அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர்- 15
ஆரா
கட்டாயக் கல்யாணம் பண்ணி வைக்கப்படும் மனநிலையில் இருக்கிறார்கள் அதிமுகவின் பெரியவர்கள். வாழ்க்கை எப்படிப் போனால் என்ன கல்யாணத்தில் வரதட்சணை எவ்வளவு கிடைக்கிறதோ போதும் என்ற நிலையில் இருக்கிறார்கள் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.
அதிமுகவின் சீனியர்கள் சிலர் நம்மிடம் பேசும்போது இப்போதைய அதிமுகவை மூன்றாகப் பிரித்தனர்.
எம்ஜிஆர் மன்றம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே அவரோடு பயணித்து அதிமுக உருவான நாள் முதல் இன்று வரை அக்கட்சிக்காகவே வாழ்ந்து வருகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழ் மகன் உசேன், அன்வர் ராஜா, தம்பிதுரை, பொன்னையன், மதுசூதனன், பி.ஹெச். பாண்டியன் என இந்த வரிசை நீளும். இவர்கள் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் செல்வாக்கு பெற்றோ பெறாமலோ இருந்தாலும் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சி என்பதால் அதிமுகவுக்கான அடிப்படை நலன்கள் பற்றியும் சிந்திப்பவர்கள்.
எம்ஜிஆர் தன் மதம் திராவிடம் என்றார். எம்ஜிஆர் காலத்தில்தான் இந்து முன்னணி கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் வளர்ந்தது என்ற விமர்சனங்கள் ஒருபக்கம் உண்டு. என்றாலும் அண்ணாவை தன் அரசியல் ஆசானாகக் கொண்டு அண்ணாயிசம் பயின்ற எம்.ஜி.ஆர். அரசியலுக்கும் மதத்துக்கும் பெரிய இடைவெளியை விட்டிருந்தார். அந்த இடைவெளியில் மத நல்லிணக்கமே நிறைந்திருந்தது. அப்படிப்பட்ட எம்ஜிஆர் வழி வந்த சூப்பர் சீனியர்கள் எல்லாம் அதிமுகவும் பாஜகவும் கை கோர்ப்பதை விரும்பவில்லை. அப்படி கூட்டணி அமைந்தால் அது அதிமுகவுக்கான கட்டாயக் கல்யாணம் என்றும் அந்தக் கல்யாண வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய வேண்டுமா என்றும் தங்களுக்கு நெருக்கமான வட்டாரத்தில் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.
உண்மை என்னவெனில் அதிமுக இந்த சூப்பர் சீனியர்களின் கைகளில் இப்போது இல்லை. கால மாற்றத்தில் அதிமுக இப்போது ஜெயலலிதாவுக்குப் பின் வந்தவர்களிடம் இருக்கிறது. இவர்கள்தான் இப்போது அதிமுகவின் மைய நீரோட்டத்தை முடிவு செய்கிறார்கள். ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கணி, வைத்திலிங்கம், ஜெயக்குமார் போன்றவர்கள்தான் இப்போது அதிமுகவின் முக்கியஸ்தர்கள்.
ஜெயலலிதா இருக்கும் போது அதிமுகவில் ஒரு சர்வாதிகாரம் இருந்தது. அந்த சர்வாதிகாரத்தின் நற்பலனுக்கும், கெடுபலனுக்கும் ஜெயலலிதாவே பொறுப்பெடுத்துக் கொண்டார். ஆனால் அவர் தனக்குப் பின்னால் ஒரு கான்க்ரீட் ஆன இரண்டாம் கட்ட தலைவரை உருவாக்காததன் பலனைதான் இப்போது அதிமுக அனுபவித்துக் கொண்டிருக்கிறது. முடிவெடுக்க முடியாதவர்தான் முடிவை தள்ளிப் போடுவார். அதுதான் இப்போது அதிமுகவில் நடந்துகொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆர். பக்தர்களான சீனியர்கள் எடுத்த எடுப்பிலேயே அதிமுக- பாஜக கூட்டணி வேண்டாம் என்று சொல்கிறார்கள். கட்சிக்குள்ளும் சொல்லிப் பார்த்தார்கள். தம்பிதுரை போன்றவர்கள் வெளியேயும் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அது தம்பிதுரையின் தனிப்பட்ட கருத்து என்று அதிமுகவின் அதிகார பீடத்தில் இருந்து பேட்டிகள் வந்தன. ஏனெனில் அதிமுகவின் உண்மையான அதிகார பீடம் ஔவை சண்முகம் சாலையில் இல்லை. அது டெல்லியில் அல்லவா இருக்கிறது. அந்த செல்வாக்கில் ஜெயக்குமார், ‘அது தம்பிதுரையின் தனிப்பட்ட கருத்து’ என்றார். கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம், ‘தம்பிதுரை சொல்வது பற்றி என்னிடம் விளக்கம் கொடுத்துவிட்டார். அதுபற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்றார்.
ஆக அதிமுகவை இப்போது செலுத்திக் கொண்டிருக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பாஜகவின் கயிறுகளால் வசமாகக் கட்டப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கொள்கை பற்றி சிந்திக்க நேரமில்லை. தங்களைத் துரத்தும் மோடியிசம் என்ற இரைச்சலுக்கு இடையே எம்ஜிஆர் சொன்ன அண்ணாயிசம் பற்றிய முணகல் கூட அவர்களுக்குக் கேட்பதில்லை.
இவர்களைத் தாண்டி மூன்றாவதாக இருப்பவர்கள் கீழ் நிலை நிர்வாகிகள். களத்தோடு நேரடித் தொடர்புடையவர்கள். ஒவ்வொரு நாளும் டீ கடைகளிலும் பேருந்துகளிலும், ரயில்களிலும் பொதுமக்களோடு தொடர்பில் இருப்பவர்கள். இவர்கள் எம்.ஜிஆர் வரை சென்று ஆழமாக சிந்திப்பதில்லை.
“இன்னிய தேதிக்கு தமிழ்நாட்ல மோடி பேரைச் சொன்ன கிடைக்குற ஓட்டை விட நம்ம அம்மா லேடி பேரைச் சொன்னாலே நல்ல ஓட்டு கிடைக்கும் சார். அதனால கூட்டணி வேணாம்’’ என்கிறார்கள் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள்.
அதிமுகவை ஆழமாகப் பார்க்கும் எம்ஜிஆர் விசுவாசிகளும் சரி அதிமுகவின் அடிப்படைத் தொண்டர்களும் சரி அதிமுக பாஜகவோடு கூட்டணி வைப்பதை எதிர்க்கிறார்கள். ஆனால் இடையில் இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருந்து காலத்தின் விசித்திரத்தால் அதிமுகவை நிர்வகித்து வருபவர்கள் மட்டுமே தங்கள் நலனுக்காக அதிமுகவை பாஜகவுக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
பிப்ரவரி 8 ஆம் தேதி அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என மூத்தவர்கள் அறிவுறுத்தக் கூடும். ஆனால் கட்சியை இப்போது கையில் வைத்திருக்கும் பிழைக்கத் தெரிந்தவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
காதல் திருமணம் என்றால் எப்பாடுபட்டாலும் சேர்த்து வைப்பார்…கட்டாயத் திருமணம் என்றால் எப்பாடுபட்டாலும் மோதி மிதித்து அதை நிறுத்திவிடுவார் எம்.ஜி.ஆர். அவர் கண்ட கட்சியும் கட்டாயத் திருமண ஏற்பாடுகளுக்குள் சிக்கியிருக்கும் நிலையில் என்ன செய்வார் எம்ஜிஆர்?.
(பயணிப்போம்)
முந்தைய பகுதிகள்
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 1]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 2]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 3]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 4]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 5]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 6]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 7]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 8]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 9]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 10]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 11]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 12]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 13]
[அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினிதொடர் 14]