ஸ்ரீராம் சர்மா
அன்னைத் தமிழை ஆராதிக்க ஆராதிக்க அல்லல் ஒழியும் – ஆயுள் கூடும் என்பாராம் அன்றைய சேலம் ஜில்லாவில் சகடமெனச் சுற்றிக் கம்பராமாயணப் பிரசங்கம் செய்த வேங்கட சுப்ரமண்ய பாரதி.
அவருக்கு ஒரு கால் ஊனப்பட்டிருந்ததாம். ஊர் மேடைக்கு அருகே வீட்டு மாட்டு வண்டி சென்று நிற்குமாம். அதிலிருந்து அவரை தோளில் சுமந்தபடி ஊர் மக்களில் ஒருவர் மேடையேற்றி விடுவராம்.
சுமந்த தோளுக்கு நன்றி பாராட்டியபடி – ஒலிபெருக்கி இல்லாத அந்தக் காலத்தில் – கம்ப நாட்டாழ்வாரின் சுந்தரத் தமிழை விடிய விடியத் தன் அடி வயிறாழத்திலிருந்து ஓங்கியெழப் பாய விடுவாராம் வேங்கட சுப்ரமண்ய பாரதி.
தமிழருந்தி நெகிழும் மக்கள் பணமாய் கொடுத்து வாழ்த்துவராம். அதில் பாதியை இரண்டாகப் பிரித்து ஒன்றை அந்தந்த ஊர் ஏரிக்கான புனரமைப்புக்கும் – மற்றொன்றை கோணங்கிப் பெருமாள் கோயிலின் நித்தியப் படிக்கும் நமஸ்கரித்து அளித்து விடுவாராம்.
சங்கப் பாடல்கள் குறித்து அவரெழுதி வைத்த அற்புதக் குறிப்புகள் அனைத்தும் காமாட்சிப்பட்டி இல்லத்தில் பிடித்த கரையான் தின்றுவிட்டதாக குற்ற உணர்வோடு என் தந்தையார் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ஆம், திருவள்ளுவருக்கு நல்லுருவம் கண்ட எனது தந்தையார் கே.ஆர். வேணு கோபால் சர்மா அவர்களின் பெரிய தகப்பனார்தான் வேங்கட சுப்ரமண்ய பாரதி.
அவரிடமிருந்து தந்தையாருக்கு தொற்றிய அந்த தமிழ்ப் பழக்கம் வழிமுறையே என்னையும் தொற்றிக் கொள்ள – பதின்பிராயம் முதல் தங்கத் தமிழோடு கண்ணீர் மல்க நான் கடந்த இரவுகள் கணக்கிலடங்காது.
அம்மவோ, தமிழன்னை போலொரு ஞானப் பணக்காரி இந்த நீளுலகிலுண்டா ! ஆகாகா… எத்துனை கனகமணிச் சொத்துகள் அவளிடத்தில் ! மொத்தமும் எடுத்துரைக்க ஓராயுள் போதாது. ஏதோ என்னளவில் கொஞ்சம் விரித்துரைக்கிறேன் நெஞ்சம் நிறைந்த என் மின்னம்பலத்தாருக்காக…

* * * * * * *
மீனாக்க்ஷி !
கொழுத்துச் செழித்த தாயாரின் விழிகளிரண்டும் நதியோரக் கெண்டைகளாய் படபடத்து ஈர்ப்பதால் மாமதுரை ஆளும் மீனாக்க்ஷிக்கு அது காரணப் பெயராக அமைந்தது என்பார்கள்.
அது போலொரு காரணப் பெயர் கொண்டமைந்தவளே மயூராக்க்ஷி !
வட மொழிச் சொல்லான மயூரம் என்பதற்கு மயில் என்பது பொருளாகும். அதே மொழியில் ‘அக்க்ஷி’ என்பதற்கான பொருள் ‘கண்’ என்பதாகும். ‘அழகிய விழி கொண்ட மாமயிலாள்’ எனும் மன்மதப் பெயர் கொண்டமைந்த அந்த மந்திர நதியாள் வட கிழக்குச் சுந்தரவனக் காடுகளுக்கிடையே மெல்லென சில்லென நகன்றமைகிறாள்.
பாரதப் பெருமண்ணில் – மயூராக்க்ஷியாளின் உற்பத்தித் தலமானது ஜார்கண்ட் மாநிலத்திலமைந்த திரிகூட மலையாகும் (TRIKUT HILL).
பேரெழில் கொண்ட திராவிடத் தமிழ்நாட்டிலுமொரு திரிகூட மலை உண்டு.
ஜார்கண்ட் மாநிலத்துக்கு அமையாததொரு ஆகப்பெரும் சிறப்பு நமது தமிழ் நாட்டு திரிகூட மலைக்கு அமைந்து விட்டது.
அப்படி அதனை அமைத்து வைத்தருளியவர் கற்பனைக்கெட்டாத கவியுள்ளம் கொண்டிலங்கிய பண்டிதப் பெருமானாம் திரிகூட ராசப்ப கவிராயர்.
திரிகூட ராசப்ப கவிராயர்.
பதினெட்டாம் நூற்றாண்டில் திருநெல்வேலி – தென்காசி – மேலகரம் எனுமோர் புண்ணிய மண்ணில் சைவ வேளாளக் குலத்துதித்த தமிழ்க்குரிசில் ! தமிழ் மண்ணின் ஆகச் சிறந்த இசை நாடக ஆசிரியர். வேலுநாச்சியார் இசை நாடகத்தை எழுதிய எளியேன் எனக்கு மிக மூத்த முப்பாட்டன். ஞானதானமளித்த பெம்மான். பதின் பருவம் தொட்டு என் இளமனமாண்ட தமிழ்ப் பேராசான் !
கவிராயரது வரிகளெங்கும் கொஞ்சி விளையாடும் தாள லயம்தான் விடிய விடிய அதனை மனனம் செய்யத் தூண்டியது !
ஆம், அவ்வைப் பெருமாட்டியின் ஆத்திச்சூடி போல தென்பாண்டி நாட்டு சிறுவர் சிறுமியர்களுக்கெலாம் குறவஞ்சி நாடகமானது ஏழெட்டு வயதிலேயே மனப் பாடமாகி நின்றது என சிலாகித்துரைக்கிறார் குறவஞ்சிக்கு பொழிப்புரை எழுதிய தமிழாசான் புலியூர்கேசிகனார்.

திருக்குற்றாலக் குறவஞ்சி !
குற்றாலக் குறவஞ்சி நாடகப் படைப்புதான் குற்றால நாதருக்கான அறிமுகச் சீட்டு எனிலதனை திருவாதவூராரின் தமிழுக்கிறங்கி எழுதிக் கொடுத்த அந்த முக்கண்ணப் பெருமானே ஏற்பார்.
கவிராயரது உள்ளம் வணங்கத்தக்கது. காரணம், அது பாமர ஜனங்களை நோக்கித் தன் தமிழை அளந்து வீசியது. கவிராயரின் குறவஞ்சியை மனனம் செய்தால் போதும். ஜனரஞ்சகத் தமிழெழுதும் சூசகத்தை உள்வாங்கி விடலாம்.
கவி ராக்க்ஷனனாம் ராசப்பரது இசை நாடகத்தின் ஒரு சில துளிகளை மட்டும் என்னளவில் இங்கே விரித்துரைக்க முயல்கிறேன்.
* * * * * * *
ஈசன் மகனார் விநாயகர் என்பதும் அவருக்கொரு வாகனம் உண்டு என்பதும் நமக்குத் தெரியும். அதனை மூஷிகம் அல்லது மூஞ்சூரு என்பார்கள்.
கவிராயரோ மூத்த கணபதியை – அவரது வாகனத்தை தனது கட்டியக்காரன் வழியாக இப்படியாக அறிமுகப்படுத்துகிறார்…
பெருச்சாளி ஏறிய தோன்றல்
பயபக்தி என்பது நம் மனதோடு இருக்கட்டும். எழுதும் தமிழ் எல்லோரையும் சென்றடையட்டும் என்றெண்ணித்தான் ‘பெருச்சாளி’ எனும் பாமரச் சொல்லாடினார் கவிராயப் பெருமான்.
சம காலப் பண்டிதர்களோடு தமிழ்த் திமிராடாமல் வெகுஜனப் பிரியராக இருக்கவே விருப்பப்பட்டு தன் தமிழை எளிய மக்களுக்கு அர்ப்பணித்தார். அதனால்தான் அவரை ‘பெருமான்’ என்னும் உயர் சொல்லுக்குள் அடைத்து நெகிழ்கிறோம்.
* * * * * * *
மண் பெருமை – மலை பெருமை – தான் கண்ட நாயக நாயகிப் பெருமை – தமிழ் மாநிலப் பெரும்பெருமை என ஓயாது எழுதி நெக்குருக வைப்பதில் கவிராயருக்கு இணை அவரே !
கவனியுங்கள் !
கவிராயர் காட்டும் நாயகி வசந்தவல்லி மூக்குத்தி ஒன்றை தரித்திருந்தாளாம். அது முத்தால் ஆனதாம்.
வசந்தவல்லியாள் அடிக்கடி என்னை நிரடிக் கொண்டே இருக்கிறாளே. ஒருவேளை அவளது பற்களை விட நான் ஒளி குறைந்தவளாய் இருக்கிறேனோ என அந்த முத்துப் புல்லாக்குக்கோர் ஐயம் எழுந்து விட ஆடி ஆடி வசந்த வல்லியின் பல்லை எட்டிப் பார்க்க முயல்கிறதாம்.

பல்லின் அழகை எட்டிப் பார்க்கும்
மூக்கிலொரு முத்தினாள் !
* * * * * * *
கச்சுக்கிடக்கினும் தித்திச்சுக்
கிடக்குமிரு கொங்கையாள்.
வசந்தவல்லியாள் குலமுறைக்கு அடங்கி கச்சு ஒன்றை கட்டுவாள்தான் எனினும் அதையும் மீறி அது தித்தித்திக் கிடக்கின்றனவே என்கிறார் கலகல கவிராயர்.
ஒருகட்டத்தில் மோகம் மேலிட மன்மதனை வம்புக்கிழுக்கிறாள் வசந்தவல்லி…
“மன்மதா, சிறியவள் என் மேல் பாய்ச்சும் உன் காமக் கணைகளை கொஞ்சம் அந்த குற்றால நாதரின் மேலும் வீசேன்டா… அவரது நெற்றியில் உள்ளது நெருப்புக்கண் என பயந்து கொள்ளாதே. அது என்னை எண்ணி அவரிட்டுக் கொண்ட சிந்தூரமாகும் என நம்புடா மன்பதா ! “
நெற்றி வந்தது கண்ணல்ல
சிந்தூர ரேகை பார் மன்மதா !
* * * * * * *
கவிராயப் பெருமான் நாட்டுவளம் காட்டி ஒன்பது பாடல்களை எழுதுகிறார்.
அதிலொன்று இது…
நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்
நெருங்கக் காண்பது கன்னலிற் செந்நெல்
தொங்கக் காண்பது மாம்பழக் கொத்து
சுழலக் காண்பது பூந்தயிர் மத்து
வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை
வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை
ஏங்கக் காண்பது மங்கலப் பேரிகை
ஈசர் ஆரிய நாடெங்கள் நாடே !
ஒன்பது பாடல்களின் முடிவிலும் ‘ஆரிய’ என்னும் சொல்லை ஆள்கிறார் கவிராயப் பெருமான். எனில், ஆரிய எனுமந்த சொல்லுக்கான பொருள் ‘குணத்தால் உயர்ந்தவன்’ என்பதனை சங்க இலக்கியங்கள் தொட்டு – கம்பன் காட்டும் வழி கொண்டு ஏற்கலாம்.
குலத்தால் உயர்ந்ததாய் ஓயாமல் அடித்துக் கொள்ளுமிந்தப் பாழுலகில் – குணத்தால் உயர்ந்த தமிழர் நாங்கள் எனச் செம்மாந்து முரசறைகிறார் கவிராயப் பெருமானார் !
* * * * * * *
கவிராயர் கண்ட குற்றால மாமலை இச்சகத்தில் கிடைக்காத அற்புதங்கள் பலவற்றை கொண்டிருந்ததாம்.
இச்சாதாரி எனுமொரு பாம்பினம் இருப்பதாக ஐதீகம் ஒன்றுண்டு. சினமடக்கி விடம் கக்காது – காலம் கடந்து மாதவம் புரிந்தபடி உயிர்த்திருக்கும் அந்த நாகம் – ஓர் நாள் மாணிக்கக் கல் ஒன்றை உமிழுமாம்.
அப்படியானதொரு இச்சாதாரிப் பாம்பு குற்றால மலையில் தங்கி வாழ்ந்திருந்ததாக தன் வீரியத் தமிழ் கொண்டு வீசுகிறார் கவிராயர்.
ஆடுமர வீனுமணி கோடிவெயில் எறிக்கும் !
ஆடும் அரவமானது ஈனும் அந்த மாணிக்க மணியானது கோடி சூரியனையும் கடந்து தகதகக்குமாம் ! அம்மம்மாடியோவ்..
அடுத்த அடியில் இன்னும் பிளக்கிறார்.
விண்ணில் தோன்றும் நிலாவினை தான் உண்ணக் கிடைத்த கவளம் என்று எண்ணிய யானைகள் குற்றால மலையில் உலவ வரும் மேகங்களை வழிமறித்து மறுதலித்துத் துரத்துமாம்.
அம்புலியை கவளமென தும்பி வழி மறிக்கும் !
பொறுங்கள் மூச்சிறைக்கிறது !
* * * * * * *
சொல்லிக் கொண்டே போகலாம் கவிராயரின் கற்பனைத் தமிழை ! ஒரு சிறு கட்டுரைக்குள் அடக்கி விட முடியுமா அந்த அகண்டமாக் கடலை ?
மண்ணுலகில் மனிதராய் பிறத்தல் வரம் எனில், தமிழராய் பிறத்தல் பெரும் பேறு என்பேன். புகழுடைய தமிழ் மண்ணில் முக்கி முனகி எளியேனை வெளித்தள்ளி அருளிய எனது தாயாரை இந்த நேரத்தில் நன்றியொடு கை கூப்பித் தொழுகிறேன்.
மயிலினங்கள் ஆடுமாமந்த குற்றால மாமலையில் குடி கொண்டிலங்கும் நாதரை – ஈசனை என்னுள் புகட்டிய கவிராயப் பெருமானை – மனதால் துதிக்கிறேன்.
பனிசூழ் இமயமலையினை உறவுக்கிழுக்கும் ஞானத் தெம்பு கொண்ட ராசப்பரின் ஈடற்ற தமிழ் கொண்டு இந்தளவில் முடிக்கிறேன்.
கொல்லி மலை எனக்கிளைய செல்லிமலை அம்மே
கொழுநனுக்குக் காணிமலை பழநிமலை அம்மே
எல்லுலவும் விந்தைமலை எந்தைமலை அம்மே
இமயமலை என்னுடைய தமையன்மலை அம்மே
சொல்லரிய சாமிமலை மாமிமலை அம்மே
தோழிமலை நாஞ்சி நாட்டு வேள்விமலை அம்மே
செல்லினங்கள் முழவு கொட்ட மயிலினங்கள் ஆடும்
திரிகூட மலையெங்கள் செல்வமலை அம்மே !
கட்டுரையாளர் குறிப்பு:

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.