மன அழுத்தம் காரணங்களும் அதிலிருந்து விடுபடும் முறையும்!

சிறப்புக் கட்டுரை

சத்குரு

மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது, மன அழுத்தத்தில் உள்ளபோது உங்களுக்கு என்ன நேர்கிறது, மற்றும் மன அழுத்தத்திலிருந்து எப்படி மீள்வது, அதை எப்படி வளர்ச்சிக்கான பாதையாக்கிக்கொள்வது என்பது குறித்து சத்குரு விளக்குகிறார்.

உங்களுக்கு ஏன் மன அழுத்தம் ஏற்படுகிறது

சத்குரு: மன அழுத்தம் எது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் சோர்வாக இருக்கும்போது உங்களுக்குள் என்ன நிகழ்கிறது? அடிப்படையில், நீங்கள் ஏதோ ஒன்று நடக்க வேண்டும் என்று எண்ணினீர்கள், ஆனால் அது நடக்கவில்லை.

யாரோ, எதுவோ நீங்கள் நினைத்தபடி செயல்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்கள். உலகம் அல்லது விதி நீங்கள் நினைத்தபடி செயல்பட வேண்டுமென்று எண்ணினீர்கள், அது நடக்கவில்லை. சொல்லப்போனால், என்ன நிகழ்கிறதோ அதற்கு எதிராக நீங்கள் ஆகிவிட்டீர்கள், அவ்வளவுதான். நீங்கள் ஒருவருக்கு, ஒரு சூழ்நிலைக்கு எதிராக இருக்கலாம் அல்லது நீங்கள் வாழ்க்கைக்கு எதிராக கூட இருக்கலாம். அதற்கு ஏற்றவாறு மன அழுத்தம் மென்மேலும் ஆழமாக செயல்படும்.

நீங்கள் ஏன் ஏதோ ஒன்றிற்கு எதிராக இருக்கிறீர்கள்? ஏனென்றால் நீங்கள் நினைத்தபடி நடக்கவில்லை என்பதால்தான். இந்த உலகம் முழுமையாக நீங்கள் நினைக்கும் படி ஏன் செயல்பட வேண்டும்? இந்த உலகம் உங்கள் எண்ணப்படி செயல்படாது என்பதை தயவுசெய்து தெரிந்துகொள்ளுங்கள். ஒன்று உங்களுக்கு படைத்தவரின் மீது நம்பிக்கை இல்லை அல்லது உங்களுக்கு ஏற்றுக்கொள்ளும் தன்மை இல்லை அல்லது இரண்டும் இல்லை, அதனுடன் உச்சநிலையில் உங்களுக்கு நான் என்னும் அஹங்காரம் இருக்கிறது. அதனால்தான் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

மன அழுத்தம் ஏற்படும்போது உங்களுக்கு (ள்) என்ன நிகழ்கிறது

மன அழுத்தம் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. அது ஆழமாக சுயசேதம் செய்துவிடும் தன்மையிலானது. மன அழுத்தம் உடையவர்கள் தங்களை தாங்களே அதிகம் காயப்படுத்திக்கொள்வார்கள். கொலை செய்வது உடல் ரீதியாக கொல்வது மட்டும்தான் என்று அர்த்தமில்லை. வாளை எடுத்து சென்று மற்றொருவரை கொலை செய்யும் ஒருவருக்கு – அவரது அஹங்காரம் அவ்வளவு உணர்ச்சிமிக்கதாக இருக்காது – அது மன அழுத்தம் உள்ள ஒருவரின் அஹங்காரம் போல வளர்த்தெடுக்க தேவையிருக்காது.

ஒரு வன்முறையாளரை மிக எளிதாக சமநிலைக்கு கொண்டுவர முடியும். நீங்கள் இதை தெருவில் பார்த்திருக்கிறீர்களா? மக்கள் சண்டைக்கு தயாராகும்போது, கொஞ்சம் ஞானமுடன் ஒருவர் இருந்து இதை சரியாக கையாண்டால், ஒருவரை ஒருவர் கொல்ல தயாரானவர்கள், ஒரு நிமிடத்தில் அதை கீழே போட்டுவிட்டு நண்பர்களாகி அடுத்த நிமிடத்தில் அங்கிருந்து சென்றுவிடுவார்கள். ஆனால் மன அழுத்தம் உள்ளவர் விஷயத்தில் இப்படி இல்லை.

இதை அவர் வாழ்க்கை பூராவும் சுமந்து கொண்டிருப்பார். அவர்கள் சுய நினைவுடன் இதை செய்கிறார்களோ இல்லையோ, அந்த மனிதர்கள் அவர்களின் கத்தியை தீட்டிக்கொண்டே இருப்பார்கள், அவர்களின் இதயத்தையே வெட்டிக் கொண்டு இருப்பார்கள். எதற்காக ஒருவர் தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்ள வேண்டும்? பொதுவாக இது அனுதாபம் கிடைப்பதற்காக நடக்கும். மிகுந்த மன அழுத்தம் உள்ள ஒருவருக்கு சாதாரண அனுதாபம் போதுமானதாக இருக்காது, யாரோ ஒருவர் அவருடன் சேர்ந்து ரத்தம் சிந்த வேண்டும்.

நீங்கள் காயப்படுவதற்கு உங்களுக்குள் என்ன இருக்கிறது? உங்கள் உடலை ஒரு குச்சியால் அடித்தால், உடல் காயப்படும்; அது வேறு விஷயம். அதைத் தவிர வேறு என்ன உங்களுக்குள் காயப்படுகிறது? மனமும் உள்தன்மையும் காயப்பட முடியாது, அஹங்காரம் மட்டும்தான் காயப்பட முடியும். “நான் வளர வேண்டும்” என்று நீங்கள் சொன்னால், உங்கள் அஹங்காரத்தை மிதித்து அதனைத் தாண்டி முன்னோக்கி செல்வது என்பதுதான் அதன் அர்த்தம்.

Stress causes and how to get rid of it

மன அழுத்தத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்துவது

ஒருவரால் எந்த உணர்ச்சியையும் ஆக்கபூர்வமான சக்தியாக தங்கள் வாழ்வில் உருவாக்க முடியும். நீங்கள் முழுமை இல்லாதவர் என்று உங்கள் சோகம் (கவலை) உங்களுக்கு நினைவூட்டினால், அது நல்லது. இந்த சோகத்தை உங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள். இந்த சோகத்தை எப்படி உருவாக்கப் போகிறீர்கள், கோபமாகவா அல்லது அன்பாகவும் கருணையாகவுமா? நீங்கள் கவலையாக இருக்கும்போது கருணை மிகுந்தவராவது ரொம்ப சுலபம்.

அது ஏற்கனவே கரைந்து போகும் தன்மையுடைய உணர்ச்சி. அதை நீங்கள் மேலும் கரைவதற்கு பயன்படுத்தினால் அது உங்களின் பூரண நல்வாழ்வுக்கு இட்டுச் செல்லும். ஆனால் நீங்கள் சோகம் அடைந்தால், எரிச்சல், கோபம் அடைந்து இந்த மொத்த உலகமே தவறு என்று எண்ணினால், நீங்கள் ஒரு முட்டாள்தான்.

துரதிருஷ்டவசமாக, மக்களிடத்தில் இப்போது உண்மை என்னவென்றால், அவர்கள் வாழ்வில் ஓர் பலமான அடி விழும்போதுதான் அவர்களின் மனிதநேயம் செயல்படும். பெரும்பாலானவர்களுக்கு சோகமும் வலியும் உணரும் வரை முதிர்ச்சி ஏற்படாது. இல்லையென்றால் தனக்கும் தன்னை சுற்றியுள்ள எவருக்கும் என்ன நிகழ்கிறது என்று அவர்களுக்கு புரியவே புரியாது

யோகாவில் மன அழுத்தம் உடல், மனம் மற்றும் உணர்ச்சி நிலையில் கையாளப்படுகிறது. உடல், மனம் மற்றும் உணர்ச்சி நிலைகளில் தேவையான சமநிலையும், குதூகலமும் ஏற்படுத்தினால் ஆனந்தமாக இருப்பது இயற்கையாகவே நடக்கும். ஆனந்தமாக இருப்பவரிடம் மன அழுத்தம் இருக்கவே முடியாது.

கே: சத்குரு, ஆனந்தமாக இருப்பது இயற்கையானது என்று நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் மன அழுத்தம் கூட மனிதரிடம் ஓர் இயற்கையான உணர்ச்சிதானே?

சத்குரு: நீங்கள் எப்போது மன அழுத்தத்தை இயற்கையானது என்று தீர்மானம் செய்தீர்களோ, அதிலிருந்து வெளியே வர வேறு வழியே இல்லை. நீங்கள் குழந்தையாக இருக்கும்போது ஆனந்தமாக இருப்பது இயற்கையாகவே நிகழ்ந்தது, மன அழுத்தம் இருந்ததில்லை. மன அழுத்தம் இயற்கையானது என்று தீர்மானிக்காதீர்கள்.

மன அழுத்தம் என்றால் வாழ்க்கைக்கு தேவையான குதூகலத்தை உங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை என்று அர்த்தம். இது உங்கள் உடலிலும் நிகழலாம். நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால் உங்கள் உடலும் தோற்றுப் போகும். உங்களுக்குள் வாழ்க்கை குதூகலமாக இல்லை – அது கீழ்நோக்கி சென்று அதன் குதூகலத்தை இழந்துவிட்டது. ஏனென்றால் நீங்கள் அதை சரியாக கையாளவில்லை.

நீங்கள் அதன் மீது வெளியில் உள்ள முட்டாள்தனங்களை மிக அதிகமாக திணிக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு தேவையான உணர்ச்சிகளை மேல்நிலையில் வைத்திருக்க நீங்கள் எதுவும் செய்யவில்லை.

மன அழுத்தத்தின் மூலம்

மன அழுத்தம் என்பது ஒருவகையான வேதனை. நீங்கள் பரவசமாக இல்லாமல் வேதனையான ஒருவராய் மாறிவிட்டால், அதற்கு காரணம், உங்களின் உயிர் சக்தியின் பெரும்பகுதி உணர்வுபூர்வமாக இல்லாமல், கட்டாயமாக நடைபெறுகிறது. வெளிசூழ்நிலையின் எதிர்வினை காரணமாக அது நடக்கிறது. நீங்கள் எப்போது கட்டாயமாக செயல்படுகிறீர்களோ, மன அழுத்தத்தில் இருப்பது இயற்கையானது, ஏனென்றால் வெளிசூழ்நிலைகள் நூறு சதவிகிதம் உங்கள் கட்டுப்பாட்டில் எப்போதும் இருப்பதில்லை.

இந்த உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் நடக்கிறது, இதற்கெல்லாம் நீங்கள் எதிர்வினை ஆற்றினால், காணாமல் போவதும், பரிதாபகரமான நிலையை அடைவதும் இயற்கையே. அதிகமான அளவிற்கு வாழ்க்கைக்கு வெளிப்படையாக இருந்தீர்கள் என்றால் அந்த அளவிற்கு பரிதாபமானவராகவும் நீங்கள் மாறுவீர்கள்.

மனிதர்கள் தங்கள் மனநிலையில் மன அழுத்தத்தை பலவகையில் ஏற்படுத்த முடியும். அவர்கள் விலைமதிப்பற்றதாக கருதும் ஏதோ ஒன்றை அவர்களிடமிருந்து எடுத்துவிட்டால் மன அழுத்தம் ஏற்பட்டுவிடும். பெரும்பாலான மக்களின் சோகம், குறிப்பாக மேல்தட்டு சமூகங்களில், அவர்களிடம் அனைத்தும் உள்ளன, அதே சமயத்தில் அவர்களிடம் எதுவும் இல்லை.

மன அழுத்தம் என்பது எங்கோ ஒருவகையான நம்பிக்கையற்ற தன்மையை உருவாகிவிட்டது. நீங்கள் இந்தியாவில் உள்ள ஏதோ ஒரு ஏழ்மையான கிராமத்திற்கு சென்றால், அவர்கள் நொடிந்து போயிருப்பார்கள், ஆனால் உங்களால் ஆனந்தமான முகங்களை காணமுடியும், ஏனென்றால் அவர்களுக்கு நாளை நல்லபடியாக இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. மேல்தட்டு சமூகங்களில் அந்த நம்பிக்கை போய்விட்டது, மன அழுத்தம் உருவாகிவிட்டது அதற்கு காரணம், வெளியிலிருந்து எதையெல்லாம் உபயோகிக்க முடியுமோ அவை அனைத்தும் தீர்மானிக்கப்பட்டுவிட்டன.

ஒரு ஏழையினால், “நாளை எனக்கு ஒரு புதிய ஜோடி செருப்பு கிடைத்தால், எல்லாம் சரியாகிவிடும்” என்று எண்ண முடியும். அவருக்கு ஒரு புதிய ஜோடி செருப்பு கிடைத்தால், அவர் ஆனந்தமான முகத்தோடு ஒரு அரசனைப்போல் நடப்பார். ஏனென்றால் வெளிசூழ்நிலை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று அவருக்கு நம்பிக்கை இருக்கிறது.

மேல்தட்டு சமூகங்களில் வெளிசூழ்நிலை தீர்மானமாகிவிட்டது, ஆனால் உள்சூழ்நிலை தீர்மானமாகவில்லை, அதனால் நம்பிக்கையின்மையும், மன அழுத்தமும் அங்கு இருக்கிறது. அங்கு சாப்பாடு இருக்கிறது, வீடு இருக்கிறது, உடை இருக்கிறது, எல்லாமே இருக்கிறது, ஆனாலும் ஏதோ ஒன்று தவறாக உள்ளது. அது என்னவென்று அவர்களுக்கு சற்றும் புரியவில்லை.

நாம் எப்படி வெளிசூழ்நிலைக்காக வேலை செய்கிறோமோ அதுபோல உள்சூழலையும் சரிசெய்ய வேண்டும். அப்படி செய்தால் இந்த உலகம் அழகாகும். வாழ்வின் (புறநிலை) வெளிநிலை அம்சத்தை மட்டும் சரிசெய்யாமல் உள்நிலையில் நம்மை யார் என்று அறிந்துகொள்ளும் கவனமும் வேண்டும் என்பதைத்தான் நாம் ஆன்மீக வழிமுறை என்று சொல்கிறோம்

மன அழுத்தம் கவனத்தை கோரும் தன்மையுடையது. உங்களுக்கு எதையாவது குறித்து வலுவான உணர்ச்சிகளோ அல்லது தீவிரமான எண்ணங்களோ இல்லாதிருந்தால் உங்களுக்கு மன அழுத்தம் வராது. நீங்களேதான், உங்களுக்காக அல்லாமல், உங்களுக்கு எதிராக செயல்படும் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உருவாக்குகிறீர்கள்.

ஆகவே உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கு காரணமாக, சக்தி வாய்ந்தவராக, நீங்களே இருக்கிறீர்கள். நான் இதை சொல்வது ஒருவரின் உடல்நிலை குறித்து அக்கறை இல்லாமலோ அல்லது இரக்கமில்லாமலோ அல்ல, ஆனால் ஒருவருக்கு வாழ்க்கை இந்த தன்மையில்தான் நிகழ்கிறது.

பெரும்பாலான மன அழுத்தங்கள் சுயமாக உருவாக்கப்பட்டதுதான். சிலர் நோய்க்கூறு காரணமாக நோய்வாய்ப்பட்டவர்கள், அவர்களால் அதை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் சராசரியாக மற்ற அனைவரும் பைத்தியக்காரத்தனத்திற்கு தள்ளப்படுவது சாத்தியம், ஏனெனில் புத்திசாலித்தனம், பைத்தியக்காரத்தனம் இதற்கிடையில் உள்ள கோடு மிக மெலிதானது. மக்கள் அதை தள்ளிக்கொண்டே இருப்பார்கள். நீங்கள் கோபப்படும்போது, அதை தள்ளிக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் புத்திசாலித்தன எல்லையை தள்ளிக்கொண்டு பைத்தியக்காரத்தனத்தை நோக்கி நகர்கிறீர்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு திரும்ப வருவீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் நோய் வருவதற்கு உங்களுக்கு சலுகைகள் இருக்கிறது. உங்கள் குழந்தை பருவம் முதல், நீங்கள் நோய்வாய்ப் பட்டிருக்கும்போது தான் அதிகபட்ச கவனம் உங்கள் மீது வந்தது. நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தபோது பெரியவர்கள் உங்களிடம் கத்தினார்கள். நீங்கள் ஆனந்தத்தில் கத்தியபோது அவர்கள் உங்களை நோக்கி திரும்ப கத்தினார்கள்.

நீங்கள் சோர்ந்து போயிருந்த போது அவர்கள் உங்களிடத்தில் “பூ-பூ, பூ-பூ” என்று செய்தார்கள். நீங்கள் குழந்தையாக இருந்தபோது உடலில் நோய் வந்தபோது நன்றாக இருந்தது, ஏனென்றால் உங்கள் தாய்-தந்தை, உங்களை சுற்றி இருந்த அனைவரின் கவனமும் உங்கள் மீதே இருந்தது. அந்த நாளில் நீங்கள் பள்ளிக்கு செல்லத் தேவையில்லை. அதனால் நீங்கள் உடலில் நோயை ஏற்படுத்தும் கலையை கற்றீர்கள்.

ஆனால் உங்களுக்கு திருமணம் ஆனவுடன் மனதில் நோயை ஏற்படுத்தும் கலையை கற்றீர்கள். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றால், ஓர் மூலையில் போய் உட்கார்ந்து மன அழுத்தம் உள்ளது போல நீங்கள் நடிக்கலாம். மக்கள் உங்கள் மீது கவனம் செலுத்துவார்கள். அதனால் நீங்கள் இந்த விளையாட்டை ஆடிக்கொண்டே இருந்தால் ஒருநாள் உங்களால் அந்தக் கோட்டைத் தாண்டி திரும்ப வரமுடியாது. அந்த நாள் நீங்கள் மருத்துவ ரீதியாக நோய்வாய்ப்பட்டு விடுவீர்கள்.

மன அழுத்தத்திலிருந்து எப்படி விடுபடுவது?

உடல்நிலையில் ரசாயன முறையில் ஓர் சமநிலையை பராமரிப்பதற்கு உடல் ரீதியான செயல்பாடு மிக அவசியம். கடந்த சில தலைமுறைகளில் நமது உடல் ரீதியான செயல்பாடுகள் கணிசமாக குறைந்துள்ளது. அதனால் உடல் நிலையில் ரசாயன சமநிலையை பராமரிப்பது என்பது சிரமமாகிவிட்டது. மன அழுத்தம் அதனுடைய ஒரு வெளிப்பாடுதான். சிலர் மூலையில் முடங்கிப்போவார்கள், இரு துருவங்களாக இருக்கும் மற்றவர்கள் வன்முறையான நிலைக்கு செல்வார்கள்.

நடைமுறையில் உள்ள வழக்கம் அவர்களுக்கு அமைதி ஏற்பட ரசாயனம் கலந்த மாத்திரை ஊசி இவற்றை உபயோகிப்பது. இது அந்த தனிமனிதரின் ஆற்றலை அழித்துவிடும்.

சமநிலை ஏற்படுவதற்கு ஒரு மிக எளிமையான மற்றும் சிறந்த வழி என்னவென்றால், உடல் ரீதியாக இயற்கை சூழ்நிலையில் அதிகமான செயல் செய்வது – இளவயதிலேயே செய்வது ஏற்றதாக இருக்கும். இன்னொரு அம்சம் உணர்வுபூர்வமாக பஞ்சபூதங்களுடன் தொடர்பில் இருப்பது – நிலம், நீர், காற்று, சூரியஒளி அல்லது நெருப்பு மற்றும் ஆகாயம். மற்றொரு அம்சம் நீங்கள் உண்ணும் உணவு பற்றியது – அதிக பதப்படுத்தப்பட்ட உணவு தவிர்க்கப்பட வேண்டும்.

இன்னொரு கூடுதல் அம்சம் இன்றைய நவீன தலைமுறையிடம் உணர்வுபூர்வமான பாதுகாப்பு இல்லாததால் அவர்கள் அடையும் துன்பம். அவர்களால் தங்களின் உணர்வுகளை சரியான முறையில் ஒருவரிடமும் விதைக்க முடிவதில்லை, ஏனெனில் யாரும் நீண்ட நாட்கள் அவர்களுடன் இருப்பதில்லை.

மொத்தத்தில், மன அழுத்தம் அதிகமாக காரணம் மாறிவரும் வாழ்க்கை முறைதான். மிக அதிகமாக சாப்பிடுதல், அதற்கு தேவையான செயல் இல்லை, இயற்கையுடன் தொடர்பு இல்லை, பஞ்சபூதங்களுடன் தொடர்பில்லாமல் இருப்பது, உணர்வுகளை பாதுக்காக்க தெரியாமல் இருப்பது – மன அழுத்தம் இத்தனை தீவிரமாக இன்றைக்கு உலகில் பரவியதற்கு இவைதான் முக்கிய காரணங்கள்.

இந்த அம்சங்களை சரியாக கையாண்டால், நம்மால் மன அழுத்தம் மற்றும் இதர மனக்கோளாறுகள் கணிசமாக உருவாவதையும், மேலும் பரவுவதையும் குறைத்துகொள்ள முடியும்.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…

இடைத்தேர்தல்: வேட்பாளருக்கு ஒப்புதல் பெற ஈபிஎஸ் தரப்பு தீவிரம்!

மணிப்பூர்: அதிகாலையில் நிலநடுக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

1 thought on “மன அழுத்தம் காரணங்களும் அதிலிருந்து விடுபடும் முறையும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *