பாஸ்கர் செல்வராஜ்
ரசியாவில் வாக்னர் என்ற தனியார் ஆயுதக்குழு உக்ரைன் போர் நடக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் ரசிய இராணுவ கட்டுப்பாட்டு மையத்தை ஆக்கிரமித்துக் கொண்டு மாஸ்கோவை நோக்கி அணிவகுப்பதாகச் செய்த அறிவிப்பு உலகினரை உற்றுப் பார்க்க வைத்தது. உடனடியாக அதுபற்றிய கருத்துகளும் ஊகங்களும் காட்டுத்தீயைப்போல பற்றி பரவியது.
இப்படிப் பரவியவற்றைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.
1. உக்ரைன்போர் ரசியாவின் உறுதியை உருக்குலைத்து உள்நாட்டு ஆயுதக் கிளர்ச்சியாக வெடித்தது; புடினின் அதிகாரபலம் உடையத் தொடங்கியிருக்கிறது. 2. இந்தக் குழுவின் உரிமையாளர் பிரிகோசின் நேட்டோ-மேற்குலக இரகசியப் புலனாய்வுக் குழுக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு உள்நாட்டுக் கலவரத்தில் ஈடுபட்டு உக்ரைன் போரில் ரசியாவை தோற்கடித்து ரசிய அரசியல் தலைமையைக் கைப்பற்ற செய்த சதிப்புரட்சி. 3. வலுவான புலனாய்வு அமைப்புகளை வைத்திருக்கும் ரசியா இதனைத் தெரிந்தே அனுமதித்து எதிரிகளையும் உள்நாட்டு சதிகாரர்களையும் அடையாளம் கண்டு ஒழிக்கும் அதேவேளை மக்களிடம் முழுமையான போருக்கான ஆதரவைப் பெருக்க செய்த நாடகம்.
இவற்றுக்கு ஆதாரமாக அவரவர் பார்வையில் நிகழ்வுகளைப் பொருத்திக் காட்டினார்கள். இதற்குள் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சனை முடிவுக்கு வந்தது. பிரிகோசின் மாஸ்கோவை நோக்கி அணிவகுக்கும் தனது படையினர் அதனைக் கைவிட்டு தங்களது பாசறைக்குத் திரும்புவார்கள் என்று அறிவித்தார்.
பதிலுக்கு ரசிய அரசு அவர் மீதான தேசதுரோக வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அவரும் அவருடன் செல்ல விரும்பும் படையினரும் பெலாரசுக்கு செல்ல அனுமதித்தது. மற்றவர்கள் ரசிய இராணுவத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு தொடர்ந்து போரிடலாம் அல்லது வீட்டுக்குத் திரும்பி குடும்பத்துடன் இணையலாம் என்று அறிவித்தது. இந்தப் படைக்கிளர்ச்சியை (rebellion) முடிவுக்குக் கொண்டுவந்து ஒரு உள்நாட்டு சகோதரச் சண்டையைத் தவிர்த்ததற்கு அதிபர் புதின் அந்நாட்டின் பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பெலாரஸ் அதிபருக்கும் நன்றி தெரிவித்தார்.
இது ரசியாவின் உள்நாட்டுப் பிரச்சனை; அதில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லையென பைடன் அறிவித்தார். இருபத்துநான்கு மணிநேரத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டதாகத் தோன்றினாலும் இந்த ஆயுதக் கிளர்ச்சி ஏன் நடந்தது? அமெரிக்காவை எதிர்த்து நிற்கும் அளவுக்கு இராணுவ வலிமை கொண்ட ரசியாவில் எப்படி ஒரு தனியார் இராணுவம் உருவாகி அந்நாட்டு அரசை எதிர்க்கும் அளவுக்கு வலிமை பெற்றது? இது உக்ரைன் போரையும் ரசியாவின் புதினையும் எந்தளவு பாதிக்கும்? ஆகிய கேள்விகள் இங்கே எழுகின்றன.
நிழல் யுத்தங்களும் தனியார் இராணுவங்களும்
பேரழிவு ஆயுத பயங்கரம், தீவிரவாத ஒழிப்பு, சர்வாதிகார எதிர்ப்பு ஆகியவற்றின் பெயரில் ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட போர்களில் ஈடுபட்ட அமெரிக்கா அதன்மூலம் ஆசிய ஒருங்கிணைவைத் தடுத்து டாலரைத் தாங்கி நிற்கும் எண்ணெய் வர்த்தகத்தை கட்டுப்படுத்த முற்பட்டது. 2008 பொருளாதார நெருக்கடி இந்த முயற்சியில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தி சீன, ரசிய நாடுகளின் தலைமையில் ஆசியா ஒருங்கிணையத் தொடங்கியது.
இதனைத் தடுத்து நிறுத்த நேரடிப் போர்களில் ஈடுபடும் அரசியல் பொருளாதார சூழலற்ற நிலையில் அதற்கு மாற்றான முகநூலை ஆயுதமாக்கி பல நாடுகளில் வண்ணப் புரட்சிகள் ஏற்படுத்தப்பட்டு ஆட்சி மாற்றங்கள் அரங்கேற்றப்பட்டன. அது வெற்றியடையாத லிபியா, சிரியா உள்ளிட்ட பின்தங்கிய ஆப்பிரிக்க-ஆசிய நாடுகளின் இனக்குழுப் பிரிவினையைப் பயன்படுத்தி போராளிக் குழுக்களை ஏற்படுத்தியது. அவர்களுக்கு பணமும் ஆயுதங்களும் கொடுத்து உள்நாட்டுப் போரை ஏற்படுத்தி ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முற்பட்டார்கள். நேரடிப் போர்களைப் போல இதற்கு நாடாளுமன்ற அனுமதி, போர் உயிரிழப்புகள், அங்கே செய்யும் அட்டூழியங்களுக்குப் பொறுப்பேற்று பதில்சொல்வது போன்ற எந்த சிக்கலும் இல்லை. சாவது பெரும்பாலும் மற்ற நாட்டுக்காரர்கள்தானே!
ஆனாலும் இவர்களை ஒருங்கிணைத்து பயிற்றுவித்து ஆயுதங்கள் வழங்கி திட்டமிட்டு தலைமைதாங்கி உள்நாட்டுப் போரை நடத்த குறிப்பிட்ட அளவுக்கு தொழில்முறை இராணுவத்தினரை இந்நாடுகளுக்கு அனுப்பவேண்டிய தேவை. அந்தத் தேவைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு போன்ற நாடுகள் முன்னாள் இந்நாள் இராணுவத்தினரைக் கொண்ட ஒரு தனியார் இராணுவப்படையைத் தோற்றுவித்தன. இந்த நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் இராணுவப் பயிற்சி, ஆலோசனைகள் உள்ளிட்ட சேவைகளை அளிப்பதாகக் கூறிக்கொண்டார்கள். ஒரு போரை வெற்றிகரமாக நடத்த முக்கிய தேவை படையினருக்குத் போர்முனையில் தடையின்றி ஆயுதங்களை கிடைக்கச் செய்வது (logistics). ஆயுத உற்பத்தி, விற்பனை, கொண்டுசெல்லும் வழிகள் ஆகியவை அரசுகளிடம் மட்டுமே இருக்கும் நிலையில் இந்தப் போரை நடத்துவது அரசுகள்தாம் என அனைவராலும் எளிதில் கண்டறிந்துவிட முடியும். ஆனாலும் வெளியில் இது ஒருநாட்டின் மீது இன்னொரு நாடு போர் தொடுத்திருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக சொல்ல இயலாது.
வெறுமனே இரு ஆயுதக்குழுக்களுக்கு இடையிலான மோதல் அல்லது உள்நாட்டுப்போர் என்பதாகவே பேசப்படும். உண்மையில் இது ஒரு நாட்டின் மீது கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் நிழல் பகுதியில் (grey zone) நடத்தப்படும் போர்.
சிரியப்போரில் வாக்னர்
லிபியாவில் இப்படியான நிழல் யுத்தத்தில் ஆப்பிரிக்க தினாரில் எண்ணெய் விற்க முற்பட்ட அந்நாட்டு அதிபர் கடாபி கொல்லப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அதேபோல சிரியாவிலும் உள்நாட்டுப்போர் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் நோக்கம் கத்தார் எரிவாயுவை சிரியா, துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யத் தடையாக நிற்கும் அதிபர் ஆசாத்தை நீக்குவது. அது சிரியாவில் கப்பற்படைத் தளத்தையும் ஐரோப்பிய எரிவாயு சந்தையையும் வைத்திருக்கும் ரசிய நலனையும் கத்தாருடன் உலகின் பெரிய எரிவாயு வயலைப் பகிர்ந்து கொள்ளும் ஈரானின் நலனையும் பாதிக்கும் என்பதால் இருவரும் இதில் களமிறங்கினார்கள். அதிபர் ஆசாத், ரசியா, ஈரானிய ஆதரவு எதிர்ப்பியக்க குழுக்கள் ஓரணியாகவும் உள்ளூர் போராளிக் குழுக்கள், அமெரிக்கா, நேட்டோ, துருக்கி, அராபிய நாடுகள் எதிரணியாகவும் நின்று சண்டையிட்டன. முறையான போர் அறிவிப்பின்றி எந்த நாடும் தனது படையினரை சிரியாவுக்கு அனுப்பவியலாது. ஆகையால் நேட்டோ ஆதரவு தனியார் படை எதிரணியை திட்டமிட்டு வழிநடத்தி தலைநகர் டமாஸ்கசை நெருங்கியது.
இதில் எதிர்பாராத திருப்பமாக அதிபர் ஆசாத்தின் அழைப்பின் பேரில் ரசியா வான்வழித் தாக்குதலை அறிவித்தது. போர்க்கள திட்டமிடுதல் மற்றும் வழிகாட்டுதலுக்குத் தனது முன்னாள் இராணுவ வீரரான யுட்கினின் தனியார் இராணுவத்தையும் சேசேன்யாவின் கோடொவ்ரோஸ்கியின் படையையும் களமிறக்கியது ரசியா. குடியிருப்புகள் மிகுந்த போரிடக் கடுமையான அலெப்போ நகரத்தை வெற்றிகரமாகப் போரிட்டு மீட்டது ரசியா தலைமையிலான ஆசாத்தின் அணி. சிரியாவின் மூன்றில் இரண்டு பங்கு பகுதியை எதிரணியிடம் இருந்து மீட்டு ஆசாத்தை ஆட்சியில் நீட்டிக்க வைத்தது.
எண்ணெய் வயல்கள் மிகுந்த பகுதியை அமெரிக்க பாதுகாப்புடன் எதிரணி தன்னிடம் தக்க வைத்துக் கொண்டது. கத்தார் எரிவாயுவை சிரியா வழியாக ஐரோப்பாவுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை ரசியாவும், ஈரானும் முறியடித்தன. இதில் முன்னின்ற யுட்கினுக்கு அரசின் உயரிய விருது வழங்கியது ரசியா.
உக்ரைன் போரில் உயர்ந்த வாக்னர்
சிரியாவில் எரிவாயுக்குழாய் திட்டம் தோல்வியடைந்த நிலையில் ரசியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயுவைக் கொண்டுசெல்லும் குழாய்கள் பதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனில் மைதான் வண்ணப்புரட்சி வெடித்தது. தேர்தலில் வென்று ஆட்சியமைத்த ரசிய ஆதரவு அதிபர் தூக்கியெறியப்பட்டார்.
உக்ரைனிய மொழி பேசும் மேற்குப் பகுதி நேட்டோவின் பக்கம் ரசிய மொழி பேசும் கிழக்குப் பகுதி ரசியாவின் பக்கம் என நாடு இரண்டாகப் பிளவுண்டது. இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கிரீமியாவை ரசியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. ரசிய மொழி சிறுபான்மையினர் வசிக்கும் கனிமவளம் மிகுந்த கிழக்கு ரசிய பொருளாதாரத்துடன் இணைந்து தனியாக செயல்பட்டது. உக்ரைனிய பெரும்பான்மை வசிக்கும் விவசாய நிலங்கள் மிகுந்த கோதுமை விளையும் மேற்கு அதனை ஒடேசா துறைமுகத்தின் வழியாக மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.
கிழக்கின் ஏற்றுமதிக்கும் கிரீமியாவுக்கு அருகிலும் இருக்கும் மரியோபோல் துறைமுகத்தை நேட்டோவினால் பயிற்றுவிக்கப்பட்ட படையணியைக் கொண்டு கட்டுப்படுத்தி வந்தது. உக்ரைனின் கிழக்கை இராணுவ ரீதியாக வலுப்படுத்திய நேட்டோ அடுத்து இராணுவ கூட்டணியில் முறையாக இணைக்கும் வேலையைச் செய்து அடுத்த நகர்வைத் தொடங்கியது. வரப்போகும் ஆபத்தை உணர்ந்த ரசியா பதிலுக்கு முழுமையான போரை அறிவிக்காமல் சிறப்பு இராணுவ நடவடிக்கையை (special military operation) அறிவித்தது.
இதன் நோக்கம் ரசியாவின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காமல் உக்ரைனை பேச்சுவார்த்தை மூலமோ அல்லது ஒரு ஆட்சி மாற்றத்தின் மூலமோ நேட்டோவில் இணையாமல் நடுநிலை வகிக்க வைப்பது; ரசிய மொழி சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிக்குத் தன்னாட்சி அதிகாரங்களைப் பெற்றுத் தந்து தனது பாதுகாப்பையும் அம்மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது; நேட்டோவின் ஒற்றுமையை உடைத்து தனது பொருளாதார நலன்களைப் பாதுகாப்பது. சுயமான இராணுவ முதுகெலும்பற்ற ஐரோப்பாவின் பொருளாதாரத்தைப் பலிகொடுத்து தன்னலனை முன்னெடுத்தது அமெரிக்கா. ரசியாவை துண்டாடுவது அல்லது பலகீனமடைய வைப்பதை நோக்கமாகக் கொண்டு சமாதான பேசுவார்த்தைக்கு அனுமதியாமல் சண்டையைத் தீவிரமாக்கியது. பதிலுக்கு உக்ரைனின் போரிடும் வலிமையை இல்லாமல் ஆக்கும் வகையில் மெல்லமெல்ல உக்ரைனிய இராணுவத்தினரை அரைத்து செரிக்கும் (war of attrition) உத்தியைக் கையில் எடுத்தது ரசியா.
மேலும் பொருளாதார இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த மரியோபோல் துறைமுகத்தையும் கெர்சான் பகுதியையும் கைப்பற்றி கிரீமியாவுடன் நிலவழி போக்குவரத்தை ஏற்படுத்தும் திசையில் சண்டையை நகர்த்தியது ரசியா. ஆப்கனில் அமெரிக்காவின் இப்படியான அரைத்து செரிக்கும் உத்தியால் பெருமளவில் உயிரிழந்த ரசிய இராணுவ வீரர்களின் தாய்மார்களின் கதறல் அப்போது அங்கே பெரும் அரசியல் நெருக்கடியாக உருவெடுத்தது. அப்படியான சூழலைத் தவிர்க்கும் நோக்கிலும், சிரியாவில் அடர்த்தியான குடியிருப்பு பகுதியில் போரிட்டு வென்ற வாக்னர், சேசேன்ய படையினரின் செறிவான அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்ட ரசியா இவர்களை முன்கள வீரர்களாகப் பயன்படுத்தியது.
ஒப்பந்தக் கூலிப்படையினரான இவர்களின் உயிரிழப்புகளை அரசு வெளியில் சொல்ல வேண்டிய தேவையோ இவர்கள் குடும்பத்தினர் அரசைக் கேள்விக் கேட்கவோ முடியாது. ஆதலால் உள்நாட்டு அரசியல் நெருக்கடி இல்லாமல் சண்டையைத் தொடர்ந்தது புதின் அரசு. ஜெர்மனிக்கு எதிரான ஸ்டாலின்கிராடு போரைப் போன்று ஒவ்வொரு கட்டிடமாக போரிட்டு மரியோபோல் துறைமுகத்தைக் கைப்பற்றியது வாக்னர். இது ரசிய மக்கள் மத்தியில் வாக்னருக்கு நல்ல மதிப்பை ஏற்படுத்தியது.
தனியார் படையின் அரசியல் நகர்வு
இப்படி வென்ற பகுதிகளை இராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு அடுத்து கிழக்குப் பகுதி போக்குவரத்தின் மையமாக விளங்கிவரும் பக்முத் நகரைக் கைப்பற்ற வாக்னர் கடும் சண்டையில் ஈடுபட்டது. அதன் ஒவ்வொரு முன்னேற்றமும் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. வாக்னர் படையின் இராணுவ முகமாக யுட்கின் சண்டையிட பொருளாதார உரிமையாளர் பிரிகோசின் அவ்வப்போது தனது டெலிகிராம் பக்கத்தில் இராணுவ உடையணிந்து கொண்டு முன்னேற்ற அறிவிப்புகளைச் செய்யத் தொடங்கினார்.
அது மக்கள் மத்தியில் அவருக்கு மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்தியது. அடுத்து உக்ரைனை வென்று அதன் அதிபராகப் போவதாகச் சொன்னார். பக்முத் நகரை வென்று இரண்டாம் உலகப்போர் வெற்றிநாள் பரிசாகத் தரப்போவதாக அடுத்த அறிவிப்பு. பின்னர் இரசிய இராணுவம் போதுமான ஆயுதங்களைத் தரவில்லை ஆதலால் தனது படையினர் உயிரிழக்க நேர்ந்ததாகக் குற்றம் சாட்டினார்.
அதுவரையிலும் வெறும் இராணுவப் போர்படையாக இருந்த வாக்னர் அரசியல் முகமாக மாற ஆரம்பித்தது. பிரிகோசினின் இந்த அவசரம் போர்க்களத்தில் மெதுவாக உக்ரைனிய படையை அரைத்து அதன் போரிடும் வலிமையை ஒடுக்கும் அரசின் உத்திக்கு நேரெதிரானது. இதனிடையில் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க மிக அதிக விலை குறிப்பிட்டு பிரிகோசின் கொடுத்த ஒப்பந்தப்புள்ளி அறிக்கை இராணுவ அமைச்சகத்தால் வெளியில் வீசியெறிப்பட்டதாக செய்திகள் வெளியானது. அடுத்து அனைத்து தனியார் இராணுவத்தினரும் நேரடியாக இராணுவ அமைச்சகத்துடன் ஜூலை ஒன்றாம் தேதிக்கு முன்னதாக ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என அறிவிப்பும் வெளியானது. 1.2 பில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதார வலிமையும் இராணுவப் படையையும் கொண்டிருக்கும் பிரிகோசினின் அரசியல் முகமாக மாறுவதன் ஆபத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அரசின் நகர்வாக இதனைப் புரிந்து கொள்ளலாம்.
இவர் மட்டுமல்ல மற்ற எல்லா தனியார் படைகளும் இதனைப் பின்பற்ற ஆணை வழங்கியதன் மூலம் அரசு எதிர்காலத்தில் எவருக்கும் இப்படியான அரசியல் நகர்வுகளுக்கு இடம் கொடாமல் தவிர்க்க எண்ணியிருக்கலாம். சம்பாதித்த பணத்தை எடுத்துக்கொண்டு படையை விட்டுவிடக் கோரியது அரசு.
ஒரேநாளில் அதிகாரமற்றவராக மாற மனமில்லாமல் போராட முடிவெடுத்தார் பிரிகோசின். இவரின் 25000 படையினரில் எட்டாயிரம் பேர் அதற்கு ஆதரவாகத் திரண்டனர். ரோஸ்டான்-டான் இராணுவ மையத்தைக் கைப்பற்றி பிரிகோசின் உள்ளே அமர்ந்து கொண்டார். இராணுவ முகமான யுட்சின் தலைமையில் நீதி கேட்டு மாஸ்கோவை நோக்கி படையினரை அணிவகுக்கச் செய்தார். உக்ரைன் போர் முக்கிய கட்டத்தில் இருப்பதால் அரசு இவரின் நிபந்தனைக்கு அடிபணியும் என்று எண்ணியிருக்கலாம் அல்லது மற்ற அதிருப்தி அடைந்த படையினர் இவருடன் இணையலாம் என்று கணக்கிட்டு இருக்கலாம்.
உடனடியாக செய்தியில் தோன்றிய புதின் இது நாட்டுக்கு எதிரான நடவடிக்கை; அனைவரும் ஒற்றுமையாக இதனை முறியடிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். பிரிகோசின் மீது பன்னிரெண்டு ஆண்டு சிறையிலிடத்தக்க தேசதுரோக வழக்கு பதிவானது. வாக்னரின் அலுவலகம் சுற்றி வளைக்கப்பட்டு அங்கிருந்த ஒரு பில்லியன் ரூபிள்கள் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது அவரின் சொத்து மதிப்பில் 1/12 பங்கு. ரசிய படைகள் எச்சரிக்கை தாக்குதலுக்குத் தயாரானது. ஒரு உலாங்கூர்தியையும், ஒரு போக்குவரத்து விமானத்தையும் வாக்னர் சுட்டு வீழ்த்தியதாக செய்திகள் வெளியானது. இவரைத் தவிர யாரும் இந்தக் கிளர்ச்சியில் ஈடுபடவில்லை.
சண்டையிட்டு சாவது அல்லது சரணடைவது என்பதைத் தவிர இவருக்கு வழியில்லை என்ற சூழல். நேட்டோவை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இப்படியான மோதலில் ஈடுபட்டு ஆற்றலை இழக்க அரசுக்கும் விருப்பமில்லை. பிரிகோசினின் இருபது ஆண்டு நண்பரான பெலாரஸ் அதிபர் பேசி இவரை வழக்கில் இருந்து விடுவித்து பாதுகாப்பாக தன்னுடைய நாட்டுக்கு அழைத்துக் கொள்ள சமாதானம் பேசி சகோதர சண்டையை முடித்து வைத்திருக்கிறார். தனது தனி விமானத்தில் பெலாரஸ் சென்று மீண்டும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் திரும்பிய பிரிகோசினிடம் அவரின் பணம், ஆயுதங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒற்றைத்துருவ உலகை உடைத்து பல்துருவ உலகைப் படைத்து அதில் தன்னை ஒரு துருவமாக நிலைநிறுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருக்கும் ரசியாவுக்கு ஆதரவான உலக அரசுகள் உடையாமல் ஆட்சியில் நிலைக்கச் செய்ய இந்தத் தனியார் இராணுவத்தின் தேவை இருக்கிறது.
அரசின் ஆதரவில் இராணுவதிற்கு சமையல் செய்யவும் தனியார் இராணுவமாக போரிடவும் ஒப்பந்தங்கள் செய்து பல பில்லியன் சொத்து சேர்திருக்கும் பிரிகோசின் அரசின் உதவியின்றி நீடித்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை. அவரின் அரசியல் முகத்தை விட்டு அரசுக்கு அடங்கி அதன் தேவையை நிறைவேற்றி அமைதியான பணமுதலையாக வாழ்வதில் அவருக்கு தயக்கமிருக்கப் போவதில்லை. உக்ரைனின் எதிர்தாக்குதலில் எந்த முன்னேற்றமும் இல்லை; ரசிய இராணுவம் அனைத்து தாக்குதலையும் முறியடித்து வலுவாக நிற்பதாகச் செய்திகள் வருகின்றன.
கட்டுரையாளர் குறிப்பு
தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
“காவல் துறை விசாரணையில் ஆளுநர் தலையீடு” : மு.க.ஸ்டாலின்
திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானதா?: தரவுகளை சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின்