சத்குரு
கணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக ஒருவரையொருவர் வெறுப்பதும் அவர்கள் இருவரோடு முடிந்துவிடாமல், சுற்றியுள்ள பல உறவுகளையும் இழக்கச் செய்கிறது. இப்படியொரு சிக்கலுக்கு தீர்வு என்ன? நம் கலாச்சாரத்தில் திருமணத்தில் இரு குடும்பங்கள் இணையும் அழகை எடுத்துச் சொல்லும் சத்குரு, சின்ன சின்ன உறவுகளின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறார்.
சென்ற வருடம் என் கணவர் இறந்துபோனார். அவரோடு வாழ்ந்த காலத்தில், நான் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். இன்று என் கணவரின் மற்ற உறவினர்கள் அன்பாகப் பேசினால்கூட, எனக்கு அவர்கள் மீது வெறுப்பு பொங்கிக் கொண்டு வருகிறது. அவர்களை எப்படித் தவிர்ப்பது?
மேலை நாடுகளில் திருமணம் என்பது ஓர் ஆண், ஒரு பெண் என இரு தனி நபர்களுக்கு மட்டுமேயானது. நம் நாட்டில் பெரும்பாலான திருமணங்கள் இரு நபர்களுக்கு இடையிலான பந்தமாக மட்டும் நின்றுவிடுவது இல்லை. இரு குடும்பங்களுக்கான உறவாகவும் மலர்கிறது.
இரண்டு பக்கமும் பெற்றோர்கள், அத்தைகள், மாமாக்கள், குழந்தைகள், தாத்தாக்கள், பாட்டிகள் என்று பெரிய பட்டாளமே ஒரு திருமணத்தால் கைகோர்த்துக்கொள்கிறது. இவ்வளவு நபர்கள் உள்ளே அடியெடுத்து வைக்கையில் ஏற்படும் சிக்கலையும், குழப்பத்தையும் தவிர்ப்பதற்கு, அளவிட முடியாத அன்பும், பெரும் புத்திசாலித்தனமும் தேவை.
எதற்காக இத்தனை சிக்கலான உறவுமுறைகள் என்று அவற்றைத் தவிர்க்க நினைத்தால், அந்த உறவுகளால் கிடைக்கும் அன்பையும், ஆதரவையும் கூடத் தள்ளி வைக்கத் தயாராக இருக்க வேண்டும்.
மேற்கத்திய தேசத்தில், சமூக நல அமைப்புகள் சக்தி வாய்ந்தவை. உடல் நலமில்லையா…? ஒரு போன் செய்தால் போதும்; ஆம்புலன்ஸ் வந்து அழைத்துப் போகும். மனச்சோர்வா…? அன்பாகப் பேசி, உடனிருந்து ஆறுதல் சொல்லிவிட்டுப் போக ஆள் ரெடி!
நம் தேசத்தில் அப்படி இல்லை. இங்கே சமூகத்தின் ஆதரவைவிட, குடும்பத்தின் ஆதரவுதான் பொறுப்பு உணர்வோடும், அக்கறையோடும் அமைந்திருக்கிறது. காலம் காலமாக வேரூன்றி இருக்கிறது.
பொதுவாக, வேறு யாரையுமே சார்ந்து இல்லாமல், தனித்து வாழும் தைரியமோ, மனப்பக்குவமோ இங்கே யாரிடத்திலும் காணப்படுவதில்லை. தனிமை பலரை கவலைக்கொள்ளச் செய்கிறது; தன்னிரக்கத்தை வளர்க்கிறது.
ஒருநாள் காலையில் விழித்தெழுகையில், இந்த உலகில் உங்களைத் தவிர யாருமே இல்லாது போனாலும், அதை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை உங்களுக்கு இருக்கிறதா?
உங்கள் தேவைகளைக் கவனித்து, யாராவது செய்து கொடுக்க மாட்டார்களா என்ற ஏக்கம் உங்களுக்குள் இல்லை என்று அடித்துச் சொல்ல முடியுமா?
அப்படியொரு எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், நெருங்கி வருபவர்களை வெறுத்து ஒதுக்குவது, உங்களை தனித் தீவாக்கிவிடும்.
ஆனால், அந்த உறவினர்களைப் பார்க்கையில், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் என்னைப் பலவாறு துன்புறுத்திய கணவர் கண்முன் நிழலாடுகிறாரே… என்ன செய்வது?
ஒருவரை மையப்படுத்தி, அவரைக் கொண்டு அடுத்தவருக்கான அடையாளத்தைத் தீற்றிப் பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்.
மரத்தின் அகன்ற அடிப்பாகம் மட்டுமே முக்கியம் என்று நினைக்கக்கூடாது. சின்னச் சின்ன கிளைகளும் முக்கியம்தான். அவைதான் பூக்களைச் சுமக்கின்றன. கனிகளைத் தருகின்றன. நிழலை வழங்குகின்றன. எனவே, கிளை உறவுகளும் முக்கியம்தான்.
உங்களுக்கு அமைந்த முக்கிய உறவு கசந்துவிட்ட காரணத்தால், அவருடன் தொடர்புள்ள மற்ற உறவுகளையும் சேர்த்து வெறுப்பது அர்த்தமற்ற செயல்!
எல்லோரும் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி அமைந்திருக்காமல் போகலாம். அதற்காக…?
இரண்டு தந்தைகள் சந்தித்துக் கொண்டனர்.
“என் மகன் படுமோசம். பீர் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் அளவுக்கு திமிர் வந்துவிட்டது. உங்கள் மகன் எப்படி?”
“என் மகன் தங்கமானவன். பீர் என்றால் என்னவென்றே அவனுக்குத் தெரியாது!”
“பரவாயில்லையே! சிகரெட்..?”
“மூச்! கையால் தொட்டது கூட இல்லை!”
“பொய் பேசுவானோ?”
“ஊஹூம்!”
“எடுத்தெறிந்து பேசுவானோ?”
“மாட்டான்! ஒரு வார்த்தைகூட இதுவரை அவன் என்னை எதிர்த்துச் சொன்னதில்லை!”
“இந்த உலகில் இப்படியொரு அதிசயமா? அவன் எந்தக் கல்லூரியில் படிக்கிறான், சார்?”
“கல்லூரியா? அவன் பிறந்தே ஆறு மாதம்தானே ஆகிறது!”
நீங்கள் வெறுக்கும் எந்தக் குணங்களும் இல்லாமல், முற்றிலும் நல்லவராக இந்த உலகில் தேடினால், ஒரு வயதுகூடப் பூர்த்தி ஆகாதவர்களில்தான் வலைவீச வேண்டும்.
கணவனின் சகோதரன், அம்மா, அப்பா, அத்தை, மாமா, என ஒவ்வொரு தனி மனிதரையும் கணவருடன் தொடர்புப்படுத்திப் பார்க்காமல், அந்தந்த நபருக்கான தனித்தன்மையை வைத்து முழுமையாக ஏற்பதுதான் புத்திசாலித்தனம்.
மனிதர்களை வேண்டாம் என்று ஒதுக்குவது, உங்கள் வேர்களையும், விழுதுகளையும் ஒதுக்கி வைப்பது போல! அவர்களுடைய கள்ளமற்ற அன்பை நீங்கள் கசப்பாக்கிக் கொள்வதால், உங்களைச் சுற்றி உள்ளவர்களின் நிலையும் துன்பமாகும்.
இதைப் புரிந்து கொண்டு உங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால், உங்கள் வருத்தங்கள் தொடரும்.
மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…
எம்.ஜி.ஆரும் அண்ணாமலையாரும்…: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: ஒண்ணே ஒண்ணுதான்?! வைகோ, திருமாவை அதிர வைத்த ஸ்டாலின்