பழம்பெரும் நடிகரும், மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணாவுக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை தனது 80வது வயதில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து இந்தியாவின் பல்வேறு திரையுலகை சேர்ந்தவர்களும், அரசியல் ஆளுமைகளும் அவரது மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அனைத்து துறைகளிலும் பெரும்பேர்!
தனது காலத்தில் முன்னணி நடிகராக மட்டுமின்றி, பின்னர் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் தான் நுழைந்த அனைத்து துறையிலும் ஒரு வெற்றிகரமான முன்னோடியாக தெலுங்கு திரையுலகில் திகழ்ந்தார் சூப்பர்ஸ்டார் கிருஷ்ணா.
இந்தியாவில் ஒவ்வொரு திரைத்துறையில் உள்ள நடிகர்களுக்கும் அவரை புகழும் வகையில் ஒரு அடைமொழி இருக்கும். ஆனால் சில குறிப்பிட்ட நடிகர்களுக்கு மட்டுமே ரசிகர்களின் ஆதரவுடன் உச்சபட்ச பெயர் வழங்கப்படும்.
அப்படி தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு கொண்டாடப்பட்டவர் தான் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா. இந்நிலையில் அவருக்கு சூப்பர்ஸ்டார் என்ற பட்டம் எப்படி ஏற்பட்டது? எப்போது தோன்றியது என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
முன்னணி நடிகராக அறிமுகம்!
தெலுங்கு திரையுலகில் கிருஷ்ணாவின் பங்கு அளப்பரியது. ஏனெனில் நம்மவர் கமல்ஹாசனைப் போன்றே தெலுங்கு சினிமாவில் புதிய முயற்சிகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் புகுத்தியவர் கிருஷ்ணா தான்.
1943ம் ஆண்டு பிறந்த கிருஷ்ணாவின் இயற்பெயர் கட்டமனேனி சிவா ராம கிருஷ்ண மூர்த்தி. சிறுவயதில் நடிப்பதில் பெரும் ஆர்வம் கொண்ட அவர், தனது திரைப்பட வாழ்க்கையை 1961ம் ஆண்டு வெளிவந்த குல கோத்ராலு என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்து தொடங்கினார்.
1965 ஆம் ஆண்டு தேனே மனசுலு திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்களிடையே அவருக்கு பெரும் வரவேற்பை கொடுத்தது.
பின்னர் 1972ம் ஆண்டு கிருஷ்ணாவின் மிகச்சிறந்த நடிப்பில் வெளிவந்த பண்டண்டிகபுரம் என்ற திரைப்படம் சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.
பான் இந்தியா ஹீரோ!
அதனைத் தொடர்ந்து 1971ம் ஆண்டு தெலுங்கின் முதல் கெளபாய் திரைப்படமாக வெளிவந்தது மொசகல்லாகு மொசகாடு. தெலுங்கில் முதன்முறையாக ஹாலிவுட் படங்களில் இருந்து ஈர்க்கப்பட்டு வெளியான இத்திரைப்படத்தில் கிருஷ்ணாவின் ஆக்ஷன் காட்சிகள் வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் வெற்றிகரமாக 100 நாட்களை தாண்டி ஓடிய இத்திரைப்படம் பெரும் வசூலை அள்ளியது.
தெலுங்கின் வெற்றியை தொடர்ந்து, தமிழில் மோசக்காரனுக்கு மோசக்காரன் என்றும், இந்தியில் கன் ஃபைட்டர் ஜானி என்றும், ஆங்கிலத்தில் ட்ரெஷர் ஹன்ட் என்ற பெயரிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இதன்மூலம் இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டார் கிருஷ்ணா.
100வது படம்!
அதன்பின்னர் 1974ம் ஆண்டு ஆந்திராவில் பெரிதும் மதிக்கப்படும் இந்திய புரட்சியாளர் சீதாராம ராஜுவின் பயோகிராபி படமான அல்லூரி சீதாராம ராஜு என்ற திரைப்படத்தில் நடித்தார்.
தென்னிந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் படமான இத்திரைப்படம் கிருஷ்ணாவின் 100வது படமாகும். தெலுங்கு திரையுலகில் பெரிதும் கொண்டாடப்பட்ட இப்படம் திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடி, அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது.
மேலும் இத்திரைப்படம் தேசிய திரைப்பட விருது, ஆந்திராவின் உயரிய விருதான நந்தி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றது.
புதுமைகளின் நாயகன்!
புதுமைகளை புகுத்த வேண்டும் என்பதில் பெரும் ஈடுபாடு கொண்ட கிருஷ்ணா, கெளபாய் வேடத்தை தொடர்ந்து குடாச்சாரி 116 (1966), ஜேம்ஸ் பாண்ட் 777 (1971), ஏஜென்ட் கோபி (1978), ரகசிய குடாச்சாரி (1981) மற்றும் குடாச்சாரி 117 (1989) ஆகிய உளவுப் படங்களில் நடித்தார்.
தொழில்நுட்பத்திலும் அதீத ஆர்வம் கொண்டவர் கிருஷ்ணா, முதல் சினிமாஸ்கோப் படமாக – அல்லூரி சீத்தாராம ராஜு (1974), முதல் ஈஸ்ட்மேன்கலர் படமாக – ஈனாடு (1982), முதல் 70 மிமீ படமாக – சிம்ஹாசனம் (1986) முதல் டிடிஎஸ் படமாக வீர லெவரா (1995) என்று பல்வேறு தொழில்நுட்பங்களையும் தனது படத்தின் வழியாகவே கிருஷ்ணா அறிமுகப்படுத்தினார்.
தெலுங்கு திரையுலகில் சுமார் 40 வருடங்கள் உச்சநட்சத்திரமாக திகழ்ந்த கிருஷ்ணா நடிப்பை தாண்டி இயக்கம், தயாரிப்பு போன்ற துறைகளிலும் சிறப்பாக செயலாற்றி சினிமாவிற்காகவே தன்னை முற்றிலும் அர்ப்பணித்து இருந்தார் கிருஷ்ணா.
தனது சகோதரர்கள் ஆதிசேஷகிரி ராவ் மற்றும் ஹனுமந்த ராவ் ஆகியோருடன் சேர்ந்து பத்மாலயா ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும் தயாரித்தார்.
சூப்பர்ஸ்டார் பட்டம் வென்ற கதை!
இதுபோன்ற பன்முகத் தன்மை தான் தெலுங்கு சினிமாவில் அசைக்கமுடியாத உயரத்தில் இருந்த என்.டி.ஆர் பெற்றிருந்த ’சூப்பர்ஸ்டார்’ என்ற பட்டம், தயாரிப்பாளர்களின் ஹீரோவாக விளங்கிய கிருஷ்ணாவுக்கு செல்ல காரணமானது.
1982 ஆம் ஆண்டு ‘ஜோதிசித்ரா என்ற பிரபல தெலுங்கு திரைப்பட வார இதழ், ’சூப்பர் ஸ்டார்’ என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில் தெலுங்கு திரையுலகின் சிம்ம சொப்பனமாகவும், ஆந்திராவின் முதல்வராகவும் பதவி வகித்த என்.டி.ஆர் ‘சூப்பர் ஸ்டார் பட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அதே வருடத்தில் அரசியலை நோக்கி தனது பாதையை திருப்பினார்.
இதனால் அடுத்த ஆண்டில் மீண்டும் சூப்பர்ஸ்டார் யார் என்ற கருத்தக்கணிப்பை நடத்தியது ஜோதி சித்ரா. அதில் வென்ற கிருஷ்ணாவுக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் செல்ல பின்னர் அந்த பெயர் அவருடையதாக நிரந்தமாக ஆகிவிட்டது.
அரசியலிலும் வெற்றி!
சினிமா மட்டுமின்றி அரசியலிலும் வெற்றியாளராக கோலோச்சினார் கிருஷ்ணா. அவர் 1989 இல் எளூரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு அரசியலில் இருந்து விலகினார்.
இந்திய திரைத்துறையில் அவர் ஆற்றிய சேவைகளை பாராட்டி கிருஷ்ணாவுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்தது.
மேலும் 1997ம் ஆண்டும் பிலிம்பேர் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதையும், 2003ம் ஆண்டு ஆந்திர அரசின் உயரிய விருதான் என்.டி.ஆர் தேசிய விருதையும் கிருஷ்ணா பெற்றார்.
துயரத்தில் தள்ளிய அடுத்தடுத்த இழப்புகள்!
தன் வாழ்நாள் எங்கும் சாதனைகளை நிரம்ப செய்துள்ள சூப்பர்ஸ்டார் கிருஷ்ணாவுக்கு கடந்த சில ஆண்டுகள் துயரத்தின் உச்சக்கட்டமாகவே மாறியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு அவரது இரண்டாவது மனைவியான நடிகை விஜய நிர்மலா மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவரது மூத்த மகன் ரமேஷ் பாபு இறந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் தனது முதல் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயுமான இந்திரா தேவி உயிரிழந்தார். இதனால் சிலகால மாதங்களாக மனமுடைந்து சோர்வுடன் காணப்பட்ட கிருஷ்ணா இன்று காலமானார்.
சூப்பர்ஸ்டார் கிருஷ்ணா காரு!
எனினும் அவரது மறைவையொட்டி பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ட்விட்டரில் #RIPSuperStarKrishnaGaru என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
தன் வாழ்நாள் முழுவதும் சினிமாவிற்காகவும், தெலுங்கு திரைத்துறையின் வளர்ச்சிக்காக செலவழித்த கிருஷ்ணா உண்மையில் ஒரு சூப்பர்ஸ்டார் தான்.
கிறிஸ்டோபர் ஜெமா
பிரியா மரணம்: மருத்துவத்துறைக்கு போலீஸ் கடிதம்!
திருமண வாழ்க்கை: வதந்திகளுக்கு சினேகாவின் போட்டோ பதிலடி!