இன்று (ஜூலை 11) மாவீரன் அழகுமுத்துக்கோன் 314 -வது பிறந்தநாள்…
இந்தியாவின் முதல் விடுதலைப் போர் 1857ல் நடந்தது என வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
ஆனால் அதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டிஷாருக்கு எதிராக நமது தமிழ்நாட்டில் போர் நடந்திருக்கிறது. அந்த போரில் வீரமரணம் அடைந்தவர்தான் அழகுமுத்துக்கோன்…
ஆங்கிலேய அரசுக்கு எதிராக வரிகட்ட மறுத்து தூக்கிலிடப்பட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன். “யாரைக்கேட்கிறாய் வரி, எவரை கேட்கிறாய் வட்டி?” என்று ஆங்கிலேயர்களை எதிர்த்தவர் 1760 ஆம் ஆண்டு பிறந்த கட்டபொம்மன். இது அனைவரும் அறிந்ததே…
ஆனால் அவருக்கு முன்பே ஆங்கிலேயர்களை எதிர்த்து வரிகட்ட மறுத்தவர் அழகுமுத்துக்கோன். உயிரே போனாலும் வரிகட்டமாட்டேன் என்று மறுத்து வீரமரணமடைந்தவர்.
அழகுமுத்துக்கோன் வரலாறு…
1728ல் இல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கட்டாலங்குளத்தில் பிறந்தவர். இவரது தந்தை அழகுமுத்துக்கோன் – தாய் அழகு முத்தம்மாள்.
அந்த காலகட்டத்தில் தாத்தா, தந்தை பெயரே மகனுக்கு வைப்பது வழக்கம். அந்தவகையில் தான் இவருக்கும் வீர அழகுமுத்துக்கோன் என பெயரிடப்பட்டது.
1729ஆம் ஆண்டு இவரது தம்பி சின்ன அழகு முத்துக்கோன் பிறந்தார். இவர்கள் அழகுமுத்து சகோதரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
1750 ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் மரணம் அடைந்தார். தந்தையின் மரணத்தை தொடர்ந்து தனது 22 வயதில் அண்ணன் அழகுமுத்துக்கோன் கட்டாலங்குள சீமையின் மன்னரானார்.
வீர அழகுமுத்துக்கோனுக்கு எட்டயபுரம் மன்னரான ஜெகவீரராமபாண்டிய எட்டப்பர் மன்னர் சிறந்த நண்பராக இருந்தார்.
அழகுமுத்துக்கோன் ஆங்கிலேயர்கள் தன்னுடைய நாட்டில் வியாபாரம் செய்வதை விரும்பவில்லை, அதனால் ஆங்கிலேயர்கள் மீது அவருக்கு வெறுப்பு அதிகமாக இருந்தது.
எந்த உரிமையில் வரி கேட்கிறீர்கள்?
இப்படியொரு நிலையில் 1750ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் (கான்சாகிப்) ஆகியோர் எட்டயபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வரி வசூலிக்க வந்தனர்.
ஆங்கிலேயர்களை எதிர்க்க வீர அழகுமுத்துக்கோன் ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். இந்த கூட்டத்தில் அழகுமுத்து சகோதரர்கள், ஜெகவீரராம எட்டப்பர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து வரி கட்ட முடியாது என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.
“வணிகம் செய்ய வந்த நீங்கள் எங்கள் மக்களிடம் வரி வசூலிக்க என்ன உரிமை இருக்கிறது? வரி வசூல் செய்ய வந்தால் கும்பினிகளின்( ஆங்கிலேய வியாபாரக் கூட்டம்) தலை இந்த மண்ணில் உருளும்” என்று அந்த கடிதத்தில் எழுதியிருந்தது.
இதனால் ஆத்திரம் கொண்ட பிரிட்டிஷார்கள் எட்டயபுரபாளையத்தில் தனது படைகளை குவித்தனர். அப்போது, எட்டயபுர மன்னரையும் மக்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்த வீரன் அழகுமுத்துக்கோன் படையை திரட்டத் தொடங்கினார்.
எட்டயபுரம் பாளையத்துக்கு ஆதரவாகப் போராடிய அழகுமுத்து சகோதரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே போர் மூண்டது. இந்த போரில் அழகுமுத்துக்கோன் வென்றார். இதுதான் பிரிட்டிஷாருக்கு எதிராக நடந்த முதல் போர் என வரலாறு கூறுகிறது.
இதைத்தொடர்ந்து பல இடங்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், 1755 பிப்ரவரி மாத தொடக்கத்தில் திருநெல்வேலி சீமை நோக்கி ஒரு பெரிய படை அணிவகுத்தது.
இந்தப் படையெடுப்பின் முக்கிய நோக்கம் தென்நாட்டு அரசர்களிடம் இருந்து கப்பம் வசூலிப்பதும், கும்பினிகளின் அதிகாரத்தை தென் நாட்டில் நிலைநிறுத்துவதுமாகும்.
மார்ச் 9, 1755இல், மருதநாயகம் தலைமையிலான படைகள் காளமேகப் பெருமாள் கோயிலுக்கு தீ வைத்து, அங்கிருந்த அனைத்து ஆபரணங்களையும் கொள்ளையடித்தன.
அந்த சமயத்தில் மதுரையில் இருந்து ஆங்கிலேயப் படை திருநெல்வேலிக்கு வருவதை அறிந்து அவர்களை எதிர்க்க மன்னர் பூலித்தேவன் எட்டயபுர மன்னரிடம் உதவி கேட்டார். ஆனால் அவர் உதவி செய்யவில்லை. அழகுமுத்துக்கோன் சகோதரர்கள் பூலித்தேவனுக்கு உதவி செய்ய முன் வந்தனர்.
பூலித்தேவனின் படையும் திருவிதாங்கூர் ராணுவமும் அழகுமுத்துக்கோனின் படையுடன் இணைந்து ஆங்கிலேய படைகளை எதிர்த்து போரிட்டது. இதுவே குறுநில மன்னர்களின் கூட்டமைப்புக்கான முதல் படி.
1755ல் எட்டயபுரத்தைத் தாக்க வந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக வீர அழகுமுத்துக்கோனின் படையை சின்ன அழகுமுத்துக்கோன் வழிநடத்தினார்.
அங்கிருந்த பெருமாள் கோயிலை தாக்க வந்த போது, அதை காக்க அழகுமுத்துக்கோனின் படைகள் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், சின்ன அழகுமுத்துக்கோன் ஆங்கிலேயர்களால் சுடப்பட்டு 1755 ஏப்ரல் 07ஆம் தேதி பெருமாள் கோயில் முன் மரணமடைந்தார்.
தனது தம்பியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத மன்னர் வீர அழகுமுத்துக்கோனும், அவரது வீரர்களும் கடும் போரில் ஈடுபட்டனர். போர் முடிவடையும் தருவாயில் பிரிட்டிஷ் படைகள் பின்வாங்கின.
அப்போது அழகுமுத்துக்கோனின் வீரத்தை நன்கறிந்த மருதநாயகம் எட்டயபுரம் அரண்மனையை தாக்கப்போவதாக அறிவித்தார். அந்த பதட்டமான சூழலில் எட்டயபுரம் மன்னரையும், மக்களையும் காத்து பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்த வீர அழகுமுத்துக்கோன், வெளியே சென்று ஆள்திரட்டி 700க்கும் அதிகமானவர்களை தனது படையில் சேர்த்தார்.
இவர்கள் பெத்தநாயக்கனுார் கோட்டையில் தங்கியிருந்த நிலையில் கான்சாகிப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டன. வீர அழகுமுத்துக்கோனும் அவரது தளபதிகளும் கடுமையாகப் போரிட்டனர். அப்போது அழகுமுத்துக்கோனின் குதிரை சுட்டுதள்ளப்பட்டது.
முத்துகோனின் வலது காலிலும் சுடப்பட்டது. இருந்தபோதிலும் ரத்தம் சொட்ட, சொட்ட தொடர்ந்து மூன்று மணி நேரம் போர் புரிந்தார் அழகுமுத்துக்கோன். பல வீரர்கள் இறந்தனர்.
அழகுமுத்துக்கோனையும், அவரது 6 தளபதிகளையும், 248 வீரர்களையும் ஆங்கிலேயப்படை சிறை பிடித்தது. நடுக்காட்டுச்சீமை பகுதிக்கு அழைத்துச் சென்று பீரங்கி முன்பு நிறுத்தி வரி செலுத்துமாறு வற்புறுத்தினர்.
தாய் நாட்டுக்காக மரணத்துக்கு முத்தம்
மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என எச்சரித்தனர். ஆனால் எதற்கும் அஞ்சாத அழகுமுத்துக்கோன், வரி கட்ட ஒப்புக்கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார். பின்னர் அனைத்து வீரர்களின் வலது கரங்களும் வெட்டப்பட்டன.
வீரன் அழகுமுத்துக்கோனும் 6 தளபதிகளும் பீரங்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில், 7 பேரும் உடல்கள் சிதறி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் சேகரிக்கப்பட்டு, எட்டயபுரம் அருகில் உள்ள சோழாபுரம் கண்மாயில் எரியூட்டப்பட்டது.
”கட்ட மிகுந்திடம் கட்டாலங்குளம் அழகு முத்துக்சேருவைகாரன் அவன் கோட்டை பெத்த ஊரிலும் தானுமே கொற்றவன் காக்கவே சண்டை செய்தான் வீராதி வீரரும் சூராதி சூரரும் வெங்கல கைகளை தானிழந்தார்… மன்னாதி மன்னரை மார் காத்து நின்ற முத்து மாணிக்க சேர்வையும் மாய்ந்து விட்டார் பரிமேல் ஏறிரண கள மேவிய பச்சைமால் சேர்வையும் மாண்டுவிட்டான்” என்ற “சேவைக்காரர் சண்டை கும்மி” பாடல் அழகுமுத்துக்கோனின் போரையும் அவர் போரில் கொல்லப்பட்டதையும் கூறுகிறது.
தனது நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் இவர் மரணத்தை முத்தமிட்ட ஆண்டு 1759
ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட வீரமுத்துக்கோனுக்கு தமிழக அரசு, கட்டாலங்குளத்தில் மணி மண்டபம் கட்டியது. இங்கு ஆண்டுதோறும் ஜூலை 11ஆம் நாள் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு இந்திய அரசின் சார்பில் தபால் தலை ஒன்று வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”இம் என்றால் சிறைவாசம்” : சாட்டை துரைமுருகன் கைதுக்கு எடப்பாடி கண்டனம்!
தலைமை பயிற்சியாளராக ’கோபக்கார கம்பீர்’ : உச்சம் செல்லுமா இந்திய அணி?
கனமழைக்கு வாய்ப்பு : எந்தெந்த மாவட்டங்களில்?
ஆம்ஸ்ட்ராங் கொலை… 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்!
ஓடிடியில் திரிஷா… நாளை வெளியாகும் படங்களின் லிஸ்ட்!