சத்குரு
பாரதியாரோ, “எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண்ணிங்கே இளைப்பில்லை காண்…” என்றார். ஆனால் பெண்புத்தி பின்புத்தி என்றும் பழமொழி உண்டு. ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால், இன்னும் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏன்? சத்குருவிடம் இதைக் கேட்டபோது…
வளைகுடா நாடுகளுக்கு வந்திருந்த ஒரு அமெரிக்க வீரன் அங்கே ஒரு வித்தியாசமான காட்சியைப் பார்த்தான். உள்நாட்டைச் சேர்ந்த ஒருவன் தெருவில் நடந்து வர, இருபதடி இடைவெளிவிட்டு நான்கு பெண்கள் அவனைத் தொடர்வதைக் கவனித்தான். விசாரித்தான்.
“நான்கு பேரும் என் மனைவிகள்” என்றான் அவன்.
“என்னது… நான்கு மனைவிகளா? கொடுத்து வைத்தவன் நீ” என்று பொருமிய அமெரிக்கன் கேட்டான்… “அழகாக அவர்கள் புடைசூழ நடக்காமல், ஏன் தனியே முன்னால் நடக்கிறாய்?”
“இங்கே ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள் உடன் வர முடியாது. பின்னால்தான் தொடர வேண்டும்”.
சில நாட்களில் அமெரிக்காவுக்கும், அந்த நாட்டுக்கும் போர் வெடிக்கும் அபாயச் சூழல் வந்தது. அப்போது, அதே ஆசாமி வெளியே வந்தபோது, அவனுக்கு இருபதடி முன்னால் அந்த நான்கு மனைவிகளும் நடந்து சென்றனர். அமெரிக்க வீரன் ஆச்சர்யமானான்.
“அட, எப்போதிலிருந்து பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்தாய்?” என்று கேட்டான்.
அவன் சிரித்தான். “முன்னுரிமையாவது, மண்ணாங்கட்டியாவது! இந்த அமெரிக்க ராஸ்கல்கள் எங்கெங்கே கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருக்கிறார்களோ? தெரியாமல் மிதித்துத் தொலைத்துவிட்டால்? அதனால்தான் பெண்களை முன்னால் அனுப்புகிறேன்.”
இதை ஜோக்காகக் கேட்டுவிட்டு சிரிக்கலாம். ஆனால், பெண்களுக்கு எதிராக இதில் ஒளிந்திருக்கும் அநியாயத்தை நீங்கள் தவறவிட மாட்டீர்கள். ஆண்கள் வகுத்த சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களைக் குருட்டுத்தனமாக நம்பி தன்னை மூழ்கடித்துக் கொள்ளும் எந்தப் பெண்ணுக்கும் முழுமையான சுதந்திரம் என்பதன் ருசியே கிடைக்காது. இன்னொரு பக்கம், ஆண்களைப் போல் உடுத்திக் கொள்வதாலோ, அதிகாரம் செய்வதாலோ, முரட்டுக் காரியங்களில் ஈடுபடுவதாலோ, சுதந்திரம் கிடைத்துவிடுவதாக சில பெண்கள் நினைத்துக் கொள்வதைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது.
ஆண்களுடைய போலிகளாக, பிம்பங்களாக நடந்து கொள்வதில் பெண்களுக்கு என்ன பெருமை இருக்க முடியும்? அவர்கள் தங்களைவிட ஆண்களை உயர்வாக நினைத்து, அந்த உயரத்தை எட்டிப் பிடிக்கப் பார்க்கிறார்கள் என்றல்லவா ஆகிவிடும்?
உண்மையில், வாழ்க்கையை அறிவுபூர்வமாக வாழ முற்பட்டு, அதை விட்டு வெகுதூரம் ஆண் விலகி வந்துவிட்டான். வாழ்க்கையை உணர்வுபூர்வமாக வாழத் தெரிந்திருப்பதால், பெண்ணின் அனுபவங்களே ஆழமானவை. அது ஆணுக்கு சுலபத்தில் கிடைக்காத ஒன்று. அதனால் ஒரு பெண்ணைத் தன் அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை ஆண் புரிந்து கொண்டான். இது புரியாமல், ஆண்களின் நிழலில் இருப்பதைப் பெண்கள் ரசித்தார்கள்.
பெண்ணை மதிக்காத எந்தக் குடும்பமும் உயரப்போவதில்லை. பெண்கள் எந்தத் தரத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார்களோ, அதைப் பொறுத்துதான் அந்த சமுகத்தின் தரமும் அமையும்.
கோயில்களுக்குள் பெண்களை அனுமதிக்காமல் இருக்க தீட்டு என்று ஒரு புதிய தந்திரத்தைக்கூட ஆண் பயன்படுத்துகிறான். உண்மையில் இயற்கை தந்திருக்கும் சில உடல் மாற்றங்களை அசிங்கமாக நினைப்பதுதான் கேவலம். பொதுவாக, வாழ்க்கையில் கிடைக்கும் எதையும் ஆண் தன் புத்தியை வைத்துப் பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், பெண் அதை அனுபவித்து உணர்ந்து விடுகிறாள். ஆண் கணக்குப் போட்டுக் கொண்டு இருக்கும் நேரத்தில், பெண் நேரடியாக உணர்வுபூர்வமாக வாழ்ந்துவிடுகிறாள்.
ஆண் அறிவுபூர்வமாக இருப்பதும் பெண் உணர்வுப்பூர்வமாக இருப்பதும் பெரிய கோளாறு அல்ல… அது அச்சப்பட வேண்டிய பிரச்சனையும் அல்ல. உண்மையில், இரண்டும் இணைந்து செயல்பட்டால், பல உன்னதங்கள் கிடைக்கும். அற்புதங்கள் நேரும்!
அப்புறம் கோளாறு எங்கே வந்தது? ஒன்றைவிட மற்றது உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என்ற நினைப்புதான் அத்தனை பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணம்.
ஒரு பெண் சந்தோஷமாக இருந்தால்தான் அவளைச் சுற்றியுள்ளவர்களும் சந்தோஷமாக இருக்க முடியும். அதேபோல் ஓர் ஆண் மகிழ்ச்சியாக இல்லையென்றால், அவனைச் சுற்றியிருப்பவர்களின் மகிழ்ச்சியும் போய்விடும்.
இயற்கை, ஆணுக்கும், பெண்ணுக்கும் சில அடிப்படைக் காரணங்களுக்காகவே வெவ்வேறு உடல் அமைப்புகளையும், வித்தியாசமான உடல் உறுதிகளையும் வழங்கி இருக்கிறது. இருவருக்கும் உடல்ரீதியாக வெவ்வேறு இன்பங்கள் இருக்கலாம். ஆனால், அமைதியும், முழுமையான ஆனந்தமும் உடல் தொடர்பானது இல்லை. ஆணுக்கு வேறு ஆனந்தம், பெண்ணுக்கு வேறு ஆனந்தம் என்று இயற்கை பாகுபாடு பார்க்கவில்லை.
ஆனந்தமாக இருப்பது என்பது மனித குலத்தின் அடிப்படை. இதைப் புரிந்து நடந்து கொண்டால், சமூகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எந்த ஏற்றத்தாழ்வும் இருக்காது!
மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்….
தொழிலில் சிறக்க எந்தக் கடவுளைக் கும்பிடலாம்?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!