கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் மீது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஷ்ரா வேண்டுமென்றே காரை ஏற்றியதில் 8 பேர் உயிரிழந்ததாக சர்ச்சைகள் வெடித்தன.
இந்த சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் பேசு பொருளான லக்கிம்பூர் கேரி தான் தற்போது மீண்டும் தலைப்புச் செய்தியாகியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பட்டியலின சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
லக்கிம்பூரி கேரி மாவட்டம் நிகாசன் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 14 மற்றும் 17 வயது கொண்ட இரண்டு சிறுமிகள் தங்களது பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர்.
10 மற்றும் 8-ம் வகுப்பு படித்து வந்த சிறுமிகளுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த கவுதம் சோட்டு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சோட்டு அந்த சிறுமிகளை பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பர்களான சுஹைல் மற்றும் ஜுனைத் ஆகியோருக்கு அறிமுகம் செய்துள்ளார்.

சிறுமிகளுடன் நன்றாக பழகிய அந்த இளைஞர்கள் கடந்த 14-ம் தேதி அன்று தனிமையான இடத்திற்கு சிறுமிகளை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் கழுத்தை நெரித்து அவர்களை கொலை செய்துவிட்டு தங்களது நண்பர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள கரும்புக் காட்டில் மரத்தின் மீது தூக்கில் ஏற்றியுள்ளனர்.
தந்தை கோரிக்கை : 6 பேர் கைது!
புதன் கிழமை அன்று சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்குவதை பார்த்த கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். சிறுமிகள் இரண்டு பேரும் தனது கண் முன்னேயே கடத்திச் செல்லப்பட்டதாக அவர்களது தாய் குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிறுமிகளின் தந்தை குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என பேசினார்.

இதனால் இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் புயலைக் கிளப்பியது. இதனை அடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் வியாழக் கிழமை அன்று இந்த கொலை தொடர்பாக சிறுமிகளின் கிராமத்தைச் சேர்ந்த கவுதம் சோட்டுவை கைது செய்தனர். பின்னர் சிறுமிகளுடன் பழகிய சுஹைல், ஜுனைத் மற்றும் அவர்களுக்கு உதவிய நண்பர்கள் ஹஃபிசுல்லா, கரிமுதீன், ஆரிஃப் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.
சிறுமிகள் இருவரும் தாங்களாகவேதான் இளைஞர்களைப் பார்க்க சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்கால தலைமுறைக்கு எச்சரிக்கை!
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி, யோகி ஆட்சியில் குற்றவாளிகள் பயமின்றி சுற்றி திரிவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
லக்கிம்பூர் கேரியில் நடந்துள்ள சம்பவம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அரசு செய்து வரும் பிரச்சாரத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக சாடியுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை எதிர்கால தலைமுறைக்கு எச்சரிக்கையாக இருக்கும் என உத்தப் பிரதேசத்தின் துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதாக் வாக்குறுதி அளித்துள்ளார்.
அப்துல் ராஃபிக்
குஜராத் கூட்டுப் பாலியல் வன்முறை: அனைவரும் விடுதலை! வலுக்கும் கண்டனம்!