தெற்காசியாவின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றான , சுமார் 68 ஏக்கர் பரப்பளவில் டெல்லியின் மேற்கே சாணக்கியபுரியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் திகார் என்ற கிராமத்தில் 1958 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட திகார் சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் இரும்புக்கோட்டையான அந்த சிறை வளாகத்தில் இருந்து தப்பித்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அப்படி தப்பித்தவர்தான் சார்லஸ் சோப்ராஜ்.
ஒரு மனிதன் நல்லவனா என்பதை முடிவு செய்ய அவன் அறிவு மட்டும் போதாது என்பதற்கு சார்லஸ் சோப்ராஜ் உதாரணம். திட்டமிடுவதில் அதைச் செயலாக்குவதில் பேச்சால் பிறரை கண நேரத்தில் வசீகரிப்பதில் , செஸ் விளையாட்டில் இவர் அறிவாளி. நுட்பமானவர். ஆனால் இந்த அறிவை அவர் எதற்குப் பயன்படுத்தினார்?
கொள்ளை அடிப்பதற்கு, கொலை செய்வதற்கு, நீதியின் சந்நிதானத்திலிருந்து தப்பி பிழைப்பதற்கு இதுபோன்ற குற்றங்களுக்கே இவரது அறிவு பயன்பட்டது.
எழுபதுகளில் இவர் உலகப் பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகளில் அடிப்பட்டவர். இரும்புக் கோட்டை போன்ற சிறைச்சாலைகளிலிருந்து தப்பி சாகசம் படைத்தவர்.
யார் இவர்? இவர் கொலை செய்ததற்கு என்ன காரணம்? இப்படி ஒரு சீரியல் கில்லரை நீதி மன்றம் எப்படி விடுதலை செய்தது என்பதை பற்றி பார்க்கலாம்…
இவரது இயற்பெயர் ஹோட்சந்த் பாவ்னானி சார்லஸ் குருமுக் சோப்ராஜ். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அடுக்கடுக்காக 12 கொலைகளை செய்தவர். வெறும் சீரியல் கொலைகள் மட்டும் இன்றி மோசடி செய்வதிலும் , திருட்டு வேலைகளிலும் கிங் -காக இருந்தவர் தான் இந்த சோப்ராஜ்.
இவரின் கதையை யார் கேட்டாலும் அவ்வளவு ஆச்சரியமாக இருக்கும். திரைப்படங்களில்வரும் சீரியல் கில்லர் கதைகளெல்லாம் இவரின் கதையைகாட்டிலும் கொஞ்சம் த்ரில் குறைவாகத்தான் இருக்கும்.

சார்லஸ் சோப்ராஜ் பிறந்த இடம் வியாட்நாம் நாட்டில் உள்ள சைகோன் நகரம். 1944 ஆம் ஆண்டு இந்திய தந்தைக்கும் வியாட்நாம் நாட்டைச்சேர்ந்த தாயாருக்கும் மகனாக பிறந்தார். இவர் பிறந்த காலத்தில் வியாட்நாம் நாடு பிரான்சு நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. சிறுவயதிலேயே மிகவும் துறுதுறுப்பான குழந்தை. அந்த வயதிலேயே இரண்டு முறை சொகோனில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு கடல் வழியாக செல்ல முயற்சி செய்தவர். அதே வயதில் ஆப்பிரிக்க பகுதியான ஜிபோதிக்கு சென்று மீண்டும் தன்னுடைய சொந்த நகரமான சைகோனிற்கு திரும்பினார். அந்த சமயம் இவரின் தாய் , தந்தையினரின் விவாகரத்து இவரை பெரிதும் பாதித்தது. இவரின் தாய் பிரான்ஸ் நாட்டின் ராணுவ அதிகாரி ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர், இவரது வளர்ப்பு தந்தையுடன் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகருக்கு சென்றார். அங்குள்ள ஒரு போர்டிங் ஸ்கீல் சேர்க்கப்பட்டார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதை போல் தன்னுடைய டீன் ஏஜ் வயதிலேயே திருட்டு வேலைகளை செய்யத்தொடங்கினார் சோப்ராஜ்.

முதன் முதலாக 1963 ஆம் ஆண்டு திருட்டு குற்றத்திற்காக சிறை சென்றார். பாரிஸ் நகரத்தில் இருக்கும் அண்டர் கிரவுண்ட் உலகை பற்றி நன்றாக அறிந்து கொண்ட இவருக்கு அங்குள்ள ஆடம்பர சுகவாசிகளை போல் தானும் வாழ வேண்டும் என்ற ஆசை அதிகமாக வந்ததால் இது போன்ற ஆடம்பர வாழ்வை வாழ வேண்டும் என்று முடிவுசெய்தார்.
அதற்காக என்ன செய்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்த சோப்ராஜ் இதனால் திருட்டு குற்றங்கள், மோசடி குற்றங்களில் தாராளமாக ஈடுபட ஆரம்பித்தார். இந்த காலகட்டத்தில் தான் தன்னுடைய வருங்கால மனைவி சாண்டல் காம்பாக்னானை அவர் சந்தித்தார். அவரிடம் தன்னுடைய காதலை சொல்வதற்காக அவர் எடுத்துச் சென்ற வாகனம் திருட்டு வாகனம் என்பதால் இவரை பிரான்ஸ் காவல் துறை கைது செய்தது. பின்னர் அவருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

திருமணம் செய்தால் இவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று காத்திருந்த சாண்டல் காம்பாக்னான் 8 மாத சிறை தண்டனைக்கு பிறகு வெளியே வந்த சோப்ராஜை உடனடியாக திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு இவர்கள் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேறி ஆசிய நாடுகளுக்கு வந்தனர். ஜாடிக்கேத்த மூடி என்பதைபோல் அவரது மனைவியும் பலே திருடியாக வலம் வந்தார். முதல் குழந்தை பிறந்தால் செலவாகும் என்பதற்காக சுற்றுலா பயணிகளிடம் திருட ஆரம்பித்தது அந்த தம்பதி.

போலி பாஸ்போர்ட் மூலமாக பல நாடுகளுக்கு பயணம் செய்த இந்த ஜோடி மும்பைக்கு வந்த பொழுது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு உஷா என்ற பெயரை வைத்தர் சோப்ராஜ். சிறைக்கு போவதும் வெளியே வருவதுமாக இருந்த இவர் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூல்-க்கு சென்றார். அங்குள்ள ஹிப்பிகளில் மக்கள் சுற்றுவதை பார்த்து அவர்களிடம் சோப்ராஜ் கொள்ளையடிக்க ஆரம்பித்தார்.
பின்னர் அங்கு இருந்து தாய்லாந்து சென்ற சோப்ராஜ் மருந்து வியாபரி, நகை டீலர் என்ற முகங்களுடன் நடமாடினார்.
அங்குள்ள இந்திய நாட்டைச்சேர்ந்தவரான அஜய் சாவுத்ரி என்ற ஒருவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு அவருடன் சேர்ந்து திருட ஆரம்பித்தார். மேரி ஆண்ட்ரியா என்ற தாய்லாந்து நாட்டைச்சேர்ந்த ஒரு பெண் சோப்ராஜின் பரம ரசிகையானார் பின்னர் இவரும் இந்த கொள்ளைக்கூட்டணியிலும் இணைந்தார். சோப்ராஜ்-க்கு 7க்கும் மேற்பட்ட மொழிகள் தெரியும் என்பதால் தன்னுடைய வசீகர பேச்சால் அங்குள்ள பல பெண்களுடன் உறவை ஏற்ப்படுத்தி கொண்டார்.

1975 ல் முதன்முதலாக தாய்லாந்தில் உள்ள பட்டாயா கடற்கரையில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் தன்னுடைய கொலை வெறி ஆட்டத்தை ஆரம்பித்தார். அப்படி அவர் கொலை வெறி ஆட்டத்திற்கு இரையானவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த
கோனி ஜோ ப்ரோன்சி என்பவர். நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை நீரில் மூழ்கடித்து , மூச்சை திணறடித்து கொலை செய்தார் சோப்ராஜ். அப்போது அந்த பெண் நீச்சல் ஆடையான பூ போட்ட பிகினி ஆடையுடன் இருந்தார்.
அதே போன்று சார்மி நிகோனி என்ற பெண்ணும் டூ பீஸ் என்று சொல்லக்கூடிய நீச்சல் ஆடையுடன் சோப்ராஜால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
பிகினி உடையில் இருக்கும் பெண்களை தேடித்தேடி கொலை செய்ததால் இவரை அடையாளப்படுத்துவதற்காக காவல் துறை இவரை ‘பிகினி கொலைகாரன்’ என்ற பெயரில் அழைத்தது. இந்த சார்மி நிகோனி என்ற பெண் வித்தாலி ஹக்கிம் என்பவரின் பெண் தோழி. ஆதலால் வித்தாலி ஹக்கிமையும் கொடூரமாக கொலை செய்தார் சோப்ராஜ்.
பட்டயாவில் நடந்த இந்த கொலை சம்பவத்திற்கு பிறகு டச்சு தம்பதிகள் இருவரை கொலை செய்தார். ஹிப்பி கலாச்சாரம் கொடிகட்டி பறந்த காலத்தில் ஹிப்பிகளாக சுற்றிய வெளிநாட்டு பயணிகளை கொலை செய்து அவர்களின் நகை,பணத்தை கொள்ளை அடிப்பது இவருக்கு கை வந்த கலையாக மாறிப்போனது. 1975 முதல் 1976 வரை இவரின் வேட்டை அனைவரிடமும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதன்பின்னர் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் உலகம் சுற்றும் வாலிபனாக சுற்ற ஆரம்பித்தார். அப்போது 12 வெளிநாட்டு பயணிகளை கொலை செய்துள்ளார்.

சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து பாம்பைப்போல் நழுவுவதால் சோப்ராஜுக்கு சர்ப்பண்ட் என்ற செல்லப்பெயர் கிடைத்து.
டெல்லியில் 22 பேர் கொண்ட பிரான்ஸ் நாட்டு மணவ குழுவினர் மீது கண் வைத்த சோப்ராஜ் அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்தார்.
அதில் பாதி பேருக்கு மயக்க நிலை அரைகுறையாக இருந்ததால் அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க பிடிபடுகிறார் சோப்ராஜ். 1976 ஆம் ஆண்டு கொலை குற்றங்களுக்காக டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 12 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போது தான் சிறையில் இருந்த சோப்ராஜிடம் ரிச்சர் நேவில் என்பவர் டேப்ரெக்கார்டர் மூலம் பேட்டி கண்டார். 1979 ஆம் ஆண்டு அந்த பேட்டியை புத்தக வடிவில் ‘the life and crimes of charlesh sobhraj’ என்ற பெயரில் வெளியிட்டார் ரிச்சர் நேவில்.

பின்னர், திகார் சிறையில் இருந்த அவர் அங்குள்ள சிறை காவலாளிக்கு மயக்க மருந்துகளை கொடுத்து இந்தியாவின் பாதுகாப்பான சிறைகளில் ஒன்றான திகாரில் இருந்த அவர் தப்பித்தது நாடும் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியது. மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர்,1997 ஆம் ஆண்டு வெளியே வந்தார். மீண்டும் 2003 ஆம் ஆண்டு நேபாளத்திற்கு சென்றார். இப்படி ஒருமுறை அங்குள்ள சூதாட்ட விடுதிக்கு சென்ற பொழுது ஜோசம் நாதன் என்ற தமிழ்நாட்டை சேர்ந்த பத்திரிக்கையாளர் இமாலயன் டைம்ஸ் பத்திரிக்கைக்கு தகவல் கொடுக்க அவரை அங்கு வைத்து கைது செய்தது நேபாள காவல்துறை.
நேபாள சிறையில் இருந்த சோப்ராஜை சந்திக்க வந்த இவருடைய வக்கீலின் மகளானா நிகிதா பிஸ்வாசை 2008 ஆம் ஆண்டு சிறையிலேயே வைத்து திருமணம் செய்தார். இந்த திருமணம் நடந்த பொழுது சோப்ராஜின் வயது 64 நிகிதாவின் வயது 20.

நேபாளத்தில் 72 வயதை கடந்தவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துவிடும். ஆனால் இவர் வேறு நாட்டை சேர்ந்தவர் என்பதால் இவரை விடுதலை செய்ய வில்லை.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி, சோப்ராஜை சிறையில் இருந்து விடுவிக்க நேபாள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.தொடர்ந்து அவரை சிறையில் வைத்திருப்பது கைதிகளுக்கான மனித உரிமைக்கு பொருந்தாத செயல் என்று நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்