வெளிநாடு வாழ் தமிழர் நலன் விழா 2023!

Published On:

| By Kavi

முனைவர் க.சுபாஷிணி

இன்று உலகின் பல்வேறு நாடுகளில் பலதரப்பட்ட காரணங்களுக்காகத் தமிழ் மக்கள் தம் தாயகத்தை விட்டு புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள்; 

அவர்களுக்குத் தாய் தமிழகத்திலிருந்து தொடர்பினை ஏற்படுத்திக் கொடுத்து, தமிழ் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் தங்கள் வேர்களைத் தேடி அவர்கள் வரும்போது அவர்களை ஆதரித்து, அரவணைத்து வரவேற்கும் எண்ணத்துடன்,

’வெளிநாடுவாழ் தமிழர்கள் நலன்’ என்ற ஒரு நோக்கத்தைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன்  மற்றும்  மறுவாழ்வுத்துறை என்ற அமைச்சகம்  2020 ல்  ஏற்படுத்தப்பட்டு கடந்த ஈராண்டுகளாக  செயல்பட்டு வருகின்றது. 

2021 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் நேரில் சந்திப்பது சாத்தியமில்லை என்ற போதிலும், இணைய  தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு அதன் வழி அயலகத் தமிழர்கள்  தமிழ்நாட்டின் அரசு மற்றும் அதிகாரிகளுக்குத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும்,

வெளிநாடுகளில் இயங்கும் தமிழ்ச்சங்கங்களும், தமிழ்ப்பள்ளி அமைப்புகளும்  தங்கள் கோரிக்கைகளை  தமிழ்நாட்டு அரசுக்கு முன் வைக்கவும் ஒரு நிகழ்வு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி நடைபெற்றது. 

அயலகத் தமிழர் நாள்

தமிழ்நாடு  முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஆம் நாள் அயலகத் தமிழர் நாளாக கொண்டாடப்படும் என்று வெளியிட்ட அறிவிப்பை ஒட்டி இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த ஆண்டு அதே நிகழ்வு  மேலும்  விரிவாக்கம் செய்யப்பட்ட வகையில், நேரடியாக  ஏறக்குறைய 35 நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்களும், ஆய்வாளர்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடாகி கடந்த ஜனவரி 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது.

சமூகம், ஆய்வு, வணிகம், தமிழ்க்கல்வி, அரசியல் தளங்களில் அயல்நாடுகளில் செயல்பட்டு வரும் பலரும் இந்த நிகழ்ச்சியில் நேரில் வந்து கலந்து கொண்டது இந்த விழாவை  பிரமாண்டமான ஒரு விழாவாக உயர்த்தியது.   

கயானா அரசியலில் தமிழர்கள்

தமிழ் மக்களின் வழித் தோன்றல்கள் இங்கு கூட வாழ்கின்றார்களா எனப் பலரும் வியக்கும் வகையில் கயானா  தமிழர்கள் அரசியலில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கின்றார்கள் எனக் கூறி தங்கள் நாட்டில் தமிழர்களின் வரலாற்றையும்,

இன்று கயானாவை பொருளாதார ரீதியில் உயர்த்தியதில் தமிழ் மக்களின் பங்கு அடிப்படையானது என்பதைக் கூறி விளக்கிய கயானாவின் முன்னாள் அதிபர் மோசஸ் நாகமுத்து வீராசாமியின் உரை, உலகத் தமிழர்களுக்குப் புதிய செய்தியாக அமைந்தது.

இடைவேளை நேரத்தில் மலேசியாவிலிருந்து வந்திருந்த சில பெண்மணிகளைப் பார்த்து ’உங்களைப் பார்த்தால் என் அத்தை, சித்தி, அக்கா போல இருக்கின்றீர்கள்’ எனக் கூறி அவர் அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டதும் பண்பாட்டு ரீதியில் தமிழ் உறவுகளைத் தேடும் கயானா போன்ற நாடுகளில் வாழ்வோரின் ஆழ்மனத்  தேடல்களைப் பிரதிபலிப்பதாகவே அமைந்தது. 

அதே போல, சிங்கப்பூர், மொரிஷியஸ், மலேசியா, பாப்புவா நியூகினியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வந்திருந்த அரசியல் தலைவர்கள்  தமிழ்நாட்டிற்கான நீண்ட கால தொடர்பினைத் தங்கள் உரையில் குறிப்பிட்டுப் பேசினர்.

இலங்கை எம்.பி வைத்த வேண்டுகோள்

இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்க வகையில் இலங்கையிலிருந்து வந்திருந்த நான்கு அரசியல் பிரமுகர்களின் உரைகள் அமைந்திருந்தன.

இலங்கை மலையக ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் செந்தில் தொண்டமான் மலையகத் தமிழ் மக்களின் மேம்பாட்டிற்காக கடந்த அரை நூற்றாண்டு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்தும்  தமிழ்நாட்டின் அடிப்படையில் இலங்கையிலும் வெளிநாடு வாழ் மக்களுக்கான நலன் குறித்த ஒரு முயற்சி தொடங்கப்பட்ட செய்தியை  வழங்கினார்.   

கொழும்பிலிருந்து வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தமிழ்நாடு  இலங்கைத் தமிழ் மக்களின் கல்வி மேம்பாட்டிற்குக் கைகொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். 

யாழ்ப்பாணத்திலிருந்து வந்து உரையாற்றிய  நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  தமிழ்நாட்டிற்கும் யாழ் பகுதிக்குமான தொடர்புகள் அங்கு வளர்ச்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை முன் வைத்து உரையாற்றினார். 

இப்படி இலங்கையின் வடகிழக்கு, மலையகம், கொழும்பு எனத் தமிழ் மக்கள்   வாழும் பகுதிகளின் பிரதிநிதிகள் தமிழ்நாட்டின் தொடர்பு தமிழ்மக்களுக்கு வலுவான மேம்பாட்டை அளிக்கும் என வெளிப்படையாக கருத்துக்களைப் பதிந்த ஒரு முக்கியத் தளமாக இந்த இரண்டு நாள் நிகழ்வு அமைந்து  முக்கியத்துவம் பெறுகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள்

தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன்  மற்றும்  மறுவாழ்வுத் துறை  கடந்த ஓராண்டு வாக்கில் மலேசியா, உக்ரைன் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில்  தமிழ் மக்களுக்குப் பிரச்சனைகள் ஏற்பட்ட போது நேரடியாக களமிறங்கி  செயல்பட்டு தமிழ் மக்களுக்குத் தேவைப்படும் பல்வேறு உதவிகளைச் சாதித்து முடித்திருக்கின்றது.

கடந்த 100 ஆண்டுகள் காலகட்டத்தில் ஐரோப்பாவிற்குக் குடிபெயர்ந்த  தமிழ்நாட்டினர் பெரும்பாலும் கல்வி மற்றும் தொழில் மேம்பாட்டிற்காகப் புலம்பெயர்ந்தவர்கள்.

இலங்கையில் நடைபெற்ற தொடர்ச்சியான போரின் காரணத்தால் லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்றார்கள்.

ஆக, தமிழ்நாட்டில் இருந்தும் இலங்கையில் இருந்தும் இப்படி புலம்பெயர்ந்த லட்சக்கணக்கான தமிழ் மக்களின் இரண்டாம் தலைமுறையினர் இப்பொழுது ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக ஜெர்மனி, பிரான்சு, சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலும் என்ற வகையில் வாழ்கின்றனர்.

மொழி, பண்பாடு ஆகிய இரண்டு கூறுகளும்  அந்தந்த நாடுகளில் வழக்கில் உள்ள மொழிகள் மற்றும் பண்பாட்டுக் கூறுகளுடன் கலந்து தனித்துவத்துடன் இவர்கள் வாழ்க்கை முறையாக மாறிவிட்ட போதிலும் கூட தமிழ்நாடு அனைவருக்கும் தாய் நாடாகத்தான் திகழ்கிறது.

அந்த வகையில் பண்பாட்டு ரீதியிலான தேவைகளுக்குத் தமிழ்நாட்டின் பங்களிப்பும் ஆதரவும் ஐரோப்பா வாழ் தமிழர்களுக்கு முக்கியத் தேவையாக அமைகிறது.

அயலகத் தமிழர் நலன் துறை செயல்பாடுகள்

உதாரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் வேலைக்குச் சென்று அங்கேயே இறந்து போனவர்களின் பூத உடல்களைக் கொண்டு வருவது, தாய்லாந்தில் தவறுதலாக இணைய மோசடி பிரச்சனையில் சிக்கவைக்கப்பட்ட தமிழர்களை மீட்டது,  மலேசியாவில் பணி செய்யச் சென்று அங்கு தேவைப்பட்டோருக்கு வழங்கப்பட்ட உதவிகள் என அடிப்படையான பல செயல்பாடுகள் நடந்துள்ளன. 

உக்ரைன்  நாட்டில் போர் ஆரம்பித்த போது அங்குச் சிக்கித் தவித்த கல்லூரி மாணவர்களைத் தமிழ்நாடு கொண்டு வரும் பணியையும் இந்த அமைச்சு  நிறைவேற்றியிருக்கிறது.

இவை அனைத்தும் பெருமை கொள்ளத்தக்க நடவடிக்கைகள் தாம்.

இப்படிச் சிறப்பாக இயங்கி வரும் அயலகத் தமிழர் நலன்  மற்றும்  மறுவாழ்வுத் துறை அமைச்சு மட்டுமன்றி தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, உயர்கல்வித்துறை ஆகியனவும் சில நடவடிக்கைகளை வெளிநாடு வாழ் தமிழர் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டியது தேவையாகின்றது. 

தமிழ் நூல்களை பரப்ப வேண்டும்

உலகம் முழுவதிலும் தமிழ் மக்கள் வாழ்கின்ற இச்சூழலில் தமிழ் மக்களுக்குத் தேவையான சமகால ஆய்வுகளை வெளிப்படுத்தும் நூல்கள் எல்லா நாடுகளுக்கும் சென்று சேர்கின்றனவா என்றால் ’இல்லை’ என்பதே பதிலாக அமைகின்றது.

உதாரணமாக,  தமிழ்நாட்டிற்கு அருகே இருக்கக்கூடிய மலேசிய சூழலை எண்ணிப் பார்க்கும் போது, தமிழ்நாட்டில் பதிப்பிக்கப்படுகின்ற தரம் வாய்ந்த வரலாறு, சமூகவியல், மானுடவியல், இலக்கியம், நவீன இலக்கியம் போன்ற பல்துறை நூல்கள் அங்கே கிடைப்பதே பெரும் கனவாக இருக்கின்றது.

இந்தச் சூழ்நிலை மாறுவதற்குத் தமிழ்நாடு அரசு மலேசியா, சிங்கை, இலங்கை போன்ற நாடுகளில் தொடங்கி பின்னர் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் என புத்தகக் கண்காட்சிகளை ஏற்பாடு செய்து அங்கு வாழ்கின்ற தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் பதிப்பிக்கப்படுகின்ற லட்சக்கணக்கான நூல்களில் சில நூல்களாவது உலகத் தமிழ் மக்களுக்கு வந்தடைவதற்கு உதவுவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

நூல்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதில் தற்சமயம் பேரளவிலான சுங்கவரி தொடர்பிலான பிரச்சனைகள் நிலவுகின்றன. அண்மையில்  தமிழ்நாட்டிலிருந்து  நூல்களை மலேசியாவில் எனது  நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தபோது குழப்பம் நிறைந்த பிரச்சனைகளை நான் எதிர்கொள்ள நேர்ந்ததன் அடிப்படையில்,

பெருமளவிலான நூல்களை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் போது ஏற்படக்கூடிய இத்தகைய பிரச்சனைகளைக் களைந்து இவற்றை எளிமையாக்கித் தந்தால் தமிழ் நூல்கள் பல நாடுகளுக்கும் கண்காட்சிகளுக்குக் கொண்டு  வருவதற்கு உதவியாக அமையும்.

பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆய்வு

தற்போதைய சூழலில் ஐரோப்பாவில், குறிப்பாக ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி, பண்பாடு, சமூகவியல், மானுடவியல் ஆகிய பார்வையில் ஆய்வுகளை முன்னெடுக்க பல பல்கலைக்கழகங்கள் ஆர்வம் காட்டுகின்றன.

தமிழ் இருக்கைகள் என்ற பெயரில் கடந்த ஆண்டுகளில் கோடிக்கணக்கான ரூபாய்களை நன்கொடைகளாக வழங்கி இருக்கைகளை அமைப்பதை விட, உலகளாவிய பல   பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் முயற்சியைத் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை முன்னெடுக்க வேண்டும். இதற்கு வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளன.   

இத்தகைய இணைந்த செயல்பாடுகளுக்குப் பெருமளவிளான வாய்ப்பும் ஆர்வமும் ஐரோப்பிய கல்விக்கூடங்களில் தற்சமயம் நிலவுகின்றன.

இதற்குச் சான்றாக  கடந்த அக்டோபர் மாதத்தில் தமிழ்நாட்டின் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஜெர்மனியின் பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலம் வந்திருந்தபோது,

தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த டூபிங்கன் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் ஆய்வு துறையுடனான கலந்துரையாடல் இத்தகைய இணைந்த வகை ஆய்வுகளையும் உள்ளடக்கி அமைந்தது.

அதன் தொடர்ச்சியாகத் தமிழ் மரபு அறக்கட்டளை தமிழ்நாட்டு உயர்கல்விக் கூடங்களுக்கும் இந்த டூபிங்கன் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான இணைந்த வகை செயல்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்களைத்  தொடங்கியிருப்பதோடு மாணவர் ஆய்வுப் பரிமாற்றம் தொடர்பாகவும் பேசி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.    

மொழிகள் இடையே ஒப்பாய்வுகள் தேவை

தமிழ் மொழிக்கும் கிழக்காசிய மொழிகளான இந்தோனேசிய மொழி, மலாய், ஜப்பான், கொரியா, மங்கோலியா போன்ற மொழிகளுக்கும் இடையிலான ஒப்பாய்வுகள் என்பன தற்போது மிக மிகக் குறைந்து வருகின்றன.

இத்துறையில் பணியாற்றிய முதுபெரும் அயல்நாட்டு, தமிழ்நாட்டு மற்றும்  இலங்கை பேராசிரியர்கள் பலரை நாம் முதுமையின் காரணமாக இழந்து விட்டோம்.  இத்தகைய துறைகள் தற்சமயம் கவனிப்பாரற்று கிடக்கின்றன.

தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களும் தமிழ்நாட்டின் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற ஆய்வு நிறுவனங்களும் இத்தகைய முயற்சிகளில் கவனம் செலுத்தி தமிழுக்கும் ஏனைய உலக மொழிகளுக்குமான ஆய்வுகளை முன்னெடுக்க சீரிய முயற்சிகளைத் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் அல்லவா?

தென் அமெரிக்கா தீவுகளில் தமிழர்களின் நிலை

கடந்த ஏறக்குறைய 250 ஆண்டுகளாகப் பிரெஞ்சு காலனித்துவ தீவுகளான மொரிசியஸ், ரியூனியன், பிஜி போன்ற தீவுகள் மட்டுமின்றி தென் அமெரிக்கா அருகே அமைந்துள்ள மார்த்தினிக், குவாதலப், செயின்ட் லூசியா, சுரினாம், கயானா போன்ற தீவு நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய தேவையும் இருக்கின்றது.

இதற்குக் காரணம், இத்தகைய தீவுகளில் கடந்த 250 ஆண்டுகள் காலகட்டத்தில் தோட்டங்களில் கூலிகளாகப் பணியாற்ற வந்திறங்கிய தமிழ் மக்கள் படிப்படியாக உள்ளூர் மக்களுடன் கலந்து தங்கள் தமிழ் பண்பாட்டையும் மொழி அடிப்படைகளையும் இழந்து படிப்படியாக அவற்றை இழந்த நிலை வந்து கொண்டிருக்கிறது.

1940 களின் இறுதியில் இப்பகுதிகளுக்குப் பயணம் செய்து இத்தீவுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நிலையைப் பற்றி ஆராய்ந்து தகவல்களை ஆவணப்படுத்திய தனிநாயகம் அடிகளார் அக்கால கட்டத்திலேயே  இங்கு வாழும் தமிழ் மக்கள் தமிழ் பண்பாட்டினை இழந்து வருகின்ற ஒரு அபாயகரமான சூழலில் இருப்பதையும், ஆனால் தமிழ் மொழியைக் கற்பதிலும் தமிழ் பண்பாட்டுக் கூறுகளை மீட்டெடுப்பதற்கும் மிகுந்த ஆவலுடன் இருப்பதையும் தனது ஆவணங்களில் குறிப்பிட்டிருக்கின்றார்.

உலகளவில் தமிழ் கல்வி அவசியம்

அண்மை  நிலையைக் காணும் போது  மேற்குறிப்பிட்ட தீவுகளிலும் நாடுகளிலும் தமிழ் மொழியைப் பேசுகின்றவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைந்து இன்றைய நிலையில் தமிழில் சில சொற்களை மட்டும் அறிந்தோர் பத்துக்கும் குறைவானவர்களே என்ற வகையில்  இந்த நாடுகளில், இந்த எண்ணிக்கை நிலை அமைந்திருக்கின்றது.

இந்தப் பிரச்சனையின் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு  தமிழ்நாடு அயலக தமிழர் நலன் துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை இத்தீவுகளுக்கான சிறப்பு திட்டங்களை வகுத்து இங்கு வாழ்கின்ற மக்களுக்குத் தமிழ் மொழி, பண்பாடு ஆகிய கூறுகளைப் பயிற்சிகளாக வழங்குவதற்கும், இப்பகுதிகளுக்குத் தமிழ் ஆசிரியர்களை அனுப்பி தமிழ் கல்வி இங்கு படிப்படியாக வேரூன்ற உதவுவதற்கும் திட்டங்களை வகுக்க வேண்டும்.

இத்தகைய உடனடி செயலாக்கங்கள் இப்பகுதிகளில் தங்கள் வேர்களைத் தேடிக் காத்திருக்கும் தமிழ் வம்சாவளியினருக்கு உதவக்கூடிய முக்கிய செயல்பாடாக அமையும். 

ஒவ்வொரு ஆண்டும் நடைபெற வேண்டும்

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு,  அவரவர் வாழும் நாடுகளின் சூழலுக்கேற்ப  கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டுவர அடிப்படையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது இந்த இரண்டு நாள் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழா.

இந்த  நிகழ்வை ஏற்பாடு செய்ய அனுமதியளித்த   தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மாண்புமிகு திரு மு. க ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன்  மற்றும்  மறுவாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.செஞ்சி மஸ்தான் அவர்களுக்கும், இத்துறையின் ஆணையர் திருமிகு.ஜெசிந்தா லாசரஸ் இ.ஆ.ப.,

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குநர் முனைவர்.ஜெயசீலன் இ.ஆ.ப, மற்றும்  இத்துறைகளின் அதிகாரிகள், ஆய்வாளர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் உலகத் தமிழர்களின் சார்பில் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி நடைபெற வேண்டும். மேலும் விரிவாகவும் பல நுணுக்கமான ஆய்வுகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த நிகழ்ச்சி விரிவாக்கம் காண வேண்டும்.

உலகத் தமிழர்களுக்கு ஆக்கப்பூர்வமான ஆய்வு நடவடிக்கைகளின் வழி தமிழ் பண்பாட்டுத் தொடர்ச்சி மீட்டெடுக்கப்பட்டு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு

முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் டிஎக்ஸ்சி டெக்னோலஜி என்ற நிறுவனத்தின் ஐரோப்பியப் பகுதி கணினிக் கட்டமைப்புத் துறை தலைமை பொறியியலாளராகப் பணிபுரிகின்றார். இவர் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற பன்னாட்டு அமைப்பின் தோற்றுனர் மற்றும் தலைவருமாவார். இந்தப் பன்னாட்டு அமைப்பு உலகளாவிய தமிழர் வரலாறு, மொழி, பண்பாடு தொடர்பான ஆவணங்களை மின்னாக்கம் செய்வது, அவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வது மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்ற ஓர் அமைப்பாகும்.

”80 வயது முதியவனாக பார்க்கிறார்கள்” – முரளிவிஜய் வேதனை

விஜய் அஜித் சம்பளமும்… வாரிசு துணிவு வசூலும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel