ஏழை மாணவர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

சிறப்புக் கட்டுரை தமிழகம்

நா.மணி, மேனாள் தலைவர், தமிழ்  நாடு அறிவியல் இயக்கம்.

வே. சிவசங்கர், புதுவை மத்திய பல்கலைக்கழகம்.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டது. இனி என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்று மாணவர்களும் பெற்றோர்களும், தனக்கு வேண்டிய மாணவர்களை எங்கு பிடிக்கலாம்? எப்படி பிடிக்கலாம்?  என தனியார் உயர் கல்வி நிறுவனங்களும் ஆளாய்  பறக்கின்றனர்.

ஒவ்வொரு தனியார் கல்வி நிறுவனமும் தன்னிடம் உள்ள பாடங்களே மிகவும்  உயர்ந்தது, அதிக மதிப்பு வாய்ந்தது, படித்தால் உடனே வேலை கிடைக்கும், வளாகத் தேர்விலேயே அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள் என பல்வேறு வகைகளில் பல்வேறு ஊடகங்களில், பல்வேறு உத்திகளில், வருடம் முழுவதும் விளம்பரம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

வருட முடிவில் அல்லது  சேர்க்கை தொடக்கத்தில் இந்த விளம்பரங்கள் உச்சம் பெறவும் செய்கிறது. பல்வேறு விளம்பர யுக்திகளை தொடர்ந்து பார்த்து வரும் மாணவர்களும் பெற்றோர்களும் குழம்பிப் போகிறார்கள். சரியான முடிவுகளை எட்ட முடிவதில்லை. தவறான முடிவை எடுக்க நேரிடுகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் திட்டமிட்டு தவறான முடிவுகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர் தலையில் ஏற்றுகிறார்கள். தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் கட்டுக் கதைகளுக்கு எளிதாக மாணவர்களும் பெற்றோர்களும் இரையாகி  விடுகிறார்கள்.

மூன்று விதமான ஆலோசனைகள்

மாணவர்கள் எனும்போது தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள எல்லா மாணவர்களையும் ஒன்றாக பாவித்து, மேல் படிப்புக்கான ஆலோசனைகளை வழங்கிட இயலாது. ஏழை மாணவர்கள், பணக்கார மாணவர்கள், நடுத்தர மாணவர்கள் என மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். மூன்று வகை பிரிவு மாணவர்களுக்கும் மூன்று விதமான தேவைகள் இருக்கிறது.  மூன்று விதமான வசதி வாய்ப்புகள் இருக்கிறது. மூன்று விதமான புரிதல்கள் இருக்கிறது.  மூன்று விதமான எதிர்கால வாய்ப்புகள் இருக்கிறது. உயர் கல்வி சேர்க்கை தொடர்பான ஆலோசனைகளும் மூன்று விதமாக மூன்று பிரிவு மாணவர்களுக்கும் ஏற்றது போல் தேவைப்படுகிறது. நடுத்தர, பணக்கார மாணவர்கள் ஆகியோருக்கு பொத்தாம் பொதுவான ஆலோசனைகள் வழங்குவது சரியாக இருக்காது‌. அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கவோ பெற்றுக் கொள்ளவோ ஏராளமான வழிகள் உள்ளன.

இங்கு   முன் மொழியப்படும் ஆலோசனைகள்,  ஏழை எளிய மாணவர்களுக்கு மட்டுமே. ஒரு ஏழை  மாணவனின் நோக்கம், கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகளில்  சேர்வது என எடுத்துக் கொள்வோம். முதலில் அரசு கல்லூரிகள் அதனை அடுத்து அரசு உதவி பெறும் கல்லூரிகள் உங்கள் தேர்வாக இருக்கலாம். இதில்  எத்தனை பாடப் பிரிவுகள் இருந்தாலும் அவற்றை சமூக அறிவியல் பாடங்கள், வணிகவியல் பாடங்கள், அறிவியல் பாடங்கள், கணினி அறிவியல் என நான்கு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.

இதில் வணிகவியல், கணிணி அறிவியல் ஆகிய இரண்டு பாடங்களுக்கு மட்டும் தான் ஏகப்பட்ட கிராக்கி. அறிவியல் பாடங்களில் மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி என தேர்வுகள் தொடரலாம்‌.  இதில் பி.காம் சி.ஏ வேண்டும் என்றும் கணிணி அறிவியல் வேண்டும் என்றும் தான் ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விரும்புகின்றனர்.

பி.காம், சி. போன்ற படிப்புகள் மட்டுமே சிறந்தவையா?

பி.காம் படிப்பு மீது இவ்வளவு மோகம் எப்படி வந்தது? கலை அறிவியல் கல்லூரியில் உள்ள எந்தப் பாடமும் நேரடியான வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகள் அல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு பிடித்தமான எந்தப் படிப்பையும், நன்கு படித்தால், அதற்கு உண்டான பலன்களை நிச்சயமாகப் பெற முடியும். முதல் குழுவை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல்….வாய்ப்புகள் உள்ளது. ஆனால் மூன்றாவது குழுவை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு முதல் வாய்ப்பே பி.காம் தான் என்று நினைக்கிறார்கள். பி.காம் படித்தால் கணக்கு எழுதி பிழைத்துக் கொள்ளலாம் என்பது ஒரு  பழங்காலக் கண்ணோட்டம்.

இப்போது டேலி ( Tally)  கற்றுக் கொண்டவர்கள் மட்டுமே கணக்கு எழுத முடியும். இதனை ஆர்வம் உள்ள யார் ஒருவரும் கற்றுக் கொள்ள முடியும். பி.காம், சி.ஏ என்ற படிப்பு சமூகத்தின் அல்லது மாணவர்கள் தேவைக்கு உருவானது அல்ல. எல்லா மூன்றாவது குழு ( Third Group) மாணவர்களும் பி.காம் சார்ந்த பட்டப் படிப்புகளைத் தான் கேட்கிறார்கள். ஒரு கல்லூரியில் பி. காம் படிப்பில் 60 பேரை மட்டுமே சேர்க்க இயலும். அடுத்து தேவை இருந்தால் இன்னும் ஒரு வகுப்பை  பல்கலைக்கழகத்தில் கேட்டுப் பெறலாம். 120 பேர் ஒரு கல்லூரியில்  பி.காம் படிக்க முடியாது.

படிக்க‌ வரும் எல்லோரும் பி.காம் கேட்டால் என்ன செய்வார்கள்? புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்கிறது. பி.காம். சி.ஏ, பி.காம். சிஎஸ் …. என பல பிரிவுகள் உருவாகிக் கொண்டே இருக்கிறது. மாணவர்களைப் பிடித்து அதில் அமர்த்திக் கொண்டே  இருக்கிறார்கள். வேலை இல்லாத பட்டதாரிகளில் பி.காம் படித்தவர்களே மிகவும் அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 60 பேர் பி.ஏ பொருளாதாரம் படித்து விட்டு ஒரு கல்லூரியிலிருந்து வெளியே வந்தால், பி.காம் படித்தவர்கள் சுமார் 500 பேர் வெளியே வருகிறார்கள்.

பி.ஏ பொருளாதாரம், பி.ஏ ஹிஸ்டரி என்று சொல்வதைக் காட்டிலும் பி.காம் சி.ஏ என்று சொல்லும் வெற்றுப் பெருமையில் தான் பி.காம் சார்ந்த படிப்புகள் அனைத்தும் விற்பனை ஆகிறது‌. பழங்கால கற்பித‌‌த்தையோ தற்கால அதீத எதிர்பார்ப்பையோ பி.காம் படிப்புகள் மேல் திணித்து அதற்காக கடனை வாங்கி பணத்தை செலவு செய்யத் தேவையில்லை.

கணிணி அறிவியல் பாடங்களை கடனை வாங்கி படித்து முடித்து விட்டால் ஏதேனும் வேலை கிடைக்காதா?

நிச்சயமாக  கிடைக்காது.  கணிணி அறிவியல் பாடம் வைத்துள்ள கல்லூரிகளுக்கு இதனால் வருமானம் கிடைக்கலாம். அதில் வேலை செய்து கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு குறைந்த சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், படிக்கும் மாணவர்களுக்கு எதுவும் கிடைக்காது.  கணினி யுகம், டிஜிட்டல் யுகம்,  இன்டர்நெட் யுகம், செயற்கை நுண்ணறிவு யுகம் என‌, இந்த காலகட்டத்தில், இப்படி பேசுகிறீர்களே?  என்று கேட்கலாம்.

கணிணி படிப்புகள் வெளிநாடு செல்ல பயன்படுகிறது. வேலைவாய்ப்பு சார்ந்து இருக்கிறது. வருவாய் சார்ந்து இருக்கிறது என்ற துணைக் கேள்விகளும் உதிக்கலாம். இதையும் ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள் எனக் கேட்கலாம். நீங்கள் கூறும் பயன்பாட்டு கணிணி பட்டப் படிப்புகள், பொறியியல் கல்லூரிகளில் உள்ள பி.ஈ, பி.டெக், கணிணி தொழில்நுட்பப் படிப்புகள்.

கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் எந்தவித கணிணி அறிவியல் பாடத்திற்கும் வேலை வாய்ப்புகள் மற்றும் எதிர்காலம் குறைவு. இங்குள்ள கணிணி அறிவியல் பாடங்களை ஆசைப்பட்டு படிப்பது காசை கரைக்கவே பயன்படும். பள்ளியில் என்ன பாடம் எடுத்துப் படித்தீர்களோ,  தற்போது என்ன படிக்கலாம் என்று நினைக்கிறீகளோ எது உங்களுக்கு பிடிக்குமோ அந்த பாடத்தை தேர்வு செய்யுங்கள்.

 “பட்டியல் சமூக, பழங்குடி மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு முற்றிலும் இலவசம்என்ற விளம்பரங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதேஅதனை நம்பலாமா?

கல்வி தனியார்மயம்  ஆக்கப்பட்டு, வணிகப் பொருளாகி, ஏழை மக்கள் வாங்க முடியாத  நிலை வந்த போது மன்மோகன் சிங் அரசு எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற திட்டத்தின் கீழ் கொண்டு வந்த திட்டம் இது. இந்த திட்டம் தற்பொழுது பரிதாபகரமான தோல்வியை சந்தித்து வருகிறது. பொறியியல் பாடங்களை மாணவர்கள் தேடிச் சென்று படித்து பலன் பெறுவதற்கு மாறாக, பொறியியல் கல்லூரிகளே உங்கள் வீட்டிற்கு வந்து “அய்யா! சாமி! வாங்க! என்று வருந்தி அழைக்கும் போதே யாருக்கு நன்மை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

பொறியியல் பாடங்களின் மீதான மோகம் குறைந்து, தரமற்ற கல்லூரிகள் காலியாகும் போது தங்கள் வாழ்வாதாரமாக இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இத்திட்டத்தால் பெரும்பாலும் மாணவர்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. கணக்கு ஓரளவுக்கு வரும் என்று நம்பிக்கை உள்ளவர்கள் மாத்திரம் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம். “ஃபிரீ என்று கருதி ஃபினாயிலை குடித்த” கதை ஆகிவிடும். பினாயில்  இலவசமாகக் கிடைக்கலாம் நம் உடம்பு கெட்டுப் போகும் என்பதை கவனத்தில் கொள்க.

மருத்துவம் சார் படிப்புகள் படிக்கலாமா?

அரசு, தனியார்  என தங்கள் நிதி நிலைக்கு ஏற்ப மருத்துவ சார் படிப்புகள் கிடைத்தால் ஆர்வம் உள்ளவர்கள் சேர்ந்து படிக்கலாம். நிரந்தர வேலை, அரசு வேலை, அதிக வருமானம்  என‌ உள்ள வேலை என்ற அளவீடுகளில் இந்த வேலைகள் வராது. ஏதோ ஒரு வேலை, குறைந்தபட்ச சம்பளம் என வேலை வாய்ப்புக்கும் ஊதியத்திற்கும் பஞ்சம் இருக்காது.

கடன் வாங்கி பொறியியல் படிக்கலாமா?

தரமான கல்லூரியில் பொறியியல் பாடம் அரசு ஒதுக்கீட்டில் கிடைத்தால் கடன் வாங்கி படிக்கலாம். தோட்டத்தை அடமானம் வைத்து மகன் மகளை படிக்க வைத்த ஒருவர், தங்கள் நிலத்தை இழந்து வாழ்வாதாரம் இழந்து ஊரை விட்டே ஓடி விட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இல்லையேல் அரசு உதவி பெறும்  கலை அறிவியல் கல்லூரிகளில் கிடைக்கும் பாடத்தில் தொடர்வதே சிறப்பு.

அரசு / அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளை தேர்வு செய்யும் போது, கீழ்காணும் கேள்விகள் அல்லது விமர்சனங்களை பிரதானமாக முன்வைப்பார்கள். தனியார் கல்வி நிறுவனங்கள் நம்மை இழுக்கப் பார்க்கலாம்.  அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள பேராசிரியர்கள் சரியாக பாடம் சொல்லித் தர மாட்டார்கள், அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொள்வார்கள், கல்லூரியே நடக்காது, கண்டிப்பு  இருக்காது, ஒழுக்கம் இருக்காது என ஏதேனும்  காரணங்களை அடுக்கி, உங்களை தலை சுற்றும் படி செய்து அல்லது அவர்கள் கூறும் வார்த்தைகளை நம்பும்படி செய்து விடுவார்கள்.

அரசு உதவி பெறும் கல்லூரிகள் குறைந்த பட்சம் ஐம்பது ஆண்டுகள் கல்வி வழங்கி வருகிறது. அரசுக் கல்லூரிகள் மக்களுக்காக முற்றிலும் இலவசமாக தொடங்கப்பட்டவை. இதற்கான சிறப்பு இயல்புகள் கண்டிப்பாக இருக்கும். இவை ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்டவை. அவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மதிப்பெண் அடிப்படையில் தான் சேர்க்கை. உங்கள் மதிப்பெண் உங்கள் விருப்பம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கிடைக்கும் பாடத்தை நன்றாகப் படித்தால் எதிர்காலம் உங்கள் கையில். அரசு/அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்கள் உங்கள் நிதிநிலை பொறுத்து ஏதேனும் ஒரு சுயநிதிக் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அம்பானி, அதானியை பற்றி ஏன் பேசுவதில்லை… என்ன டீலிங் நடந்தது? : ராகுலுக்கு மோடி கேள்வி!

குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்: குளிர்விக்க வருகிறது கோடைமழை!

4 கோடி விவகாரம்…தப்பிக்கிறாரா நயினார்?

+1
3
+1
1
+1
0
+1
5
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *