”இந்தத்தொழிலில் என்னை விட திறமைசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். என்னைவிட கடின உழைப்பாளிகளும் இருக்கிறார்கள். ஆனால் நான் வெற்றி பெற்றதற்கு காரணம் நாணயம் மட்டுமே! சொன்ன சொல்லைக் காப்பாற்றியதால்தான் இவ்வளவு உயரத்திற்கு வர முடிந்தது” – கரகரத்த குரலில் வி.கே.டி. பாலன் சொல்லும் போது நமக்குள் ஏதோவொரு காந்த சக்தி போனது போல இருக்கும். சந்தனமும் குங்குமமும் நிறைந்த அந்த பளீர் சிரிப்பு முகம் நமக்குள் பதிந்து போகும்.
வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசமில்லாமல் வாழ்ந்து, மறைந்திருக்கும் வெகுசில சாதனையாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் இவர்.
திருச்செந்தூரில் மிக ஒடுக்கப்பட்ட சமூகத்தில், ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்து, வெறும் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, தலைநகர் சென்னையில் விமானப்பயணச்சீட்டுத் தொழிலில் கொடி கட்டி பறப்பது அத்தனை சாதாரணமானதல்ல.
கோட் – சூட் போட்ட, நுனி நாக்கு ஆங்கில ஜாம்பவான்கள் மட்டுமே கோலோச்சும் இத்துறையில் சாமானியனாக நுழைந்து சரித்திரம் படைப்பது பெரிது. அப்படி உயர்ந்த பிறகும் வெள்ளை வேட்டி சட்டையும் கால்களில் ரப்பர் செருப்புகளுமாக சாமானியனாகவே இருந்தது பெரிதினும் பெரிது. அதன் மூலமே திறக்காத கதவுகளை எல்லாம் திறக்க வைத்தது அசாத்தியம்.
‘கோட் போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி’ என்ற விதியையே இவருக்காக திருத்தி இருக்கிறது, சக்தி வாய்ந்த சர்வதேச விமான பயணச்சீட்டு முகவர்கள் அமைப்பு (IATA).
அந்தளவுக்கு தமது நிறுவனத்தை ஆற்றல் மிக்கதாக உருவாக்கினார். 1981ல் முதன்முதலாக சென்னைக்கு வந்து திக்குத் தெரியாமல் தவித்து நின்ற எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எதிரே பல கோடி மதிப்பில் அவரது வெற்றியைப் பறைசாற்றியபடி ‘மதுரா டிராவல்ஸ்’ பளிச்சென நிற்கிறது.
சுற்றுலாத் தொழிலில் மனித விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றுவதை அவர் வேதமாக்கி வைத்திருப்பதும் அதற்கு இன்னொரு காரணம்.
எல்லாவற்றிலும் வித்தியாசமாக சிந்திப்பது பாலனின் தனிச்சிறப்பு. ஏதோவொரு வகையில் யாருக்காவது பயன்பட்டு கொண்டே இருக்க வேண்டும் என்பது அவரது ஆகப்பெரிய எண்ணம்.
மாற்றுத் திறனாளிகளின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தமது நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதில் அவருக்கு அப்படியொரு மகிழ்ச்சி. அழிந்து கொண்டிருக்கும் தமிழர் கலைகளை வாழ்விக்கும் முயற்சியாக வெளிநாடுகளுக்கு நாட்டுப்புற கலைஞர்களை அழைத்துச் சென்று நிகழ்ச்சிகள் நடத்த வைத்தது அவரது சாதனைகளில் ஒன்று.
தமிழ், தமிழர் என்ற தளங்களில் கூடுதல் ஆர்வம் கொண்டிருந்தவர். இலக்கியவாதிகள் எத்தனையோ பேருக்குச் சத்தமில்லாமல் உதவிக்கரம் நீட்டியவர். இலங்கைத்தமிழர்கள் மீது பேரன்பு காட்டியவர். இலங்கை இறுதிப்போரில் கொத்து, கொத்தாக தமிழ்ச்சொந்தங்கள் கொல்லப்பட்ட போது உயிர் உருகத் துடித்தவர்.
எளியவர்களின் வாழ்க்கையைத் தேடித்தேடி இவர் வெளியில் கொண்டுவந்த ‘வெளிச்சத்தின் மறுபக்கம்’ என்ற நிகழ்ச்சி, தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முக்கியமான ஆவணம். இந்த ஆர்வமும் சமூகத்தின் மீதான அக்கறையுமே அவரைத் தன் தொழிலுக்கு அப்பாலும் அற்புத மனிதராக அடையாளம் காட்டிக்கொண்டியிருக்கிறது
ஆண்டுதோறும் லட்ச ரூபாயுடன் இவர் வழங்கிய ‘மதுரா மாமனிதர்’ விருதிற்கு என்று தனிமரியாதை உருவாக்கியவர். கல்லூரி வாசலையே மிதிக்காத இந்த மனிதரின் அனுபவப் பாடங்களைக் கேட்க கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் காத்துக்கிடந்தன. ‘சொல்லத்துடிக்குது மனசு’ என்ற இவரது நூல் எதையாவது சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவரையும் திரும்பத்திரும்ப படிக்கத் தூண்டுகிறது. சுற்றுலாவை மையமாக வைத்து இவர் வெளியிட்ட ‘மதுரா வெல்கம் கைடு’களே வெளிநாட்டுக்காரர்களுக்கு நம் தமிழகத்தை அங்குலம், அங்குலமாக அறிமுகப்படுத்துகின்றன.
“நான் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு வரும் போது ரயிலில் ‘வித் அவுட்’டில்தான் ( பயணச்சீட்டு வாங்க பணம் இல்லாமல்) வந்தேன். வாழ்க்கையில் இத்தனை ஆண்டுகளைக் கடந்த பிறகு இப்போதும் வித் அவுட்டில்தான் எல்லா ஊர்களுக்கும் செல்கிறேன். ஏனென்றால் எந்த நாட்டுக்குப் போவதற்கும் விமானத்தில் எனக்கு பணமில்லாமல் பயணச்சீட்டு கொடுக்கிறார்கள். என்ன செய்வது அப்போதும் வித் அவுட், இப்போதும் வித் அவுட்” என்று தன் சாதனை சரிதத்தை வேடிக்கையாக சொல்லும் வி.கே.டி பாலன் அவர்களின் நமக்குச் சொல்லித்தரும் வெற்றி மந்திரம் ‘நாணயம்’! சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் அக்கறை காட்டுபவர்களை காலம் எப்போதும் கரையேற்ற தவறியதில்லை என்பதற்கு இவரே கண் கண்ட உதாரணம்.
வாழ்வில் வெற்றி பெறுவதற்கு நாணயமே அடிப்படை என்பதை ஒரு வாத்தியாராக நமக்குச் சொல்லித் தருகிறது பாலனின் வாழ்க்கை. அப்படி தொழிலில் வென்ற பிறகு தன்னை உருவாக்கிய சமூகத்திற்கு எப்படி பயன்பட வேண்டும், எந்தளவுக்கு மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் அவரது வாழ்க்கையே பாடமாகி நிற்கிறது. படித்துக் கொள்ளலாமா?
கட்டுரையாசிரியர் :
முனைவர். கோமல் அன்பரசன்
அதிமுக மாநில இளைஞரணி இணை செயலாளராக உள்ளார். ரகசியமான ரகசியங்கள், 60 நாட்களில் அரசியல், காவிரி அரசியல் – தமிழகம் வஞ்சிக்கப்பட்ட வரலாறு, அறிவோம் மயிலாடுதுறை, மாயூர யுத்தம் உள்ளிட்ட எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்திலுள்ள கோமல் கிராமத்தில் பிறந்தவர். 11வது வயதில், துணுக்கு எழுத்தாளராக எழுத்துத்துறைக்கும், பத்திரிகைத்துறைக்கும் அறிமுகமானவர். பள்ளியில் படிக்கும் போது, 14வது வயதில், “கவின்” என்ற கையெழுத்து பத்திரிகையை நடத்தினார். கல்லூரியில் படித்தபோது 19வது வயதில், தனது முதல் புத்தகமான “சூரியப்பார்வைகள்” என்ற கட்டுரைத் தொகுப்பை எழுதினார்.
படிக்கும்போதே ஊடகத்துறையில் கால்பதித்த கோமல், அப்போதிலிருந்து பல்வேறு சிற்றிதழ்களிலும் , இலக்கிய இதழ்களிலும், வெகுமக்கள் இதழ்களிலும் தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஊடகப்பணி மட்டுமின்றி, கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள் என பல தளங்களிலும் இயங்கி வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!
விடாது பெய்யும் மழை… சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!