ஸ்ரீராம் சர்மா
அது ஒரு ஏரி.
அதன் நடுவே ஒரு குன்று.
அந்த ஏரிக்கரையோரத்தில் இயற்கையுள் ஆழ்ந்தபடி அமர்ந்திருந்தாராம் ஒரு சூஃபி ஞானி !
வீசியடித்த காற்றின் வேகத்தால் அந்தக் குன்றில் இருந்த மணற் துகள் ஒன்று மெல்லப் பெயர்ந்து உருண்டு அந்த ஏரிக்குள் மூழ்கிப் போய்விட…
“கடவுளே, கடவுளே… குன்றைக் காணோமே…!” என அலறத் துவங்கினாராம் அந்த சூஃபி ஞானி.
ஆம், ஒரு துகள் போனாலும் குன்று என்ற அந்தஸ்தை அது இழந்து விடுகிறது. போலவே, ஒரு உயிர் போனாலும் சமூகமானது அதன் கட்டமைப்பை இழந்து விடுகிறது என்பதுதான் அந்த அலறலுக்கான அரும்பொருள்.
சூஃபி ஞானியின் அலறல் இயற்கையின் வெளிப்பாட்டால் உருண்ட துகளுக்கு வேண்டுமானால் பொருந்தும். தற்கொலை என்னும் செயற்கையான – விவரமற்ற எந்த உயிரிழப்புக்கும் அது பொருந்தாது.
அங்கொன்றும் இங்கொன்றுமானால் சமூகம் அதிர்ச்சி கொள்ளும். அடிக்கடி என்றால் அதை மறுதலிக்கத்தானே செய்யும் !?
வேலுநாச்சியார் பிறந்த வீரத்தமிழ் மண்ணில் வென்று காட்டி நிற்க வேண்டாமா ? எதற்கோ, எவர் பொருட்டோ தோற்றுத் தொங்கிக் கிடப்பது அபத்தம் அல்லவா ? அவலம் அல்லவா ?
நெரிசலான இந்த அவசர உலகம் அபத்த மரணம் குறித்தெல்லாம் அக்கறைப்பட்டுக் கொண்டிருக்குமா ?
புரட்சியாளர்களின் மரணங்களையே புறக்கணித்துச் சுழலுமிந்த பொல்லாப் பூமி விவரமற்ற மரணத்தைக் குறித்துக் கொள்ள சம்மதியாதே !
ஆம், நமது மரணம் இந்த சமூகத்தை பெரிதாக பாதித்துவிடும் என நம்பித் தொலைவது நலமற்ற நகைச்சுவையே என்கிறார் சைவ சித்தாந்தப் பெருந்தோன்றலாகிய நம் திருமூலர்.
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கி பிணமென்று பேரிட்டு
சூரையங் காட்டிடை கொண்டுபோய் சுட்டிட்டு
நீரினுள் மூழ்கி நினைப்பொழிந்தார்களே !
“நீரினுள் மூழ்கி நினைப்பொழிந்தார்களே!” என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள்.
எழுந்த சூரியன் ஓடி முடித்து மறுநாட்பொழுது உதித்தெழுங்காலை விழித்தெழும் இந்த சுயநலவுலகம் புதுக்கோலம் கொண்டு தன்போக்கில் வாழ முற்பட்டுவிடும் என்கிறார்.
“கிடைத்த வாழ்வைப் பயன்படுத்தி எழுந்து நில்லுமின்…” என ஆதூரத்தோடு அறிவுறுத்துகிறார் மெய்ஞானப் பேராசான் திருமூலர்.
திருமூலர் எடுத்துரைத்ததை உணரத் தவறி விட்ட அந்த அருமை மகள் தூரிகை – அவளது இல்லாமையை தன்னியல்பாக மறந்தடித்துப் போகும் இந்தச் சமூகம் என்பதை உணராமல் போனாளே !
அந்த இருண்ட ராத்திரியில் மருண்டதோர் அழைப்பு.
அழைத்தவன் ஜான் தன்ராஜ் எனும் புகழுடைய கவிஞன். சன் தொலைக்காட்சி உட்பட பற்பல மீடியாக்களில் சமூக நிகழ்ச்சிகளை நடத்தும் எனது கல்லூரிக் காலத் தோழன். ஜான் தன்ராஜின் குரலில் தெறித்த ஆதங்கக் கோபம் என் உறக்கத்தை கலைத்து உலுக்கியது.
“அம்மவோ… கேட்டாயா அந்தக் கொடுமையை… அடுக்குமா அது ? தூரிகை மகளுக்கு மண வாழ்த்து எழுத வேண்டிய சக கவிஞன் நான் எதை எழுதிவிட்டேன் பார்த்தாயா ? எப்படி மீட்கப் போகிறோம் இந்த இளைய சமூகத்தை ? எப்படித்தான் மீட்கப் போகிறோம் கபிலன் என்னும் அந்த வெள்ளந்திக் கவிஞனை ?”
கபிலன் !
கூச்சமிகுந்த புதுக்கவிதைப் போராளி. கல்லூரி வாழ்வில் கண்ட மூத்த கவிஞன். சில காலம் மெல்ல அசைந்தபடி பாஸ்போர்ட் ஆஃபீஸின் வெப்பக் காந்தலைக் கடந்தவன். இட்டலி வித்த தாயின் மகனாக துளிர்த்தாலும் ஆல்தோட்ட பூபதி நானடா என எழுந்து நின்றவன்.
அந்த மெல்லியனுக்கோர் மகள். லக்ஷ்மியும் – காளியும் ஒன்றிணைந்தாற் போல் அங்க லக்க்ஷணம் கொண்ட அதிரூபி. ஆங்கிலப் பத்திரிக்கையைத் துவங்கி வழி நடத்துமளவுக்கு தன் முனைப்புக் கொண்ட நவரூபி.
மகளே, மகளே… நீயா எடுத்தாய் அந்த முடிவை ?
GIRLS BE STRONG, IMPROVE STRONGER என 2020 டிசம்பர் 10ல் நீ எழுதிய எழுத்தெல்லாம் பொய்தானா மகளே ?
தற்கொலை என்பது அபத்தம் என்பதை வலியுறுத்தி “பொழுதாளுமை” “எனதருமை மாணவச் செல்வங்களே…” எனக் கை ஓய மின்னம்பலத்தில் கட்டுரைகளாக எழுதினேனே ! அதனை, MIT வேளாண் கல்லூரி தனது விளம்பரப் பலகையிலும் வைத்து அறிவுறுத்தியதே !
மொத்தத்தையும் உனதந்தக் கருப்புச் சேலை கொண்டு இருக்கி விட்டாயே தாயே !
அரும்பாடுபட்டு வளர்த்த உன் தகப்பனுக்கு பெருமை சேர்க்கக் கூடிய திறன் படைத்த உன்னை மரண முகட்டில் நிறுத்திப் போனது எது பெண்ணே ? எதுவாக இருந்தாலும் எதிர்த்து நின்றிருக்க வேண்டாமா ?
வேலுநாச்சியாராக – உடையாளாக – குயிலியாக நின்று போராடியிருக்க வேண்டாமா ?
அப்படித் துணிந்திருந்தால் ஊருக்கு எழுதிச் சொல்லும் உன் தகப்பன் உன்னை விட்டுக் கொடுத்திருப்பானா ? சுற்றமும் நட்பும் உன்னைத் தன்னளவில் அரவணைத்திருக்காதா ?
மெத்தைத்தாய் பெற்றெடுத்த
இரட்டைக் குழந்தைகள்
தலையணைகள் !
அன்றொரு நாளில் இப்படி எழுதிய கபிலன் எனும் அந்தப் புதுக் கவிஞன் இனி ஒற்றைத் தலையணையோடு எப்படித்தான் உறங்குவான் பெண்ணே !
சொல், பதினெட்டாம் நூற்றாண்டுக் குயிலியின் தியாகமும் உன் தற்கொலையும் ஒன்றாகிவிடுமா ?
போதும்… போதும்…
அர்த்தமற்ற தற்கொலைகளை – தற்கொலையாளர்களைப் பற்றி இனி நான் எழுதப் போவதில்லை.
இது கேள் தூரிகை ! உன்னைக் குறித்து நான் எழுதும் இந்தக் கட்டுரையை உன்னால் படித்துணரக் கூடுமென ஆழமாக நான் நம்புகிறேன். அது குறித்த விவரங்களை மெல்ல விரித்து சொல்லிவிட முனைகிறேன்.
ஆம், தற்கொலை செய்யத் துணியும் விவரமற்றவர்களுக்கு தமிழ் மரபின் தத்துவத்தையும் – மேற்கத்திய அறிவியலையும் துணையாகக் கொண்டு உறுதிபட ஒன்றை சொல்வேன்.
உங்கள் மரணத்தோடு உங்கள் துன்பங்கள் எல்லாம் தீர்ந்து போய்விடும் என நம்பித் தொலைத்து விடாதீர்கள். அது, இடைவிடாது என்றும் தொடர்ந்து வரக் கூடும் !
எப்படி ? கவனிப்போம் !
நமது உடல், அமரும் நாற்காலி, டேபிள், கம்யூட்டர், உச்சியில் சுற்றும் ஃபேன் என சகலமும் அணுக்களின் கூட்டமைப்பால் ஆனது என்கிறது அறிவியல்.
புரோட்டான், ந்யூட்ரான், எலக்ட்ரான் எனும் மூவகைத் துகள்களின் மாறுபாடுற்ற எண்ணிக்கையால் அவைகள் பலவகை தோற்றங்களைக் காட்டி நிற்கின்றன.
கவனியுங்கள். நாற்காலி – டேபிள் – ஃபேன் அனைத்தும் நொறுக்கி எரிக்கப்பட்டாலும் கூட அதன் ஆதாரமான அணு என்பது அழியாது என்பதே அறிவியல் காட்டும் பேருண்மை !
ஆக, மரணத்தால் நமது உடலின் திசுக்கள் அழிந்தாலும் – அதன் மூலக் கூறான அணு என்பது அழிவதே இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா ?
அப்படியெனில், அந்த அணுக் கூட்டங்கள் இங்கே சுற்றிச் சுழன்றபடியே தான் இருக்கும். ஆம், “நீங்கள்” இன்னமும் இங்கே இருந்து கொண்டே இருக்கிறீர்கள் என்பதே அதன் பொருளாகும்.
கூடவே, ஆஸ்திரேலிய அறிவியல் கழகத்தை சார்ந்த ALYSON WILSON என்பவர் தனது ஆய்வில், “இறந்த உடல்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன…” என வெளிப்படுத்தி இருப்பதை ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை பதிந்திருப்பதைக் குறித்துக் கொள்ளலாம் .
அடுத்த கட்ட கேள்வி, அந்த அணுவுக்கு உணர்வு உண்டா என்பது ! உண்டு என்றுதான் எண்ண முடிகிறது.
அணு என்பது RESPOND செய்கிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஒரு துகள் RESPOND செய்கிறது என்றால் அதற்கு ஏதோவோர் உணர்வு இருக்கக் கூடும் என உள்ளார்ந்து உணர்ந்து கொள்ள முடிகிறதல்லவா ?
“சாணிணும் உளன் ஓர் தன்மை
அணுவினை சத கூறு இட்ட
கோணினும் உளன்” என்கிறார் கம்பர்.
அதற்கு பலபடி மேல் செல்லும் திருமூலர் தன் திருமந்திரத்தில்,
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்க்கு
அணுவில் அணுவை அணுகவும் ஆமே !
என்கிறார்.
அணுவை நூறாய் பிளந்தாலும் – ஆயிரமாய் பிளந்தாலும் அதற்குள்ளும் உளன் என நம் முன்னோர்கள் அறுதியிட்டுச் சொல்வது இறைவனாகிய பரம்பொருளைத்தான் என்றால்…
அந்தப் பரம்பொருளுக்கு உணர்விருந்த காரணம் பற்றித்தானே அது பத்தவதாரமாய் – புத்தராய் – ஏசுவாய் – நபிகளாராய் கீழிறங்கி வந்திருக்க முடியும் !?
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங்காட்சி
ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
என எட்டாம் திருமுறையாம் திருவாசகத்தின் திருவண்டப் பகுதியில் விகசித்து அறிவுறுத்துகிறாரே மாணிக்க வாசகப் பெருமான் !
ஆக, உடல் அழிந்தாலும் அதன் அணுக்கள் அழிவதில்லை என்பதை புரிந்து கொள்ளும் போது – பிரதிபலிக்கும் தன்மை படைத்த அந்த அணுவுக்குள் நம் உணர்வுகளும் தொட்டுத் தொடரக் கூடும் எனவும் உள்ளார்ந்து புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா ?
எண்ணிப் பாருங்கள்…
ஒரு பெரும் துன்பத்தோடு ஆவேசமாக நம் உடலின் திசுக்களை அழித்துக் கொண்டாலும் கூட – அழிந்துபடாது தொடர்ந்தலைந்து கொண்டிருக்கும் நமது அணுக்களில் உங்கள் துன்ப உணர்வுகளும் தொடர்ந்து கொண்டே இருக்க வாய்ப்புள்ளது அல்லவா ?
எனில், உங்கள் துர்மரணத்துக்கான பதிலை சொல்லியாக வேண்டிய அழுத்தம் உங்கள் மீது விடாது படர்ந்து தொடர்ந்து வரக் கூடுமல்லவா ?
சொல்லுங்கள், இதனைத் தப்பித்தல் எனக் கொண்டுவிட முடியுமா ?
தற்கொலையை தேர்ந்தெடுக்கும் விவரமற்ற அப்பாவிகளே… இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்.
மரணத்துக்குப் பின்னும் உங்கள் வாழ்வு தொடரக் கூடுமென உணருங்கள்.
தொடரும் அந்த வாழ்க்கையை இனிமையாக்கிக் கொள்ள வேண்டும் எனில், உங்களது மரணம் இயற்கையானதாக – பலர் போற்றும்படியானதாக அமைந்தாக வேண்டும் என்பதை தயவுசெய்து குறித்துக் கொள்ளுங்கள்.
வேலுநாச்சியார் போல வென்று வாழ்ந்து – பிறந்த மண்ணுக்கு புகழ் சேர்த்து என்றென்றும் நிறைந்திருந்து பொலியுங்கள் !
எனதெளிய வாழ்த்துகள் !
கட்டுரையாளர் குறிப்பு
வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.