மெய்மையே! தியாகமே! திருநாளே!

Published On:

| By Minnambalam

truth sacrifice and Eid Mubarak

ஸ்ரீராம் சர்மா

திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டர் அருகே செம்மறி ஆடுகள் மந்தை மந்தையாக வந்து கூடினால், ‘பக்ரீத்’ காலம் நெருங்குகிறது என அர்த்தம் !

அது, இஸ்லாமியர்களுக்கான இரண்டாம் பெருவிழாக் காலம் !

‘பக்ரா கா ஈத்’ என்பதுதான் ப்க்ரீத் என மருவியது. ‘பக்ரா’ என்றால் உருது மொழியில் ஆடு எனப் பொருள். ஆட்டை பலி கொடுக்கும் நாள் என்பதால் அதை பக்ரீத் என்கிறார்கள்.

“ஆட்டை அறுக்கத்தான் கொண்டாடுகிறோம் என்பது சரியல்ல. அந்த நல்ல நாளை “தியாகத் திருநாள்” என்று அழைப்பதுதான் சரி….’ என்பது எனது இளம்பிராயத்துத் தோழன் சன் டிவி ஷாஹுல் அமீத் கருத்து.

அரசாங்கமும் ‘பக்ரீத் விடுமுறை’ என்றுதானே அறிவிக்கிறது !?

‘பக்ரீத் என்னும் பதம் மெட்ராஸ்ஸில் ஊடுருவிய உருது பாஷையின் விளைவு, தமிழ் பேசும் இஸ்லாமிய மாவட்டங்களில் நாங்கள் பக்ரீத் எனச் சொல்வதில்லை மாமா…” என நெல்லையை பூர்வீகமாகக் கொண்ட ஷாஹுல் அடித்துச் சொல்ல ஆச்சரியப்பட்டுக் கொண்டேன்.

எத்தனை முறை அவனது தாயாரின் கையால் அள்ளி அள்ளி விருந்து உண்டிருப்போம். அத்தனை முறையும் எங்கள் நாவும், உணர்வும்தான் விஞ்சியதே தவிர, ஒருபோதும் அதன் அர்த்தம் கேட்டதில்லையே !

அதுசரி, கொண்டாட்டம் என்பது அன்பு தேடி, உணர்வு நாடி, மெய்மை கண்டு மகிழும் அற்புதம் பாற்பட்டது அல்லவா ?

தியாகத் திருநாளின் வரலாறு !

அன்றந்த பாபிலோனிய நகரில் உலகளாவிய மக்களை முன்னிட்டு அன்பு சார்ந்தும், இறை சார்ந்தும், தியாகம் சார்ந்தும், மெய்மை தேடியும் ஒருவர் தோன்றி நின்றார் !.

‘இப்ராஹிம் நபி’ என அவரை நெகிழ்ந்து வழிமொழிகின்றது உலகம் !

அப்படி என்ன செய்து விட்டார் இப்ராஹிம் நபி ? ஏன் அவரது வாழ்வு தியாகத் திருநாளாகக் கொண்டாடப்பட வேண்டும் ?

காண்போம் !

ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆன்மீக வழிபாட்டின் முழூ சாட்சியாக இப்ராஹீம் நபி அவர்கள் ஓங்கி எழுந்தார் !

‘அபோகலிப்டோ‘ என்னும் ஆங்கிலப் படத்தில் காணும் காட்சிகள் எல்லாம் அவரது சமகாலத்துக்கு மிகச் சாதாரணமானது என்றால் எப்படிப்பட்டதோர் அராஜகமான சமூகத்தில் அவர் வாழ்ந்திருப்பார் எனப் புரிந்து கொள்ளலாம்

நரபலி வழிபாடுகள் உள்ளடங்கிய அத்துனை ஆபாசக் கடவுள் வழிபாட்டுப் பூசாரித்தனங்களையும் அன்று மொத்தமாகத் துணிந்து மறுத்தார் அவர்.

சொல்லப் போனால், இப்ராஹிம் நபி அவர்களின் தந்தையார் அந்த நாளில் ஆலய பூசாரியாக இருந்தவர். தந்தை சொல்லையும் கொள்ள மறுத்து மெய்மையின் வழியில் கரையேறத் துணிந்தார் இப்ராஹிம் நபி.

மெய்மையின் பாதை கண்ட அவரை பாபிலோனிய மூட மாந்தர்கள் கல்லால் அடித்துத் துரத்தினார்கள். மனம் கசந்தாரில்லை. வைதாரில்லை.

புன்னகையோடு நாடுகள் பல கடந்து நடந்தார் இப்ராஹீம் நபி.

சந்திர தேவனுக்கு கோயில் கட்டி, ‘நானே, கடவுள்…எல்லாம் எனக்கடக்கம்…’ என மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த ‘நம்ரூது’ மன்னனை, மெய்மையின் பாதையில் நின்று துணிந்து எதிர்த்தவர் இப்ராஹீம் நபி !

“கிழக்கில் உதிக்கும் சூரியனை மேற்கில் உதித்துக் காட்டுங்கள். கடவுள் படைத்த ஒன்றை உங்களால் மாற்றிக் காட்ட முடியும் என்றால் உங்களை ஏற்கலாம்….” என்றார்.

வெகுண்ட மன்னன் மீண்டும் அவரை நாடு கடத்திவிட நிலமெங்கும் நடந்து கடந்த இப்ராஹிம் நபி ஓர் நாளில் எகிப்த்தை அடைந்தார்.

மெய்மையின் நலம் பாடியபடி அங்கிருந்தும் கிளம்பிய அவர் கண்டடைந்து நின்றதுதான் இன்றைய மெக்கா ! அதனைக் கட்டி முடித்தவரும் அவரே !

அது எந்த ஆண்டு, அதன் காலம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய காலக் குறிகளைக் குறித்து, எனது மனதுக்கு நெருக்கமான மார்க்க அறிஞர் டாக்டர் கேவிஎஸ் ஹபீப் மொஹம்மத் சாஹிப் அவர்களிடம் கேட்டுப் பார்த்தேன்.

“பைபிள் கால அட்டவணை கொண்டு சிலர் சொல்வதுண்டு…” என்றதோடு முடித்துக் கொண்டார். மேற்கொண்டு கேட்க மனம் துணியவில்லை.

‘குர் ஆன்’ சொல்லாத ஏதொன்றையும் கூட்டிச் சொல்வதற்கில்லை என்னும் இறையச்சத்தோடு கூடிய அவரது ஆன்ம ஒழுக்கத்தின் வெளிப்பாடு அது !

சரி, இணையற்ற இப்ராஹீம் நபிகளின் வாழ்க்கைக்கு வருவோம்…

அன்று, மெய்மையின் பாதையில் தளராமல் ஓடிய இப்ராஹீம் நபி தன் தள்ளாத வயதில் இஸ்மாயில் என்னுமோர் ஆண் மகவைப் பெற்றார் !

சோதனை செய்வதற்கு பெயர் போன கடவுளாகப்பட்டவன் இன்னுமின்னும் இப்ராஹீம் நபிகளை இம்சித்து இந்த உலகுக்கு எதையோ சொல்ல விரும்பினான் போல…

இப்ராஹீம் நபியின் கனவில் ஏறி இப்படிச் சொன்னான்…

‘உங்கள் மனதுக்கு நெருக்கமான ஒன்றை எனக்காக பலியிடுவீராக…!’

தள்ளாத வயதில் தனக்கு வாய்த்த மகனை அன்றி வேறெதை நாடுவார் அவர் ?

கனவில் கண்டதுதான் என்றாலும் – கடவுளிடம் பொய்யுரைக்க அஞ்சிய இப்ராஹிம் நபியார் அவரது மனதுக்கு மிக நெருக்கமாக வந்து வாய்த்த ஒரே மகனை இறைவனுக்கு பலியிடத் துணிந்தார்.

வெள்ளந்தியாக நின்ற இஸ்மாயிலிடம் கனவில் வந்த சோதனையைப் பற்றி எடுத்துச் சொல்லி சம்மதம் கேட்டார் !

“தயக்கம் எதற்கு தந்தையே….இறைவன் சித்தம் அவ்வாறெனில் என்னை பலியிட்டு நிறைவேற்றி விடுங்கள்..” எனத் தலை தாழ்த்தி நின்ற தன் மகனை நோக்கி இப்ராஹீம் நபி கூரிய வாளை ஓங்கி உயர்த்திய அந்தத் தியாகத் தருணமதில்..

அலறிய வானவர் ஆங்கே தோன்றி, ஓங்கிய வாளைத் தடுத்து…

“இப்ராஹீமே, உங்கள் மெய்மையின் தியாகத்தை உணர்ந்தோம்.. கொல்ல வேண்டாம் உங்கள் மகனை…இதோ ஓர் ஆட்டை இறக்கித் தருகிறோம் அதனை பலியிட்டு உங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்வீராக…” எனச் சொல்ல, அவ்வாறே நிறைவேற்றப்பட்டது !

அந்த ‘மெய்மையின் தியாகம்தான்’ இன்றளவும் போற்றப்படுகின்றது.

மெய்மையும் தியாகமும் !

தன் தந்தையின் பாசத்தை துறந்தாலும் பரவாயில்லை என இறைவனின் பாதையில் சென்றதுதான் இப்ராஹீம் நபியின் மெய்மைத் தியாகம் !

தாய்நாட்டைத் துறந்தாலும் பரவாயில்லை, நாடோடியாக அலைந்தாலும் பரவாயில்லை, உண்மையான இறைவனுக்கு மட்டுமே அடிபணிவேன் என வெளியேறியதுதான் இப்ராஹீம் நபியின் மெய்மைத் தியாகம் !

கனவில் கண்ட காட்சிதான் என்றாலும், கடவுள் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பேன் எனத் தன் செல்ல மகனையே பலியிடத் துணிந்து நின்றதுதான் இப்ராஹீம் நபியின் மெய்மைத் தியாகம் !

இறைவழி நின்று, பொய்மையை அழித்து மெய்மையை நிலை நாட்ட எந்தத் தியாகத்தையும் செய்வேன் என அன்று அவர் நின்று காட்டிய உன்னதத் திருநாள்தான், இந்தத் தியாகத் திருநாள் ! அப்படியாகத்தான் அடியேன் உணர்கிறேன் !

வேலுநாச்சியார் வரலாறை ஊன்றி ஆய்ந்தபோது எனக்கு அரபு நாட்டு வியாபாரிகள் மேல் பெரும் மதிப்பு எழுந்தது. ஆம், இந்தியத் திருநாட்டில் வந்தேறிய மற்றெல்லோரையும் போலல்லர் அரபு வணிகர்கள்.

அவர்கள், வணிகம் செய்ய மட்டுமே இங்கே வந்தார்கள். இப்ராஹீம் நபி வழி வந்தவர்கள் அவரிடம் கற்ற மெய்மையை – தியாகத்தை தங்கள் வணிகத்தில் காட்டி நின்றார்கள் !

அந்த நியாய ஒழுக்கத்தைக் கண்டு நெகிழ்ந்துதான் இந்திய வியாபாரிகள் அவர்களின் வழியை அடியொற்றினார்கள். அது மதமாற்றம் இல்லை. ஒழுக்கத்தின்பால் நின்று வாழ விரும்பிய மனமாற்றம் !

குறித்துக் கொள்ளுங்கள். பிறப்பாலும், வளர்ப்பாலும், உணர்வாலும் நான் ஓர் இந்துதான். ஆயினும், இப்ராஹீம் நபி அவர்களின் வரலாறை ஆய்ந்து எழுதும் இந்தத் தருணத்தில் மனம் கசிந்து போகிறேன் !

அவரைப் போலவே பொய்மையை எதிர்த்து, மெய்மை வழி நிற்கவேண்டும் என இந்த சமூகத்தை வீழ்ந்து வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.

அன்றைய திருவல்லிக்கேணியில், புகழோடு இருந்தது ‘இந்து பால பாட சாலை’ ! அது அமைந்திருந்ததோ ‘மசூதி தெருவில்’ ! அங்குதான் தொடங்கியது எனது ஆரம்பக் கல்வி.

குடுமி வைத்த ஹெட்மாஸ்டரால் நிர்வகிக்கப்பட்ட அந்த இந்து பால பாட சாலையில், முந்திப் படிக்கும் என்னோடு மல்லுக்கட்டி மதிப்பெண்கள் அள்ளிய பர்வீன்பானு, சுரையாபானு, சம்ஸுதீன் இன்னும் பலரும் இன்று எங்குள்ளார்களோ அறியேன் ! அத்துனை சகோதர, சகோதரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த ‘தியாகத் திருநாள்’ வாழ்த்துக்களை பேரன்போடு தெரிவித்து கொள்கிறேன் !

சூதுவாது அறியாத அந்த இளம்பிராயத்தில், எவர்சில்வர் டிஃபன்பாக்ஸில் அவர்கள் அடைத்து வைத்துக் கொடுத்த பக்ரீத் கால இனிப்பு வகைகள் இன்னமும் என் ஆழ்மனதில் தித்தித்துக் கொண்டிருக்கின்றது !

மெய்மையின் பாதையில் தவழ்ந்த அன்பல்லவா அது ! எனது தீபாவளி பட்சணங்களைக் கடந்து நின்ற பரவசமல்லவா அது !

‘நீயும் நானும் வேறில்லை மக்கா.. வா, போவோம் வழி நெடுக….’ என சகோதரப் பாசத்தை இளக்கிக் கொடுத்த இனிப்பல்லவா அது !

அஞ்சு வயதினிலே அறியாப் பருவத்திலே

பிஞ்சிலே கூடினேண்டி – கிளியே

பிரிய மனம் கூடுதில்லையே !

என்பார் கிளிக்கண்ணி சித்தர்.

அப்படியாகத்தான் இணையற்று நின்று ஒளி வீசுகிறது இப்ராஹீம் நபியின் மெய்மை தாகம் ! அதன் பாற்பட்டதுதான் அவரது வாழ்வும் – தியாகமும் !

நன்றியோடு போற்றிக் கொண்டாடுவோம் அந்த தியாகத் திருநாளை !

அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த ‘ஈத் அழ்ஹா’ நல்வாழ்த்துக்கள் !

கட்டுரையாளர் குறிப்பு

truth sacrifice and Eid Mubarak sriram sharma

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தி கிரேட் எஸ்கேப்… அப்டேட் குமாரு

சந்து சாம்பியன்: விமர்சனம்!

மைனாரிட்டி பாஜக… வெயிட் அண்ட் சீ மோடி: ஸ்டாலின் சேலஞ்ச்!

அதிமுக புறக்கணிப்பு…கடும் போட்டியை சந்திக்கும் திமுக

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel