மாறும் உலகம் மாற்றியவை எவை?-பகுதி 2

சிறப்புக் கட்டுரை

பாஸ்கர் செல்வராஜ்

பொருட்களின் மாற்றமே உலக மாற்றம். இந்தப் பொருட்கள் இயற்கையினாலும் மனிதனின் உழைப்பினாலும் உருவானவை. இந்தப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்களில் ஏற்படும் மாற்றத்துக்கேற்ப நம்மைச் சுற்றியிருக்கும் பொருட்கள் மாறுகின்றன. இதில் உற்பத்தித் தொழில்நுட்பமும் மூலப்பொருட்களும் முக்கிய இடத்தை வகிக்கின்றன.

கால்நடை வளர்ப்பும் விவசாயமும்…

அநாகரிக நிலைக்கு முந்தைய மரத்தை எரித்து உருவாக்கப்பட்ட வெப்பமும் அதனால் சமைக்கப்பட்ட கல், மண், மரத்தாலான பொருட்களுமாக இருந்த உற்பத்தி முறையில் காடும் கற்களும் நெருப்பை உருவாக்கும் நுட்பமும் அன்றைய உலகில் வாழ்ந்த அனைத்து மனித சமூகத்தினரிடமும் இருந்தது.

இயற்கையோடு இயைந்து ஆங்காங்கே வாழ்ந்த அந்தச் சமூகங்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்ள ஒவ்வொரு வகையான மொழியை உருவாக்கிக்கொண்டார்கள். அதனையடுத்து கால்நடைகளைப் பழக்கி வளர்த்தல், விவசாயம் செய்தல் ஏற்பட்டபோதுதான் மனித சமூகங்களின் வளர்ச்சியில் வேறுபாடு தோன்றியது என்கிறார் ஏங்கல்ஸ்.

ஏனிந்த வேறுபாடு என்பதைப் புரிந்துகொள்ள இந்தத் தொழில்களையும் அவற்றின் நுட்பங்களையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

குளிர், வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழும் விலங்குகள் வெவ்வேறானவை. கால்நடை வளர்ப்புக்குப் பெரிய புல்வெளிப் பகுதியும் நீரும் வேண்டும். விவசாயத்துக்குச் சிறிய சமவெளிப் பகுதியும் நீரும் போதுமானது.

ஆனால், இரண்டுக்குமே சமவெளிப் பகுதி அவசியமானது. காடுகளில் இவ்விரு தொழில்களையும் பெரியளவில் செய்யவியலாது. அதேபோல இரண்டு தொழில்களையும் பெரிய அளவில் அக்கம்பக்கமாகவும் செய்யவியலாது.

கால்நடைகளைப் பழக்கி அவற்றின் இயற்கை இயல்புகளை அறிதலைத்தவிர அந்தத் தொழிலுக்குப் பெரிய நுட்பமான அறிவு தேவையில்லை. இதனுடன் ஒப்பிடும்போது பருவம், சரியான மண், உரிய விதைத்தேர்வு, நிலத்தைப் பண்படுத்துதல், விதைத்தல், வளர்த்தல், அறுத்தல், ஆக்குதல் எனப் பல நுட்பங்களை விவசாயம் செய்ய அறிந்திருத்தல் வேண்டும்.

ஒரு பெரும் ஆட்டு மந்தையை வளர்த்துப் பராமரிக்க ஓரிருவரே போதும்; ஏன் ஓரிரு பழக்கிய நாய்களே போதுமானவை. ஆனால், விவசாயத்துக்கு அதிக அளவில் மனிதர்கள் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்.

the reason behind the modern world

கால்நடை உற்பத்திப் பெருக்கமும் தனியுடைமையும்…

இந்தப் பின்னணியில் பார்த்தால் ஏன் மேற்கு, மத்திய ஆசியாவில் தொடங்கி கிழக்கு ஐரோப்பா வரை பரந்துகிடந்த ஸ்டெப்பி புல்வெளிப் பகுதிகளில் கால்நடை வளர்ப்பும் இமயம், மேற்குத் தொடர்ச்சி உள்ளிட்ட மலைகளில் இருந்து தோன்றியோடும் சிந்து, கங்கை, காவிரி, வைகை ஆறுகளை ஒட்டிய சமவெளிப் பகுதிகளில் விவசாயமும் ஏற்பட்டது என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

கால்நடைத் தொழில் செய்தவர்கள் அப்பகுதி விலங்குகளைப் பழக்கி மந்தையாக வளர்த்தார்கள்; விவசாயம் செய்தவர்கள் இப்பகுதி விலங்குகளைப் பழக்கி விவசாயம் செய்தார்கள். மந்தைகள் எவ்வுழைப்புமின்றி இயல்பாகவே இனப்பெருக்கம் செய்து வேகமாகப் பெருகும்.

இந்த வேகமான கால்நடைச் செல்வப்பெருக்கம் அவர்களிடம் வேகமாகத் தனியுடைமையை ஏற்படுத்தும் தன்மையுடையது. அது அந்தச் சமூகத்தைத் தவிர்க்கவியலாமல் பொதுவாக உழைத்து உண்டு வாழும் தாய்வழி சமூகத்தில் இருந்து “என் சொத்து என் பிள்ளைகளுக்கு” என்ற தந்தைவழிக்கு மாற்றும் (இங்கே வேகம் என்பது பல்லாயிரம், பல நூற்றாண்டில் இருந்து சில ஆயிரம் சில நூற்றாண்டாகக் குறைவது).

விவசாய உற்பத்தி இப்படி இயற்கையில் பல்கிப் பெருகும் வாய்ப்பற்றது. இது பெருக வேண்டுமானால் பயிரிடப்படும் நிலத்தின் அளவு கூட வேண்டும் அல்லது குறைவான இடத்தில் அதிகமான பொருட்களை உற்பத்தி செய்யும் நுட்பம் தோன்ற வேண்டும்.

அறிவியல் இவ்வளவு வளர்ந்த இக்காலத்திலேயே விளைச்சலைக் கூட்டமுடியாமல் தவிக்கும் நிலையில் அக்காலத்தில் அதற்கான சாத்தியம் ஏதுமில்லை. அதேபோல இயற்கையாக அமைந்த சமவெளிகளை உழுது பண்படுத்தவே பலரும் நாட்கணக்கில் உழைக்கவேண்டும்.

இந்நிலையில் வளமான மண்ணும் நீரும் உள்ள பகுதியைக் கண்டறிந்து பயிரிடும் அளவைக் கூட்டுவது எளிதில் ஆகும் காரியமில்லை. ஆகவே, விவசாய வளர்ச்சியும் பெருக்கமும் மெதுவாக நடக்கும் ஒன்று. இதனால் விவசாயச் சமூகம் ஒப்பீட்டளவில் கால்நடை சமூகத்தைவிட தாய்வழிச் சமூகமாக நீண்ட காலம் நீடித்திருக்கும் வாய்ப்புண்டு.

அப்படியே நிலத்தைப் பெருக்கி மெதுவாக தாய்வழியில் இருந்து தந்தைவழிக்கு மாறினாலும் ஒற்றுமையாக இணைந்து உணவை உற்பத்தி செய்து பகிர்ந்துண்டு இச்சமூகம் கூட்டாகத்தான் வாழ வேண்டும். நீண்ட நெடிய தாய்வழிச் சமூகத்தின் கலாச்சார பழக்கவழக்கத் தொடர்ச்சி இதில் வலுவாகவும் ஆழமாகவும் பதிந்திருக்கும். இப்படியான தந்தைவழிக் கூட்டுக்குடும்பங்கள் இந்தியாவில் மட்டுமல்ல… ரஷ்யா போன்ற நாடுகளிலும் இருந்தது யாவரும் அறிந்ததே.

இப்படி இருவேறு இயல்புகளைக் கொண்ட விவசாயமும் கால்நடை வளர்ப்பும் மரத்தை எரித்து மண், மரத்தாலான பொருட்களை உற்பத்தி முறையில் சேர்ந்தபோது உலகில் இருவேறு உற்பத்தி முறைகளாக வளர்கின்றன. தங்களின் வாழ்நிலை சூழலுக்கேற்ப இவ்விரு உற்பத்தி முறைகளைக் கைக்கொண்ட சமூகங்களின் உலகை மாற்றுகின்றன. அது அச்சமூக மனிதர்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி குடும்ப அமைப்பை மாற்றுகிறது. அது சமூகத்தை மாற்றி தாய்வழி, தந்தைவழி என இருவேறு வகைப்பட்ட சமூகங்கள் உலகில் உருவாகக் காரணமாகிறது.

the reason behind the modern world

இணங்கி இணையமுடியாத தாய்-தந்தைவழி சமூகங்கள்!

இந்த வேறுபாட்டை விவசாய சமூகமான சிந்துசமவெளிப் பகுதியில் பெண்களின் இருப்பு முதன்மையாகவும் அந்தக் காலத்திய கால்நடை சமூகமான ஆரியர்களின் வேதங்களில் ஆணின் இருப்பு முதன்மையாகவும் இருந்ததில் இருந்து புரிந்துகொள்ளலாம்.

இப்படித் தோன்றிய தாய்வழி, தந்தைவழி ஆகிய இவ்விரு சமூகங்களும் ஒன்றுக்கொன்று முரணானது. ஏனெனில் தாய்வழி சமூகம் மற்ற சமூகத்துடன் சண்டையிட்டு சண்டையில் எஞ்சியவர்களை அந்தச் சமூகத்தின் தாய் தன் குழந்தைகளில் ஒருவராக ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக உழைத்து உண்ண அனுமதிப்பதில் பிரச்சினையில்லை.

தந்தைவழி சமூகமோ, பிற சமூகப் பெண்களை வேண்டுமானால் மண உறவாக ஏற்கலாம். ஆனால், ஆண்களை ஏற்றுக்கொண்டு சொத்தை அவர்களுக்குப் பிரித்துக் கொடுக்க ஒப்பாது.

இவர்கள் பெண்களை தன் சொத்துக்குக் கீழ்படியச் சொல்லும் ஆணாதிக்கவாதிகள்; அவர்கள் பெண்ணைக் கடவுளாகப் போற்றி மதிப்பவர்கள். அவர்கள் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளுக்குள் மணத்தைத் தடை செய்து தனது குலத்துக்கு வெளியில் தனது சொந்த இனத்தைச் சேர்ந்த மற்ற குலக் குழுக்களைச் சேர்ந்தவர்களை மணந்துகொண்டு பெரும் இனக்குழுவாக வாழ்பவர்கள்.

இவர்கள் சொத்து மற்றவருக்குச் செல்லாமல் காக்க சொந்த சமூகக் குழுவுக்குள்ளேயும் தன் பிள்ளைகள் தவிர்த்து சித்தப்பன், பெரியப்பன் பிள்ளைகளுக்குள் மணம் செய்துவைத்து (உதாரணமாக இஸ்லாமியர்கள்) குழுவுக்குள் சிறு குழுவாக சுருங்கிப் போனவர்கள். இப்படி இரு சமூகத்தின் அடிப்படையும் வெவ்வேறு என்பதால் இருவருக்குள் இணக்கம் சாத்தியமே இல்லை.

பரந்துவிரிந்த புல்வெளி கால்நடை வளர்ப்புக்கு உவப்பானதாக இருந்து மந்தைகளைப் பெருக்கி புரதமும் கொழுப்பும் மிகுந்த இறைச்சியைப் பெற கால்நடை மேய்ச்சல் சமூகத்துக்கு உதவினாலும் அதனுடன் இணைந்த குளிரும் பனியும் அவர்களின் கால்நடைகளுக்கு உணவு தேடியும் அந்தக் கடும் சூழலில் இருந்து தங்களைக் காக்கவும் தொடர்ந்து நாடோடிகளாக வாழவேண்டிய சூழல்.

விவசாய சமூகமோ ஓரிடத்தில் தனக்கு வேண்டிய கல், மண், மரத்தாலான பொருட்களை உருவாக்கிக்கொண்டு நிலைத்து வாழும் தன்மையுடையது. இணக்கம் காணவியலாத இவ்விரு சமூகங்களும் ஒருவேளை சந்திக்க நேர்ந்தால் ஒன்று சண்டையிடும்… இல்லை, சமாதானமாக தங்களிடமுள்ள பொருட்களைக் கொடுத்து வாங்கி பரிவர்த்தனை செய்துகொள்ளும்.

இப்படிப் பரிவர்த்தனை செய்துகொள்ள வேண்டுமானால் இருவரிடமும் தங்களின் தேவைக்கும் அதிகமான பொருட்கள் எஞ்சியிருக்க வேண்டும். தனக்கே போதவில்லை என்றால் எங்கே கொடுத்து வாங்குவது.  

கால்நடை உற்பத்தியில் அதற்கான சாத்தியமுண்டு. விவசாய உற்பத்தியில் அது எப்போது சாத்தியமானது?

நாளை பார்க்கலாம்…

கட்டுரையாளர் குறிப்பு

the reason behind the modern world by baskar selvaraj

பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர். அவற்றை நல்ல தமிழில் கட்டுரைகளாக வடித்து வருகிறார்.

மாறும் உலகம் மாற்றுவது எது?-பகுதி 1

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
2

1 thought on “மாறும் உலகம் மாற்றியவை எவை?-பகுதி 2

  1. ஆரிய திராவிட அரசியலின் விளங்காத கண்ணிகள் விளங்க ஆரம்பிக்கிறது நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *