எஸ்.வி.ராஜதுரை
பிரதமர் நரேந்திர மோடியின் சாதனையாக, ஆப்பிரிக்க நாடான நமீபியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட எட்டு சீட்டாக்கள் (பூனை இனத்தைச் சேர்ந்த இவைதான் காட்டுயிர்களிலேயே மிக வேகமாக ஓடக்கூடியவை) மத்தியப் பிரதேசத்திலுள்ள குனோ-பல்பூர் தேசியப் பூங்காவில் விடப்பட்டுள்ளன.
அந்த நிகழ்ச்சி ஒன்றிய அரசாங்கத்தாலும் மத்தியப் பிரதேச அரசாங்கத்தாலும் பெரும் ஆரவாரத்துடன் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்த சீட்டாக்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டதை ஈடு செய்யும் ’மகத்தான கடமையாக’ பிரதமர் மோடி இச்சாதனையைச் செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குதூகலிக்கிறார்கள்.
அந்தந்த சந்தர்ப்பத்திற்கேற்றவாறு விலை உயர்ந்த மோஸ்தர் ஆடைகளை அணிபவரும் சகலகலா மன்னருமான மோடி இம்முறை சீட்டாக்களைப் புகைப்படம் பிடிப்பவரைப் போன்ற உடையணிந்து, அவற்றின் அருகில் நின்றே எடுத்ததாகச் சொல்லப்படும் புகைப்படங்கள் இந்த விளம்பரத்திற்கு வலுச் சேர்த்தன.

ஆனால் அதேவேளை, அவர் கையில் இருந்த காமிராவின் லென்ஸின் மூடி திறக்கப்படாத நிலையில் அவர் புகைப்படங்கள் எடுப்பது போன்ற தோற்றம் தரும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவின.
சில நண்பர்களால் பகிரப்பட்ட அந்த புகைப்படங்களை நானும் என் பங்குக்கு சிலருடன் பகிர்ந்துகொண்டேன். அதை உண்மை என்று முதலில் நம்பியவர்களில் நானுமொருவன். ஆனால் இரண்டு நண்பர்கள் அந்தப் புகைப்படங்கள் மோடியைக் கிண்டல் செய்வதற்காக போட்டோஷாப் போன்ற நவீன தொழில்நுட்ப உத்திகளைக் கொண்டு செயற்கையாகத் தயாரிக்கப்பட்டவை என்பதைச் சுட்டிக் காட்டினார்கள்.

காமிரா சர்ச்சை
அவற்றை சற்று உற்றுப் பார்த்தால் மோடியின் கையில் இருக்கும் காமிராவும் அக்காமிரா லென்ஸின் மூடியும் வெவ்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை என்பது தெரிய வரும்.
துடைப்பத்தைக் கொண்டு தெருக்களைச் சுத்தம் செய்வதும், கடற்கரையில் உள்ள குப்பைகளைச் சேகரித்து குப்பையில் போடுவதும் போன்ற எண்ணற்ற ”சமூக சேவைகளை” மோடி ஏற்கெனவே தயாராக வைக்கப்பட்டிருந்த காமிராக்கள் முன்னால் செய்து காட்டியிருந்தவர் என்பதால், அவர் சீட்டாக்களைப் புகைப்படம் எடுப்பதாகக் காட்டுவது, அவரது இன்னொரு விளம்பர நாடகம் என்ற விமர்சனங்களும் கிண்டல்களும் நாடு முழுவதிலுமிருந்து – குறிப்பாக எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தவர்களிடமிருந்து – சமூகவலைத் தளங்களில் பரவலாக வெளிவரத் தொடங்கின.
மோடியைக் கிண்டல் செய்வதற்காகத் தயாரிக்கப்பட்ட போலிப் புகைப்படங்களைக் கொண்டு அவரை விமர்சிப்பதை அவரது கட்சியினர் கடுமையாகத் தாக்கி வருகின்றனர். இது எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, அசல் எது, போலி எது என்பதை தெளிவாக ஆராயத் தவறும் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கும் நல்ல பாடமாக அமையட்டும்.
ஆனால், விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள் சிலவற்றை மோடி ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் ஆகிய இரு தரப்பினரும் பேசவில்லை.
பாஜகவினர் இவை பற்றி மெளனம் சாதிப்பது புரிந்துகொள்ளக்கூடியதே . ஆனால், எதிர்க்கட்சிகள் தங்கள் கடமையைச் செய்யத் தவறிவிட்டது ஏன் என்பது ஒரு பெரும் கேள்வியாக நம் முன் நிற்கிறது.
சிங்கங்களுக்கு இரை இருப்பிடம் தட்டுப்பாடு!

முதலாவதாக, இந்தியாவில் குஜராத்திலுள்ள கிர் பகுதியில் மட்டுமே வசிக்கின்ற ஆசிய சிங்கங்களுக்கு போதுமான இரைகளும் இருப்பிடங்களும் சுருங்கிக் கொண்டே வருகின்றன. அங்கு மனிதர்களின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
2013 -2018 ஆம் ஆண்டுகளில் அங்கு 413 சிங்கங்கள் மடிந்திருக்கின்றன. எனவே அவற்றுக்கு இன்னும் கூடுதலான வாழ்விடத்தையும் தேவையான இரைகளையும் வழங்குவதற்கு மத்தியப் பிரதேசத்திலுள்ள குனோ-பல்பூர் தேசியப் பூங்கா பல ஆண்டுகளாகக் காத்திருந்தது. ஆனால், குஜராத் மாநில அரசாங்கம் அச்சிங்கங்கள் அவற்றுக்கு உகந்த வேறு இடங்களுக்குச் செல்வதை அனுமதிக்கவேயில்லை.
ஆசிய சிங்கங்களை கிர் காடுகளிலிருந்து வேறு வாழிடங்களுக்கு அனுப்புவதையும் , ஆப்பிரிக்க சீட்டாக்களைக் கொண்டுவருவதால் ஏற்படும் பின்விளைவுகளையும் மேற்பார்வையிடுவதற்காக ஒன்றிய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள வல்லுனர் குழுவிலுள்ள உறுப்பினரும் காட்டுயிர்கள் தொடர்பான உயிரியலாளருமான முனைவர் ரவி செல்லம், சீட்டாக்களைக் கொண்டு வருவது வெறும் ஜம்பத்துக்காக செய்யப்படும் செயல் என்று முன்பொருமுறை கூறியிருக்கிறார்.
காரணம், ஒன்றிய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், இந்தியக் காட்டுயிர்களின் பிரிக்கமுடியாத பகுதியாக இருந்த சீட்டாக்களை மீண்டும் கொண்டுவருவது மிக முக்கியமான நடவடிக்கை என்று கருதியதுதான்.
சீட்டாக்களைக் கொண்டு வரும் திட்டம், காட்டுயிர்களைப் பாதுகாப்பது என்ற குறிக்கோளுடன் செய்யப்பட்டது அல்ல என்றும், அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்ட இத்திட்டம் பற்றிய ஒரு சொல்கூட 2017-2031ஆம் ஆண்டுகளுக்கான தேசிய காட்டுயிர் செயல் திட்டத்தில்( National Wildlife Action Plan) இடம் பெறவில்லை என்றும் ஓர் ஆங்கில ஏட்டுக்கு அளித்த நேர்காணலில் ரவி செல்லம் கூறியுள்ளார்.
2013ஆம் ஆண்டில் காடுகளைப் பாதுகாப்பதற்கான விஷயத்தில் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆயம் (Bench), சீட்டாக்கள் மீது மோகம் கொள்வதைக் காட்டிலும் இந்தியாவில் அழிந்து கொண்டிருக்கும், காட்டுயிர்களைப் பாதுகாப்பதுதான் முக்கியம் என்று கூறியது .
ஆனால், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தேசிய புலிகள் பாதுகாப்பு முகமை (National Tiger Agency) அந்த நீதிமன்றத்தை அணுகியது. அந்த முகமை, சீட்டாக்களை குனோ தேசியப் பூங்கா அல்லாத இடங்களில் விடப்போவதாகவே கூறியது.
அதாவது உச்ச நீதிமன்றம் சீட்டாக்களை இறக்குமதி செய்யவே கூடாது என்று திட்டவட்டமாகக் கூறவில்லை என்பதால் அத்தீர்ப்புக்கான விளக்கத்தை அந்த முகமை கோரியது.
2013ஆம் ஆண்டுத் தீர்ப்பில் சில மாற்றங்களை 2020இல் செய்த உச்ச நீதிமன்றம் பரிசோதனை அளவில் சீட்டாக்களை இறக்குமதி செய்யலாம் என்று கூறியது. மத்தியப் பிரதேசத்திலுள்ள குனோ தேசியப் பூங்காவைத் தவிர அதே மாநிலத்திலுள்ள நவ்ரதேஹி வனவிலங்கு சரணாலயம், தமிழ்நாட்டிலுள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் ஆகியவற்றில் ஏதோவொன்றுக்கு சீட்டாக்களைக் கொண்டு செல்லலாம் என்றே தேசிய புலிகள் பாதுகாப்பு முகமையும் கூறியிருந்தது.
குஜராத் சிங்கங்களை குனோ பூங்காவுக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த மத்தியப் பிரதேச அரசாங்கம், ஒன்றிய அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்பத் தன் முடிவை திடீரென்று மாற்றிக் கொண்டது.

குஜராத்திலுள்ள 674 சிங்கங்கள் ஏறத்தாழ 30000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலுள்ள காடுகளில் வசிக்கின்றன. இதில் 1648 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே பாதுகாக்கப்பட்ட காடு.
மதிக்கப்படாத உத்தரவு
எனவே வனப் பகுதிகளுக்கு வெளியே சென்று ஆடு மாடுகளை வேட்டையாடித் தின்னும் சிங்கங்கள், தெரு நாய்களாலும், வெறி நாய்களாலும் தாக்கப்படுகின்றன. மேலும் அவை ஒரே இடத்தில் அடைபட்டுக் கிடப்பதால் கொடிய நோய்களால் பாதிக்கப்படுகின்றன.
2013ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணை, கிர் காடுகளிலிருந்து சிங்கங்களை குனோ தேசியப் பூங்காவுக்கு ஆறு மாதங்களுக்குள் மாற்ற வேண்டும் என்று கூறியது.
ஆனால் அந்த உத்தரவு மத்தியப் பிரதேச, குஜராத் மாநில அரசாங்கங்களாலும் ஒன்றிய அரசாங்கத்தாலும் இதுவரை மதிக்கப்படவேயில்லை என்று கூறுகிறார் ரவி செல்லம்.
சீட்டாக்களை மத்தியப் பிரதேச குனோ பூங்காவில் விடுவதற்கான திட்டத்திற்கு தொடக்கத்தில் 990 கோடி செலவாகும் என்றும், அவற்றைப் பராமரிப்பதற்கு ஆண்டு தோறும் ரூ 500 கோடி செலவாகும் என்றும் கருதப்படுகிறது.
ஆனால், உண்மையில் எவ்வளவு செலவாகும், அதற்கான நிதி எங்கிருந்து ஒதுக்கப்படும் என்பதைப் பற்றிய தெளிவான விவரம் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்று ரவி செல்லம் கூறுகிறார். காட்டுயிர்களைப் பாதுகாத்தல் என்பதைப் பொறுத்தவரை சீட்டா திட்டம்தான் மிக அதிகம் செலவு பிடிக்கும் திட்டம் என்றும், அத்திட்டம் யதார்த்த நிலைமைகளுக்குப் பொருந்தி வராதது என்றும் கருதுகிறார்.
இந்த திட்டத்திற்கு வீண் செலவு செய்வதற்குப் பதிலாக நிலப் பயன்பாட்டில் தொடர்ந்து மாற்றங்களை ஏற்படுத்துவதைத் தவிர்த்தல், புல்வெளிப் பகுதிகள் சீரழியாமலும் துண்டு துண்டாக்கப்படாமலும் பார்த்துக் கொள்ளுதல், மின்சாரம் கடத்துவதற்கான மின்கம்பங்களை காட்டுயிர்களைப் பாதிக்காத இடங்களுக்குக்கொண்டு செல்லுதல் போன்றவற்றுக்குச் செலவிடுவதுதான் விவேகமானதாகவும் காடுகளையும் காட்டுயிர்களையும் பாதுகாப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளாக இருக்கும் என்றும் கூறுகிறார்.,
சீட்டாக்கள் உயிர் வாழ்வதற்கு பெரும் புல்வெளிகள் தேவை. ஆனால், குனோ பால்பூர் தேசியப் பூங்கா மரக்காடுகளை மட்டுமே கொண்டது. மேலும் சீட்டாக்களுக்கான இரைகளான குறிப்பிட்ட வகை மான்கள் அங்கு கிட்டத்தட்ட அழிந்துவிட்டன.
சீட்டாக்கள் பல்வேறு வகையான வாழ்விடங்களில் வசிப்பவை. வெப்பம் மிகுந்த பாலைவனங்கள், குளிர் நிறைந்த பாலைவனங்கள், மலைப் பகுதிகள், வறண்ட காடுகள், மலைப் பகுதிகள் முதலியன இவற்றில் அடங்கும்.
ஆனால், குனோ பூங்காவைப் பொறுத்தவரை முக்கிய விஷயம் என்னவென்றால், சீட்டாக்களுக்குத் தேவையான இரை கிடைக்காது என்பதுதான். சீட்டாக்கள் இந்தியாவில் நிலைத்து நின்று இனப்பெருக்கம் செய்ய வேண்டுமானால் 2000 -3000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள தனித்தனிப் புல்வெளிப் பகுதிகளைக் கொண்ட 10000 -20000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள புல்வெளிகள் தேவை.

யானைகளை பாதுகாக்க வேண்டும்!
ஆனால், சீட்டாக்களுக்கு உகந்த இடமல்லாத குனோ தேசியப் பூங்காவில் தன்னை ஒரு புகைப்பட வல்லுநராகக் காட்டிக் கொண்ட மோடி, புதிய நாடாளுமன்றக் கட்டடம் போன்ற இன்னொரு வீண் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார் என்பது மட்டும் நிதர்சனம்.
இந்திய மக்களில் பெரும்பாலோரால் கடவுளாக வணங்கப்படும் யானைகள் விரைவு ரயில் வண்டிகளால் தாக்கப்பட்டு உயிர் இழக்கும் அவலத்தைத் தடுக்க ஒன்றிய அரசாங்கத்தின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கும் இரயில்வே அமைச்சகம் உருப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியதுதான் அது தீட்ட வேண்டிய ஒரு முக்கியமான திட்டம் என்பதையும் நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
கட்டுரையாளர் குறிப்பு

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.