தமிழுக்கும் அமுதென்று பேர் !
ஸ்ரீராம் சர்மா
மொழி என்பது சமூகத்தின் உயிர் நாடி !
அதனால்தான் உயிரினும் மேலாக தாய் மொழியை உயர்த்தி – தாயகத்தை கொண்டாட வேண்டுமென மேலோர்கள் நமக்கு அறிவுறுத்திப் போனார்கள்.
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்”
அவ்வாறு பாரதியார் சொன்னதற்கு என்ன பொருள் ?
சாத்திரம் என்பதற்கு தொழில் நுட்பம் என்றும் பொருள்படும் !
அயல்நாட்டினர் கண்டடைந்த தொழில் நுட்பங்களை தமிழ் மொழிக்கு ஆதரவாக பெயர்த்துக் கொண்டு வாருங்களேன் என்பதுதான் அவரது அன்றைய ஆதங்கம்.
அடிமை இந்தியாவில் செய்வதறியாது கதறிய அந்தப் பெருமகனது ஆதங்கத்தை இன்று செவ்வனே செய்து முடித்து – மேலும் முன்னேறிக் கொண்டிருக்கின்றது தமிழின் முதல் டிஜிட்டல் பத்திரிக்கையான மின்னம்பலம் !
பையப் போராடி பொலிந்து நிற்கும் இன்றைய மின்னம்பலத்தின் அழகு கண்டு எனது எளிய மனம் நன்றியோடு கசிந்து நெகிழ்கிறது.
அதற்குக் காரணமான அதன் ஆசிரியரையும், அவரது குழுவினரையும் மனதார வணங்கி மென்மேலும் பொலிய வாழ்த்துவது எனது கடமையாகிறது.
பாரதியார் தன் புதிய ஆத்திச்சூடியில்…
“கவ்வியதை விடேல்” ( சரியெனப்பட்டதை விட்டுக் கொடுக்காதே ) – “கேட்டிலும் துணிந்து நில்” ( வறுமையிலும் துணிந்து முன்னேறு ) சூரரைப் போற்று ( திறன் கொண்டவரை ஆதரித்து நில் ) சொல்வது தெளிந்து சொல் ( ஆராயாமல் எதனையும் பதியாதே ) எனவாறு 110 விதிகளை சொல்கிறார்.
அதில், பலவற்றுக்கும் உரித்தானது மின்னம்பலம் ! எனினும், உரைத்துச் சொல்ல ஒரு சங்கதி உண்டு. எட்டயபுரத்தாரின் அறுபத்து ஆறாவதான அறிவுரையாவது “பணத்தினை பெருக்கு” என்பது.
அதனையும் ஈடேற்றிக் கொள்ள மின்னம்பல நிர்வாகத்தாரையும் – அதற்கு துணை நிற்க வேண்டுமாய் உலகார்ந்த தமிழுலகத்தாரையும் விழைந்து வேண்டிக் கொள்கிறேன்.
நிறைந்து வாழிய மின்னம்பலம் !
***
மின்னம்பலத்தின் இன்றைய புதுப்பொலிவை கொண்டு வாழ்த்த என்னால் என்ன செய்துவிட முடியும் ? அன்னை தமிழின் மேன்மை குறித்து ஆழ எழுதினால் மின்னம்பலத்தாரின் மனம் குளிரும். துணிகிறேன் !
***
“வாழ்க நிரந்தரம் ; வாழ்க தமிழ் மொழி ; வாழிய வாழியவே !” என்ற மகாகவி பாரதியாருக்கு தாசனாக தன்னை வரித்துக் கொண்டு நின்ற பாரதிதாசனார்…
“தமிழுக்கும் அமுதென்று பேர்” என்றார் !
கவனியுங்கள்…
“தமிழுக்கு” அமுதென்று பேர் என நிர்தாட்சண்யமாக அவர் சொல்லி விடவில்லை. மாறாக, “தமிழுக்கும்” என்கிறார்.
அதாவது, அயலரின் அன்னை மொழிகளை நாங்கள் உளமாற மதிக்கிறோம். போலவே, எங்கள் “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்பதை கற்று உணர்ந்து களியுங்கள் எனப் பணிந்து பிரகடனம் செய்கிறார்.
பாரதிதாசனாரின் அந்தப் பணிவைத்தான் “குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு” என்றார் திருவள்ளுவப் பேராசான் !
முன்னோர்கள் என்னதான் நம்மை பணிந்திருக்கச் சொன்னாலும் அமுதத் தமிழ் மொழியின் ஆழத்தை உள்ளோடிக் காணக் காண கண்கள் பனிக்க கர்வம் மேலிட்டு விடுகிறதே !
அம்மவோ, கிபி – கிமு என்பதெல்லாம் ஒரு பொருட்டில்லை என்பதாக வரலாற்று காலங்களுக்கு மிக முந்தியதாய் எத்துனை எத்துனை மகோன்னதப் படைப்புகளை கொண்டு துலங்கி ஒளிவீசிக் கொண்டிருக்கின்றது நம் அன்னைத் தமிழ் !
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய் !
எனப் பாரதியார் பாடியதற்கு என்ன பொருள் ?
என்றோ நிகழ்ந்த இராமாயண – மகாபாரத புராணங்களை தங்கள் உள்ளுணர்வால் கண்டுணர்ந்து சொன்னவர்களால் கூட, இந்த தமிழ் மொழி என்று பிறந்தது எனக் கண்டு சொல்லி விட முடியாதபடிக்கு மிக மிக மூத்தவளாக நின்று பிரமிக்க செய்பவளாம் எங்கள் தாய் என்பதுதானே பொருள் !
அன்னைத் தமிழில் என்னதான் சொல்லப்படவில்லை !
சித்தர் பாடல்களில் சொல்லப்படாத அறிவியல் ஒன்றில்லை. அதனை ஆழ்ந்து புரிந்து கொள்ளும் அறிவை கொண்டுவிட்டால் நமக்கு வானமா எல்லை !?
முருகுபொரு நாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய
கோலநெடுநல் வாடைகோல் குறிஞ்சிப் பட்டினப்
பாலைக் கடாத்தொடும் பத்து.
எனும் பத்துப் பாட்டோடு எட்டுத் தொகை, புறநானூறு – அகநானூறு – ஐங்குறு நூறு, கலித்தொகை என்பதொடு…
நாலடி நான்மணி நால்நாற்பது ஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி – மாமூலம்
இன்னிலைய காஞ்சியொடு ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு !
என்பதாக கீழ்கணக்கு நூல்களோடு விரியும்…
உயர்சங்கத் தமிழின் ஒய்யாரப் பெற்றியை முற்றிலும் கட்டிச் சொல்லி விடலாகுமா ?
ஔவையாரையும் – காளமேகத்தையும் – கம்பனது பத்தாயிரத்து சொச்சத்தையும் – நாலாயிரமாம் பிரபந்த வீச்சையும் – ஞானத் தமிழ் மொழிந்த ஆண்டாளையும் –
தேவாரம் – திருவாசகம் – திருமந்திரம் என மொத்தமும் கற்றுணர பிறவி ஒன்று போதுமா ? அட, கர்ப்ப வாசம் பலகண்டுமது சாலுமா ?
அம்மவோ, செழுந்தமிழ் பேசாத துறை ஒன்று உண்டா ?
செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
தேனலர் சண்பகவாசம் வானுலகில் வெடிக்கும் !
என்கிறார் திரிகூட ராசப்ப கவிராயர்.
காதல் மனம் முற்றிய குரங்கினங்கள் விளைந்த மாம்பழங்களை பறித்து அங்குமிங்குமாக வீசிக் கொண்டாட – குற்றால மலையில் தேன் உமிழும் செண்பக மலர்களின் நறுமண வாசம் தேவர்களின் வானுலகு வரை வீசி வெடித்து எழும் எனும் அவரது குற்றால குறவஞ்சியை வியக்கவா ?
ஓயா நோய்க்கிடம் ஓடுமரக்கலம்
மாயா விகாரம் மரணப் பஞ்சரம்
எனும் பட்டினத்தாரின் அழுக்குடம்புப் பாடலின் வீரியத்தை வியக்கவா ?
காமத் தூதிலக்கியமான “விறலிவிடு தூது” அதனில்,
என்ன போம் ? ஒரு செம்பு தண்ணி போம்
என நெற்றிப் பொட்டில் அடித்த கூளப்ப நாயக்கரை வியக்கவா ?
கிளியே ! கிளைஞர் மனத்தே கிடந்து , கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே
அணியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே
எனும் அபிராம பட்டரின் ஆனந்த வெளியை வியக்கவா ?
என்னையறியாமல் என்னைதிருடி
இன்புதன்னைக் கொடுப்பவனைச்
சார்வேனோ பொன்மயிலே !
எனும் பாம்பன் சாமிகளின் சைவத் தமிழை வியக்கவா ?
குக்குக்கூ என்றது கோழி எனும் குறுந்தொகைக் காட்சிக்கு கலைஞர் எழுதிய உரை வரிகளையும்…
ஏதில் குணத்தான் இளங்காளை காதல் வெறிப்
போதில் வரைந்த பூப்போன்ற சித்திரங்கள்
நாத வடிவாகி நள்ளிரவில் களிசேர்க்க
மாது மயங்கி வைகறையில் தை மறந்தாள்
என நாகரீகமாக மோகக் கடல் கடைந்த கவியரசர் கண்ணதாசனையும் வியந்து கொண்டே இருக்கவா ?
அன்னைத் தமிழை அணுவணுவாய் ஆராய்ந்தால் மூளை மயங்காதா ? மூச்சடைத்துப் போகாதா ? தமிழனாய் பிறந்த செருக்குற்று பேதை மனம் உலகென்ன விலை என்று ஓடோடிக் கேட்காதா ?
நிற்க !
உலகரங்கில் நம்மை தலை நிமிரச் செய்த தமிழுக்கு நாம் என்ன கைம்மாறு செய்து விட்டோம் என உணர்ந்தாக வேண்டிய தருணமிது !
நம்மால் இயன்றளவில் தமிழை – தமிழ் கலாச்சாரத்தை – தமிழ் மண்ணின் பெருமையை – ஆற்றலை உலகுக்கு உயர்த்திக் காட்ட வேண்டிய காலமிது !
மாறிவரும் உலகின் தொழில் நுட்பத்துக்கு ஈடு கொடுத்து – அதே சமயம் வருங்கால சமூகத்தை நாகரீகமாக அறிவு சார்ந்து வழி நடத்தி வைக்கும் கடமை நமக்கிருக்கிறது.
அதனைத்தான் இதுகாறும் மின்னம்பலம் சாதித்துக் காட்டியிருக்கிறது என்பேன் !
இன்னுமின்னும் முன்னேறி தமிழ்ச் சமூகத்தை வழி நடத்தும் என நம்புவேன் !
வணங்கி வாழ்த்தி அமைகிறேன் !
வாழிய மின்னம்பலத்தார் !
வாழிய தமிழகம் !
கட்டுரையாளர் குறிப்பு
வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.