The caste hatred that was on the rope has changed to the scythe

கயிற்றில் இருந்த சாதி வன்மம் அரிவாளுக்கு மாறியிருக்கிறது!

சிறப்புக் கட்டுரை

எவிடன்ஸ் கதிர்

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஐசியூ வார்டில் உள்ள சின்னத்துரையை பார்த்தேன். பதினேழு வயது தலித் சிறுவன். இரண்டு கைகளும் அரிவாளால் வெட்டப்பட்டு எலும்புகள் நொறுக்கப்பட்டு பெரிய கட்டுடன் படுத்திருந்தான். அவனது கண்களில் அச்சத்தின் ஆழம் தென்பட்டது. மரணத்தின் விளிம்பில் இருந்து பிழைத்து வந்த அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது?

அவனது ரத்தம் அவனது வீட்டிலும் தெருவிலும் கதவிலும் பாத்திரங்களிலும் சகதியாய் படிந்து கிடக்கிறது. அவனை வெட்டியவர்களின் நடவடிக்கை கூலிப்படை ஆட்கள் போன்றே இருந்தது. ஆனால் வெட்டியவர்கள் அனைவரும் மாணவர்கள். பதினேழு வயது, பதினாரு வயது உள்ளவர்கள்.

களத்தில் முழுமையான விசாரணை மேற்கொண்டோம். நாங்குநேரியில் வசித்து வருபவர் அம்பிகாபதி (54). தலித் பறையர் சமூகத்தைச் சேர்ந்த அம்பிகாபதிக்கு இரண்டு குழந்தைகள். பதினேழு வயது சின்னத்துரை, பதிமூன்று வயது சந்திராசெல்வி. வீட்டு வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். கடுமையான ஏழ்மை. ஆயினும் குழந்தைகள் இருவரும் நன்கு படிக்கக்கூடியவர்கள். அவரது நம்பிக்கையே குழந்தைகளும் அவர்கள் கற்கக்கூடிய கல்வியும் தான்.

ஆசிரியர்களின் பாராட்டும் சக மாணவர்களின் தாக்குதலும்

மகன் சின்னத்துரை வள்ளியூரில் உள்ள கண்கார்டியா மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 12ம் வகுப்பு படித்து வருகிறான். நன்கு படிக்கக்கூடிய மாணவன். அனைத்து ஆசிரியர்களும் அவன் மீது அபரிமிதமான நம்பிக்கையும் கரிசனையும் கொண்டுள்ளனர். படிப்பை தாண்டி அவனது நடவடிக்கை அத்தனை வாஞ்சையாக இருந்துள்ளது.

திடீரென்று 10 நாட்களாக சின்னத்துரை பள்ளிக்கூடம் செல்லவில்லை. அவனது தாயார், ஏன் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்று கேட்டதற்கு, என்னை வேறு பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடு, இல்லையென்றால் சென்னைக்கு அனுப்பி வை, நான் அங்கு ஏதாவது வேலை செய்கிறேன் என்று கூறியிருக்கிறான்.

அதற்கு அவனது அம்மா அம்பிகாபதி ஒப்புக் கொள்ளவில்லை. கடந்த 09.08.2023 அன்று அவனது பள்ளிக்கூட ஆசிரியை, அம்பிகாபதிக்கு அலைபேசி மூலமாக அழைத்திருக்கிறார். ஏன் உங்கள் மகன் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை, அவனுக்கு என்ன பிரச்சனை. எதுவாயினும் சரிசெய்யலாம் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வாருங்கள் என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் 09.08.2023 அன்று காலை 10.30 மணியளவில் சின்னத்துரையும் அவனது அம்மா அம்பிகாபதியும் பள்ளிக்கூடம் சென்றுள்ளனர். அங்கு வகுப்பு ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியை ஆகிய இருவரும் சின்னத்துரையிடம் விசாரிக்கையில், தன்னுடன் படிக்கக்கூடிய செல்வரமேஷ், சுப்பையா ஆகிய இருவரும் தன்னை சாதி ரீதியாகயும் ஆபாசமாகவும் இழிவுபடுத்தி பேசி வருகின்றனர். எனது பணத்தையும் பிடுங்கிக் கொள்கின்றனர். சிகரெட் வாங்கி வரச்செல்லி அடிக்கின்றனர். பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்துகின்றனர். பரிட்சையில் நான் எழுதுகிற விடைத்தாள்களை வாங்கி காப்பி அடிக்கின்றனர் என்று கூறியிருக்கிறான். அதனைக் கேட்ட இரண்டு ஆசிரியைகளும் என்ன நடந்தது என்பதை எழுதி கொடு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூற சின்னத்துரையும் எழுதி கொடுத்திருக்கிறான்.

இரத்தக் குவியலும் சகதியும்

தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என்பதை முன்னரே அறிந்த சுப்பையாவும் செல்வரமேசும் அன்று பள்ளிக்கூடம் வரவில்லை.
மாலை 6.00 மணியளவில் வன்கொடுமையில் ஈடுபடுகிற செல்வரமேஷின் பாட்டியும் சித்தப்பாவும் சின்னத்துரையின் வீட்டிற்கு வந்துள்ளனர். அவனது அம்மாவிடம் இருவரும் என்ன நடந்தது என்று கேட்க, உங்க பேரனும் சுப்பையாவும் என் மகனை சாதி ரீதியாக இழிவுபடுத்தி சித்திரவதை செய்கின்றனர் என்று கூறியிருக்கிறார். அதனை கேட்டுவிட்டு இருவரும் அமைதியாக அங்கிருந்து வெளியேறி இருக்கின்றனர்.

இரவு 10.00 மணியிருக்கும். அம்பிகாபதியும் சின்னத்துரையும் சந்திராசெல்வியும் சாப்பிடுவதற்காக உணவினை எடுத்து வைத்துக் கொண்டிருந்த நிலையில் வீட்டிற்குள் சுப்பையாவும் செல்வரமேசும் 11ம் வகுப்பு படிக்கக்கூடிய சுரேஷ்வானு என்கிற சிறுவனும் வந்துள்ளனர். அவர்களிடத்தில் சுமார் இரண்டு அடி நீளம் உள்ள அரிவாள் இருந்துள்ளது. பறத் தேவிடியா பயலே எங்களுக்கு எதிராக புகார் கொடுப்பியா என்று கூறி அரிவாளால் சின்னத்துரையின் கழுத்திலும் தலையிலும் வெட்ட முயற்சி செய்ய தனது கைகளை கொண்டு சின்னத்துரை தடுத்திருக்கிறான். இதனால் இரண்டு கைகளின் எலும்புகளும் அரிவாளால் வெட்டப்பட்டு நொறுக்கப்பட்டுள்ளது. தோள்பட்டையிலும் கால் தொடையிலும் அரிவாள் வெட்டு. அண்ணன் வெட்டப்படுவதை அறிந்த சந்திராசெல்வி தடுக்க முயற்சி செய்ய அந்த 13 வயது குழந்தையையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். அந்த ஒரு அரிவாளை எடுத்துக் கொண்டு தான் இந்த மூவரும் வெட்டியிருக்கின்றனர்.

அதனைப் பார்த்த பாத்திமா என்கிற பெண்ணும் அம்பிகாபதியும் வெட்டுப்பட்ட சின்னத்துரையும் சந்திராசெல்வியும் பலமாக கதற அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஓடிவர அந்த 3 பேர் கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடியிருக்கிறது.

The caste hatred that was on the rope has changed to the scythe

வீடு முழுவதும் இரத்த குவியலாகவும் சகதியாகவும் கிடக்கிறது. வெட்டப்பட்ட இரண்டு பேரும் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு ஆரம்ப கட்ட சிகிச்சை கொடுக்கப்பட்டு தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சாதி எனும் நோய்

இந்த வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேரை கடந்து, அந்த 3 பேரும் அங்கு வந்து அரிவாளால் வெட்டுவதற்கு உதவி செய்த செல்வதுரை, வான்முத்து, கல்யாணி ஆகிய 3 பேர் என்று 6 பேரினை போலீசார் நேற்று 10.08.2023 அன்று கைது செய்து ரிமாண்ட் செய்துள்ளனர். இந்த 6 பேரில் இரண்டு பேருக்கு 16 வயது, மற்ற நான்கு பேருக்கு 17 வயது. அனைவரும் சிறுவர்கள். அனைவரும் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

நான் நேற்று நாங்குநேரி சென்றிருந்தபோது, சுப்பையா, செல்வரமேஷ், சுரேஷ்வானு ஆகிய 3 சிறுவர்களும் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். கொஞ்சம் கூட குற்றவுணர்வு இல்லாமல் அவர்கள் சிரித்து பேசி விளையாடிக் கொண்டிருந்தனர். மூன்று சிறுவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என்று ஒருவர் கூட காவல்நிலையத்தில் இல்லை.

இந்த வன்கொடுமை கும்பல் முன்னதாகவே உணவு வாங்கி சாப்பிட்டுவிட்டு இரண்டு சக்கர வாகனங்களில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு அங்கு வந்து அரிவாளால் வெட்டிவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பித்து தென்காசி பகுதிக்கு சென்றிருப்பதாகவும் தெரிய வருகிறது. அவர்களது நோக்கம் அப்பட்டமாக சின்னத்துரையை கொல்ல வேண்டும் என்கிற கொலை வெறியில் தான் வந்துள்ளனர். அவர்களது அரிவாள் சின்னத்துரையின் தலைப் பகுதிலும் கழுத்து பகுதியிலும் தான் குறி வைக்கப்பட்டிருக்கிறது. சின்னத்துரை அந்த பதட்டத்திலும் உயிரை காப்பாற்றும் பொருட்டு கழுத்து பகுதியிலும் தலைப் பகுதியும் அரிவாளால் வெட்டப்படாமல் கைகளால் தடுத்திருக்கிறான்.

The caste hatred that was on the rope has changed to the scythe

சுப்பையா, செல்வரமேஷ் ஆகிய இருவரின் நடவடிக்கை குறித்து விசாரித்தோம். பெண் ஆசிரியைகளை கேலி, கிண்டல் செய்வது, வகுப்பில் ஊளையிடுவது, சக மாணவர்களை தாக்குவது, மிரட்டுவது என்று பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு முறை அவர்களுக்கு டிசி கொடுத்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையிலும் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. ஆயினும் அவர்களது குடும்பத்தினர்கள், நாங்கள் இனிமேல் ஒழுங்காக எங்க பசங்களை கண்டித்து வளர்க்கிறோம் என்று உறுதிமொழி கொடுத்தனால் பள்ளி நிர்வாகம் மன்னித்து விட்டிருக்கிறது.

ஆனால் சின்னத்துரையிடம் அவர்கள் நடந்து கொண்ட கொடூரமான நடத்தை அப்பள்ளிக்கூட ஆசிரியர்களிடத்தில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியதனால் அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தனர். இதனை அறிந்து தான் சின்னத்துரையை கொல்ல வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் சாதி நோய் முற்றிப்போய் இத்தகைய நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் பள்ளிக்கூடத்தில் சில ஆசிரியர்களுக்கு மிரட்டுகிற தொனியில் அலைபேசி அழைப்புகள் வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த கொடூரமான வன்கொடுமையை கண்டு சின்னத்துரையின் உறவினரும் தாத்தா முறையான கிருஷ்ணன் என்பவர் ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போய்விட்டார்.

இந்த கொலை வெறி பிடித்த சிறுவர்களால் அப்பள்ளிக்கூடம் அவமானப்பட்டு நிற்கிறது. திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, பாதிக்கப்பட்ட சின்னத்துரையை சந்தித்திருக்கிறார். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் உறுதியாகவும் இருக்கிறார் என்று தெரிய வருகிறது.

தலித் குடியிருப்பு பகுதிக்குள் வந்து அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு அப்பகுதியில் இருந்து வெளியேறி இருக்கின்ற இந்த போக்கு அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

The caste hatred that was on the rope has changed to the scythe

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வெவ்வேறு கட்டிடங்களில் முதல் தளத்தில் சின்னத்துரையும் மற்றொரு கட்டிடத்தின் 7வது தளத்தில் சந்திராசெல்வியும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செல்வரமேஷின் பெரியப்பா தி.மு.க.வின் ஒன்றிய செயலாளர். சுப்பையாவின் தாத்தா ம.தி.மு.க.வின் ஒன்றிய செயலாளர். இவர்களது அரசியல் குறுக்கீடு இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் என்னிடத்தில் கூறினார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தவிதமான அரசியல் குறுக்கீடும் இல்லாமல் நீதி கிடைக்க உறுதுணையாக இருப்பார் என்று நம்புகிறேன்.

மாணவர்களின் மணிக்கட்டில் கயிறுகளாக இருந்த சாதி இன்று அரிவாளாக மாறியிருக்கிறது. தென் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்கள் சாதி களமாகவே காட்சியளிக்கின்றன. அவை பள்ளிக்கூடங்களாக இல்லாமல் சாதி வன்கொடுமை கூடங்களாக உருமாறி வருவது கவலையளிக்கிறது.

உயர் கல்வியில் பொதுப் பாடத்திட்டம்: அகமும் புறமும்! 

உயர் கல்வியில் பொது பாடத்திட்டம்: அகமும் புறமும்!- பகுதி -2  

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
2