இந்திய கிரிக்கெட் வரலாற்றில் விராட்கோலியின் பங்கு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது ஜெர்ஸியின் பின்னால் இருக்கும் 18 என்ற எண்ணிற்கான காரணம் என்ன என்பது பலருக்கும் தெரியாது. அதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
2008 ஆண்டு முதல் இந்திய அணியில் தொடர்ந்து 14 ஆண்டுகளாக விளையாடி வரும் விராட் கோலி இன்று கோடிக்கணக்கான இளைஞர்களின் முக்கிய இன்ஸ்பிரேசன் என்றால் மறுக்கமுடியாது.
ஆஸ்திரேலியாவில் பிறந்தநாள்!
ஏனென்றால் கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சினுக்கு பிறகு எண்ணற்ற சாதனைகளை தொடர்ந்து கிரிக்கெட் களத்தில் பதிவு செய்து வருகிறார் கோலி. அது தற்போது ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் டி20 உலகக்கோப்பை தொடர் வரையிலும் எதிரொலித்து வருகிறது.
மேலும் டி20 உலகக்கோப்பையை 2வது முறையாக இந்திய அணி ஏந்திப் பிடிக்கவும் ஆக்ரோசத்துடன் ஒவ்வொரு போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை ஆடி வருகிறார் கோலி.
இதற்கிடையே தனது 34வது பிறந்தநாளை ஆஸ்திரேலியாவில் மகிழ்ச்சியுடன் இன்று கொண்டாடியுள்ளார் விராட்கோலி.
களத்தில் ஆக்ரோசம் காட்டும் விராட் கோலி எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுவார். மைதானத்தில் கோலி விளையாடும்போது ஒரு ரசிகனாய் அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை பலமுறை பார்த்திருப்போம்.
அதே வேளையில் அவர் அணிந்திருக்கும் ஜெர்சிக்கு பின்னால் இருக்கும் 18 என்ற எண்ணிலும் ஒரு மிகப்பெரிய உணர்ச்சிபூர்வமான காரணம் மறைந்துள்ளது.
பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒரு ராசியான நம்பர் இருக்கும். அதே போல கால்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு அடையாள எண் இருக்கும்.
அந்த வீரர்களால் அந்த எண்ணுக்கும் அடையாளம் கிடைக்கும். உதாரணமாக தோனி என்றாலே 7, சச்சின், மெஸ்ஸி என்றாலே 10, மைக்கேல் ஜோர்டன் என்றாலே 23 ஆகிய எண்கள் அனைவர் மனதிலும் அடையாளமாக தோன்றிவிடும்.
இந்நிலையில் தான் விராட்கோலிக்கு 18!
2008ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் இந்தியாவை வெற்றிபெறச் செய்தபோது விராட் கோலி 18ம் எண் பொறித்திருந்த ஜெர்ஸியை தான் அணிந்து இருந்தார்.
பின்னர் அதே ஆண்டில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு நுழைந்தபோதும் அதிர்ஷ்டவசமாக, எந்த சீனியரும் 18 எண் ஜெர்ஸியை அணியவில்லை.
அதனால் கோலி மகிழ்ச்சியுடன் முதுகில் தட்டிக்கொடுக்கும் அந்த எண்ணைப் பெற்று களத்தில் இன்று வரை பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார்.
முதுகில் தட்டிகொடுக்கும் எண்ணா? அது எப்படி என்று நினைக்கிறீர்களா… அதற்கு பின்னால் விராட்கோலியின் அர்த்தம் பொதிந்த ஒரு உண்மை ஒளிந்துள்ளது.
திறமையை கண்டுகொண்ட தந்தை!
மேற்கு டெல்லியில் வசித்த பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிரேம் கோலி, சரோஜ் கோலி என்ற தம்பதியர். இவர்களுக்கு 1988ம் ஆண்டு கடைக்குட்டியாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
ஆம், 3-வதாக பிறந்த அந்த குழந்தை தான் பின்னாளில் அணியின் கேப்டனாகவும், இன்று வரை ஒரு வீரராகவும் சர்வதேச அரங்கில் பல பெருமைகளை இந்தியாவுக்கு பெற்று தந்து கொண்டிருக்கும் விராட் கோலி.
கடைக்குட்டி மகன் என்பதால் பெற்றோர், கோலியின் மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருந்தனர். அதிலும் தந்தை பிரேம் கோலிக்கு தனது மகனின் திறமையை அறிந்து அவனை பெரிய ஆளாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
அவர் எதிர்பார்த்தது போலவே விராட்கோலியின் கிரிக்கெட் ஆர்வம் சிறுவயதிலேயே வெளிப்பட்டது. அதனை கண்டுகொண்ட தந்தை, டெல்லி உத்தம் நகரில் விஷால் பாரதி பப்ளிக் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த விராட் கோலியை, 1998-ம் ஆண்டு மேற்கு டெல்லி கிரிக்கெட் அகாடமியில் சேர்த்துவிட்டார். ஆம் 11 வயதில்.
கிரிக்கெட்டின் மீது கோலி காட்டிய ஆர்வத்தை பார்த்த அவரது தந்தை மகனுக்கு நல்ல பயிற்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக பின்னர் கான்வெண்ட் பள்ளி ஒன்றில் சேர்த்துவிட்டார்.
தந்தை பிரேம் கோலியின் தொடர் ஊக்குவிப்பால், டெல்லி அணிக்காக முதன் முதலில் 2002-ம் ஆண்டு 15 வயதுக்குட்பட்டோருக்கான பாலி உம்ரிகார் ட்ராபியில் இடம்பிடித்தார் விராட் கோலி.
அதனை தொடர்ந்து 2004-ம் ஆண்டு 17 வயதுக்குட்பட்டோருக்கான விஜய் டிராபி தொடரில் களமிறங்கிய விராட்கோலி 7 போட்டிகளில் 2 சதங்கள் உட்பட 757 ரன்கள் குவித்து பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
ரஞ்சிக் கோப்பையில் அந்த நாள்!
இதற்கிடையே தான் அந்த குறிப்பிடப்படும்படியான நாள் வந்தது. 2006ஆம் ஆண்டு கர்நாடகா அணிக்கு எதிராக நடந்த ரஞ்சிக் கோப்பை போட்டியில் டெல்லி அணி சார்பாக விளையாடி வந்தார் விராட் கோலி.
டிசம்பர் 17 அன்றும், 18ம் தேதியும் பகலிலும் சேர்த்து முதல் இன்னிங்ஸில் 446 ரன்கள் குவித்தது கர்நாடக அணி.
இதனை தொடர்ந்து ஆடிய டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இருந்தாலும், அன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி அதிகபட்சமாக 40 ரன்கள் குவித்து ஆட்டமிழக்கமால் டெல்லி அணியை நிலை நிறுத்தினார்.
அன்று மகிழ்ச்சியுடன் பெவிலியன் திரும்பிய விராட்கோலியிடம் அவரது தந்தை பிரேம் கோலி இறந்துவிட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் கலங்கி நின்ற கோலி, அவ்வளவு பெரிய சோகத்திற்கு இடையிலும் ஒரு விஷயத்தில் உறுதியாக நின்றார்.
அன்று இரவு முழுவதும் யோசித்த விராட்கோலி தனது பயிற்சியாளர் மற்றும் தாயுடன் உரையாடிய பிறகு, அடுத்த நாளும் கர்நாடாகாவுக்கு எதிராக விளையாடினார்.
அதோடு அந்த இன்னிங்ஸில் 90 ரன்கள் குவித்த கோலி, டெல்லி அணி 308 ரன்களுடன் ஃபாலோ-ஆனை கடக்கவும் உதவினார்.
மேலும் கர்நாடகா அணிக்கு எதிரான அந்த போட்டியை டெல்லி டிரா செய்த பிறகே தனது தந்தையின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்.
தந்தை உயிரிழந்த செய்தி தெரிந்தும் தான் உயிராகக் கருதிய கிரிக்கெட் போட்டியில் அவர் காட்டிய ஆர்வமும் அர்ப்பணிப்பும் பலரது புருவங்களையும் உயர்த்த வைத்தது.
அதன்பிறகு தான் பங்குகொண்ட போட்டிகளில் எல்லாம் தனது தந்தை இறந்த தினமான 18ம் தேதியை தனது ஜெர்ஸியில் பதித்து களமிறங்கி, ஒவ்வொரு முறையும் தன் ஜெர்ஸியின் பின் இருக்கும் 18ம் எண்ணை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துவார் கோலி.
தந்தை இறப்பு குறித்து கோலி!
தந்தை பிரேம் கோலி மீது பெரும் பாசம் கொண்ட கோலி, அவரது இறப்பு குறித்து ஒரு செய்தியாளர் சந்திப்பில் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.
அவர், “என் தந்தை இறந்த இரவு எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது என் வாழ்க்கையில் மிகவும் கடினமான நேரம். ஆனால், என் தந்தையின் மரணத்திற்குப் பிறகு மறுநாள் காலையில் விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
அதன்படி காலையில் எனது (டெல்லி) பயிற்சியாளரிடம் நேரே சென்று நான் விளையாட வேண்டும் என்று கூறினேன். ஏனென்றால் நான் அந்த போட்டியில் பாதியில் இருந்து விலகுவதை பாவமாக கருதினேன்.
அந்த நொடி தான் என்னை ஒரு மனிதனாக உணரச் செய்தது. கிரிக்கெட் என் வாழ்க்கையில் கொடுத்த மிக மிக முக்கியமான தருணங்களில் அதுவும் ஒன்று” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு சாட்சியாகவே, ஒவ்வொரு போட்டியிலும் களமிறங்கி சாதனை படைக்கும் கோலியின் முதுகில் பெருமையுடன் தட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறது அந்த 18!
கிறிஸ்டோபர் ஜெமா
மோர்பி பாலம் விபத்து: நெஞ்சை உலுக்கும் புதிய தகவல்!
இமாச்சல் தேர்தல் : தமிழக பாணியை பின்பற்றும் காங்கிரஸ்!