளம்பிய ராம் ரஹீமின் காரை, பஞ்ச்குலா வரை நூற்றுக்கணக்கான வாகனங்கள் பின்தொடர்கின்றன. மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு போக, ராம் ரஹீமின் தனிப் பாதுகாவலர்களும் சில வாகனங்களில் வருகின்றனர். தேரா சச்சா சவுதா அமைப்பினர் நீதிமன்ற வளாகத்தினுள்ளோ, சுற்றியுள்ள பகுதிகளிலோ நுழைய, எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை.
வெள்ளை நிறத்திலான உடை, செருப்பு அணிந்து தனது சொகுசு காரில் அமர்ந்திருக்கிறார் ராம் ரஹீம். அவரது வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இன்சானும் உடனிருக்கிறார். தண்டனை உறுதியான பின்பும் இருவரும் காரிலேயே அமர்ந்தின்றனர். அங்கு வந்த போலீஸாரிடம், ஒரு சிவப்பு நிறப் பையை (RED BAG) எடுத்துவர வேண்டுமென்று கூறுகின்றனர். அதனுள் ராம் ரஹீமுக்கு வேண்டிய பொருள்கள் இருப்பதாகக் காரணம் சொல்லப்படுகிறது.
சிவப்பு நிறப் பையை எடுத்துவரும் வழியில் அவரது பக்தர்கள் நிறைந்திருக்கின்றனர். சில கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த கூட்டம் நீண்டிருக்கிறது. ரெட் பேக் வந்த சில நிமிடங்களில், தூரத்தில் கண்ணீர்ப் புகைக்குண்டு வெடிப்பது தெரிந்திருக்கிறது. அதுவரை, காரினுள்ளேயே இருந்திருக்கின்றனர் ஹனிபிரீத்தும் ராம் ரஹீமும். இத்தனை களேபரங்களுக்கு நடுவில், அருகிலுள்ள ஒரு தியேட்டர் வளாகத்தில், இவர்களுடன் வந்த வாகனங்கள் கிளம்பத் தயாராக நின்றிருக்கின்றன.
ராம் ரஹீம் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பின், சில மணி நேரங்களுக்கு அவர் எங்கிருக்கிறார் என்று அவரது பக்தர்களுக்குத் தெரியவில்லை. ரோஹ்தக் சிறைச்சாலைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். “கலவரத்தை உருவாக்க இந்த ரெட் பேக் ஒரு சிக்னலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வழியில் காவலர்களிடம் இருந்து ராம் ரஹீமை விடுவிக்க அவரது பாதுகாவலர்கள் திட்டமிட்டனர்” என்றிருக்கிறார் காவல்துறை அதிகாரி கே.கே.ராவ். இது இன்னும் உறுதியாகவில்லை. ஆனாலும், இந்தக் காட்சிகள் நம்மை பல அடிகள் பின்னோக்கி இழுத்துச்செல்வது போலிருக்கின்றன.
80களில் இந்தியாவின் ஏதாவது ஒரு மொழியில் வெளிவந்த, ஏதோ ஒரு ஆக்ஷன் சினிமாவின் திரைக்கதை போல, மேலே சொன்ன நிகழ்வுகள் தெரிய வரலாம். ஆனால், இப்படியான திரைக்கதைக் காட்சிகளின் வழியாக, படிப்படியாகத் தன்னை மக்களுக்கு நெருக்கமானவனாக மாற்றிக்கொண்டவர்தான் ராம் ரஹீம் சிங்.
இவரது பிறப்பு, கடவுளின் அவதாரம் என்று சொல்லப்படுவதிலிருந்து, இவர் கதை தொடங்குகிறது.
தொடரும்…
மினி தொடர்: ஒரு பொம்மலாட்டத்தின் கதை – 1
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 2
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 3
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 4
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 5
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 6
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 7
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 8
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 9
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 10
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 11
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 12
மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 13