உலகின் பெருங்கதை!

Published On:

| By Kavi

கிரேட்டா துன்பர்க்

தமிழில்: நா.மணி

தற்போதைய நிலையில், 700.9 கோடி மக்கள், அழகிய நீல நிற புவி கோளத்தில் வசித்து வருகிறோம். பால்வெளி மண்டலத்தில், நமக்குள்ள சின்னஞ் சிறு மூலையில், உட்கார்ந்து கொண்டு, அமைதியாக சூரியனை சுற்றி வந்து கொண்டு இருக்கிறோம். உலகில் உள்ள மற்ற உயிரினங்களைப் போலவே, நாம் ஒருவரோடு ஒருவர் பிணைக்கப்பட்டவர்கள். நமது தோற்றத்தையும், வாழ்வாதாரங்களையும் தேடிப் பார்த்தால், இயற்கையில் இருந்து எவ்வளவு தூரம் விலகி நின்றாலும், இயற்கையிலிருந்து நம்மை பிரிக்க இயலாது.

இந்தப் புத்தகத்தில் உள்ள உண்மைகளையும், கட்டுரைகளையும் படித்தால், ஒருவரை மிகவும் அச்சமூட்டக் கூடும். இந்தக் கதைகள் நம்மை போன்றவை. நம்மோடு இணைந்தவை. இந்த நூலில் இடம்பெற்றுள்ள எல்லா கதைகளையும் இணைத்துப் பார்க்க தொடங்கினால், புரிந்து கொண்டால், சங்கிலித் தொடர் போன்ற நிகழ்வுகள் மிகுந்த அபாயம் நிறைந்த பொருளை தரும்.

பருவநிலை பாதுகாப்பு

Solutions to climate change Article

புவியின் புனிதமான கதையை துண்டு துண்டாக்கியது யார்? இதற்கு முழுமையான தீர்வை தாருங்கள் என்று நாம் யாரை அழைப்பது? பல்கலைக்கழகங்களுக்கு மேம்பட்ட பல்கலைக்கழகங்களையா? நமது அரசுகளையா? உலகத் தலைவர்களையா? வணிக உலகத்தையா? ஐக்கிய நாடுகள் சபையையா? பதில் ஒன்றுதான்.

அது, ஒருவரும் இல்லை அல்லது நாம் ஒவ்வொருவரும். துரிதமாக அதிகரித்து வரும் பருவநிலை மாற்றம் மற்றும் சூழலியல் நெருக்கடிகளுக்கு நாமே தொடக்கம். நீடித்த நிலைத்த நெருக்கடியிலிருந்து, தொழில்நுட்பம் மட்டுமே நம்மை பாதுகாக்க முடியாது. துரதிருஷ்டவசமாக, நமது எதிர்கால வாழ்வையும் புவியையும் பாதுகாக்க தக்க சட்டங்கள் இன்றளவும் இல்லை. நமக்கு தேவையான மாற்றத்தை உறுதி செய்து, எதிர்காலத்தை பாதுகாக்கும் சூழல் இப்போதைக்கு நம் கண்ணுக்கு தெரியவில்லை.

பொது கருத்தொற்றுமை வழியாக இதனை மாற்றி அமைக்க முடியும். இந்த மாற்றம் நம்மால் உருவாக்கப்பட வேண்டும். ஏதேனும் வலுவான கருவியை பயன்படுத்தி இதனை செய்தே ஆக வேண்டும். பருவநிலை மாற்றம் என்னும் இப்பெருங்கதையை, எவ்வாறு மக்களிடையே எடுத்துச் செல்வது என்பதில் தான் இருக்கிறது. எப்படி, ஒரே அளவு எல்லோருக்கும் பொருந்தாதோ, அதுபோல, எல்லோரிடமும் ஒரே மாதிரி இந்தச் செய்தியை எடுத்துச் செல்ல இயலாது. ஆயிரமாயிரம் அணுகுமுறைகள் நமக்கு தேவை. தற்போதைக்கு நம்மிடம் இருக்கும் வளங்கள் மிகவும் குறைவானதே. நம்மிடம் இருப்பதை வைத்து தொடங்க வேண்டும்.

சர்வாதிகாரத்தின் வழியாக தீர்வா?

நாம் என்ன செய்யலாம் என்றால், அறநெறி, பிறர் துன்பங்களை தனதானதாக பாவித்தல், அறிவியல், ஊடகம், இன்னும் ஜனநாயகம் உயிர்ப்புடன் வாய்க்கப் பெற்றவர்கள் ஆகியவற்றை வைத்து தொடங்க வேண்டும். இவற்றை பேராயுதங்களாகக் கொண்டு இப்பணியை தொடங்க வேண்டும். இந்த விசயத்தில் அறநெறியை ஈடுபடுத்த கூடாது. அறம் ஒருவிதமான குற்ற உணர்ச்சியை தூண்டும் என்று கூறுவோர் உண்டு. இந்தக் குற்ற உணர்வு பெரிய மாற்றத்தை சாதிக்க பயன்படாது என அவர்கள் வாதிடலாம். அறநெறியை தவிர்த்து விட்டு வேறு என்ன செய்ய முடியும்? யாரையும் குற்ற உணர்வுக்கு ஆட்படுத்தாமல் இந்த அசௌகரியமான விசயத்தை எப்படி கையாள முடியும்?

தொழிலாளர்களின் மீதான உழைப்பு சுரண்டல், இயற்கை வளங்கள் மற்றும் நில மோசடி, இனப்படுகொலைகள், கட்டற்ற நுகர்வு ஆகியவற்றின் விளைவாக உருவான கடுமையான ஏற்றத் தாழ்வுகள். இதனால் உருவாக்கப்பட்ட மனித சமூகத்தின் இருத்தலியல் நெருக்கடி. அற உணர்வை தூண்டாமல் எப்படி இதனை சுட்டிக் காட்ட முடியும்? இதுவரை நாம் சந்தித்திராத நெருக்கடியை நாம் சந்திக்கிறோம். இதனை பெரும் வாய்ப்பாக பயன்படுத்தி, எந்தவித பாதிப்பும் இன்றி, புதிய பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று பாசாங்கு செய்யலாமா? கொஞ்சம் பேர் மிகவும் சிறிய எண்ணிக்கையிலானவர்கள் தான். இவர்கள், சர்வாதிகாரத்தின் வழியாக உலக நெருக்கடிக்கான தீர்வை கண்டறிந்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

Solutions to climate change Article

சர்வாதிகாரத்தில் நல்ல சர்வாதிகாரம் என்று ஒன்று இல்லை. இதற்கு சீனாவும் ரஷ்யாவின் புதினுமே உதாரணம். ஜனநாயகத்திற்கு குறைவான வேறு வடிவங்கள் சரியென்று நம்புவது மூடநம்பிக்கை. நீதியும் சம உரிமைகளுமே பிரச்சினைகளை தீர்க்க சரியான தீர்வு. இது எந்தவித சர்வாதிகாரத்தையும் தானாகவே செயல் இழக்கச் செய்யும். நம்மிடம் உள்ளவற்றில் ஜனநாயகமே மிகவும் மதிப்புமிக்கது. ஆனால் இது கட்டுறுதியற்றது என பல முறை கண்டுள்ளோம். எல்லா விசயங்களையும் நன்கு அறிந்த, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மக்களால் தான் தங்கள் வாழ்வாதாரத்தையும் ஜனநாயகத்தையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். இல்லையெனில், மிக எளிதாக அவர்களுக்கான ஜனநாயகமாக மலினமாக்கி விடுவார்கள்.

இந்தப் புத்தகத்தில் பேசப்படும் அறிவுசார் விசயங்களோ அல்லது அறிவியலோ நமது வாழ்வா சாவாவிற்கானது. இது நமக்கானது மட்டுமல்ல. நமது சந்ததியினர் மற்றும் புவியில் உள்ள சில ஜீவராசிகளுக்கானது. நாம் கவனம் செலுத்த வேண்டிய, தீர்க்க வேண்டிய, பல முக்கிய பிரச்சினைகள் உள்ளன. ஆனால் பருவநிலை மாற்றம் என்ற பிரச்சினை அப்படிப்பட்டதல்ல. இப்போது தவறவிட்டால் இனி எப்போதும் செய்து முடிக்கவே முடியாத பிரச்சினை. மற்ற அனைத்து பிரச்சனைகளையும் எப்படி தீர்க்கப் போகிறோம் என்பது, இந்தப் பிரச்சினையை எப்படி தீர்க்கப் போகிறோம், என்பதில் தான் அடங்கியுள்ளது.

பருவநிலை மாற்றம் மற்றும் சூழலியல் நெருக்கடிகள் பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடக் கூடிய ஒன்று அல்ல. யாரோ செய்யட்டும், நாம் அமைதியாக இருந்து விட்டு செல்லலாம் என்று நினைக்கும் காரியமும் அல்ல. இன்றே தொடங்க வேண்டிய வேலை இது. நாம் செய்ய கற்றுக் கொள்வோம். அடிப்படை உண்மைகளை புரிந்து கொள்வோம்.

பருவநிலை மாற்றம் உரக்கப் பேசுவோம்

Solutions to climate change Article

வரிகளுக்கு இடையில் வாசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இது இப்படி இருக்கிறது என்று கற்றுத் தரும் நிலைக்கு நாம் ஒவ்வொருவரும் தயாராக வேண்டும். எதையும் மிகைப் படுத்தி கூற வேண்டியதில்லை. ஏற்கனவே நம் பெருங்கதை மிக மோசமான கதையாகி விட்டது. இதற்கு சர்க்கரை தடவி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த உண்மையை கையாளும் பக்குவத்தை அடைய வேண்டும். எல்லாம் முடிந்து விட்டது என்று நம்பிக்கை இழக்க தேவையில்லை. மிகவும் காலம் கடந்து விட்டது என்று அஞ்சத் தேவையில்லை. இப்போது தொடங்கினாலும் எவ்வளவு தூரம் சேமிக்க முடியுமோ அவ்வளவு தூரம் சேமிக்க முடியும்.

பருவநிலை மாற்றம், எனும் ஆபத்தே, இவ்வுலகின் பெருங்கதை. இதனை உரக்கப் பேசுவோம்.புத்தகங்களில், கட்டுரைகளில், சினிமாக்களில், பாடல்களில், சிற்றுண்டி மேஜைகளில், மதிய உணவு நேரங்களில், குடும்ப சந்திப்புகளில் மின் தூக்கிகளில், பேருந்து நிறுத்தங்களில், பயணங்களில், கிராமப் புற கடைகளில், பள்ளிகளில், தொழிற்சாலைகளில், உடற்பயிற்சி கூடங்களில், பணியிடத்தில் வயல்களில் சங்கக் கூட்டங்களில், அரசியல் பயிற்சி வகுப்புகளில், மழலையர் வகுப்புகளில், முதியோர் இல்லங்களில், மருத்துவ மனைகளில், கார் பைக் பழுது பார்க்கும் மையங்களில், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் இன்னபிற சமூக ஊடகங்களில், புழுதி படிந்த கிராமப் புற சாலைகளில், நகரப் புற சாலைகளில், சந்து பொந்துகளில்… எல்லா இடங்களிலும் எப்போதும் பருவநிலை மாற்றம் என்னும் இப்பெருங்கதையை உரக்கப் பேசுவோம்.

இதுவரை வாழ்ந்து மடிந்த நம் மனித மூதாதையர்களான ஹோமோ சேபியின்களில் நாம் ஏழு விழுக்காடு. நாம் அனைவரும் காலத்தோடும் வெளியோடும் தொடர்புடையவர்கள். காலத்தே நமது பொதுவான எதிர்காலத்தை கட்டமைத்துக் கொள்ள முன்னேறுவோம். நமது உற்று நோக்கல், படித்தல், ஞாபகசக்தி, படிப்படியாக வளர்ச்சி அடைதல், ஏற்றுக் கொள்ளல், கற்றுக் கொள்ளுதல், மாற்றத்திற்கு உட்படுத்தி கொள்ளல், கதை கூறுதல் போன்ற திறன்கள் வழியாக நாம் நிறைய தரவுகளை சேகரித்து உள்ளோம். நிறைய அறிவை சேகரித்து உள்ளோம். இதன் மூலம் நம்மை நாம் பாதுகாத்து கொண்டு, நமது வாழ்வாதார நிலைமைகளையும் மேம்படுத்தி உள்ளோம்.

பேரழிவை தடுக்க வேண்டிய தருணம்

இது நமக்கு அளவற்ற சாத்தியப்பாடுகளையும், போதுமான வளமிக்க உலகையும் உருவாக்கி கொடுத்துள்ளது. இவை எல்லையற்ற கூட்டு முயற்சியின் சாதனைகள். இந்தப் பால்வெளி மண்டலத்தில் இது தனித்துவமானது.இவை கை நழுவிப் போகப் போகிறது. இது இதை பாதுகாப்பதில் இன்னும் தோற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். நமது பொது நலத்திலும், நல்வாழ்விலும் குறுக்காக நிற்கும் ஒரு சிறு பகுதி மக்கள், நினைத்துக் கூட பார்க்க முடியாத சொத்துகளை சேர்க்கவும், அவர்களது பேராசை, சுயநலம் ஆகியவற்றை அனுமதித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால், இப்போது உங்களுக்கும் எனக்கும் இதனை சரிசெய்ய வேண்டிய வரலாற்று பொறுப்பும் கடமையும் இருக்கிறது. மனித குலத்தின் இந்த கெடுவாய்ப்பான நேரத்தில், பங்காற்றிட நமக்கு ஓர் அரிய வாய்ப்பு. இந்தப் பெருங்கதையை மக்கள் முன் எடுத்துரைக்கவும், இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவும் நமக்கான தருணம் வந்துள்ளது. நாம் அனைவரும் இணைந்து இன்னும் மிக மோசமான சூழல் உருவாகாமல் தடுக்க இயலும். இப்போதும், பருவநிலை மாற்றம் மூலம் நிகழவிருக்கும் பேரழிவை தவிர்க்க முடியும்.

நாமே உருவாக்கிய பூமிப்பந்தின் காயங்களுக்கு நாமே மருந்திட முடியும். நாம் ஒன்றிணைந்தால் செய்ய முடியாததை செய்ய இயலும். ஒரு சிறு தவறும் நிகழாமல் நம்மால் இதனை செய்து முடிக்கவே முடியாது. இந்தக் காரியத்தை செய்து முடிப்பது நம்மை பொறுத்ததே. நீங்களும் நானும் இணைந்து இங்கே இப்போதே செய்யத் தொடங்க வேண்டிய காரியம்.

குறிப்பு: 2003 ஆம் ஆண்டு ஸ்வீடனில் பிறந்த கிரேட்டா துன்பர்க் 2018 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றத்திற்கான போராட்டத்தை தனது நாட்டு பாராளுமன்றத்தின் முன் தொடங்கினார். “விடியலுக்கான வெள்ளிக்கிழமை” ( Friday for future) போராட்டத்தை முன் வைத்தார். அவரது போராட்டம் ஐக்கிய நாடுகள் சபை வரை அறியப்பட்டது. “தி கிளைமேட் புக்” என்ற தலைப்பில் அவர் தொகுத்துள்ள நூலின் ஒரு அத்தியாயம் இது. உலகின் உள்ள தலைசிறந்த விஞ்ஞானிகள், பருவநிலை மாற்றத்திற்காக பாடுபட்டு வருபவர்களிடம் கட்டுரைகள் பெற்று இந்த நூலை தொகுத்து உள்ளார்.

கட்டுரையாளர் குறிப்பு

நா. மணி

 Solutions to climate change Article in Tamil By N Mani

பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு. சுற்றுச்சூழல் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட ஆங்கில நூல்களின் ஆசிரியர்.

நமது உடல் நலனைப் போன்றுதானே நமது குடியிருப்பையும் பேணி பாதுகாக்க வேண்டும்?

காலையில் மது: அமைச்சர் விளக்கம்… அண்ணாமலை வருத்தம்!

 கருங்கடல் ஒப்பந்தம்:  ரஷ்யா விலகல் – உணவு தானிய பஞ்சம் வருமா?

உம்மன் சாண்டி மறைவு: கேரள முதல்வர் உருக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel