கே.அசோக் வர்தன் ஷெட்டி Scientific Attitude for Indian Progress
‘கோமியத்தின் மருத்துவ குணம்’ தொடர்பான சர்ச்சை குறித்து 06.02.2025 அன்று “இந்தியாவை முன்னேற்றுவதற்கான அறிவியல் மனப்பான்மை” என்ற தலைப்பில் கே.அசோக் வர்தன் ஷெட்டி ஆற்றிய உரையின் ஒரு பகுதி:
“பசுவின் சிறுநீர் (கோமியம்) நோய்களைக் குணப்படுத்தும் என்று சென்னை ஐஐடியின் இயக்குநர் அண்மையில் கூறினார். கோமியம் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டச் சில ஆராய்ச்சி ஆவணங்களையும் அவர் மேற்கோள் காட்டினார்.
கண்கள், காதுகள், மூக்கு, வாய், சிறுநீர்ப் பாதை, ஆசனவாய் போன்ற உடலின் எல்லாத் துவாரங்களும் அல்லது திறப்புகளும் சில பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்புப் பண்புகளைக் கொண்ட சுரப்புகளை உருவாக்குகின்றன. இவை பல லட்சக்கணக்கான ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியின் மூலம், நுண்ணுயிரிகளிடமிருந்து உடலை ஓரளவு பாதுகாக்கும் இயற்கையான பாதுகாப்பு வழிமுறைகள் ஆகும். அதனால்தான் சிறிய காயங்களின் மேல் உமிழ்நீரைத் தடவுவது சில நேரங்களில் காயத்தைக் குணப்படுத்தக்கூடும். மனிதர்கள் உட்பட அனைத்து விலங்குகளின் சிறுநீரும் ஒரே மாதிரியான பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன.

Scientific Attitude for Indian Progress
ஐஐடியின் இயக்குநரிடம் ஒரு கேள்வி!
சென்னை ஐஐடியின் இயக்குநரிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான்: டெட்டால், பினாயில் ஆகியவற்றிலும் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. எனவே அவற்றை அவர் மருந்தாக உட்கொள்வாரா? புதிய மருந்தொன்றை ஏற்றுக்கொள்வது பல படிகள் கொண்ட செயல்முறை. Scientific Attitude for Indian Progress
மருந்துப்போலி விளைவு (Placebo effect) என்று மருத்துவத் துறையில் கூறப்படுவதுண்டு. உண்மையான மருந்துகளால் அல்லது மருத்துவ நடைமுறைகளால் கிடைக்கக்கூடிய பலன்களை வழங்கக்கூடிய போலியான மருந்துகள் அல்லது மருத்துவ நடவடிக்கைகளை இது குறிக்கும். எனவே, கோமியம் உண்மையில் வேலை செய்கிறதா என்பதைத் தீர்மானிக்க, மருந்துப்போலி விளைவுகள் அற்ற நிலையில், பரிசோதனை செய்பவர், பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர் ஆகிய இரு தரப்பினரும் அறியாத வகையில் (Double-blind study), குறிப்பிட்ட வகைமையில் அடங்காத (Randomised) மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய சோதனைகளில் கோமியத்தின் பலன் மருந்துப்போலியின் செயல்திறனைவிடவும் கணிசமான அளவில் சிறப்பாக இருந்தால், குறுகிய அல்லது நீண்ட காலத்திற்கு எந்தப் பக்க விளைவுகளையும் அது கொண்டிருக்கவில்லை என்றால் அதைப் பரிந்துரைக்க முடியும்.
ஒரு புதிய மருந்துக்கு ஒப்புதல் தருவதற்கென்று சில நடைமுறைகள் உள்ளன:
முதலில், ஆய்வகச் சோதனை. அதாவது ஆய்வகத்தில் வைத்து செல்களிலும் திசுக்களிலும் சோதனை மேற்கொள்ள வேண்டும். பின்னர் உயிரியல் சோதனை. அதாவது விலங்குகள்மீது சோதனை. பின்னர் சொந்த விருப்பத்துடன் பரிசோதனைக்கு உட்பட முன்வரும் மனிதர்கள்மீதான சோதனை.அதன் பிறகு, பின்னர் தரவுகளின் பகுப்பாய்வு, வல்லுநர்களின் மதிப்பாய்வு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒழுங்குமுறை ஆணையமான மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) சான்றிதழ் வழங்க வேண்டும். கோமியம் இன்னமும் இந்த நடைமுறைக்கு உட்படுத்தப்படவில்லை. நல்ல வேளையாக, CDSCO அமைப்பும் கோமிய சிகிச்சையை அங்கீகரிக்கவில்லை. Scientific Attitude for Indian Progress
எந்தவொரு கழிவுப் பொருளையும் போலவே கோமியத்திலும் ஏராளமான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகள் அல்லது நச்சுகள் உள்ளன. அவை தொற்று அல்லது நச்சுத் தாக்கத்தை ஏற்படுத்தும். இது புருசெல்லோசிஸ் (மத்திய தரைக்கடல் காய்ச்சல்) அல்லது ஈ. கோலை / எசரிக்கியா கோலை (Escherichia coli – E. coli) தொற்று போன்ற பாதிப்புகளைப் பரப்பக்கூடும். பதப்படுத்தப்படாத பசும்பாலை உட்கொள்வதுகூட ஆபத்தானது. கோமியத்தில் அதிக அளவு அம்மோனியாவும் யூரியாவும் இருப்பதால் அதிக அளவில் உட்கொண்டால் கல்லீரலும் சிறுநீரகங்களும் சேதமடையும்.

Scientific Attitude for Indian Progress
மருந்து நிறுவனங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல!
வேறு எந்த விலங்கின் சிறுநீரைப் போலவே, பசுவின் சிறுநீரிலும் சில பயனுள்ள பொருட்கள் இருக்கலாம் என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதற்காகப் பசுவின் சிறுநீரை அப்படியே குடிக்கலாம் என்பதல்ல. ஒரு ஆப்பிள் சாக்கடையில் இருந்தால், அதை அப்படியே விட்டுவிடலாம் அல்லது ஆப்பிளை எடுத்து நன்கு சுத்தம் செய்து பின்னர் சாப்பிடலாம். ஆப்பிளைச் சாப்பிடும்போது ஒருவர் முழுச் சாக்கடை நீரையும் குடிக்க மாட்டார்.
கோமியத்தில் நன்மை பயக்கும் பொருளைக் கண்டுபிடித்ததற்காக யாராவது காப்புரிமை பெற்றால் அதனால் கோமியம் மருந்தாகிவிடாது. பெரிய மருந்து நிறுவனங்கள் எப்போதும் புதிய மருந்துகளை உருவாக்கி அவற்றைப் பணமாக்குவதற்கான வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அமேசான் மழைக்காடுகள், ஆப்பிரிக்கக் காடுகள், மேற்குத் தொடர்ச்சி மலைகள் எனப் பல இடங்களிலும் மருத்துவ மூலிகைகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். பசுவின் சிறுநீரில் உண்மையிலேயே கணிசமான அளவு நன்மை பயக்கும் பொருட்கள் இருந்தால், அந்த வாய்ப்பை விட்டுவிடுவதற்குப் பெரிய மருந்து நிறுவனங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்பதே கோமியத்தின் கதையை நமக்குச் சொல்கிறது.
கே.அசோக் வர்தன் ஷெட்டி Scientific Attitude for Indian Progress

கே.அசோக் வர்தன் ஷெட்டி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்தியப் பல்கலைக்கழகமான சென்னையில் உள்ள இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர். Scientific Attitude for Indian Progress