- ஸ்ரீராம் சர்மா
கல்வித்துறை அமைச்சர் முகத்தில் இவ்வளவு அதிருப்தியை இதுகாறும் நான் கண்டதில்லை.
எனக்குத் தெரிந்த வரையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவ்வளவு எளிதில் கோபப்படக் கூடியவர் அல்லர்.
முதல்வரிடமிருந்து பொறுமையை கற்றவராக, அனைவரிடத்திலும் மிக அன்பாக, அனைவரையும் கரிசனத்துடன் அரவணைத்துச் செல்வதை தன் கடமையாக மட்டுமல்ல தன் இயல்பாகவே கொண்டிருக்கக் கூடியவர் அவர்.
அவரைத்தான் பொது வெளியில் அப்படி கோபப்பட வைத்து விட்டார்கள் சிலர்.
அவரது கோபத்துக்குப் பின்னால் அரசியல் இருக்கிறது என்பது அபத்தம். அதற்குப் பெயர் அறச்சீற்றம். அறச்சீற்றம் என்பது அவரது ரத்தத்தில் ஊறிப் போன ஒன்று. அதை மாற்ற இயலாது. அது அந்த நாளில் அடர்ந்த காரணத்துடன் தன்னியல்பாக வெளிப்பட்டிருக்கிறது அவ்வளவுதான்.
அமைச்சரைக் கோபப்பட வைத்தது எது ?
எல்லாம் சுயநல வியாபாரமாகிப் போய்விட்ட இந்த உலகில் அறக்கட்டளை அமைத்து லேகியம் விற்கும் அந்த தம்பிக்கும் ஒரு ஆசை. தான் எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற வேண்டும். பணம், காசு சேர்த்து வெளிநாடுகளில் உல்லாசமாக சுற்ற வேண்டும் என்றெல்லாம் அவர் விரும்பியது தவறே அல்ல.
ஆனால், அதற்காக அவர் தேர்ந்தெடுத்த இடமும் செய்த செயலும்தான் அபத்தமானது. அநாகரீகமானது.
காலர் மைக் ஒன்றை மாட்டி கொண்டு எல்லாம் தெரிந்தவன் தோரணையில் அங்குமிங்கும் நடந்து கொண்டு “யெஸ் ஆர் நோ” என பள்ளி மாணவிகளை அதிகாரக் குரலில் தீவிரக் கண்களோடு மிரட்டிப் பேசும் அந்த வீடியோவைக் காணக் காண எனக்கு சிரிப்புத்தான் வந்தது.
கார்ப்பொரேட் பேச்சாளர்களின் வீடியோக்களைப் பார்த்து காப்பி அடித்து தன்னைத் தானே உசுப்பேற்றிக் கொள்ளும் ஒரு ப்ராய்லர் கோழியை போல்தான் அந்த தம்பியின் நடவடிக்கைகள் இருந்தனவே தவிர, அவருக்குள் சொந்த புத்தி இருப்பதாக சுத்தமாகத் தெரியவில்லை.
சரி, அந்த தம்பிக்கு நாம் சில பாடங்களை எடுப்போம். புரிந்து கொள்ளும் சக்தி அவருக்கு இருந்தால் புரிந்து கொள்ளட்டும்.
*******
பிறவிப் பலனின் கொடுமைகளைப் பற்றி பள்ளிக் குழந்தைகளிடம் அளந்து வீசி பீதி கிளப்பிய தம்பி, உங்களைப் போன்ற அவசரக்காரர்களுக்காகத்தான் “அவையறிதல்” எனும் அதிகாரத்தில் பேராசான் திருவள்ளுவர் இவ்வாறு அறிவுறுத்துகிறார்.
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.
அதாவது, தாம் இருக்கும் சபையின் வகையினை அறியாது மனம் போன போக்கில் பேசிக் கொண்டிருப்பவர்களால் எதையும் சாதிக்க முடியாது என்பது அதன் பொருள்.
ஆம், தவறான சபையில் பொருந்தாத கருத்துக்களை பேசியதுதான் முதல் குற்றம்.
லேகியம் விற்பதுபோல் சித்தர் பாடல்களை மனப்பாடமாக ஒப்பித்துக் காட்டும் தம்பி, நீங்கள் மனப்பாடம் செய்து பேசிய கருத்துகள் அனைத்தையும் ஆன்மீக மடங்களிலோ அல்லது வயதானவர்கள் இருக்கும் ஆசிரமங்களிலோ அல்லது கோயில் வளாகத்திலோ பேசியிருந்தால் – கேட்பவர்களுக்கு அதில் சாரமிருப்பதாகத் தோன்றினால் ஏற்றுக் கொண்டு போகட்டும். அதுகுறித்து யாரும் இங்கே கோபப்படப் போவதில்லை.
ஆனால், நீங்கள் குறி வைத்தது பள்ளியை. அதுவும் எளிய குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளியை.
கவனியுங்கள் தம்பி. அங்கிருந்த குழந்தைகளின் சராசரி வயது 14 இருக்குமா? அது பிஞ்சு வயதல்லவா? பாவ புண்ணியக் கணக்குகளை, அதன் கொடூர தண்டனைகளைக் குறித்து அங்கே பேசலாமா? குழந்தை மனம் மிரண்டு போகாதா?
கொள்ளளவு தெரிந்து கொட்டத் தெரியாதவனுக்கு பெயர் என்ன? அறிவிலி என்றால் அது உங்களுக்கு பொருந்தும் என்கிறேன். புரிகிறதா ?
முதலில் சபைக்கேற்றாற் போல பேச கற்றுக் கொள்ளுங்கள். குறிப்பாக, குழந்தைகளிடம் பேசும் போது குரலில் குழைவும், தொனியில் கனிவும் இருந்தாக வேண்டும். அகங்காரமும் ஆர்பாட்டமும் கூடாது. அது அவர்களை மிரளச் செய்யும்.
ஏற்கெனவே தேர்வுச் சுமை. இதில் இந்த கருமாந்தரம் வேறா, அதற்கு தலைமை ஆசிரியரின் தாம்பாள சம்பாவணை வேறா என்றெல்லாம் அவர்களது மனம் புழுங்கியிருக்காதா ?
தாடி வளர்த்த தம்பி அறிவு வளர்ப்பது எப்போது? ஆத்திச்சூடி பாடிய ஔவையாரை அறிவீர்களா? ஔவையார் குழந்தைகளுக்கு சொல்லும் போது என்ன சொன்னார் ?
“அறம் செய்ய விரும்பு” என்றார். “அறம் செய்” என்று சொல்லவில்லை.
காரணம், அந்த பிஞ்சு வயதில் அறத்தை விரும்ப மட்டும்தான் முடியும். நன்கு படித்து, நல்ல நிலைமைக்கு வந்து பக்குவம் முற்றியபின் இந்த சமூகத்தின் மீது அறம் கொண்டு உன் வாழ்வை செலுத்து, அடுத்தவருக்கு உதவு. அது போதும் என்றார் ஔவையார். அதுதான் யதார்த்தமானது.
அதற்குப் பெயர்தான் கொள்ளளவு தெரிந்து கொட்டுவது.
திருக்குறளை திருகி விற்கும் தம்பி, நமது அரசாங்கம் திருக்குறளை மனப்பாடப் பகுதியில் வைத்திருக்கிறது. காரணம் என்ன தெரியுமா?
“மாணவச் செல்வங்களே, திருக்குறளை இந்த வயதில் மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். இப்போதைக்கு அது போதும். நாளை உங்களுக்குள் நல்ல பக்குவம் வந்தபின் மீண்டும் அந்த குறள்களை அசை போட்டு உங்கள் அனுபவத்தைக் கொண்டு அதன் ஆழத்தை உணர்ந்து கொள்ளலாம்” என்பதுதான் அதன் நோக்கம்.
ஆம், ஔவையாரைப் போல அரசாங்கத்திற்கும் கொள்ளளவு தெரிந்து கொட்டத் தெரிந்திருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்னும் குறைந்த பட்ச ஞானத்தை முதலில் அடையுங்கள்.
கவனியுங்கள், மாற்றுத் திறனாளி ஒருவர் வாழ்க்கையில் மிகக் கடினமாகப் போராடி ‘ஆசிரியர்’ என்னும் அந்தஸ்தை அடைந்து இந்த சமூகத்தில் தன் வாழ்க்கையை மரியாதைக்குரியதாக நடத்தி வருகிறார்.
ஆனால் நீங்கள் அந்த மாணவ மாணவிகளிடம் என்னவாக பரப்புரை செய்கிறீர்கள்? அந்த மாற்றுத்திறனாளி ஆசிரியரின் இன்றைய உடல் நிலைக்குக் காரணம், சென்ற பிறவியில் அவர் செய்த கொடூரமான பாவங்கள்தான் என்கிறீர்கள்.
பதைபதைத்துப் போன அந்த ஆசிரியர், “அதைச் சொல்வதற்கு நீ யார்” எனக் காதுகளால் உங்கள் உருவத்தை தடவியபடி கொதிக்கிறார்.
அவரது பரிதவிப்பை உணர்ந்து, “ஐயா, எனது பேச்சு இந்த அவையில் உங்களை சங்கடப்படுத்தியிருந்தால் அதனை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். மனம் அமைதி பெறுங்கள்” என அவரிடம் வேண்டிக் கொண்டு அடுத்த கட்டம் போயிருந்தால் அதற்குப் பெயர் பக்குவம். அழகு.
ஹா, நான் எதற்கும் அசர மாட்டேன். வரட்டும். என்னிடம் வாதம் செய்யட்டும். வந்து மோதிப் பார்க்கட்டும் என அரசுப் பள்ளி மேடையில் ஏதோ சினிமா ஹீரோ போலே சண்டித்தனம் செய்கிறீர்கள். என்ன அலங்கோலம் இது?
அந்த மாற்றுத்திறனாளி ஆசிரியரை முதன்மைக் கல்வி அலுவலரோடு கோர்த்து விடப் பார்க்கிறீர்கள். அது குயுக்தியான கேவலமான முயற்சி அல்லவா? அடுத்தவர் மனதை புண்படுத்தி ரசிக்கும் உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தது ?
அதுபோக, பேசக் கூடாத இடத்தில், பேசக் கூடாததைப் பேசி இப்படி ஊரெல்லாம் தர்ம அடி வாங்குகிறீர்களே… இந்த அளவுக்கு இழுத்துவிட்ட உங்களது போன பிறவியின் கணக்கு வழக்குதான் என்ன ?
பழுப்பதற்கு முன்பே ஏன் சந்தைக்கு வருகிறீர்கள்? அப்படி என்ன உங்களுக்கெல்லாம் அவசரம்? காசு பணம் சேர்க்க எத்துனையோ தொழில் இருக்க அரசுப் பள்ளியையும் அப்பாவிக் குழந்தைகளையும் தேர்ந்தெடுத்தது துணிகரம் அல்லவா ?
அரசுப் பள்ளியில் புகுந்து அப்பாவிக் குழந்தைகளிடம் பீதியைக் கிளப்புவது அராஜகமல்லவா? உங்களைப் போன்றவர்களை மடியில் ஏந்தி கொஞ்சவா செய்வார் எங்கள் அமைச்சர் ?
வகை தொகையில்லாமல் பேசும் ஒரு அரை குறைக்கு அரசாங்கப் பள்ளிக்குள் மேடை அமைத்துக் கொடுத்ததற்காக தலைமை ஆசிரியர் இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அதுசரி, வண்டியெல்லாம் வைத்து கூட்டி வந்ததற்கு உங்களால் ஆனதை செய்து விட்டீர்கள். இதில், நடுநடுவே மொக்கையான ஆங்கிலம் வேறு… எங்கிருந்துதான் பிடித்துக் கொண்டு வந்தார்களோ ?
சம்பந்தப்பட்டவர்கள் இத்தோடு நிறுத்திக் கொள்வது அவர்களுக்கு நல்லது. இது முந்தைய அரசாங்கம் போல திக்குத் தெரியாமல் இழுத்த இழுப்புக்கு எல்லாம் வழவழத்து நிற்கக் கூடியதல்ல.
கற்றறிந்த – ஆழங்காற்பட்டவர்கள் நிறைந்து அணிவகுத்திருக்கும் திராவிட மாடல் அமைச்சரவை இது. இதற்குள் புகுந்து வாலாட்டப் பார்ப்பது நல்லதல்ல. புலியின் நாக்கில் புள்ளிக் கோலம் போட்டு விடலாம் எனத் துணிவது அறிவுடைமை ஆகாது.
முடிவாக சொல்ல வேண்டும் என்றால் தம்பி, நீங்கள் இன்னும் மாணவப் பருவத்தில்தான் இருக்கிறீர்கள். அதைக் கடப்பதற்கே நீங்கள் இன்னும் இன்னும் நிறைய படித்தாக வேண்டும். மேலும், படிப்பதை உணர்ந்தாக வேண்டும் என்பது பச்சையாக தெரிகிறது. நீங்கள் இன்னும் முற்றவேயில்லை.
இல்லை, இல்லை, எனக்குப் பணத்தாசை எனும் அரிப்பை புகழாசை எனும் நசப்பை அடக்கத் தெரியவில்லை. என்னிடம் தங்க சாயம் பூசப் போட்ட சிம்மாசனம் ஒன்று இருக்கிறது. சமூகத்துக்குள் ஊடுறுவும் மார்கெட்டிங் திறமை இருக்கிறது. என்னிடம் ஏமாறத் தயாராக ஒரு கூட்டம் இருக்கிறது. அரைகுறைதான் என்றாலும் இங்கே நான் பிழைக்கக் கூடாதா என அங்கலாய்ப்பீர்களேயாயின் தாராளமாக பிழையுங்கள்.
பேராசை பிடித்தவர்களிடம் அல்லது முட்டாள்களிடம் சென்று மூளை சலவை செய்து உங்கள் அரைகுறை அறிவை விற்றுப் பிழைத்துக் கொள்ளுங்கள். இருவருக்கும் சம்மதம் என்றால் எதுவுமே இங்கு குற்றமில்லைதான்.
ஆனால், தயவுசெய்து பள்ளிகளை விட்டுவிடுங்கள். அரசாங்கப் பள்ளி என்றல்ல, எந்த பள்ளிகளுக்குள்ளும் வந்து விடாதீர்கள்.
அப்பாவிகளை, பிஞ்சுக் குழந்தைகளை அடுத்த தலைமுறையை, அவர்களது எதிர்கால நம்பிக்கையை உங்கள் அரைகுறை அறிவு கொண்டு அசுத்தப்படுத்தி விடாதீர்கள். அவ்வளவுதான்.
அதெல்லாம் போகட்டும் தம்பி, நீங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சென்று வந்ததாக கேள்விப்பட்டேன். எப்படிப் பயணம்?
விமானத்திலா ? அல்லது ஓலைச்சுவடி படித்துவிட்டு அப்படியே வேட்டியோடு பறந்து விட்டீர்களா ?
*********
கட்டுரையாளர் குறிப்பு:
வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் : விஜய் மகிழ்ச்சி!
தவெக கட்சி மாநாட்டை தள்ளி வைக்கிறார் விஜய்?