வழக்கறிஞர் கா. கணேசன்
“அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது” என்பது நம்மூர் பழமொழி. இதையே வள்ளுவன் தனது குறளில்,
“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து” – என்கிறார்.
“அச்சாணி சிறியது எனினும், உருளுகின்ற பெரிய தேருக்கு உதவுவது போல, மனவுறுதி உடையவர்கள் உருவத்தால் சிறியர் எனினும், செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது” என்று தமிழறிஞர் சாலமன் பாப்பையா விளக்கமளித்திருக்கிறார்.
பள்ளி மேலாண்மைக் குழுக்கள்
குழந்தைகளுக்காக இயற்றப்பட்ட சிறப்புச் சட்டங்களில் 2009ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘குழந்தைகளின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமும்’ ஒன்று. இச்சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள பல்வேறு அம்சங்கள் பெரும் போராட்டங்களுக்குப் பின்னரே செயற்பாட்டிற்கு வந்தன. இச்சட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டாண்டுகளுக்குப் பிறகே தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டு குழந்தைகளின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கான விதிகள் இயற்றப்பட்டன.
இதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் SMC எனப்படும் பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கப்பட வேண்டும். இக்குழுவில் அப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என 20 நபர்கள் இருப்பர். பள்ளிகளின் மேம்பாட்டையும், குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் கண்காணிப்பதுவே இதன் நோக்கமாகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குழு தேர்வு செய்யப்படும். தொடக்க நிலையில் அரசுப் பள்ளிகளில் இக்குழுக்கள் பெயரளவிலேயே அமைக்கப்பட்டன. கடந்த 2021ஆம் ஆண்டில் தான் தெளிவான புரிதலோடு, மறுகட்டமைப்பு செய்வதற்கான ஆக்கபூர்வ முன்னெடுப்புகள் தொடங்கின.
அச்சாணியாகும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள்
தமிழ்நாடு முழுவதிலுமுள்ள அரசுப் பள்ளிகளில் 2022 பிப்ரவரி 20 அன்று நடைபெற்ற பெற்றோர் சந்திப்புக் கூட்டங்களில் 23.2 இலட்சம் பெற்றோர் பங்கேற்றது தமிழகக் கல்வி வரலாற்றிலேயே ஒரு மைல்கல். இதைத் தொடர்ந்து 5 கட்டங்களாக 2022 மார்ச் மாதம் முதல் தமிழ்நாட்டிலுள்ள 37,519 அரசுப் பள்ளிகளில் சனநாயகப்பூர்வமாக தேர்தல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பள்ளி மேலாண்மைக் குழுவிற்கும் தலைவரும், உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் பல்வேறு குடிமைச் சமூக அமைப்புகளின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. இக்குழுவில் பெரும்பாலானோர் எளிய பெண்களே. அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, பள்ளிகளின் வளர்ச்சிக்கு இக்குழுக்கள் அச்சாணியாக உருவெடுக்கத் தொடங்கியது நம்பிக்கையளித்தது.
நம்பிக்கை தரும் நகர்வுகள்
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் அயராத முயற்சியால் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மறுகட்டமைப்பு சனநாயகப்பூர்வமாக நடந்தன. பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கும் பொறுப்பான கல்வித்துறை அலுவலர்களுக்கும் தொடர் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. மாநிலம் முழுவதிலும் ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று மாதாந்திரக் கூட்டம் முறையாக நடத்தப்பட்டது. இதற்கான மாநில திட்ட இயக்குநரின் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை) செயல்முறை ஆணை முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழியாக அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் மாதம்தோறும் அனுப்பப்படும். இதனைப் பின்பற்றியே இக்கூட்டம் நடத்தப்படும்.
இக்குழு கூட்ட நடவடிக்கைகளை நேர்த்தியாக பதிவு செய்யும் பொருட்டு சிறப்பான செயலி உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பள்ளிகளின் அடிப்படைத் தேவைகளும், அவற்றுக்காக இயற்றப்படும் தீர்மானங்களும் முறையாக தொகுக்கப்பட்டன. இதன்மூலம் கடந்த செப்டம்பர் 2022 முதல் அக்டோபர் 2023 வரையிலான 14 மாதங்களில் தமிழ்நாட்டிலுள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களில் 3,01,006 அடிப்படைத் தேவைகள் தீர்மானங்களாக இயற்றப்பட்டிருப்பது மிகப்பெரும் சாதனை.
இவற்றில் 14,472 தீர்மானங்கள் சுட்டிக்காட்டியிருக்கிற அடிப்படைத் தேவைகளுக்குப் பள்ளிக் கல்வித்துறையின் முயற்சியால் உடனடித் தீர்வுகளும் காணப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது. எஞ்சியுள்ள தீர்மானங்கள் மையப்படுத்தியிருக்கிற தேவைகளும் முறையாக வகைப்படுத்தப்பட்டு, அதன் அவசர – அவசியத் தேவைகள் கண்டறியப்பட்டு, அவை தீர்வை நோக்கி நகர்வதும் நமக்கு நம்பிக்கையளிக்கிறது.
பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வழியாக அரசுப் பள்ளிகளின் அடிப்படைத் தேவைகள் இலட்சக்கணக்கில் தொகுக்கப்படுவது தமிழக வரலாற்றிலேயே இது முதல் முறை. இதன் மூலம் ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் எளிய பெண்களின் ஆளுமையில் இயங்கும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் உயிர்த்துடிப்போடு செயல்படத் தொடங்கின.
இம்மாற்றம் ஒரு நொடிப்பொழுதில் நடந்துவிடவில்லை. இதற்குப்பின் பெரும் கூட்டுமுயற்சியும் பலரது அர்ப்பணிப்பும் உள்ளது. ஒரு பள்ளியின் வளர்ச்சிக்காக ஆசிரியர்களோடும் தலைமையாசிரியர்களோடும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தன்னார்வத்தோடு கரம்கோர்த்திருக்கிறார்கள் என்பது வியக்கத்தக்க ஒன்றல்லவா! இதுதான் முனைவர் வசந்திதேவி போன்ற கல்வியாளர்கள் கண்ட பெருங்கனவு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகள்
பள்ளிகளின் தேவைகளைக் கண்டறிவதோடு நிற்காமல், அவற்றைச் சரி செய்வதற்கான ஆக்கபூர்வ செயல்பாடுகளையும், இடைநின்ற மாணாக்கர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் இணைக்கும் சிறப்பு முயற்சிகளையும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் முன்னெடுக்கத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. தங்கள் பகுதியிலுள்ள பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்வு எழுதாத, தேர்ச்சி பெறாத மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மாற்று வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முனைப்புகளும் போற்றுதலுக்குரியது.
கண்காணிப்புக் குழு
இந்நிலையில் 2023 டிசம்பர் 22 அன்று தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பான அரசாணையை (G.O (Ms) No.245) வெளியிட்டிருக்கிறது. இந்த அரசாணை மூலம் தமிழகத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக்களால் அடையாளம் காணப்பட்ட தேவைகளுக்கும், இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் தீர்வு காணும் பொருட்டு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் “மாநில அளவிலான கண்காணிப்புக் குழு” (SLMC) ஏற்படுத்தப்பட்டிருப்பது பாராட்டத்தக்க ஒன்று. பள்ளிக் கல்வித்துறையின் அரசுச் செயலர் இதன் செயல் உறுப்பினராகவும், 13 துறைகளின் அரசுச் செயலர்கள் இதன் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டிருப்பது இதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
இந்தியாவிலேயே இதுபோன்ற முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது தமிழகத்தில் தான் என்பது பெருமைக்குரியதும் கூட. மிகப் பொருத்தமான சூழலில் இந்த உயர்மட்ட குழு உருவாக்கப்பட்டிருப்பது அடுத்த பாய்ச்சலுக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. கல்வித்தளத்தில் அடிப்படை மாற்றங்களை நோக்கி நகர்வுகளை ஏற்படுத்தும் ஒரு மைய அமைப்பாக இக்குழு செயல்பட வேண்டும். ஏற்கெனவே அரசுத் துறைகளிலுள்ள பல்வேறு உயர்மட்டக் குழுக்களில் ஒன்றாக இது இருந்துவிடக்கூடாது.
எதிர்பாரா பின்னடைவு
கல்வி என்பது அடிப்படை உரிமை. பள்ளிக் கல்வி என்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, சமூகத்தின் கூட்டுப் பொறுப்பும் கூட. அரசுப் பள்ளிகள் ‘மக்கள் பள்ளியாக’ மாற்றுருவம் அடைவது தானே நம் இலக்கு! இதற்கான நீண்ட பயணத்தின் தொடக்கம் தான் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் உருவாக்கமும் அதையொட்டிய நகர்வுகளும். 2021 முதல் தற்போது வரை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் அக்கறையோடு செயல்படும் ஒருசில உயர்மட்ட அதிகாரிகள் சுழற்றிய சாட்டையின் விளைவாகத்தான் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் என்பதே இன்று பேசுபொருளாக மாறியிருக்கிறது.
ஒரு கட்டிடத்தின் முதல் தளம் வரை பயணித்து அடுத்த தளம் நோக்கி வீறுநடைபோடும் சூழலில், ஒரு பின்னடைவை பள்ளி மேலாண்மைக் குழுக்கள் இப்போது எதிர்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களை நடத்த இயலாது என்றும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையே நடத்த வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசிற்கு அழுத்தம் கொடுத்தன.
இதன் அடிப்படையில், பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்கள் நடத்துவது குறித்து மாநில அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு அரசுப் பள்ளிகளுக்கும் அனுப்பப்படும் செயல்முறை ஆணை நிறுத்தப்பட்டது. இதனால் அரசுப் பள்ளிகளில் மேலாண்மைக் குழுக் கூட்டம் நடத்தப்படவில்லை. இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு அரசும் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் கருத்தினை இதுவரை கேட்கவில்லை என்பதும் கவலையளிக்கிறது.
மாதம்தோறும் கூட்டங்கள்
தற்போது இந்த ஆண்டிற்கான முதல் மேலாண்மைக் குழுக் கூட்டம் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறை ஆணையின்படி (மூன்று மாதங்கள் கடந்த பிறகு) சனவரி 5 அன்று நடந்திருக்கிறது. பிப்ரவரி மாதத்திற்கான கூட்டம் 02.02.2024 அன்று நடத்தப்பட்டிருக்க வேண்டும். இதுகுறித்து செயல்முறை ஆணை வழங்கப்படவில்லை. மாநில அலுவலகத்தில் இருந்து எவ்வித அழுத்தமும் இல்லாததால் இக்குழுக் கூட்டம் மாநிலம் முழுவதும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. இதுபோன்ற அணுகுமுறை மேலாண்மைக் குழுக்கள் வலுவடைவதை நீர்த்துப்போகச் செய்வதாகவே இருக்கிறது.
பள்ளிகளின் அச்சாணியாக இருக்கிற பள்ளி மேலாண்மைக் குழுக்களின் கூட்டங்கள் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட வேண்டும் என்பதே இக்குழுக்களின் எண்ணமாகும். அச்சாணியை முறித்துவிட்டு நாம் எதை அடையப் போகிறோம்? ஏற்கெனவே இயற்றப்பட்டு நிலுவையிலுள்ள இலட்சக்கணக்கான தீர்மானங்களின் நிலை என்ன? இவற்றுக்கான தீர்வுகளை நோக்கி நாம் பயணிக்க வேண்டாமா? நேற்றுவரை ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் ‘நானே ராஜா, நானே மந்திரி’ என்ற மனநிலையில் இருந்திருக்கலாம்.
ஆனால் இன்று காட்சிகள் மாறி வருகின்றன. சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன். பள்ளி வளர்ச்சி என்பது அனைவரது கூட்டுப் பொறுப்பாக மாறியிருக்கிறது. எளிய மக்கள் அரசுப் பள்ளிகளின் மீது உரிமை கொண்டாடவும், அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், கேள்வி கேட்கவும் தொடங்கிவிட்டார்கள். சனநாயகமுள்ள உயிர்த்துடிப்பான கட்டமைப்பாக பள்ளி மேலாண்மைக் குழுக்கள் படிப்படியாக மாற்றம் பெற்று வருவதை நாம் கண்கூடாக காண்கிறோம்.
இனி என்ன செய்ய வேண்டும்?
தமிழகத்திலேயே முதல் முறையாக மாவட்ட அளவிலான “பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு” ஒன்றினை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கடந்த டிசம்பர் 18 அன்று நடத்தியது கல்வியாளர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இவர் பற்ற வைத்த நெருப்பு மற்ற மாவட்டங்களிலும் பரவத் தொடங்கியிருப்பது பாராட்டிற்குரியது. இதுபோன்ற நிகழ்வுகள் வழியாக பள்ளி மேலாண்மைக் குழு அதிகாரப்படுத்தப்பட வேண்டும். கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் வழியாக தேர்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுவின் இரண்டாண்டு பணிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் நிறைவடைகிறது. பாராளுமன்றத் தேர்தலும் ஏப்ரலில் நடைபெறுவதாக தெரிகிறது. அதற்கு முன்பாக, பள்ளி மேலாண்மைக் குழுவிற்கான மறுகட்டமைப்புத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். உள்ளாட்சிமன்றத் தேர்தலுக்கு வழங்கப்படுகிற முக்கியத்துவம் இதற்கும் வழங்கப்பட வேண்டும்.
சிறப்பாக செயலாற்றும் குழுத் தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரிப்பதும் தொடர்ந்து இயங்கவைப்பதும் அவசியம். பள்ளி மேலாண்மைக் குழுத் தேர்தல் என்பது பேசுபொருளாக மாறவேண்டும். இது வெறும் சடங்காக, பெயரளவிலான நியமனமாக இல்லாமல், விருப்புவெறுப்பின்றி, உண்மையான சனநாயகத் தேர்தலாக நடைபெறுவது அவசியம். “ஒருவன் தனக்காக, தன் வாழ்க்கைக்காக உழைக்கும்போது மனிதனாகிறான், ஒரு சமூகத்திற்காக, மக்களுக்காக வாழும்போது அவன் உண்மையான மனிதனாகிறான்” என்றார் காரல் மார்க்ஸ். இம்மண்ணில் உண்மையான மனிதர்கள் நிறைந்து கிடக்கிறார்கள். அவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். அதுபோன்ற பெண்களே மேலாண்மைக் குழுவின் தலைவர் பொறுப்பிற்கு தேர்வு செய்யப்பட வேண்டும். எளிய பெண்களின் ஆளுமையில் தான் அரசுப் பள்ளிகள் அசுர வளர்ச்சியை காணும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு:
வழக்கறிஞர் கா. கணேசன்
குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர். இவரை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: ganeshmsw@gmail.com
கா. கணேசன் கடந்த 27 ஆண்டுகளாக மனித உரிமைத் தளத்தில் செயல்பட்டு வருகிறார். மக்கள் கண்காணிப்பகம் அமைப்பில் பணியாற்றி நூற்றுக்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்த களஆய்வுப் பணிகளையும், பல்வேறு ஆய்வுகளையும், பயிற்சிகளையும் ஒருங்கிணைத்திருக்கிறார்.
தமிழ்நாடு அரசின் மாநில தத்து (Adoption) வள ஆதார மையத்தில் ‘மாநில திட்ட மேலாளராக’ பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு அரசின் பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் மாநில அளவில் பங்காற்றி வருகிறார். குழந்தை உரிமைகள், குழந்தை பாதுகாப்பு உள்ளிட்ட மனித உரிமைப் பணிகளைச் செயற் தளத்தில் முன்னெடுத்து வருகிறார்.
வான்முகில் அமைப்பு முன்னெடுக்கும் குழந்தைகளுக்கான அரசமைப்பு உரிமைக் கல்வித் திட்டத்தில் ஆலோசகராக இருந்து வழிகாட்டி வருகிறார். முன்னணி நாளிதழ்களில், இதழ்களில் மனித உரிமை சார்ந்த கட்டுரைகளை எழுதி வருகிறார்.
கூட்டாட்சி தத்துவத்தின் சாம்பியனாக ஒருவர் இருந்தார்…. டெல்லியில் மோடியை விமர்சித்த பிடிஆர்
Propose Day 2024 : தமிழ் சினிமாவின் டாப் 10 காதல் வசனங்கள்!
ஒரு டஜன் மாம்பழம் ரூ.7000-க்கு விற்பனை… அப்படி என்ன ஸ்பெஷல்?
ஐந்து பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்: பதட்டத்தில் தமிழகம்!