சிறப்புக் கட்டுரை: ஐந்து பெருநிறுவனங்களை (Big 5) மட்டும்தான் உடைக்கவேண்டுமா?

இந்தியா சிறப்புக் கட்டுரை

பாஸ்கர் செல்வராஜ்

பொருட்களின் விலைவாசி (Consumer Price Index CPI) தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது. இது கடந்த ஓராண்டாக இதைத் தாண்டக்கூடாது என நிர்ணயிக்கப்பட்ட உச்சபட்ச அளவான ஆறு விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய இந்திய மத்திய வங்கி தனது சட்டப்படியான கடமையை செய்யத் தவறி வருகிறது. “எது சட்டப்படி நடக்கிறது இது மட்டும் நடக்க” என்று திருப்பிக் கேட்பீர்களேயானால் பதிலுரைக்க ஏதுமில்லை.

இதில் உணவு, எரிபொருள் தவிர்த்த மற்ற உற்பத்திப் பொருட்களின் மைய விலைவாசி உயர்வு (Core inflation) கடந்த பதினாறு மாதங்களாக ஆறு விழுக்காட்டுக்கும் குறையாமல் அப்படியே இருந்து வருகிறது. இது மொத்த விற்பனை விலைக் குறியீட்டு எண் (WPI) பன்னிரண்டு விழுக்காட்டுக்கும் மேலாக இருந்தபோதும் இப்போது இரண்டு விழுக்காட்டுக்கும் கீழாக சரிந்திருக்கும்போதும் ஒரே அளவாக இருந்து வரும் அதிசயத்தைக் காண்கின்றோம்.

இந்த அதிசயத்தை ஒரு நடைமுறை உதாரணம் மூலம் விளக்கவேண்டுமானால் கோயம்பேடு சந்தையில் கத்தரிக்காயை மூட்டை மூட்டையாக விற்கும் மொத்த வியாபாரி முதல் மாதம் மூட்டை நூறுக்கும் ஐந்தாவது மாதம் ஐம்பதுக்கும் பத்தாவது மாதம் பத்துக்கும் விற்றபோது அங்கு மூட்டையாக வாங்கிவந்து சில்லறையில் நம்மிடம் விற்கும் அண்ணாச்சி தனது கடையில் எப்போதும் கத்தரிக்காயை கிலோ பத்து ரூபாய்க்கே விற்பதைப் போன்றது.

அதாவது மொத்தமாக அதிக விலைக்கு வாங்கி போட்டியாளர்களைவிட குறைந்த விலைக்கு விற்று அவர்களை நட்டத்தில் தள்ளுகிறார்கள். பின்பு அவர்கள் வெளியேற்றியதும் சந்தையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விலையைக் கூட்டி பெருலாபம் பார்க்கிறார்கள். அது எப்படி சாத்தியம்? பக்கத்துக் கடைக்காரர் கிலோ ஐந்துக்கு விற்க முற்பட்டால் மக்கள் அவரிடம் செல்ல மாட்டார்களா? என்று கேட்பீர்களேயானல் ஊரில் ஓரிரண்டு அண்ணாச்சிக் கடைகள் மட்டும் இருந்து அவர்கள் ஒத்துபேசிக்கொண்டு இதுதான் விலையென்று சொன்னால் நாம் அந்த விலைக்குதானே வாங்கவேண்டும்.

ஆச்சார்யா சொல்லும் ஐந்து

what are the causes of price rise in india

அதேபோல இந்தியாவில் இருக்கும் ஐந்து பெருநிறுவனங்கள் பொருளுற்பத்தியின் பெரும்பகுதியை கட்டுப்படுத்தி சந்தையில் ஏகபோகம் அடைந்திருப்பதால் மைய விலைவாசி (core) உயர்வு குறையாமல் இருக்கிறது என்கிறார் இந்திய மத்தியவங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ஆச்சார்யா. 

2015ஆம் ஆண்டுக்குப்பிறகு நிதித்துறை அல்லாத மற்ற உற்பத்தித் துறைகளில் டாட்டா, பிர்லா, அம்பானி, அதானி, மிட்டல் ஆகிய ஐந்து குழுமங்களின் பங்கு பெருமளவில் (18%) அதிகரித்திருக்கிறது என்கிறார் அவர்.

பொருளுற்பத்தி இப்படி ஒருசிலரிடம் குவிந்ததன் விளைவு சந்தையில் அவர்கள் சொல்வதுதான் விலை என்ற முற்றொருமை ஏற்பட காரணமாகி விலைவாசி குறையாமல் இருந்து வருகிறது என்கிறார். இந்தக் குவிப்பு ஏதோ சந்தை நடவடிக்கைகளால் இயல்பாக ஏற்பட்டதல்ல; தென்கொரியாவில் சபோல் என்றழைக்கப்படும் சாம்சங் குடும்பத்திடம்  ஒட்டுமொத்த தொழில்களையும் குவித்ததைப்போல ஒன்றிய அரசு தெரிந்தே இவர்களை உருவாக்குகிறது என்கிறார். எனவே விலைவாசி பிரச்சனைக்குத் தீர்வு இந்தப் பெருநிறுவனங்களை உடைப்பதுதான் என்கிறார்.

80% செல்வம் 20 பேருக்குத்தான்! 

இது உண்மைதானா என்று மின்ட் இதழில் அலசும் ராணடே இந்தியாவின் எண்பது விழுக்காடு லாபமும் உருவாக்கப்படும் செல்வமும் இருபது பேருக்குத்தான் செல்கிறது. எனவே சந்தை ஒருசிலரிடம் செறிவடைந்திருப்பது உண்மைதான் என்று ஒப்புக்கொள்கிறார். கூடவே பொருளாதாரச் சுழற்சியில் வருமானமும் தேவையும் கூடும்போது நிறுவனங்கள் விலையைக் கூட்டுவது அடிப்படையான பொருளாதார நடவடிக்கைதான் என்கிறார்.

மொத்த லாபமும் செல்வமும் இருபது பேரிடம் குவியும்போது வருமானமும் தேவையும் எப்படிக் கூடும் என்பதான தர்க்கப்பூர்வமான கேள்வி எல்லாம் அவருக்கு எழவில்லை. இந்த குவிப்பையும் மீறி அவர் சொல்வது போல் 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்களின் வருமானம் அதிகரித்திருக்கிறதா என்று பார்த்தால் அவர் கட்டுரை எழுதிய அதே மின்ட் இதழில் பணக்காரர்களைத் தவிர மற்றவர்களின் வருமானம் கொரோனாவிற்குப் பிறகு குறைந்திருப்பதாகவும் வருமானவரி செலுத்தும் நடுத்தரமான வருமானம் கொண்டவர்களின் அளவு 4.98 கோடியில் இருந்து 4.11 கோடியாகக் குறைந்துவிட்டதாகவும் புள்ளிவிவரம் வெளியிடுகிறது.

what are the causes of price rise in india

குறையும் வருமானம் கூடும் விலைவாசி

இதன்படி அவர் சொல்லும் அடிப்படைப் பொருளாதாரத்திற்கு மாறாக வருமானம் குறைந்து விலைவாசி கூடியிருக்கிறது. இந்த இயல்புக்கு மாறான பொருளாதார சுழற்சியினால் என்ன நடக்கும்? வங்கிகளில் முதலாளிகள் கடன்வாங்குவதைவிட மக்கள் கடன் வாங்குவது அதிகரிக்கும் என்கிறது மேலேயுள்ள புள்ளிவிவரப் படம். இதன்பொருள் முதலாளிகள் முதலிட்டு உற்பத்தியைப் பெருக்காமல் இருக்கும் உற்பத்தியைக் குறைத்து விலைகளைக் குறையாமல் வைத்திருக்கிறார்கள்; உயரும் விலையை இருக்கும் வருமானத்தில் சமாளிக்க முடியாமல் மக்கள் பெருமளவில் கடன் வாங்குகிறார்கள்.

what are the causes of price rise in india

விலைவாசி உயர்வால் மக்களுக்கு என்ன பிரச்சனை என்பது ராணடே கட்டுரையின் நோக்கமல்ல என்பதால் முற்றுருமை வாதிகளைப் பற்றிய பொருளாதார அறிஞர் ஜோசப்பின் கருத்துகளை முன்வைத்து தனது வாதத்தைத் தொடர்கிறார். போட்டி நிலவும்போது எந்தத் தொழில்முனைவோரும் முற்றுருமை வாதியாகத்தான் இருக்க விரும்புவார். ஆனால் அது தற்காலிகமானது. ஏனெனில் சந்தையில் மற்றொருவர் புதுமைகள் செய்தோ குறைந்த விலைக்குப் பொருளை விற்கவோ போட்டிக்கு  வந்துவிடுவார். ஆதலால் விலை வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என்பது ஜோசப்பின் விளக்கம்.

ஆனால் அது இந்தியாவுக்குப் பொருந்தாது; உதாரணமாக தொலைத்தொடர்புத் துறையையில் முற்றுருமை உடையாமல் தொடர்கிறது; ஏனெனில் ஒன்றியத்தின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள், புதியவர்கள் நுழைய ஏற்படுத்தியிருக்கும் தடைகள் என பல காரணங்களை அடுக்குகிறார் ராணடே. இவற்றை எல்லாம் பேசிவிட்டு இறுதியில் இந்த ஐவர்களை மட்டும் விலைவாசி உயர்வுக்குக் காரணமென்று சொல்லி விடமுடியாது ஏனென்றால் எண்ணெய் விலையுயர்வும் அதனால் ஏற்படும் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வும் இவர்களால் வருவதில்லையே எனக் கேள்வியெழுப்புகிறார்.

எரிபொருளில் ஒன்றியத்தின் ஏகபோகம்! 

 இதன்மூலம் ஆச்சார்யா சொல்லாமல் விட்ட எரிபொருளில் ஒன்றியம் கொண்டிருக்கும் ஏகபோகத்தை இணைக்கிறார். தொழில்நுட்பப் பொருட்களின் இறக்குமதியையும் இந்த ஐவர் ஏகபோகம் செலுத்தும் துறைகளில் மற்றவரையும் அனுமதிக்க வேண்டும் என்கிறார். சமீபத்தில் எலோன் மஸ்கின் விண்வெளி வழி இணையத்தை (starlinks) ஒன்றியம் இந்தியாவில் அனுமதிக்க மறுத்ததையும் இவரின் தொலைத்தொடர்புத் துறையை மையப்படுத்திய வாதத்தையும் இணைத்துப் பார்த்தால் இந்த வக்கீல் யாருக்காக வாதாடுகிறார் என்பதை எளிதில் கண்டறிந்துவிடலாம்.

இவர்களின் முற்றொருமை வாதத்தை நிராகரிக்கும் பரோடா வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் மதன் பல சிறிய நிறுவனங்கள் இருக்கும் விமானத்துறையில் கட்டணங்கள் குறைவாக இருக்கிறதா? மேலும் வாடிக்கையாளர் நிலையில் விலைவாசி உயர்வை ஏற்படுத்தும் சுற்றுலா, மருத்துவம், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட துறைகளில் இந்த ஐவரும் இல்லாத நிலையில் அவர்களை எப்படி விலைவாசி உயர்வுக்குக் காரணமாக்க முடியும் என்று கேட்கிறார்.

 இவரது கருத்தை ஆமோதித்து அதனை மேலும் விரிவாக்கி இந்துவில் கட்டுரை எழுதியிருக்கும்  பேராசிரியர்கள் பாலகிருஷ்னனும் பரமேஷ்வரனும் ஐந்து பெரிய நிறுவனங்களின் பங்கு 25 விழுக்காட்டை தாண்டும்போதுதான் அப்படியான முடிவுக்கு வரமுடியும்; இந்த மொத்த, சில்லறை, மைய விலைவாசி உயர்வில் காணப்படும் வேறுபாடு புதிதல்ல; இந்த வேறுபாட்டின் மையப்புள்ளி உணவு; அது எரிபொருள் சார்ந்தது என்கிறார்கள்.

 உணவுப் பொருட்களில் அதிகம் விலையுயர்வு கண்டிருப்பது கோதுமை. ஒன்றியம் கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி அளித்து பின்பு நிறுத்தியது; ரிலையன்ஸ் குழுமத்துக்குச் சிறப்புச் சலுகை அளித்தது எல்லாம் இவர்களின் பார்வைக்கு வரவில்லை போலும். அதோடு மளிகைப் பொருட்களின் விற்பனையில் அமேசான், வால்மார்ட், ஜியோ நிறுவனங்கள் இறங்கி விளையாடுவதை எல்லாம் இவர்கள் பார்த்திருக்கவே இல்லை போலும்.

100 இல் 8 இவர்களிடம்தான்… 

மளிகை மட்டுமா? போக்குவரத்து, சுற்றுலா, மருத்துவம், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களின் வர்த்தகம் எல்லாம் இணைய எண்ணிமப் பொருளாதாரத்தில் இணைக்கப்பட்டு அமேசான், வால்மார்ட், கூகிள், மெட்டா ஆகிய பெருநிறுவனங்களின் ஏகபோகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்திய மக்கள் வாங்கும் நூறு பொருட்களில் எட்டு பொருட்களை இவர்களிடம் மட்டும் வாங்கும் அளவுக்கு வர்த்தகம் இவர்களிடம் குவிந்திருக்கிறது.

இப்போது மதன் உள்ளிட்டவர்களின் “வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுப் பொருட்களின் விலைவாசி உயர்வில் ஐந்து பெரிய நிறுவனங்கள்  இல்லை ஆதலால் விலைவாசி உயர்வில் இவர்களுக்குப் பங்கில்லை” என்ற வாதத்தை மறுக்க வேண்டுமென்றால் ஆச்சார்யாவும் ராணடேவும் அமெரிக்க ஏகாதிபத்தியப் பெருநிறுவனங்களின் ஏகபோகத்தைப் பற்றி பேசவேண்டும். அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் ஆச்சார்யாவும் மேற்குலக ஆதரவு ஊடகத்தில் எழுதும் ராணடேவும் இப்போது வாய்திறப்பார்களா என்ன? இந்த வாதத்தின் மூலம் மதன் ஏகாதிபத்திய ஆதரவு தாராளமயவாதிகளை (liberals) வாயடைக்க வைக்கிறார். அதேசமயம் பார்ப்பனிய கூட்டுக்காளவாணித்தனத்தை மறைமுகமாக ஆதரிக்கிறார்.

what are the causes of price rise in india

 ஆக அமெரிக்க முதலாளித்துவ ஏகாதிபத்தியம், பார்ப்பனிய சமூக ஏகாதிபத்தியம் ஆகிய இரண்டும் இந்திய சந்தையில் தமது முற்றுருமையை நிலைநாட்டி விலைவாசியை உயர்த்தி பெருலாபம் பார்க்கின்றன. இவர்களிடம் தமது செல்வத்தை இழந்து மக்கள் கடனாளியாகிறார்கள். இந்தப் பொருளாதார நிபுணர்களோ ஒன்றைப்பேசி இன்னொன்றைப் பேசாமல் தவிர்க்கிறார்கள். ஒன்றை உடைத்து இன்னொன்றை வளர்க்கப் பாடுபடுகிறார்கள். ஆனால் சந்தையில் விலைவாசியைக் குறைத்து போட்டியை ஊக்கப்படுத்தி வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டுமானால் இரண்டு முற்றோருமையையும் உடைக்காமல் சாத்தியம் இல்லை.

இந்த நிபுணர்களைப் போலவே அம்பானி, அதானியைப் பற்றி வாய்க்கிழிய பேசும் நாம்கூட அமெரிக்கப் பெருநிறுவனங்கள் குறித்து வாய்திறப்பதே இல்லை. அவர்கள் வழங்கும் மின்னணு தொழில்நுட்ப சேவைகளின் பயன்பாட்டாளர்களாக இருப்பது காரணமாக இருக்கலாம். இது படியளக்கும் பண்ணையாருக்கு எதிராகப் பேசாத பண்ணையாட்களின் சிந்தனைக்கு ஒப்பானது. பண்ணையாருக்கு எதிராகப் போராடாதவரை அவர்கள் பண்ணையடிமைகளாகத்தான் இருந்தார்கள் என்பதை நாம் நினைவில் கொண்டு இந்த இருவருக்கும் எதிராகப் போராட முன்வரவேண்டும்.  

சரி! இந்த இரு முற்றொருமைவாதிகள் மட்டும்தான் இந்த விலைவாசி உயர்வுக்குக் காரணமா? இவர்களுக்கு எதிராகப் போராடி இந்த முற்றொருமையை உடைத்து விலைவாசியை எப்படிக் கட்டுப்படுத்துவது?

நாளை பார்க்கலாம்

(உதவிய சுட்டிகள்)

1. https://thewire.in/business/break-up-big-5-reduce-tariffs-bring-ibc-back-on-track-what-all-viral-acharya-said-in-new-paper

2. https://www.livemint.com/opinion/columns/is-monopoly-pricing-by-india-s-big-5-stoking-inflation- 11680722231455.html

3. https://www.thehindu.com/opinion/lead/corporate-power-and-indian-inflation/article66729918.ece

4.https://www.livemint.com/news/india/breaking-down-india-s-february-inflation-data-11678815564099.html

5.https://www.livemint.com/economy/our-shrinking-base-of-mid-income-taxpayers-11678732980661.html

6.https://www.livemint.com/industry/banking/when-winds-of-change-swept-indian-banking-11652029775623.html

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *