–ஜாசன்
சமீபத்தில் நிருபர்களை சந்தித்த சசிகலா, ‘திமுகவில் வாரிசு அரசியல் தலை விரித்து ஆடுகிறது. அதிமுக முதல்முறையாக சாதி அரசியலை நோக்கி செல்கிறது. அதனால் நான் மீண்டும் ரீ என்ட்ரி வந்துவிட்டேன்’ என்றார்.
வாரிசு அரசியல் பற்றி சசிகலாவெல்லாம் பேசலாமா? தினகரன், திவாகர், ராவணன், பாஸ்கரன், சுதாகரன், எம்.ஆர் என்று சொல்லப்படும் எம்.ராமச்சந்திரன் இப்படி தனது குடும்பத்தையே அதிமுகவின் ஆணிவேராக்கிய சசிகலா, வாரிசு அரசியல் பற்றி பேசுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
அடுத்து அதிமுக ஜாதி அரசியல் நோக்கி போகிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஜெயலலிதாவின் ரிமோட் கண்ட்ரோல் ஆக சசிகலா இருந்த காலத்தில் அதிமுகவுக்கு இன்னொரு பெயரும் இருந்தது. அது தேவர் பேரவை என்பது. இதையெல்லாம் மறந்து விட்டார் பாவம்.
அதிமுகவில் ’சசிகலா சகாப்தம்’ என்று அழைக்கும் அளவுக்கு அக்கட்சியில் அவர் கோலோச்சிய நாட்களும் உண்டு. மிடாஸ் மோகன், கலியபெருமாள், திவாகர், ராவணன், எம்.ராமச்சந்திரன் என்று கட்சியில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனது குடும்ப உறுப்பினர்களையே குறுநிலமன்னர்களாக்கி அழகு பார்த்தவர் சசிகலா.
கட்சிப் பதவி, அமைச்சர் பதவி, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என எதுவென்றாலும் இவர்களைப் பார்த்து சரி கட்டினால்தான் நிச்சயம் என்பதே சசிகலா சகாப்தத்தில் உண்மையான நிலைமை.
சசிகலா ஒருவரை பிள்ளையார் ஆக்கவும் செய்வார், தனக்கு பிடிக்கவில்லை என்றால் அவரை மண்ணாக்கியும் விடுவார். அதிமுகவில் கடுமையாக உழைத்து அந்தக் கட்சியை தூக்கிப்பிடித்த முத்துசாமி, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், ரகுபதி, சேகர்பாபு, செல்வகணபதி எல்லோருமே சசிகலாவின் டார்ச்சர் தாங்காமல் வெளியேறி திமுகவில் அடைக்கலம் ஆனவர்கள்தான்.
செல்வகணபதிக்கு தடை!
செல்வகணபதி மேல் சுடுகாட்டு ஊழல் வழக்குப்பதிவான போது அந்த வழக்கில் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை ஊழல் தடுப்பு துறை சேர்த்தது.
ஆனால் செல்வகணபதி ஜெயலலிதாவுக்கு செலுத்தும் நன்றிக் கடனாக, ’இந்த ஊழலுக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அமைச்சர் என்ற முறையில் நான் தான் பொறுப்பு’ என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.
அவ்வளவு விசுவாசமாக இருந்த செல்வகணபதி எம்.பி ஆன பிறகு சசிகலாவுக்கு பிடிக்காததால் ஓரங்கட்டப்பட்டார். கட்சியின் எந்த நிகழ்ச்சிக்கும் அவரை அழைக்கக் கூடாது என்று சசிகலா தடை விதித்தார். பாராளுமன்றத்திலும் அவருக்கு பேச பெரிய அளவு வாய்ப்பு வழங்கப்படாமல் அதிமுக பாராளுமன்ற குழு அவரை முடக்கியது.
எல்லாவற்றையும் அமைதியாக பொறுத்துக் கொண்ட செல்வகணபதி, ஒரு கட்டத்தில் தனது சுய கௌரவத்திற்கு சவால் என்ற நிலையில் அதிமுகவில் இருந்து விலகினார். இப்போது செல்வ கணபதி சேலத்தை திமுகவின் செல்வாக்குள்ள ஒரு மாவட்டமாக மாற்றி அந்தத் தொகுதியின் திமுக எம்.பி யாகவும் வந்துவிட்டார். அவர் மீதான வழக்கும் ஆதாரமில்லாமல் தொடரப்பட்டு தள்ளுபடி ஆனது வேறு கதை.
ரகுபதியிடம் ரூ.3 கோடி கேட்ட சசிகலா
அமைச்சர் ரகுபதி எம்ஜிஆர் காலத்து அதிமுககாரர். அவர் மகனுக்கு திருமணம். தனது குடும்ப சம்பிரதாயத்தையும் தவிர்த்து, ஜெயலலிதா தான் தாலி எடுத்து தர வேண்டும் என்று வற்புறுத்தி அவரை சம்மதிக்க வைத்தார். ஆனால் சசிகலா இதை விரும்பவில்லை.
திருமணத்துக்கு முன் தினமே திருச்சிக்கு ஜெயலலிதாவும் சசிகலாவும் போய் விட்டார்கள். மறுநாள் ரகுபதி மகன் திருமணத்தில் கலந்து கொள்வதாக திட்டம்.
அன்று இரவு ரகுபதி அழைக்கப்பட்டார். ஜெயலலிதா தூங்கிக் கொண்டிருந்தார். ’நாளை அக்கா திருமணத்துக்கு வர வேண்டும் என்றால் இப்போதே மூன்று கோடி ரூபாய் தர வேண்டும். அப்போதுதான் திருமணத்துக்கு வருவார். இல்லையென்றால் வரமாட்டார்’ என்று கண்டிஷனாக சசிகலா சொல்ல ரகுபதி பதில் எதுவும் சொல்லாமல் திரும்பி விட்டார்.
அன்று இரவே புதுக்கோட்டை மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு, ரகுபதி வீட்டு திருமணத்தில் யாரும் கலந்து கொள்ள கூடாது என்று மிரட்டல் உத்தரவிட்டார் சசிகலா. அவரவர் எதிர்காலம் கருதி ரகுபதி வீட்டுத் திருமணத்தை அதிமுகவினர் எல்லோரும் புறக்கணித்தார்கள். காளிமுத்து மட்டும் கலந்து கொண்டார்.
சசிகலாவின் இந்த செயல் தனது தன்மானத்துக்கு இழுக்கு என்று கோபப்பட்ட ரகுபதி திமுகவில் சேர்ந்தார். இன்று புதுக்கோட்டையை திமுகவின் கோட்டையாக மாற்றியதில் ரகுபதி பங்கு பெரும் பங்கு. அதன்பின் திமுகவில் ஒன்றிய அமைச்சரானார். இப்போது மாநிலத்தில் அமைச்சராக இருக்கிறார்.
இதனால் இழப்பு அதிமுகவுக்கு தானே தவிர ரகுபதிக்கு இல்லை. சொந்த செல்வாக்கில் அரசியல் செய்து பழக்கப்பட்டவர் ரகுபதி.
இப்படி பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். சசிகலாவால் வளர்க்கப்பட்டவர்கள் என்பதை விட பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல் தான் உண்மையில் அதிகம். வளர்க்கப்பட்டவர்கள் கூட சசிகலாவுக்கு அதற்கான விலையை அவரிடம் கப்பமாக கட்டினார்கள் என்பது தான் மேலும் உண்மை.
ஜெயலலிதா மரணம்.. ஓபிஎஸ் பல்டி.. நீங்காத சந்தேகம்!
இவை எல்லாவற்றையும் விட, ஜெயலலிதா மரணம் சம்பந்தப்பட்ட உண்மை நிலவரத்தை உலகுக்கு சொல்ல வேண்டிய ஒரு கட்டாயத்துக்கு தற்சமயம் தள்ளப்பட்டு இருக்கிறார் சசிகலா.
ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் இருந்துவிட்டு வெளியே வந்து நிருபர்களை சந்தித்தபோது, ’என்னை அவமானப்படுத்தி கட்டாயப்படுத்தி என்னிடம் ராஜினாமா கடிதம் வாங்கினார்கள். ஜெயலலிதா மரணத்தில் நிறைய சந்தேகங்கள் இருக்கிறது’ என்றார்.
கிட்டத்தட்ட ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவுக்கு தொடர்பு இருப்பது போல் அவரது அன்றைய பேட்டி இருந்தது.
ஓபிஎஸ் அணி என்று தனியாகப் பிரிந்து ஓபிஎஸ் அரசியல் செய்தபோது அவருக்கு துணையாக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இருந்தார். அவரும் ஜெயலலிதா மரணம் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை எழுப்பினார். ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை மாடியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை அகற்ற உத்தரவு போட்டது யார்?
ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசத்திற்கான வென்டிலேட்டர் பொருத்துவதற்கு சில சட்ட சம்பிரதாயங்கள் இருக்கின்றன. அதற்கு ஜெயலலிதாவின் ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்கள் ஒப்புதல் அவசியம். அப்படி ஒப்புதல் தந்தது யார் என்று கேள்வி கேட்டார் பி. எச்.பாண்டியன்.
அதுமட்டுமல்ல, “ஜெயலலிதா மரணத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை நாங்கள் நெருங்கி விட்டோம்” என்றும் நிருபர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார் பி.எச்.பாண்டியன். ஆனால் அதன் பிறகு யார் அந்த குற்றவாளி என்று ஓபிஎஸ்சோ இன்று வரை அவரோடு இருக்கும் பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியனோ வாய் திறக்கவில்லை.
எடப்பாடி அணியில் இணைவதற்கு ஓபிஎஸ் விதித்த முக்கிய நிபந்தனையே, ஜெயலலிதா மரணம் சம்பந்தமாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்பதுதான். எடப்பாடியும் அந்த நிபந்தனையை ஏற்று ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அமைத்தார். ஆனால், விசாரணை கமிஷன் அனுப்பிய சம்மனுக்கு ஒரு முறை கூட ஓபிஎஸ் ஆஜராகவில்லை. அதிமுகவை விட்டு நீக்கப்பட்ட பிறகுதான் ஓபிஎஸ் விசாரணை கமிஷனில் ஆஜரானார்.
அந்த கமிஷனில், ’ஜெயலலிதா மரணத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்ல, எனக்கு யார் மீதும் சந்தேகமும் இல்லை’ என்று அப்படியே பல்டி அடித்தார்.
அதிமுக அடிமட்ட தொண்டர்கள் இப்போதும், சசிகலா வேண்டாம்- ஓபிஎஸ் வேண்டாம் என்று பொதுக்குழு செயற்குழுவில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியதற்கு காரணம் ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவுக்கு தொடர்பு என்ற சந்தேகமும் கோபமும் தான்.
ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் விசாரணையின் போது சசிகலா அளித்த பிரமாண பத்திரத்தில் எண்பதாவது பக்கத்தில் அவர் ஓபிஎஸ் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
”ஓ.பன்னீர்செல்வம் பல மறைமுக செயல்களில் ஈடுபட்டு திமுகவுடன் கைகோர்த்து உள்ளார் என்பதை பிற நிர்வாகிகள், அமைச்சர்கள் மூலம் நான் தெரிந்து கொண்டேன். அதிமுகவின் அடி வேரை அசைத்துப் பார்க்கும் வண்ணம் நேரடி துரோகச் செயலில் ஈடுபட்டார் ஓபிஎஸ்” என்று அந்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறார் சசிகலா.
இன்றைக்கு சசிகலாவும் வேண்டாம், ஓபிஎஸ் சும் வேண்டாம் என்று அதிமுக பொதுக்குழு உறுதியாக இருப்பதற்குக் காரணம், ‘அம்மா…’ என்று அவர்கள் பாசமாக அழைக்கும் ஜெயலலிதாவுக்கு இந்த இருவரும் இழைத்த துரோகம் தானே!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : பாஜக ஆர்ப்பாட்டம் முதல் நடிகர் விஜய் பிறந்தநாள் வரை!
கிச்சன் கீர்த்தனா : கரும்புச்சாறு பாயசம்
பாலத்துல மட்டும் தான் விரிசலா? அப்டேட் குமாரு
மாதவரம் To மடுக்கரை To கள்ளக்குறிச்சி… மெத்தனால் வந்த ரூட்! சின்னத்துரை கக்கிய ஷாக்!