உலகத்தில் எந்த மூலையில் யார் சாதனைகளை நிகழ்த்தினாலும் அவர்களை உரிமை கொண்டாடுவதில் தமிழர்களுக்கு ஒரு அலாதிப்பிரியம் உண்டு.
அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தொடங்கி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மரணித்த ராஜ ராஜ சோழன் வரை இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
ஏற்கனவே ராஜ ராஜ சோழனை தங்களுக்குத் தான் சொந்தம் என சாதிய அமைப்புகள் போஸ்டர் அடித்து உரிமை கொண்டாடிவரும் நிலையில் பொன்னியின் செல்வன் படமும் அதை தொடர்ந்து நடைபெறும் உரையாடல்களும் புதிய புதிய விவாதங்களை கிளப்பி வருகின்றன.
சமீபத்தில் விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல் திருமாவளவனின் மணி விழாவில் பேசிய இயக்குநர் வெற்றி மாறன், வள்ளுவருக்கு காவி உடை அணிவித்தும் ராஜ ராஜ சோழனை இந்து மன்னனாக காண்பித்தும் தமிழர்களின் அடையாளம் பறிக்கப்படுவதாக பேசினார்.
அவரது இந்த பேச்சு பா.ஜ.க. உள்ளிட்ட இந்து வலதுசாரி அமைப்புகள் மத்தியில் கடும் கண்டனங்களைச் சந்தித்தாலும் சமூக வலைதளங்களில் ராஜ ராஜ சோழன் இந்துவா? இல்லையா? எனும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
பிற்காலச் சோழர்களில் ஒருவரான சுந்தரச் சோழனின் மகன் தான் ராஜ ராஜ சோழன். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் அருள்மொழி வர்மன்.
ராஜ ராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இதனால், சதய நாள் விழா உதியர் மண்டலந்தன்னில் வைத்தவன் என கலிங்கத்துப் பரணி பாடுகிறது.
இதுமட்டுமின்றி சதய நாளில் விழா நடத்துவதற்காக கோவில்களுக்கு நிவந்தங்களும் விடப்பட்டுள்ளன. தஞ்சை பெரிய கோவிலிலும் திருவையாறில் உள்ள உலோகமாதேவி கோவிலிலும் சதய நாளில் விழா நடைபெறுவது வழக்கமாக இருந்துள்ளது.
ஐப்பசி மாதம் சதய நாளை தொடர்ந்து 7 நாட்கள் விழா நடத்துவதற்காக திருவெண்காட்டு இறைவனுக்கும் ராஜ ராஜன் காலத்தில் நிவந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கி.பி. 985-ம் ஆண்டு சிறிய தந்தை உத்தம சோழனை தொடர்ந்து நாட்டின் அரியணையில் ஏறிய ராஜ ராஜ சோழன் 1014-ம் ஆண்டு வரை 29 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார்.
ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் காந்தளூரில் நடைபெற்ற போரில் சேரனுக்கு உதவ வந்த பாண்டிய மன்னனையும் ராஜ ராஜன் வெற்றி கொண்டு அவர்களது இருமுடிகளையும் கைப்பற்றினார்.
இதனால் அவருக்கு மும்முடி சோழன் என்றும் அரசனுக்கு அரசன் என்று பொருள்படும் ராஜ ராஜ சோழன் என்கிற பெயரும் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து அவரது உண்மை பெயரான அருமொழி வர்மன் என்கிற பெயரே மறந்துவிடும் அளவுக்கு ராஜ ராஜ சோழன் என்கிற பெயரே வரலாற்றில் நிலைபெற்று விட்டது.
ராஜ ராஜ சோழனை சிறுவயதில் முதலாம் கண்டாரதித்த சோழனின் மனைவியான செம்பியன் மாதேவியும் அவரது அக்கா குந்தவையும் தான் வளர்த்தனர்.
இவர்கள் இரண்டு பேரும் சிவபக்தியில் ஊறி திளைத்தவர்கள் என்பதால் ராஜ ராஜ சோழனும் சிவனடியாராகவே வளர்ந்தார். இதனால் அவருக்கு சிவ பாத சேகரன் எனும் பெயரும் உண்டு.
இவரது ஆட்சி காலத்தில் ஓவியம், சிற்பம், இசையுடன் சேர்ந்து சைவ மதமும் வளர்ச்சி கண்டுள்ளது.
ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் தற்போது தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டது.
அவரது 19-வது ஆட்சியாண்டில் தொடங்கப்பட்ட பெருவுடையார் கோவில் கட்டுமானப்பணி அவரது ஆட்சியின் 25 வது ஆண்டில் முடிவுக்கு வந்தது.
இந்த கோயிலுக்காக ராஜ ராஜ சோழனும் அவனது உறவினர்களும் அணிகலன்களையும் வருமானம் தரும் ஊர்களையும் கொடையாக வழங்கியுள்ளனர்.
ராஜ ராஜ சோழனின் மனைவி உலகமாதேவியும் திருவையாறில் உலோகமாதேவிச்சுரம் கோவிலை கட்டியுள்ளார். இது அவரும் சிவ பக்தி மிக்கவர்தான் என்பதை உணர்த்துகிறது.
சிதம்பரத்தில் வாழ்ந்த தில்லை வாழ் அந்தணர்களிடம் இருந்து சைவ திருமுறையான தேவாரத்தை மீட்டுக்கொடுத்ததும் ராஜ ராஜ சோழன் தான்.
என்னதான் சிவ பக்தியில் ஊறி திளைத்திருந்தாலும் மற்ற மதங்கள் வளர ராஜ ராஜ சோழன் தடையாக நின்றதில்லை. பங்களூர் அருகில் உள்ள மணலூரில் செயங்கொண்ட சோழ விண்ணகரம் எனும் திருமால் கோவிலும், தலைக்காடு எனும் ஊருக்கு அருகில் ரவிகுல மாணிக்க விண்ணகரம் எனும் திருமால் கோவிலும் ராஜ ராஜன் காலத்தில் கட்டப்பட்டன.
இந்த கோவில்களுக்கு ராஜ ராஜ சோழனின் பட்டப் பெயர்களான ஜெயங்கொண்ட சோழன், ரவிகுல மாணிக்கம் எனும் பெயர்களே சூட்டப்பட்டுள்ளன. இந்த கோவில்களுக்கு ராஜ ராஜனும் அவனது அக்கா குந்தவையும் நிவந்தங்கள் வழங்கியதற்கான ஆதாரங்கள் காண கிடைக்கின்றன.
இதன் மூலம் சைவத்தை பின்பற்றிய ராஜ ராஜன் வைணவம் வளர்வதற்கு தடையாக இல்லை என்பதை அறிய முடிகிறது.
இதே போல, நாகப்பட்டினத்தில் கடாரத்து அரசன் சூளாமணி வர்மனால் தொடங்கப்பட்டு அவரது மகன் விஜயோத்துங்க வர்மனால் கட்டிமுடிக்கப்பட்ட புத்தவிகாரத்துக்கு ராஜ ராஜ சோழன் பெரும்பள்ளி என பெயரிடப்பட்டது.
இந்த விகாரத்திற்கு நிவந்தமாக ஆனைமங்கலம் எனும் ஊரையும் ராஜ ராஜ சோழன் வழங்கியுள்ளார். இதன் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தை ஆண்ட மன்னர் ஒருவர் மதச்சார்பின்மையுடன் நடந்துகொண்டது தெரியவருகிறது.
சிவனுக்கு கோயில்கள் கட்டி, சிவனடியாராக வாழ்ந்து திருமாலுக்கும் கோவில் கட்ட உதவிய ராஜ ராஜ சோழன் இந்து இல்லையா எனும் கேள்வி தற்போது எழலாம்.
1816-ம் ஆண்டு ராஜா ராம் மோகன் ராய் என்பவர் தான் முதன் முதலில் இந்து என்கிற வார்த்தையை மதத்தோடு தொடர்புபடுத்தி பயன்படுத்தினார். அதற்கு முன்பு வரை இந்து என்கிற சொல் சிந்து நதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களை குறிக்கும் ஒரு இடப்பெயராகவே பயன்படுத்தப்பட்டது.
இதனால் ராஜ ராஜன் காலத்தில் இந்து என்கிற வார்த்தையே இல்லை என்பது தெளிவாகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சைவம், வைணவம், சமணம், புத்தம் ஆகியவை வெவ்வேறு மதங்களாகவே இருந்தன.
சிவனும் திருமாலும் இப்போது இந்து மதத்தின் பிரதான கடவுள்களில் ஒருவராக இருந்தாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இரண்டு பேரும் வெவ்வேறு மதங்களின் கடவுள்களாகவே வணங்கப்பட்டனர்.
தற்போது சிவனை இந்து மதம் உட்கிரகித்துக் கொண்டாலும் அதனை சைவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. சிவனடியாளர்களான சைவர்கள் இன்றுவரை சைவர்களாக தொடர்வதையே விரும்புகின்றனர்.
சமய நல்லிணக்கத்தை தன் ஆட்சிக் காலத்தில் பேணிய ராஜ ராஜன் தன்னை சிவ பாத சேகரன் என்று சைவனாகவும் தண்டமிழ்நாடன் (திருக்கோவிலூர் கல்வெட்டு) என்று தன்னை தமிழ்நாட்டுக்காரன் என்றுமே அடையாளப்படுத்துகிறான். தன்னை இந்து என்று எங்குமே குறிப்பிடவில்லை.
அப்துல் ராஃபிக்
வெற்றிமாறன் பேச்சு: ஆதரவும் எதிர்ப்பும்!
3வது டி20: ரோசாவ்வின் ஆக்ரோசமான சதம்… தோல்வியை தழுவிய இந்தியா!