நா.மணி
கனவுகள் ஏன் கலைந்து போகிறது?
தமிழ்நாட்டில் மிகச் சிறந்த கவிஞராக வந்திருக்க வேண்டியவர். இப்போது ஒரு பேராயர் அந்தஸ்தில் இருந்து வருகிறார். ஏன் இந்த நிலை? அவருடைய குடும்பத்தினர் அனைவரும் தமிழாசிரியர்களாக அமைந்து விட்டது மட்டுமே ஒற்றைக் காரணம். அவர் அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி சிங்கம். அவரின் வளர்ந்து வந்த தமிழ் ஆர்வத்தையும் புலமையையும், பன்னிரண்டாம் வகுப்பு முடியும் வரை கண்டு ரசித்தது அவருடைய மொத்த குடும்பமும். கல்லூரி படிப்பைத் தேர்வு செய்யும் காலம் வந்தது. தமிழ் இலக்கியம் பயில வேண்டும் என்பது கடைக்குட்டி சிங்கத்தின் தீராத காதல். குடும்பத்தார் அனைவரும் மொத்தமாக முட்டுக்கட்டை போட்டனர்.
“நாங்கள் தமிழ் படித்தது போதும். நீ வேற பாடம் படி” என்றனர் ஒட்டுமொத்தக் குரலில். எண்பதுகளின் இறுதி பகுதி அது. இளங்கலை மேலாண்மை பட்டப்படிப்பு அப்போதுதான் அறிமுகம் செய்யப்பட்டது. சுயநிதி கல்லூரிகளும் உதிக்காத காலம். அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அறிமுகமான அந்தப் பாடத்துக்கு ஏக கிராக்கி. அதிகபட்ச நன்கொடை. அதைக் கொடுத்து பிபிஎம் பட்டப்படிப்பில் கடைக்குட்டி சிங்கம் சேர்க்கப்பட்டு விட்டார்.
இந்த மூன்றாண்டுக் காலத்தில் கடைக்குட்டி சிங்கத்தின் கவிதை புனையும் ஆற்றல் பன்மடங்கு வளர்ந்தது. கல்லூரியில் கவியரங்கம் நடத்துதல், கவிதைப் போட்டிகளில் கலந்து கொள்ளுதல் என்று நாட்கள் நகர்ந்தது. அவரது கவிதைகளில் துள்ளும் கவி நயத்தில், கவிதை ரசிகர்கள் கூட்டம் கட்டுண்டு கிடந்தனர். 1987ஆம் ஆண்டில் “தேசியக் கொடியும் சில குண்டூசிகளும்…” என்ற தலைப்பில் அவர் பாடிய கவிதை இன்னும் என் நினைவில் நிற்கிறது.
கவியரங்கம் ஒன்றுக்கு வந்த கவிஞர் புவியரசு, உற்சாகமூட்டி கோவை அகில இந்திய வானொலி நிலையத்தில் கவிபாட வாய்ப்புகள் வழங்கினார். இன்றைய சாவி இதழ் உட்பட பல பத்திரிகைகளில் அவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. கவிப்பேரரசு வைரமுத்து அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தினார். கல்லூரியின் தமிழ் மன்றத்தின் தலைவராகவும் பரிணமித்தார்.

விருப்பம் இன்மையின் விளைவுகள்…
கல்லூரிக் காலம் முடிந்தது. கவிதை மட்டும் புனையத் தெரிந்த கவிஞர் கடைக்குட்டி சிங்கம், பெருவாரியான பிபிஎம் பாடங்களில் தோற்றுப் போனார். பட்டம் பெற முடியாமல் வீடு திரும்பியவரிடம், ” பட்டப்படிப்பை முடித்து விட்டு வாருங்கள்” என்று கூறி முடித்துக்கொண்டனர். இது சாக்குப்போக்கு வார்த்தைகள் என்று தெரிந்தாலும் பட்டம் இல்லாமல் வேலை தேட முடியாது என்பதை புரிந்து கொண்டார். தோல்வியுற்ற பாடங்களைத் தேடிக் கண்டுபிடித்து, போராடி படித்து பட்டம் பெற்று விட்டார். புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கூரியர் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அந்தப் பணி நிரந்தரமும் படுத்தப்பட்டது.
அந்த அலுவலகத்தில், அழகான சில்வர் அண்டாவில் தண்ணீர் கொண்டுவந்து வைக்கப்பட்டது. அதன் மீது வைக்கப்பட்டிருந்த டம்ளரில், “இது ….. திருடியது” என்று எழுதப்பட்டிருந்தது. அதை எதேச்சையாக கண்ணுற்ற கடைக்குட்டி சிங்கம், நேராக அலுவலக மேலாளர் அறைக்குச் சென்றார். “சார்… இங்க யார் திருடன் என்று சொல்வீங்க? எங்களைத் தவிர வேறு யார் வந்து இங்கு தண்ணி குடிக்கிறா? யார் இந்த டம்ளரை திருடீட்டு போய்ருவான்னு நெனைக்கிறீங்க? யாரை சந்தேகப் பண்றீங்க?” என்று கடைக்குட்டி சிங்கம் கர்ஜனை செய்தது. மேலாளர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

நேர்பட பேசினால்…
சிறிது நாட்கள் கழிந்தன. பெரிய நிறுவனம். புதிதாக சங்கம் அமைக்கும் முனைப்பு நடந்தது. சங்கம் அமைப்பதில் யாரெல்லாம் முன்னணி பாத்திரம் வகிக்கக்கூடும் என்று நிர்வாகம் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. நமது கடைக்குட்டி சிங்கத்தின் பெயர் முதல் பெயராக அந்தக் கிளையில் இடம்பெற்றது. உண்மையில் அவருக்கும் சங்கம் அமைக்கும் முயற்சிகளுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.
தற்போது பணி புரிந்து வரும் இடமே கடைக்குட்டி சிங்கத்தின் சொந்த ஊரும்கூட. இதை மனதில் கொண்ட நிர்வாகம், அங்கிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறு ஒரு மாநிலத்துக்கு மாறுதல் செய்தது. வயதான பெற்றோர். நோய்வாய்ப்பட்ட சகோதரி என இருந்த அவர் உடனடியாக பணி மாறுதல் செய்யப்பட்ட ஊருக்கு குடும்பத்தை அழைத்துக் கொண்டு செல்ல முடியவில்லை. ஆறு மாதங்கள் கஷ்டப்பட்ட பின்னர், குடும்பத்தோடு அந்த ஊருக்கு குடும்பத்தை அழைத்துச் சென்றார். உடனடியாக, மீண்டும் 500 கிலோமீட்டர் தள்ளி வேறு மாநிலத்துக்குத் தூக்கியடித்து பந்தாட்டத் தொடங்கியது.
“என்ன சார் இது அநியாயம்? ஏன் என் குடும்ப சூழ்நிலை அறிந்தும் இப்படி பந்தாடுகிறீர்கள்?” என்று கேட்டார். “நீங்களாக வேலையை எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்லும் வரை இதுவே உங்களுக்கான நீதி” என்றார் மேலாளர். வேறு வழியில்லாமல் வேலையை ராஜினாமா செய்து விட்டது கடைக்குட்டி சிங்கம்.
உயர்ந்த பட்ச மன அழுத்தம்…
இப்போது குறைந்தபட்ச ஜீவிதத்துக்கான போராட்டம் ஆரம்பம் ஆனது. இந்தப் போராட்டத்தில் விழி பிதுங்கி நின்றவர் கண்முன் இரண்டு வழிகள் தெரிந்தன. ஒன்று தற்கொலை செய்து கொள்வது. மற்றொன்று, மதம் மாறி விடுவது. இதுபற்றி நேரில் பேச, என்னைத் தேடி வந்தார். “இரண்டுமே நூறு விழுக்காடு தவறான பாதைகள். இரண்டுமே பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ளும் வழிமுறைகள்தாம். ஒருவேளை நீங்கள் தற்கொலை செய்து கொண்டால், நீங்கள் மட்டுமே இங்கு இருக்கும் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொண்டு செல்கிறீர்கள். பிரச்சினைகள் அப்படியேதான் இருக்கின்றன. உங்களைச் சுற்றி இருக்கும் வயது முதிர்ந்த பெற்றோர் நோயின் கோரப்பிடியில் உங்கள் உதவி தேவைப்படும் சகோதரி எல்லோரும் முன்னிலும் நீங்கள் இன்றி கஷ்டப்படப் போகிறார்கள். மதம் மாறிவிட்டால் மனதளவில் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். பிரச்சினைகள் எப்போதும் போல உங்களைச் சுற்றி இருக்கும். மேலும், மத மாற்றம் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்து விடாது” என்பதற்கான அவர் உணரும் வகையில் உதாரணங்களோடு உரையாடினேன். இரண்டுமே தவிர்க்கப்படும் என்று மனதார நம்பினேன். தற்கொலை பாதை தவறு என்று உணர்ந்து கொண்டவர், மத மாற்றம் சரியான தீர்வு என்று நம்பி அதில் பயணிக்கலானார்.
எப்போது படிப்பு முடிந்து வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கித் தவிக்க தொடங்கினாரோ, அப்போதே அவருக்குள் வாழ்ந்து வந்த கவிஞர் விடை பெற்றுக்கொள்ள ஆயத்தமானார். பாதிரியாரின் பண்புகள் அதிகரிக்க அதிகரிக்க, சமூக அக்கறை மிகுந்த கவிஞர், முற்றாக விடை பெற்று சென்று விட்டார்.
கவிஞரின் திறன்கள் முழுவதும் ஊழியத்தில் காட்டத் தொடங்கினார். தான் தேடித் தேடிச் சேர்த்த தமிழ் இலக்கிய நூல்கள் பயனற்ற குப்பையாகத் தோன்றியது அவருக்கு. நூறு விழுக்காடு மகிழ்ச்சியோடு தான் ஏற்றுக்கொண்ட மார்க்கத்தில் பயணித்துக் கொண்டுள்ளார்.
பாடத் தேர்வும் பாடத் திணிப்பும்…
இந்தக் கதையில் வரும் கடைக்குட்டி சிங்கம் போன்ற பல சிங்கக் குட்டிகளை நான் அறிவேன். தங்களின் விருப்பப்பாடங்களை படிக்க விடாமல் பாடங்களைத் திணித்ததால் அந்த சிங்கக் குட்டிகளுக்கு என்ன ஆனது என்பதற்கு நேரடி சாட்சியம் நான். கடைக்குட்டி சிங்கம் மற்றும் இதர கதைகள் சொல்லும் நீதி இதுதான். ஒருவருக்கு ஒரு பாடத்தில் ஆர்வத்தைச் சீர்குலைத்து, வேறொரு பாடத்தை, என்ன விலை கொடுத்து வாங்கித் திணித்தாலும் பயனில்லை என்பதே இதன் பொருள். நமது கடைக்குட்டி சிங்கத்தை தமிழ் இலக்கிய உலகம் இழந்தது போன்ற பல இழப்புகளை அந்த மண் சந்திக்க வேண்டியிருக்கும்.

விருப்பப்பாடங்களின் நிலை…
கல்லூரி மாணவர்கள் சேர்க்கை காலத்திலோ அல்லது தேவை கருதியோ, அடுத்து என்ன படிக்கலாம் என்று ஆலோசனை கேட்க வருவார்கள். பெரும்பாலானவர்கள், “என் மகன் / மகள் +2 முடித்திருக்கிறார். அடுத்து என்ன படிக்க வைக்கலாம்?” என்று கேட்பார்கள். “உங்கள் மகனுக்கு / மகளுக்கு என்ன படிக்க விருப்பம்?” எனத் திருப்பிக் கேட்டால், “சார் அவங்களுக்கு என்ன தெரியும்? நீங்க சொல்லுங்க” என்பார்கள். உழைக்கும் மக்கள் இவ்வாறு கேட்டால்கூட புரிந்துகொள்ள முடியும். படித்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் அதற்கு மேல் உள்ளவர்கள், மருத்துவம், பொறியியல், கணினி அறிவியல், வணிகவியல், நவீன அறிவியல் வளர்ச்சிப் பாடங்கள் என வகைப்படுத்தி அலசி ஆராய்ந்து பார்ப்பார்கள். பின்னர் தனக்குத் தெரிந்தவர்களிடம் விசாரிப்பார்கள். அவர்கள் என்ன சேர்க்க விளைகிறார்கள் என்பதை நமது வாய் வழியாக சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவர்கள் மத்தியிலும் குழந்தைகளின் கருத்துகளுக்கு, அவர்களின் விருப்பத் தேர்வுகளுக்கு இடமில்லை.
சரியான நேரத்தில் சரியான ஊக்குவிப்பு இன்மை…
குழந்தையாக இருக்கும்போது, “நீ என்னவாக வரப் போகிறாய்?” என்ற கேள்வியை பலமுறை கேட்டு, “நான் கலெக்டர், நான் டாக்டர், நான் இன்ஜினீயர்…” என்பதைக் கேட்டு, மகிழ்ந்து, கை தட்டினோம். அது எதற்காக? இப்போது பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து முடித்து, சில பாடங்களில் ஆர்வம் தேர்வு, எதிர்காலம், அதில் நிபுணத்துவம் பெற வேண்டும் என்ற உந்துதல் இருக்கும்போது, “அதெல்லாம் முடியாது. இதுதான் மதிப்புமிக்க பாடம். இதற்குத் தான் வேலைவாய்ப்புகள் மிகுதி. இதைத்தான் படிக்க வேண்டும்” என்று நிர்பந்தம் செய்து படிக்கும்படி கட்டாயப்படுத்துகிறோம்.
பாடத் தேர்வின் படிநிலை…
உண்மையில் இதைப் படி இதற்கு வேலை அல்லது எதிர்காலம் உண்டு என்று நாம் திணிக்கும் படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று நமக்கு நிச்சயமாகத் தெரியுமா? உறுதியான வேலைவாய்ப்பு சார்ந்த பாடங்கள் அல்லது பட்டப்படிப்புகள் எத்தனை இருக்கின்றன? ஏராளமான உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. எண்ணற்ற பாடப் பிரிவுகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை உண்மையில் நேரிடையாக வேலை சார்ந்தவை அல்ல. நிச்சயமான எதிர்காலம், வேலைவாய்ப்பு இருக்கிறது என்று அறுதியிட்டு கூற முடியாது.
தொழில் சார்ந்த பட்டப்படிப்புகளில்கூட சிலவற்றுக்கே அது சார்ந்த எதிர்காலம் இருக்கிறது. வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. மற்றவை பெயரளவில் தொழில் சார்ந்த பட்டங்கள், பட்டயங்கள். இந்த யதார்த்த நிலையை கணக்கில் கொள்ளாமல், ஏன் இதைப் படித்தே ஆக வேண்டும் என்று சக்திக்கு மீறியும் கடன் வாங்கி குழந்தைகளைக் குறிப்பிட்ட பாடங்களை படிக்க நிர்பந்தம் செய்கிறோம்? நமக்குத் தெரிந்ததே சரி என்ற அறியாமையே இதற்கு பெரும் பங்கு காரணம்.
மொழிப் பாடங்கள், கலைப் பாடங்கள், சமூக அறிவியல், இயற்கை விஞ்ஞானம், உயிர் அறிவியல் என எந்தப் பாடமாக இருந்தாலும் அதில் சிறப்பு முயற்சிகள் எடுக்காவிட்டால் ஏதோ ஒரு பட்டம் என்ற அளவில் அது நின்று போய் விடும். எந்தப் பாடமாக இருந்தாலும் அதில் எட்டு முதல் பத்து ஆண்டுகள் வரை முழு மனதோடு முதலீடு செய்தால் அதைச் சார்ந்து வாழ முடியும். அதற்குள் சென்று சாதனை படைக்க முடியும். புதிது புதிதாக முளைத்து வரும் பாடங்கள், உயரிய கட்டணங்களைக் கொண்டுள்ள பாடங்கள், மிகப் பெரிய தனியார் கல்லூரிகளில் படாடோடமாக நடத்தப்படும் பாடங்கள் என்று எதற்கும் முடித்தவுடன் வேலை என்று உத்தரவாதம் இல்லை. படிப்பில் ஆர்வம் அக்கறையைப் பொறுத்தே எல்லாம்.
படிப்புகளை எப்படித் தேர்வு செய்யலாம்?
முதலில் படிப்பவரின் ஆர்வம். அவர் தேர்வு செய்யும் பாடம் / பாடங்கள். படிப்பதற்கு ஏற்ற நிறுவனங்கள், முதலில் அரசுக் கல்லூரி. அடுத்து அரசு உதவிபெறும் கல்லூரி. தனியார் கல்லூரிகள் எனில் அவரவர் வசதிக்கேற்ப தேர்வு.
கட்டுரையாளர்:

பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு 638009
தொடர்புக்கு: tnsfnmani@gmail.com