சத்குரு
அறிவியல் அடிப்படையிலும், யோக வழிமுறையிலும் சமைக்காத இயற்கை உணவை நம் உணவில் சேர்த்துக்கொள்வதன் அவசியம் என்ன என்பதை சத்குரு விளக்குகிறார்.
பெண்கள் நீங்கள் எல்லோருமே செய்யக்கூடிய ஒரு எளிய விஷயம் இது. உங்கள் உணவில் 40ல் இருந்து 50% சமைக்காத இயற்கை உணவாக மாற்றுங்கள். அதாவது, அது உயிரோடு இருக்க வேண்டும். உயிருள்ள செல்களாக இருக்க வேண்டும். அது காய்கறியாக இருக்கலாம், ஒரு பழமாக இருக்கலாம், கொட்டையாக இருக்கலாம், முளைகட்டிய பயிராக இருக்கலாம்.
நீங்கள் சாப்பிடுகிற உணவில் குறைந்தது 40ல் இருந்து 50% உயிரோடு இருக்க வேண்டும். நீங்கள் இறந்த உணவை சாப்பிட்டுவிட்டு உயிரோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இது கொஞ்சம் கடினமான விஷயம்தான். ஏனென்றால், இப்போது நீங்கள் இறந்தவர்களை உயிர்ப்பிக்க வேண்டும்.
சமைக்காத இயற்கை உணவின் ஜீரண நொதிகள்
ஒரு உணவை நீங்கள் சமைக்கும்போது, அந்த உணவை ஜீரணிப்பதற்கு தேவையான எல்லா நொதிகளும் நம் உடம்பில் மட்டும் இருக்கிறது என்று இல்லை. அந்த உணவும் இந்த நொதிகளை கொண்டுவருகிறது. உணவை நீங்கள் சமைக்கும்போது அந்த நொதிகளை பெருமளவு அழித்துவிடுகிறீர்கள். நொதிகள் இல்லாத அந்த உணவை சாப்பிடும்போது, இப்போது உடம்பு அழிக்கப்பட்ட அந்த நொதிகளை ரொம்ப கஷ்டப்பட்டு மறுபடியும் உருவாக்க வேண்டும். அதன் பிறகுதான் உணவை ஜீரணிக்க முடியும்.
சாதாரணமாக, சாப்பிட்டதும் முதல் ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரத்திற்கு உணவு உடலை கீழே இழுத்துவிடும். அதன் பிறகு மெதுவாக அது மீண்டுவரும். இதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? சக்திக்காகத்தான் உணவு. ஆனால் நாம் உணவை எப்படி செய்கிறோம் என்றால், அதை சாப்பிட்டதும் ஒன்று ஒன்றரை மணி நேரத்திற்கு சக்தி இல்லாமல் பண்ணிவிடுகிறது. அதன் பிறகுதான் மெதுவாக சக்தி திரும்பி வருகிறது.
சமைத்த உணவு சரியான எரிபொருளா?
எப்படியும் உங்கள் ஜீரண செயல் எவ்வளவு நல்லநிலையில் இருந்தாலும் சமைத்து அழித்த அந்த நொதிகள் எல்லாவற்றையும் உங்களால் மறுபடியும் உருவாக்கவே முடியாது. அதை ஓரளவிற்குத்தான் மீட்க முடியும். உங்கள் ஜீரண செயல் மிக உறுதியாக நல்லநிலையில் இருந்தால் அழிக்கப்பட்டதில் சுமார் 40ல் இருந்து 50% நீங்கள் மறுபடியும் உருவாக்க முடியும். ஜீரண செயல் கொஞ்சம் பலவீனமாக இருந்தால் அது மிகக் குறைவாக இருக்கும்.
அதனால் எப்படி இருந்தாலும், நீங்கள் சமைத்த உணவை சாப்பிட்டால், பொதுவாக நீங்கள் சாப்பிடுவதில் 50ல் இருந்து 60% வீணாகத்தான் போகிறது. ஆனால் அப்போதும் உங்கள் உடல் அதை செரிக்க வேண்டும். அதற்கு அது செலவிடுகிற சக்தியும், அதற்கு அது படுகிற கஷ்டமும் ரொம்ப அதிகம். உணவு என்பது பலருக்கு பல விஷயங்களாக இருக்கிறது. ஆனால் அடிப்படையாக உடலுக்கு அது எரிபொருள்.
நீங்கள் சரியான எரிபொருளை போட்டீர்கள் என்றால், இது ஒரு குறிப்பிட்ட விதத்தில் உயிர்ப்பாக இருக்கும். நீங்கள் தவறான எரிபொருளை போட்டீர்கள் என்றால், இது எப்படியோ சமாளிக்கும். நான் உங்களிடம் இப்படி சாப்பிடுங்கள், அப்படி சாப்பிடுங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. நீங்கள் சும்மா பரிசோதனை செய்து பாருங்கள்.
அதிகாலையில் எழுவதற்கு….
இன்றைக்கு இரவு சமைத்த உணவை சாப்பிடுவதற்கு பதிலாக வெறும் பழங்களை சாப்பிட்டுப் பாருங்கள். நாளைக்கு காலையில் உங்களுக்கு அலாரம் தேவைப்படாது. நீங்கள் அலாரம் அடிப்பதற்கு முன்பே எழுந்துவிடுவீர்கள். நீங்கள் என்ன கவனிப்பீர்கள் என்றால், கண்கள் இப்படி அப்படி ஒட்டியிருக்காது. நீங்கள் கண்விழித்தால் உடனே பிரகாசமாகவும் விழிப்பாகவும் இருப்பீர்கள். தங்களுடைய உடலுக்குள் முழுமையாய் இலகுவான நிலையில் இருப்பது என்றால் என்னவென்று மக்களுக்கு தெரியவில்லை.
துரதிருஷ்டவசமாக 95% மக்கள் இதை உணர்ந்ததில்லை. ஏனென்றால், நீங்கள் தவறான எரிபொருளை உள்ளே போடுகிறீர்கள். இந்த உடம்பை நீங்கள் ஒரு தென்றல் போல வைத்துக்கொள்ள முடியும். அது சும்மா உங்களுக்கு முன்னால் போகும். அதை நீங்கள் போகும் இடத்திற்கு எல்லாம் இழுத்துக்கொண்டு போகத் தேவையில்லை. அது உங்களுக்கு முன்னால் மிதந்து போகவேண்டும். இதை உங்களால் சும்மா சரியான எரிபொருளை போடுவதன் மூலமாகவே செய்ய முடியும்.
மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குழந்தைகள் சொல்பேச்சு கேட்க வேண்டுமா?
டாப் 10 செய்திகள் : திமுக பவள விழா முதல் 19 மாவட்டங்களில் மழை வரை!
கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு கீரை அடை!
அது கதை இல்லயாம் நெசமாம் : அப்டேட் குமாரு