நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று திரையுலக ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்கள்.
இன்று அவரது 95வது நாள் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தான் ஏற்கும் கதாப்பாத்திரத்திற்கு முற்றிலும் தன்னை மாற்றிக்கொண்டு அந்த கதாப்பாத்திரமாகவே திரையில் வாழ்ந்து காட்டியவர் சிவாஜி.
மல்டிபிளக்ஸ், ஓடிடி போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று பல்வேறு நாடுகளின் திறமையான கலைஞர்களை உலகம் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். ஆனால் தமிழ் சினிமாவில் இந்த வளர்ச்சியெல்லாம் வேர்விட்ட ஆரம்பகாலத்தில் நடிப்பின் ராஜாவாக திரையுலகில் வலம் வந்தவர் சிவாஜி கணேசன்.
பராசக்தியில் தொடங்கிய பயணம்!
1952ம் ஆண்டு வெளிவந்த பராசக்தியில் கலைஞர் கருணாநிதியின் அனல் பறக்கும் வசனங்களை உணர்ச்சியுடன், உயிர்ப்புடன் உச்சரித்து குணசேகரனாக தமிழ் திரையுலகில் சிவாஜி அறிமுகமானார்.
அவரின் அசாத்தியமான நடிப்பால் பெரிதும் மக்களால் ஈர்க்கப்பட்ட பராசக்தி தமிழகத்தின் பல திரையரங்குகளிலும் 200 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக ஓடி சாதனை படைத்தது.
அன்று முதல் பார்வையற்ற மாற்றுத் திறனாளியாகவோ அல்லது பாசக்கார அண்ணனாகவோ அல்லது தேசியகவி பாரதியாராகவோ அல்லது பாரத தேசத்தின் ராஜாவாகவோ எந்த கதாப்பாத்திரம் ஏற்றாலும், அதில் தன்னை நூறு சதவீதமாக நடிப்பின் சக்கரவர்த்தியாய் தன்னை தகவமைத்துக் கொண்டார் சிவாஜி.
பயோகிராபி என்றாலே சிவாஜி
வரலாற்று கதாப்பாத்திரங்களை ஏற்று நடிப்பதில் பெரும் ஆசைகொண்ட சிவாஜி, வ.உ.சிதம்பரனார், பாரதியார் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களாகவும், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜசோழன் போன்ற மாமன்னர்களாகவும் நடித்து அவர்களை நம் மனதில் பதிய வைத்தவர்.
இன்னும் சொல்லப்போனால் இன்று வ.உ.சி.யையோ கர்ணனையோ, கட்டபொம்மனையோ நினைத்தால் நம் கண்முன் வருவது சிவாஜியின் உருவம் தான்.
பொன்னியின் செல்வனாய் சிவாஜி!
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் 70 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் இன்று திரைவடிவமாக மாறியுள்ளது. அதனை உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் பொன்னியின் செல்வனாக 50 ஆண்டுகளுக்கு முன்னரே கோடு போட்டு அதை ரோடாக மாற்றி ராஜராஜ சோழனின் சரித்திரத்தில் பயணித்து காட்டியவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
முதல் சினிமாஸ்கோப் திரைப்படம்!
சோழ குலத்தின் மாமன்னர் ராஜ ராஜ சோழனின் ஆட்சி முறையையும், அவர் தஞ்சை பெரிய கோவில் கட்டியதையும் முன்னிறுத்தி 1973ம் ஆண்டு ராஜராஜ சோழன் திரைப்படம் உருவானது.
சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ராஜராஜ சோழன் திரைப்படம்தான் தென்னிந்திய மொழிகளில் சினிமாஸ்கோப்பில் தயாரான முதல் படமாகும்.
35 எம்எம் சதுர திரையில் திரைப்படங்களைப் பார்த்து வந்த மக்களுக்கு சினிமாஸ்கோப் என்பது ஆச்சரியமான அதிசயமாக அன்று இருந்தது.
முதல் சினிமாஸ்கோப் என்பதால் படத்தின் ஒளிப்பதிவாளர் டபுள்யூ ஆர்.சுப்பாராவ் மும்பை சென்று அதற்குரிய கருவிகளை வாங்கி வந்து பயிற்சி எடுத்து படமாக்கினார்.
பெரும் பொருட்செலவில் உருவான ராஜராஜ சோழன் திரைப்படத்தை உமாபதியின் ஆனந்த் மூவீஸ் தயாரிக்க, ஏ.பி. நாகராஜன் இயக்கினார். இதில் சிவாஜியுடன் விஜயகுமாரி, முத்துராமன், ஆர்.எஸ்.மனோகர், டி.ஆர்.மகாலிங்கம், எம்.என்.நம்பியார், சிவகுமார் போன்றவர்களும் நடித்தனர்.
கண்ணதாசன் வரிகளில் உருவான இப்படத்தின் பாடல்களுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்தார்.
பிரம்மாண்ட பெரிய கோவில் செட்!
படத்தின் திரைக்கதை, தஞ்சை பெரிய கோவிலை ராஜராஜ சோழன் எப்படி கட்டியெழுப்பினார் என்பதை அடிப்படையாக கொண்டது என்பதால், அங்கேயே சென்று படமாக்க படக்குழு விரும்பியது. ஆனால், கோவிலின் உள்ளே படமாக்க மத்திய தொல்லியல்துறை அனுமதி தரவில்லை.
இதனையடுத்து கோவிலின் பல பகுதிகளை சென்னையில் வாசு ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து பெரும் பொருட்செலவில் எடுத்தனர்.
அதனை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இத்திரைப்படம் 1973ம் ஆண்டு மார்ச் 31ம் நாள் வெளியானது. முதல் சினிமாஸ்கோப் படம் என்று விளம்பரப்படுத்தி இருந்ததால் அகன்ற திரையில் ராஜராஜனை காண மக்கள் ஆர்வமுடன் இருந்தனர்.
கம்பீரம் சேர்த்த சிவாஜி!
படத்தில் ராஜராஜ சோழனாக நடித்த சிவாஜியின் கம்பீரம் குறையாத நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அவரே முழுப்படத்தையும் தன் நடிப்பால் தாங்கி இருந்தார்.
மேலும் அழகு தமிழ் வசனங்கள், ஆர்ப்பாட்டமான ஆடை, ஆபரணங்களும், பிரமாண்டமான கலை இயக்கம் போன்றவையும் ரசிகர்களை ஈர்த்தது.
கண்ணதாசன் வரியில் உருவான ‘மாதென்னை படைத்தான்…’ பாடலில், 12 தமிழ் மாதங்களின் பெயர்களும் இடம் பெற்றது அப்போது புதிய முயற்சியாக பார்க்கப்பட்டது.
போர் காட்சிகள் குறைவு!
ஆனால் அதேவேளையில் போர் காட்சிகள் இல்லாதது படத்தின் பலவீனமாக அமைந்தது.
மன்னர்கள் படம் என்றாலே கண்டிப்பாக போர் காட்சிகள் இடம்பெற வேண்டும். அதிலும் போருக்கும், வீரத்திற்கும் பேர்போன மாமன்னன் ராஜராஜ சோழன் படத்தில் அவை இல்லை என்றால் எப்படி?
போர்க்காட்சியையும், வாள் சண்டையும் படத்தில் பெயரளவில் மட்டுமே காட்டப்பட்டிருந்ததால் சிவாஜியின் ரசிகர்களே சற்று ஏமாற்றமடைந்தனர்.
இருப்பினும் இரண்டே வாரங்களில் சுமார் 25 லட்ச ரூபாய் வசூலித்தது. இதனை தமிழ்ப் பட உலகின் மாபெரும் சாதனை என்று பத்திரிகைகள் பாராட்டின.
சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த கர்ணன், கட்டபொம்மன் போன்ற வீர மன்னர்களின் சுயசரிதை படத்துடன் ஒப்பிடுகையில் ராஜராஜ சோழனின் வீர பராக்கிரமங்கள் குறைவாக இருந்த இத்திரைப்படம் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான்.
சிவாஜியின் பிறந்தநாளும்.. பொன்னியின் செல்வனும்..
எனினும் கல்கியின் எழுத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதில் காலத்தால் அழிக்க முடியாதபடி பதிந்தார் பொன்னியின் செல்வன் என்ற ராஜராஜ சோழன்.
இப்போது மணிரத்னம் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகி ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு பிறகு நம் கண்முன் வெற்றிகரமாக வந்து நிற்கிறது பொன்னியின் செல்வன். ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி, வந்தியதேவனாக கார்த்தி, ஆதித்த கரிகாலனாக விக்ரம் ஆகியோர் நடித்துள்ளனர்.
அவர்களுடன் நடிகர் சிவாஜியின் மகன் பிரபு பெரிய வேளார் பூதி வீரமாகேசரியாகவும், பேரன் விக்ரம் பிரபு பார்த்திபேந்திர பல்லவனாகவும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இன்று தமிழ்சினிமாவுக்கு ஒரு மணிமகுடமாக அமைந்துள்ளது பொன்னியின் செல்வன். திரைப்படத்தினை தற்போது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ராஜராஜ சோழனை வெள்ளித்திரையில் காண்பிக்க முதலில் பாதை அமைத்த நடிகர் திலகம் சிவாஜியின் 95 வது பிறந்தநாளையொட்டி அந்த பொன்னியின் செல்வன் வெளியாகியுள்ளது ஒரு வகையில் அவருக்கு தமிழ் திரையுலகம் செய்த மரியாதை என்றே கூறலாம்.
ஒருவேளை இது தற்செயலாக அமைந்திருந்தாலும், இப்போது பொன்னியின் செல்வனால் தமிழ் சினிமா அடைந்திருக்கும் பெருமையை கண்டு நடிகர் திலகம் சிவாஜி பெருமகிழ்ச்சி கண்டிருப்பார் என்பது மறுக்கமுடியாத உண்மை.
கிறிஸ்டோபர் ஜெமா
பொன்னியின் செல்வன் எப்படி உள்ளது? : ட்விட்டர் விமர்சனம்!
பொன்னியின் செல்வன்: விமர்சனம்!