அன்பு-ஆனந்தம் ஏன் எட்டாக்கனியாக தெரிகிறது?

சிறப்புக் கட்டுரை தமிழகம்

சத்குரு

பொருள் சார்ந்த நல்வாழ்வுக்கென்று ஒரு அறிவியல் இருப்பதைப் போல, உள்நிலை நலனுக்கென்றுகூட ஒரு அறிவியல் உண்டு. மிக நீண்ட காலமாக அது கவனிக்கப்படாமல் இருக்கிறது. இது தற்போது ஒரு தொழில்நுட்பமாக வழங்கப்படுகிறது.

கேள்வி

அமைதியும், மகிழ்ச்சியும் அவ்வளவு அடிப்படையானது என்றால், பெரும்பாலான மக்களுக்கு அது எட்டாக்கனியாகத் தோன்றுவது எதனால்?

பதில்

அது ஒரு அடிப்படைத் தேவையாக இருக்கும்போது, மகிழ்ச்சி ஏன் அவ்வளவு தொலைவில் இருக்கிறது? ஓரிடத்தில் எப்படி அமைதியாக உட்காருவது என்பதைக்கூட ஏன் எண்ணற்ற மக்கள் அறிந்திருக்கவில்லை? இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், பொருளாதாரம் உறுதி செய்யப்படுமானால், வாழ்க்கையில் எல்லாமே சுபிட்சமடைந்துவிடும் என்று நமக்குள் எங்கோ நாம் நம்புகிறோம்.

இந்தியா, பொருளாதார முன்னேற்றத்தில் இன்னும் உறுதி செய்ய வேண்டியது அதிகம் உள்ளது. ஆனால் பொருளாதாரத்தில் போதிய முன்னேற்றம் கண்டுள்ள மேலைச் சமூகங்கள் அநேகம் உண்டு. அங்கெல்லாம் பிரம்மாண்ட அளவிலான மனித செயல்பாடுகள் நிகழ்ந்துள்ளன.

அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்தினால், இந்தக் கிரகத்தின் முகவிலாசமே மாறும்வகையில் நாம் ஏராளமான செயல் புரிந்துள்ளோம். பூமியின் தோற்றமே ஒரு நூறு வருடங்களில் முற்றிலும் மாறி இருக்கிறது.

இந்த பூமியின் இருப்பே அச்சுறுத்தப்படும் அளவுக்கு, பொருளாதார உறுதிக்காக ஏகப்பட்ட செயல்கள் நிகழ்ந்துள்ளன. உலகத்தை அந்த அளவுக்கு பொருளாதாரத்தில் நிலைநிறுத்தியுள்ளோம். இவ்வளவு நிகழ்ந்திருந்தாலும், மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்களா?

வெளிப்புற அறிவியல் உங்களுக்கு வசதி மற்றும் சுகவாழ்க்கையை அளித்துவிட முடியும். ஒரு நூறு வருடங்களுக்கு முன்பிருந்த அரச பரம்பரையினர்கூட அனுபவித்திருக்காத வசதிகள் சௌகரியங்களை இன்றைக்கு சாமான்ய மனிதரும் அனுபவிக்கின்றனர். அப்படி இருந்தாலும், நூறு வருடங்களுக்கு முன்பிருந்த மனிதர்களைவிட இன்றைய மனிதர்கள் அதிக அமைதியுடனும் அன்புடனும் இருப்பதாகக் கூற முடியவில்லை.

இப்போது, பலவிதங்களிலும், மக்களின் மகிழ்ச்சியும், அமைதியும், அன்பும், வெளிச்சூழலுக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாகவோ அல்லது உண்மையிலேயே அமைதியாகவோ இருக்கப்போவதில்லை.

ஏனென்றால் நீங்கள் எப்படிப்பட்ட நபராக இருந்தாலும், நீங்கள் எவ்வளவுதான் ஆற்றல் வாய்ந்தவர் என்றாலும், நீங்கள் அதிஉன்னத மனிதராக (super human) இருப்பினும் வெளிச்சூழலின் மீது உங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு இல்லை. ஒரு குடும்பத்தில் இரண்டு பேரே இருந்தாலும் அங்கும் கூட சூழ்நிலை மீது முழுமையான கட்டுப்பாடு இல்லை.

உங்களால் வெளிச்சூழ்நிலையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்தான் நிர்வகிக்க முடியும். அதேநேரம் உங்களது உள்நிலையை முழுமையான கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முடியும். பொருள் சார்ந்த நல்வாழ்வுக்கென்று ஒரு அறிவியல் இருப்பதைப் போல, உள்நிலை நலனுக்கென்றுகூட ஒரு அறிவியல் உண்டு.

மிக நீண்ட காலமாக அது கவனிக்கப்படாமல் இருக்கிறது. இது தற்போது ஒரு தொழில்நுட்பமாக வழங்கப்படுகிறது. ஆனால் நீங்கள் எவ்வளவு தீவிரத்துடன் அந்த தொழில்நுட்பத்தைப் பயிற்சி செய்கிறீர்களோ அதற்குத் தகுந்தவாறுதான் அது செயல்படுகிறது.

ஒவ்வொரு மனிதரும் இங்கே பரவசத்துடன் வாழும் திறன் பெற்றிருக்கிறார்கள். யோகப் பயிற்சி செய்பவர்கள் தங்கள் உறவினர் மற்றும் நட்பு வட்டாரங்களில் எப்போதும் எதிர்கொள்ளும் விஷயங்களுள் ஒன்று, “உங்கள் முகத்தில் எப்போதுமே புன்னகை தவழ்கிறதே!”.

யோகப் பயிற்சி செய்துவரும்போது, திடீரென்று நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு காரணத்துக்காகவும் இல்லாமல், நீங்களாகவே ஆனந்தமாக இருக்கிறீர்கள். ஏனென்றால் அதுதான் உங்கள் இயல்பு. நீங்கள் குழந்தையாக இருந்தபோது, ஓரளவுக்கு இப்படித்தான் இருந்தீர்கள்.

வெறுமனே நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்கள். குடும்பத்தில் ஒரு மரணம் நிகழ்ந்திருந்தாலும், அப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாகவே இருந்தீர்கள். நீங்கள் ஓரளவுக்கு மனதைச் சேகரித்த பிறகுதான், எல்லாவற்றைக் குறித்தும் துன்பப்படத் தொடங்கிவிட்டீர்கள்.

பெரும்பாலான மக்களுக்கு, அவர்களது வாழ்வில் எதுவும் தவறாகப் போயிருக்கவில்லை. ஆனால் தவறாகிவிடலாம் என்ற பயத்திலேயே எப்போதும் இருக்கின்றனர். நீங்கள் மகிழ்ச்சி பெறுவதற்கு வெளித் தூண்டுதலைப் பயன்படுத்தினால், அது ஒரு பிரச்சனையாக உள்ளது. எனவே நீங்கள் உள்நிலையில் ஒரு தூண்டுதலைக் காண வேண்டும்.

யோகாவைப் பற்றி, நாம் கூறுவது இதைத்தான்: யோகா என்பது உங்கள் எல்லா உள்நிலைப் பரிமாணங்களுக்கும் ஒரு உள்நிலை தூண்டுகோல் காண்பதற்கான ஒரு தொழில்நுட்பம். உள்நிலைப் பரிமாணங்களான உங்களது ஆனந்தம், உங்களின் பரவசம், உங்கள் அமைதி மற்றும் உங்களது அன்பு போன்றவைகளுக்கு ஒரு உள்நிலைத் தூண்டுதல் பெறுகிறீர்கள்.

அவற்றுக்காக இப்போது நீங்கள் வேறு யாரையும் சார்ந்திருக்கவில்லை. நீங்கள் எப்போதும் அமைதியும், ஆனந்தமும், அன்பும் நிறைந்தவராக இருக்கிறீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கே உரிய இயல்பினால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். உங்களது மகிழ்ச்சிக்காக வேறு யாரோ ஒருவர் அல்லது வேறு ஏதோ ஒன்று காரணமாக இருக்கவில்லை.

இப்போது உங்களது செயல்பாடுகளில் உங்களுக்கு அளவற்ற சுதந்திரம் உள்ளது. ஒட்டுமொத்த உலகமும் உங்களுடன் உடன்படவில்லை என்றாலும், அது ஒரு பொருட்டில்லை, என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்துள்ளது.

sadhguru article about love and joy

உங்களுடைய இயல்பிலேயே நீங்கள் மகிழ்ச்சியானவராக இருக்கும்போதுதான், இந்த உலகத்தில் நீங்கள் உங்களுக்காக யாரையும் சாராத, சுயநலமில்லாதவராக இருக்கிறீர்கள். இல்லையென்றால், நீங்கள் எங்கிருந்தாலும், உங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்தும், சுற்றியுள்ள சூழல்களிடமிருந்தும் வலுக்கட்டாயமாக சந்தோஷத்தை பிழிந்தெடுக்க முயற்சிப்பீர்கள்.

இது நிறைய மக்களுக்கும் நிகழ்கிறது. ஒவ்வொருவரும் தங்களது நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சியை எடுத்துக்கொள்ள முயற்சி செய்வதும், அவர்களது நண்பர்கள் இவர்களிடமிருந்து மகிழ்ச்சியை எடுக்க முயற்சிப்பதுமாக இருக்கும் காரணத்தால், நண்பர்கள் மெள்ள மெள்ள எதிரிகளாகின்றனர். இது ஒரு யுத்தத்திற்கு வழிகாட்டக்கூடும்.

உங்கள் வாழ்க்கை, பிறரைப் பிழிந்து மகிழ்ச்சியைக் கறக்காமல், மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருந்தால், நீங்கள் மிகவும் வித்தியாசமானவராக இருப்பீர்கள். உங்கள் வாழ்வின் அனுபவத்தைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்.

உங்கள் மகிழ்ச்சியை நீங்கள் வெளிப்படுத்திய கணங்களே உங்கள் வாழ்க்கையின் மிக அழகான கணங்களாக இருக்கின்றன. உங்களது மகிழ்ச்சி வெளிப்படுத்தலில், நீங்கள் ஒரு புன்னகையை மட்டுமே சிந்தியிருக்கலாம் அல்லது யாருக்கோ ஒரு பரிசளித்திருக்கலாம் அல்லது யாரிடமோ மென்மையான தழுவலை மட்டும் வெளிப்படுத்தியிருக்கலாம்.

இருப்பினும், மகிழ்ச்சித் தேடுதலில் பெரிய விஷயங்களைச் செய்வதைக் காட்டிலும், இத்தகைய எளிமையான வெளிப்படுத்தல்கள் உங்களுக்குள் மிக அழகான அனுபவமாக இருந்திருக்கின்றன. உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையும் மகிழ்ச்சியின் ஒரு வெளிப்பாடாக மாறும்போது, வாழ்க்கை எவ்வளவு இனிமையாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…

டெல்லி அமைச்சர்: வெளியான அடுத்த வீடியோ – நெருக்கடியில் ஆம் ஆத்மி

பாஜக கிளப்பிய பாகிஸ்தான் ஜிந்தாபாத்: பதிலடி கொடுத்த காங்கிரஸ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *