நல்லதம்பி
“துணை வேந்தர் கைது” என்றொரு பரபரப்பு செய்தி. “துணை வேந்தர் ஜாமீனில் விடுதலை” அடுத்த நாள் மற்றுமொரு பரபரப்பு தலைப்பு செய்தி. “பகலெல்லாம் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர். மாலையில் காவல் நிலையத்தில் கையொப்பம்”. இதுவும் ஓர் தலைப்பு செய்தி. துணை வேந்தரின் ஜாமீனை ரத்து செய்ய ஓர் வழக்கு. வழக்கை நிறுத்தி வைக்க துணை வேந்தர் மறு வழக்கு.
இதில் எது சரி? எது தவறு என பார்வையாளர்களுக்கு பெரும் குழப்பம் நேரலாம். சரி, தவறு, உண்மை, பொய் என்பதையெல்லாம் தாண்டி, துணை வேந்தர் ஒருவரின் செயல்பாடுகள் இவ்வாறான நிலைக்கு வந்ததே, துணை வேந்தர் பதவிக்கான பெருத்த அவமானம்.
இதற்கு முன்பு ஓரிரு துணை வேந்தர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவையும் துணை வேந்தர் மாண்பை குறைக்கும் செயல்பாடுகளே. “எப்படி இருந்த துணை வேந்தர்கள் இப்படி ஆகிவிட்டார்களே என்று நினைப்பவர்கள்” இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டியது தான்.
ஆங்கிலேயர் காலத்தில் கோலோச்சிய துணை வேந்தர்களை விட்டுவிடலாம். கடைநிலை ஊழியருக்கு கூட ஒரு கல்வித் தகுதி உண்டு. துணை வேந்தர் என்ற பதவிக்கு ஆங்கிலேயர்கள் எந்தவொரு கல்வித் தகுதியையும் வரையறுக்க வில்லை.
பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க, அதன் ஏற்றத்திற்கு, கற்றல் கற்பித்தல் மேம்பட, ஆராய்ச்சி அபிவிருத்தி அதிகரிக்க யாரெல்லாம் பயன்படுவார்களோ அவர்கள் எல்லாம் துணை வேந்தராக வந்து பல்கலைக்கழகத்தை மெருகூட்ட வேண்டும் என்று அத்தகைய விதியை வைத்திருந்தனர்.
அதே விதியை பயன்படுத்தி பதறுகள் அரியணை ஏறி துணை வேந்தராக பவனி வரத் தொடங்கினர். இந்த வழிமுறையைப் பின்பற்றி தமிழ் ஆங்கிலம் இரண்டும் சரியாக எழுதத் தெரியாதவர்கள் துணை வேந்தராக ஒன்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் பதவி வகித்து சென்று விட்டனர்.
ஐன்ஸ்டீனே வந்தால் கூட…
இப்படி துணைவேந்தர் பதவி சிரிப்பாய் சிரிக்கிறதே என சிந்தித்த பல்கலைக்கழக மானியக் குழு, பேராசிரியர் என்ற பதவியில் பத்தாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும் என்று ஒரு போடு போட்டது.
இந்த விதி உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் குறிப்பிட்டது போல, விஞ்ஞானி ஐன்ஸ்டீனே வந்தால் கூட துணை வேந்தராக பதவி வகிக்க தகுதி இல்லை என்று அறிவித்துவிட்டது.
கல்லூரி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை பொதுவாக நாம் பேராசிரியர் என்று சொல்லிக் கொண்டாலும் அவர்களில் மூன்று நிலைகள் உண்டு. உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் என்ற படிநிலையில் பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் உள்ள அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் எதிலும் பேராசிரியர் பணியிடம் இல்லை. உதவிப் பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் பதவிகளே உண்டு.
பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவு தமிழ் நாட்டில் உள்ள கல்லூரி ஆசிரியர்கள் எவ்வளவு தகுதி இருந்தாலும் அவர்களை துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பம் செய்யக் கூட தகுதி இல்லாமல் செய்து விட்டது. பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவுப்படி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பதவி வகிப்போர் மட்டுமே தற்போது துணை வேந்தராக வரும் நிலை வந்தது. அப்போதும் பிரச்சினை தீரவில்லை.
தகுதியா? பணமா? அரசியலா?
துணை வேந்தர் பதவிக்கு கோடிகளில் ஏலம் விடப் படுவதும் குறையவில்லை. துணை வேந்தர் பதவிக்கு போதுமான பணம் வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு கூறும் ‘பேராசிரியர்’ அந்தஸ்து வேண்டும். அரசியல் செல்வாக்கு வேண்டும். மூன்றில் இரண்டு குறைகிறது. அதாவது பேராசிரியர் அந்தஸ்து மட்டுமே இருக்கிறது. ஆனால் துணை வேந்தர் பதவிக்கு ஆசை. என்ன செய்வது? அரசியல் செல்வாக்கு இல்லை. பணமும் இல்லை. ஒருவரிடம் குறைந்த பட்ச கல்வித் தகுதி மட்டும் இருக்கிறது.
அதேபோன்ற மற்றொரு பேராசிரியரிடம் பணமும், அரசியல் செல்வாக்கும் இருக்கிறது. குதிரை ரேஸில் பணம் கட்டுவது போல, இவர்கள் தகுதி உள்ள பேராசிரியர் மீது பணம் கட்டி, அவரை விலைக்கு வாங்கி துணை வேந்தர் ஆக்கி விட்டார்கள்.
கொஞ்ச நாளில் , “அய்யய்யோ இவ்வளவு பணம் கிடைக்கிறதா இதில்!” என விழித்துக் கொண்ட அந்த துணை வேந்தர், “நீங்கள் கொடுத்த பணத்தை வட்டியோடு திருப்பி தந்து விடுகிறேன். வசூலையும் நானே பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டார்.
ஒரே கூத்து தான்
கைதேர்ந்தவர் சும்மா இருப்பாரா? சில மாதங்களிலேயே லஞ்ச வழக்கில் அந்த துணை வேந்தரை சிக்க வைத்து, சிறைக்கு அனுப்பி கம்பி என்ன வைத்துவிட்டார் செல்வாக்கு மிக்கவர். இப்படி அரங்கேற்றம் செய்யப்படாத கூத்துக்களே இல்லை.
இந்தக் கூத்தை பார்த்து வெகுண்டெழுந்த மத்திய ஆட்சியாளர்கள், அரசியல் சாசனத்தின் படி பெயரளவுக்கு இருந்த அல்லது கௌரவ வேந்தர்களை, “நாங்கள் உண்மையான வேந்தர்கள்” என அரிதாரம் பூசிக் கொள்ள தூண்டினர். அவர்களோ,”நாங்கள் மன்னர்களை காட்டிலும் சக்தி மிக்கவர்கள்” என்று பிரகடனம் செய்கிறார்கள். இணை வேந்தர், துணை வேந்தரை இங்கே வாருங்கள் என்கிறார். இது வேந்தர் காதில் விழுந்து விட்டால், “எங்கே செல்கிறீர்கள்? நானே வேந்தர். நான் சொல்கிறேன். இங்கே வாருங்கள்” என்கிறார். இணை வேந்தர் ஒரு கூட்டம் போட்டால், வேந்தர் ஒரு மாநாடு நடத்துகிறார். இந்தக் கூத்து ஒருபுறம்.
மறுபுறம் பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை மாநில அரசுகள் நியமிக்கவே முடியவில்லை. அதைவிட முக்கியம். அதைவிட ஆபத்து, வேந்தரின் துணையோடு வேலைக்கு வந்த துணை வேந்தர்கள், நியமிக்கும் நியமனங்களில் கிஞ்சிற்றும் பணம் இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். பணம் கைமாறியதோ இல்லையோ, அந்த துணை வேந்தர் மூலம் பணிக்கு வருபவர்கள், கறுப்பு, சிவப்பு, பச்சை நிறங்களை சார்ந்தவர்கள் இந்த விண்ணப்பதாரர்கள் என்று தெரிந்தால் கண்களை இறுக்கி மூடிக் கொள்கின்றனர். சுத்தமான கருப்பு சிவப்பு பச்சை மட்டுமல்ல. சந்தேகப்பட்டால் அவர்களை எக்காரணம் கொண்டும் நியமிக்க மறுத்து விடுகிறார்கள்.
இப்போது தான் அவசர அவசரமாக காவி சாயம் ஏற்றிக் கொண்டவர்களைக் கூட அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். காவியில் நனைத்த ஈரம் கூட காயவில்லை என்று அருகில் இருப்பவர் குனிந்து முனகினால் இருக்கட்டும் இருக்கட்டும் என்கிறார்கள். இவரே ஆகச் சிறந்த தகுதி உடையவர் என்று நியமனம் வழங்கப்படுகிறது.
இத்தனை இருந்தும் வேந்தர் செய்யும் துணை வேந்தர்கள் நியமனம் நேர்மையானது என்று நம்புவோர் இருக்கிறார்கள். அண்டை மாநிலங்களில் அப்படி இல்லை என்று சத்தமாக சொல்பவர்கள் உண்டு. நமக்கு வெகு அருகில் உள்ள உள்ள யூனியன் பிரதேச மத்திய பல்கலைக்கழகம் அது. வேந்தர் நியமித்த துணை வேந்தர் இரண்டு கைகளிலும் வாங்கத் தொடங்கினார். பற்றாக்குறைக்கு ஏஜன்ட்களை வேறு நியமித்திருந்தார். எந்த வேந்தர், இந்த துணை வேந்தர் நியமித்தாரோ, அந்த வேந்தரை நியமித்த அரசை சார்ந்த, அரசியல் கட்சியினரே அவருக்கு எதிராக கொடி பிடித்தனர். கோஷம் போட்டனர். போராட்டம் நடத்திப் பார்த்தனர். பட்டமளிப்பு விழாவில் சென்று ரகளையில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு மனுப்போட்டு பார்த்தனர்.
சொந்தக் கட்சிக்காரர்கள் மனுக்களுக்கு பிரதி உபகாரமாக நடந்தது என்ன தெரியுமா? அந்த துணை வேந்தருக்கு மேலும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு தரப்பட்டது. பணி நீட்டிப்பு காலத்திலும் நன்கு வசூல் செய்து கொண்டுதான் விடைபெற்றார். ஆனாலும் மாநில கட்சிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு பல்கலைக்கழகங்களை கெடுக்கிறது என்ற ஆலாபனையை நிறுத்தாமல் பாடிக் கொண்டே இருக்கிறார்கள்.
தமிழ் நாட்டில் உள்ள பழமையான மத்திய நிகர்நிலை பல்கலைக்கழகம். அதன் விதிமுறைகளை மாற்றி அமைத்து ஓர் அற்புதமான மனிதரை வேந்தராக நியமித்தனர். வேந்தர் பதவிக்கான ஒரே தகுதி அவர், உயிரியல் ரீதியாக பிறந்தோமா என்று சந்தேகம் வந்த மனிதரின் தாயாருக்கு பிசியோதெரபி மருத்துவராக இருந்தது தான். எந்தவிதமான பல்கலைக்கழக அனுபவம், ஆராய்ச்சி அனுபவம் இல்லாதவரை வேந்தர் என பட்டாபிஷேகம் செய்தால் அவர் என்ன செய்வார் பாவம்! தன்னைப் போன்றே தன்னுடன் படித்த ஒரு பிசியோதெரபி மருத்துவரை பதிவாளர் ஆக்கினார். அவருக்கும் பதிவாளருக்கான குறைந்த பட்ச தகுதிகள் ஏதும் இல்லை.
பல்கலைக்கழக பேராசிரியர்கள் வம்பு வழக்குகள் எவ்வளவோ செய்து பார்த்தனர். வழக்கை சந்திப்பவர் சர்வ பலம் பொருந்திய, சாத் சாத், உயிரியல் ரீதியாக பிறக்காத மனிதரால் ஆசீர்வாதம் பெற்றவர் அல்லவா? யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை. பல்லாண்டு காலம் துணை வேந்தர் பதவி காலியாகவே இருக்கிறது.
இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர் ஒருவர் அங்கு துணை வேந்தராக பொறுப்புக்கு வந்து விட்டார். அவரிடம் தனது வளர்ச்சி திட்டத்தை விவரித்தார். எத்தனை பேராசிரியர் பதவிகள் காலியாக உள்ளது. எத்தனை ஆசிரியர் அல்லாத பணிகள் காலியாக உள்ளது என கணக்கிட்டு எவ்வளவு பணம் வரும், என்று கூறி வசூலித்து தரும் படி கூறி இருக்கிறார். உங்களுக்கு வேண்டுமானால் ஒரு பங்கு தருகிறேன் என்று தாராள மனதோடு கூறி இருக்கிறார்.
அவர் அதிர்ச்சி அடைந்து விட்டார். “அய்யா! நான் தமிழ் மண்ணில் பிறந்தவன். தமிழ் நாட்டில் தான் படித்தேன். பிறகென்வோ வெளி மாநிலங்களில் ஆராய்ச்சி மையங்களில் புகலிடம் தேடி என்னை வளர்த்துக் கொண்டேன். வயது அறுபதை நெருங்குகிறது. பிள்ளை குட்டி இல்லை. இல்வாழ்க்கை சோபிக்கவில்லை. எனக்கு பணம் தேவையில்லை. இந்த துணை வேந்தர் பதவி கொண்டு ஏதேனும் தமிழ் நாட்டிற்கு செய்ய முடியுமா என்று தான் இங்கு வந்துள்ளேன். நீங்கள் சொல்லும் வேலைகளை என்னால் செய்ய முடியாது என மெத்தப் பணிவோடு மறுத்துள்ளார்.
சாதாரண விசயத்தில் கூட சிங்கம் போல் கர்ஜிக்கும் மனிதர் அவர். மெத்தப் பணிவோடு தான் இதனைக் கூறினார். அவ்வளவு தான். அதுவரை மிகுந்த பாசமாக பழகிய வேந்தர் லேசாக புன்னகைத்து விட்டு, சரி சென்று வாருங்கள் என்றார். அவரை மூன்றே மாதத்தில் அங்கிருந்து அடித்து துரத்துவது போல் துரத்தி விட்டுவிட்டார். அந்த மூன்று மாத காலத்தில் துணை வேந்தர் இல்லத்தில் கூட நுழைய விடவில்லை. விருந்தினர் விடுதியில் ஓரமாக ஒதுங்க அனுமதித்து பின்னர் துரத்தி அடித்து விட்டார். இன்று வரை துணை வேந்தர் நியமனம் அந்தப் பல்கலைக்கழகத்திற்கு நியமனம் செய்யப்படவில்லை. ஆனால் நேர்மை நியாயம் தரம் ஆகியவற்றுக்கு தாங்கள் தான் தகுதி சான்று தருவோம் என்று பேசித் திரிகிறார்கள் அவரை நியமனம் செய்தவர்கள்.
இந்த நிலையில் பழைய கதைகளையும் கொஞ்சம் திரும்பி பார்க்கலாம். எழுபதுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பு வகித்த மால்கம் ஆதிசேஷய்யா, தன்னிடம் முன் அனுமதி பெறாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சந்திக்க மாட்டாராம். அமைச்சர், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் பத்து நிமிடம் கழித்து அனுதிப்பாராம். இல்லையெனில் மாற்றுத் தேதியில் சந்திக்க சொல்லி விடுவாராம். இப்படியான கதைகள் தொடங்கி ஏராளமான கதைகள் பல மேனாள் துணைவேந்தர்கள் குறித்து உலா வருகின்றன.
அவையெல்லாம் அந்தக் காலம் என்று இழுப்போருக்கு, நேர்மை, தூய்மை, குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்து இன்றும் நம்மோடு வாழும் துணை வேந்தர்கள் இருக்கிறார்கள். பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை விடைத்தாளில் வெளிப்படைத் தன்மை பற்றி பேசுகிறோம். நடைமுறையில் இருக்கிறதே, இது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த வசந்தி தேவி அவர்கள் அறிமுகம் செய்தது. இன்றும் மேனாள் துணைவேந்தர் என விரும்பி பல்வேறு கூட்டங்களுக்கு சிறப்புரை ஆற்ற அழைக்கிறார்கள்.
துணை வேந்தர் பல்கலைக்கழகத்தில் வளாகத்தில் நுழைந்தால் “நேரம் 9.30 மணி”. 9.30 மணிக்கு அவரது கார் வரவில்லை என்றால் அவர் வெளியூர் பயணம். பதவிக்கு வரும் போதும், பதவியில் இருந்து விடைபெறும் போதும் சொத்துக் கணக்கு காட்டியவர்”. இது இன்றைய கணையாழி ஆசிரியர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தராக இருந்தபோது நடந்து கொண்ட விதம். அதுமட்டுமின்றி துணை வேந்தராக பொறுப்பு ஏற்கும் முன்பும் பின்பும் சொத்துக் கணக்கு காட்டிய ஒரே துணை வேந்தர் அவர் தான்.
துணை வேந்தர்கள் தங்கள் பதவிக்காலம் முடிந்த பிறகும் வாழ்நாள் முழுவதும் மிகுந்த கௌரவத்தோடு மதிக்கப்பட்டார்கள். கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டார்கள். கல்வி புலத்தில் மிகவும் உயர்ந்த பதவி துணைவேந்தர் என்ற பதவி மட்டுமே. வேந்தர் இணை வேந்தர் என்ற பதவிகள் உண்டு. அவை பதவி வழியாக கிடைக்கும் கௌரவம். இன்று அதனையும் எவ்வளவு முறைகேடான முறையில் பயன்படுத்துகின்றனர்! அது வேறு விஷயம்.
துணை வேந்தர் என்ற பதவியே உயர்ந்த பதவி. அத்தகைய உயர்ந்த பதவியை, தரத்தில் தகுதியில், கல்வி அறிவில், மிகவும் சிறந்த மனிதர்களே கோலோச்சி வந்தனர். அவையெல்லாம் பொய்யாக பழங்கதையாய் மாறிவிட்டது! தமிழ் நாட்டு பல்கலைக்கழகங்கள் எப்போது காப்பாற்றப்படும்? தமிழ் நாட்டின் துணை வேந்தர்கள் முன்பு போல் எப்போது பல்கலைக்கழகங்களில் வலம் வரப் போகிறார்கள்? அந்த நாள் எந்த நாளோ!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேசிய திறந்தநிலைப் பள்ளி சான்றிதழ்: தமிழக அரசாணைக்கு இடைக்காலத் தடை!
டாப் 10 செய்திகள் : 234 தொகுதிகளிலும் விஜய் அன்னதானம் முதல் வெப்பம் அதிகரிப்பு வரை!
கிச்சன் கீர்த்தனா: புதுச்சேரி இறால் குழம்பு!
ஹெல்த் டிப்ஸ்: உங்களுக்கேற்ற தலையணையில்தான் தூங்குகிறீர்களா?
Comments are closed.