மாறும் உலகம் மாற்றுவது எது?-பகுதி 1

சிறப்புக் கட்டுரை தமிழகம்

பாஸ்கர் செல்வராஜ்

உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது; உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது; நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்…  இவை எல்லாம் நாம் அடிக்கடி பிறர் சொல்லக் கேட்கும் வார்த்தைகள். ஏன் நாமே இப்படிச் சொல்லியும் இருப்போம். அப்படி என்ன மாறிவிட்டது? ஏன் உலகம் மாறிவிட்டது என்கிறீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வார்கள் அல்லது சொல்வோம்?

பொருட்களின் மாற்றமே உலக மாற்றம்!

என்ன இப்படிக் கேட்கிறீர்கள்! கூரை வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கில் கூட்டுக்குடும்பமாக இருந்தது கல் வீட்டில் எல்லா வசதிகளுடன் தனிக்குடித்தனம் ஆனதாகட்டும், மாடுகட்டி ஏரோட்டி குடும்பமே வேலைசெய்து உண்டதுபோய் தாய், தகப்பன் தவிர்த்து எல்லாவற்றையும் கடையில் வாங்குவதாகட்டும் என்ன மாறவில்லை?,

அன்று வேட்டியும் கோவணமுமாக இருந்ததுபோய் விதவிதமாக உடுத்துவதும், ஒத்தையடி மண்பாதையில் மிதிவண்டியை உதைத்துக்கொண்டு நகரத்துக்குச் சென்றதுபோய்த் தார் சாலைகளில் ஈருருளியில் பறப்பதும், நகர சாலைகளில் அவ்வப்போது வண்டிகள் போனதெல்லாம் போய் ஊர்திகளால் சாலைகள் எப்போதும் நிரம்பி வழிவதும் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டதே!,

காலை மாலை செய்திகள் கேட்டு வளர்ந்த காலம்போய்க் கையடக்க திறன்பேசியில் கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் கண்முன்னால் வருவதை நீங்கள் மாற்றம் என்றே நினைப்பதில்லையா என பதிலுக்குப் பொரிந்து தள்ளு(வோம்)வார்கள்.

இதன் மூலம் சொல்ல வருவது என்ன? முன்பு கண்ணால் கண்டப் பொருட்களும் சுற்றியிருந்த சுற்றமும் மாறியிருக்கிறது என்பதுதான். இந்த மாறும் காட்சிப் படிமத்தைத்தான் உலகமே மாறிவிட்டதாக மூளை உணர்கிறது.

பெருகியிருந்த விவசாய உற்பத்தியும் அருகியிருந்த தொழிற்துறை உற்பத்தியும் அன்று கூட்டுக்குடும்பமாக எளிதான கருவிகளைக் கொண்டு உணவை உற்பத்தி செய்து உண்ண வைத்தது. தொழில்மயமாகி இருக்கும் இன்றோ ஒரு இழுவை இயந்திரத்தைக் கொண்டு அத்தனை பேர் செய்த வேலையை ஒருவர் செய்து செய்துவிடுகிறார்.

தொழிற்துறை மயமாக்கம் கூட்டுக்குடும்பமாக ஒன்றிணைந்து உழைப்பைச் செலுத்த வேண்டிய தேவையைப் பெருமளவு குறைத்திருக்கிறது. அது கூட்டுக்குடும்பத்தை அடித்து நொறுக்கி தனிக்குடும்பம் ஆக்கியிருக்கிறது. பொருள்களை உற்பத்தி செய்து கொண்டுவந்து சந்தையில் குவித்து நாம் காணும் உலகத்தையே மாற்றியமைத்திருக்கிறது.  

 

இயற்கையினாலும் உழைப்பினாலும் ஆனவை பொருட்கள்!

சரி! எல்லோருக்கும் இப்படி உலகமே மாறியதாகத் தோன்றுமா என்றால் நிச்சயமாகத் தோன்றாது. அது ஒவ்வொருவரின் வயது, இருப்பிடம், இயங்குவெளியைப் பொறுத்ததாகவே இருக்கும். கிராமத்தில் வசித்துச் சிறு நகரத்தில் புழங்குபவர் காணும் உலகமும், பெருநகரத்தில் வாழ்ந்து வெளிநாடுகளுக்குப் பறப்பவர் காணும் உலகமும் ஒன்றுபோல் இருக்கமுடியாது அல்லவா! அதேபோல இன்றைய ஈராயிரக் குழவிகள் கட்டை வண்டியையோ ஆகாசவாணி செய்திகளையோ கண்டிருப்பார்களா? இதோடு எல்லா காலத்திலும் மனிதர்கள் காணும் பொருட்களின் மாற்றமும் ஒன்றாக இராது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  

தற்கால மனிதர்களுக்குத் தாம் கண்டுவந்த செயற்கையான பொருட்கள் மாறும்போது உலகம் மாறிவிட்டதாகத் தோன்றினால் ஆதிகால மனிதர்களுக்குக் காட்டுக்கு பதிலாக முதன்முதலாக கடலையும் பாலைவனத்தையும் கண்டபோது அப்படித் தோன்றியிருக்கும். அன்று இயற்கையின் ஓர் அங்கமாக அந்த உலகத்தில் வாழ்ந்த மனிதர்கள் தமது தேவைக்கேற்ப இன்றுவரை தொடர்ந்து இயற்கையைத் தனது உழைப்பால் செயற்கையான பொருட்களாக மாற்றி வந்ததுதான் மானுடம் கண்ட வரலாற்று வளர்ச்சி; இதுவரையிலான உலக மாற்றம்.

ஆகவே, இயற்கையும் மனிதர்களின் உழைப்பும் கலந்த கலவைதான் நாம் காணும் இந்த செயற்கையான பொருட்கள். இதை மூலதனம் நூலில் “சரக்குக்குத் தாய் இயற்கை என்றால் உழைப்பு அதன் தந்தை” என்கிறார் மார்க்ஸ்.

இதில் இயற்கையாகக் கிடைக்கும் மூலப்பொருட்கள் மாறாதது (எரிமலை வெடிப்பு போன்றவற்றால் ஏற்படும் மாற்றத்தைத் தவிர). எனில் அதனைக் கொண்டு மனிதர்கள் உருவாக்கும் பொருட்கள் மட்டும்தான் மாறிக்கொண்டே இருக்கிறது.

அதெப்படி மூலப்பொருட்கள் மாறாமல் உருவாகும் பொருட்கள் மட்டும் மாறுகிறது என்று கேட்டால் ஒவ்வொரு காலத்திலும் பொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தும் நுட்பம் மாறுவதால் மாறுகிறது. அதாவது, உற்பத்தித் தொழில்நுட்பமும் அதற்கேற்ப உலகில் கிடைக்கும் மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதும் மாறும்போது வேறுபட்ட பொருட்களால் நிறையும் உலகம் மாறுகிறது.

உலகை மாற்றும் நுட்பங்கள்!

தோன்றும் எல்லா நுட்பங்களும் இருக்கும் உலகைப் புரட்டிப்போட்டு ஒரு புரட்சிகர மாற்றத்தை (Revolutionary Change) ஏற்படுத்துகின்றனவா என்றால் நிச்சயமாக இல்லை. எனில் பொருள் உற்பத்தியை மாற்றியமைத்து உலகை மாற்றும் புரட்சிகர நுட்பங்கள் எவையென்று கேட்டால் ஆதியில் அனைத்து உயிரினங்களில் ஒன்றாக வாழ்ந்த மனிதர்கள் தங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் மற்றவருக்கு தெரிவிக்க உருவாக்கிக் கொண்ட தனிச்சிறப்பான பேச்சுதான் இந்நுட்பங்களில் தலையாயது.

ஒரு சமூகத்தில் ஒன்றை அறிந்த ஒருவர் மற்றவருக்கு அறிவிப்பதும் அதனை அறிந்தவர் அதனை மேலும் வளர்ப்பதும்தானே அறிவு. இந்த வாழ்நிலை சார்ந்த அறிவு மொழியின்றி வளர வாய்ப்பில்லையே!

ஒருவேளை அப்படி அறிவிக்க உதவும் இந்த மொழியில்லாமல் போனாலோ அல்லது அறிவிக்காமல் போனாலோ அந்த அறிவு அழிந்து அந்த சமூகமே தேங்கிவிடும் என்பதற்கு நமது சாதிய சமூகமே சாட்சியல்லவா! உதாரணமாக இந்த பழம் பசி தீர்க்கிறது; உயிர் போக்கவில்லை என ஒருவர் அறிந்து அறிவிக்கும்போது அது அச்சமூகத்தின் அறிவாகிறது. மற்றவர் அவ்வகையான பல பழங்களை கண்டறிந்து அறிவிக்கும்போது அவ்வறிவு வளர்ந்து அச்சமூகத்துக்கான உணவைப் பெருக்குகிறது.

இப்படி கண்டறிந்த பழங்களையும் கொட்டைகளையும்  காட்டுத்தீயில் வெந்த விலங்குகளையும் உண்டு வாழ்ந்த மனிதர்கள் கற்களை உரசி செயற்கையாக உருவாக்கிய நெருப்பு மொழியோடு உருவான மற்றுமொரு புரட்சிகர நுட்பம்.

மர எரிபொருளினால் சமைக்கப்பட்ட மண், மரத்தாலான பொருட்கள்!

இந்தக் கண்டுபிடிப்பு அதுவரையிலான காடுசார்ந்த உணவுகளோடு மனிதர்களுக்கு கடல், ஆறுகளில் கிடைக்கும் மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களையும் வேகவைத்து உண்ணத்தக்கவைகளாக மாற்றி உண்ணும் வாய்ப்பை வழங்கியது என்கிறார் ஏங்கல்ஸ்.

இதனோடு கல்லைக் கூராக்கி விலங்குகளை வேட்டையாடுவது அவற்றின் தோலை நீக்கப் பயன்படுத்துவது என கற்களின் பயன்பாடு பெருகியது. இந்தக் கற்களாலான நுட்பமும், கருவிகளும் மரத்தை எரித்து உருவாக்கப்பட்ட நெருப்பும் மனிதர்களை இயற்கை சார்ந்த உணவுமுறைகளில் இருந்து விடுவித்து செயற்கையாக வேட்டையாடி வேகவைத்து உண்ணவும் காடுகளில் மட்டும் நிலைத்திருக்காமல் ஆறுகளையும், கடற்கரைகளையும் பின்பற்றி பல இடங்களுக்கும் பரவச் செய்தது. அன்றைய மனிதர்களின் உலகை விரியச்செய்தது.

கூரான கல்லையடுத்து மரத்தைக் கூராக்கியும் வளைத்தும் செய்த சிக்கலான வில் அம்பை மனிதர்களின் மதிநுட்ப வளர்ச்சியின் வடிவமாகக் காண்கிறார் ஏங்கெல்ஸ். கூடவே மரத்தாலான கூடை உள்ளிட்ட வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் உண்டானது. இவற்றோடு மண்ணைக்கொண்டு பானையை உருவாக்கி தீயினால் சுட்டு அதனை வலுப்படுத்தும் மட்பாண்ட நுட்பம் வில்லம்பைவிட சிக்கலானது.

இது அந்தக்கால மனிதர்கள் அடைந்த அறிவுத்திரட்சியின் அடையாளம். இந்தச் சிந்தனை வளர்ச்சி அவர்களைக் காட்டு மிருகங்களை அண்டி வாழ்ந்த காட்டுமிராண்டி (Savage) நிலையில் இருந்து அநாகரிக (Barbarism) நிலையை நோக்கி அடியெடுத்து வைக்க உதவியது. அநாகரிக நிலைக்கு முந்தைய இந்த உற்பத்தி மாற்றத்தை மரத்தை எரித்து உருவாக்கப்பட்ட வெப்பமும் அதனால் சமைக்கப்பட்ட கல், மண், மரத்தாலான பொருட்களும் என்பதாக வரையறுக்கலாம்.

மண், மரத்திலிருந்து உலோகங்களுக்கு மாறிய பொருட்கள்!  

இதன்பிறகு மிருகங்களைப் பழக்கி வளர்க்கவும் நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்யும் அளவுக்கும் மனிதர்களின் திறன் வளர்ந்தது. அது அவர்களை ஓரிடத்தில் தங்கி நிலைத்து வாழவைத்தது. முன்பு பேச்சு வடிவில் இருந்த மொழி வளர்ந்து எழுத்து வடிவம் காண்கிறது. தனிநபர், இடம், காலம் கடந்து அடுத்த தலைமுறைக்கும் அறிவைக் கடத்தும் அறிவாயுதமாகிறது. உலோகங்களின் பயன்பாடு தொடங்குகிறது. இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமாக மண்ணில் இருக்கும் தாதுவை உருக்கி இரும்பை உருவாக்குகிறார்கள் மனிதர்கள். அது மனிதர்களை அநாகரிக நிலையில் இருந்து இன்றைய நாகரிக வாழ்வின் வாயிலில் கொண்டுபோய் நிறுத்துகிறது.

இந்த இரும்பைக் கொண்டு மனிதர்கள் உணவு உற்பத்தியைப் பெருக்கியது முதல் அதனை ஆயுதமாக்கி  அன்றைய உற்பத்தியின் அடிப்படையான நிலத்தைக் கைப்பற்றிப் பேரரசுகள் உருவானது எல்லாம் நாமறிந்த வரலாறு. இதனோடு சக்கரத்தின் உருவாக்கமும் பயன்பாடும் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களான பானைகள் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியைப் பெருக்கி போக்குவரத்தை உந்தித்தள்ளியது. இலக்கண வரையறையுடன் மொழி முழுமைகண்டு இந்த மொத்த அறிவையும் திரட்டி தேக்கிவைத்துக்கொண்டு செழுமையடைகிறது. இக்கால உற்பத்தி மாற்றத்தை மரத்தினாலான எரிபொருளைக் கொண்டு மரத்தினாலும், இரும்பு உள்ளிட்ட உலோகங்களினாலும் உருவாக்கப்பட்ட பொருட்கள் என்பதாக வரையறுக்கலாம்.

மரத்திலிருந்து நிலக்கரி பெட்ரோலுக்கு மாறிய எரியாற்றல்

இதன் பிறகான நீராவி இயந்திரத்தின் கண்டுபிடிப்பும் மரத்துக்குப் பதிலான நிலக்கரியின் பயன்பாடும் பொருள் உற்பத்தியிலும் போக்குவரத்திலும் ஒரு புரட்சிகர மாற்றத்தை நிகழ்த்தி உற்பத்தியை இயந்திரமயமாக்கி நம்மை இன்றைய முதலாளித்துவ காலத்துக்குக் கொண்டுவந்தது. நிலக்கரிக்குப் பதிலான பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு இந்த எரிபொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மின்சாரம் ஆகியவை இரும்பு உள்ளிட்ட உலோகங்களின் உற்பத்தியிலும் வர்த்தகத்திலும் போக்குவரத்திலும் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியது.

பழைய பொருட்களை உற்பத்தி செய்து குவித்தது மட்டுமல்ல; எரிபொருளிலும் மின்சாரத்திலும் இயங்கும் பலப்பல புதிய பொருட்களின் உருவாக்கத்திற்கு வித்திட்டு இன்று நாம் பார்க்கும் உலகைப் படைத்திருக்கின்றன. இந்தக்கால உற்பத்தி மாற்றத்தை நிலக்கரி, பெட்ரோல், மின்சாரத்தில் உற்பத்தியாகி இயங்கும் இரும்பு உள்ளிட்ட உலோகங்களினால் ஆனப் பொருட்கள் என்பதாக வரையறுக்கலாம்.

இந்த உற்பத்தி மாற்றங்களை சாத்தியமாக்கிய மனிதர்களின் எண்ணமும் கருத்தும் சொல்லாகவும் எழுத்தாகவும் புத்தகத் தொகுப்பாகவும் அடுத்தவருக்கும் அடுத்தடுத்த தலைமுறைக்கும் மனிதர்கள் கடத்தி வந்தாலும் அதனை முழுமையாக எழுத்தில் வடித்துவிட முடியவில்லை. நபர், இடம் சார்ந்த அறிவைப் புத்தகம் முழுமையாக அனைவருக்கும் அளித்துவிடவுமில்லை. எல்லோரும் எழுத்தறிவைப் பெற்றாலொழிய இது சாத்தியமுமில்லை. அதேபோல இப்புத்தகங்கள் எல்லோரின் எண்ணத்தையும் பதிவு செய்வதுமில்லை; எல்லோரும் பதிவுசெய்ய முற்படுவதுமில்லை. முக்கியமாக, இவ்வறிவு மொழிசார்ந்து அம்மொழியைப் பேசும் சமூகத்துடன் நின்றுவிடுகிறது.

மரபுசாரா எரிபொருளில் உருவாகி இயங்கும் பொருட்கள்!

எழுத்து, கடிதங்கள், புத்தகங்கள், பயணங்களோடு புதிய மொழிகளைக் கற்பதன் வழியாக நபர், இடம், மொழி சார்ந்த அறிவின் வரம்பைக் கடந்துகொண்டிருந்த மனிதர்கள் கம்பி வழியாகவும் மின்காந்த அலைகளின் மூலமாகவும் இயங்கும் தொலைபேசி, வானொலியைக் கொண்டு எண்ணத்தை இந்த வரம்புகள் கடந்து எல்லையற்றுக் கடத்த ஆரம்பித்தார்கள்.

குறைந்த மின்னாற்றலில் இயங்கும் குறைமின்கடத்திகளால் (Semiconductors) உருவாக்கபட்டு இயங்கும் இச்சாதனங்களை மின்னாற்றலை சேமித்து வைத்திருக்கும் சிறுமின்கலங்களைக் கொண்டு இயங்க வைத்ததன்மூலம் இவற்றின் இயக்கமும் அதே அளவு மனிதர்களுக்கு இடையிலான அறிவுப்பரவலும் வேகமெடுத்தது. இதன் வளர்ச்சி நபர், இடம், மொழி, சமூகம் கடந்து அனைவரின் கருத்துகளையும் பதிவுசெய்து பரப்பும் இணையமாக, செய்யறி நுட்பமாக வளர்ந்து நிற்கிறது.

இதன் உச்சமாக மரபான நிலக்கரி, பெட்ரோலிய எரிபொருட்கள் அல்லாத மரபுசாரா காற்று, சூரிய மின்னாற்றல் கண்டுபிடிப்பு இவ்வாற்றலைச் சேமிக்கும் மின்கலங்கள் அதன்மூலம் இயங்கும் பொருட்கள் என்பதாக ஒரு புதிய உற்பத்திச் சுழற்சியாக மாறியிருக்கிறது. இந்த உற்பத்தித் தொழில்நுட்ப மாற்றத்தை மையமாகக்கொண்டு மொத்த உற்பத்தியையும் விரிவாக்குவது, கண்காணிப்பது, கட்டுப்படுத்துவது, வர்த்தகம் செய்வது என்பதாக உலகம் மாறிக்கொண்டிருக்கிறது.

நடைமுறையில் இருக்கும் நிலக்கரி, பெட்ரோல், மின்சாரத்தில் உற்பத்தியாகி இயங்கும் இரும்பு உள்ளிட்ட உலோகப் பொருள் உற்பத்தியில் இருந்து மரபுசாரா எரியாற்றலில் உற்பத்தியாகி இவ்வாற்றலைச் சேமிக்கும் மின்கலங்களில் இயங்கும் உலோகங்கள், குறைமின் கடத்திகளாலான பொருள்கள் என்ற உற்பத்தி மாற்றத்தின் பலன்களை யார் அறுவடை செய்வது என்ற போட்டி உலக மோதல்களாக இப்போது வெடித்துக் கொண்டிருக்கிறது.

ஆக, இந்த உலக மாற்றம் என்பது பொருட்களின் மாற்றம். அந்த மாற்றத்தை நிகழ்த்துவது உற்பத்தித் தொழில்நுட்ப வளர்ச்சி. ஆனால் எல்லோரும் இந்த தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்லையே! அதேபோல எல்லோருக்கும் ஒரே நேரத்தில் இவை கிட்டுவதுமில்லையே! காரணமென்ன? அதன் விளைவுகள் என்ன?

நாளை பார்க்கலாம்…

கட்டுரையாளர் குறிப்பு

What will change the changing world? By Baskar Selvaraj

பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர். அவற்றை நல்ல தமிழில் கட்டுரைகளாக வடித்து வருகிறார்.

இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலம் எது தெரியுமா?

18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கலாம்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

1 thought on “மாறும் உலகம் மாற்றுவது எது?-பகுதி 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *