RPF soldier who shot innocents

அப்பாவிகளை சுட்டுக் கொன்ற ஆர்.பி.எஃப் வீரர்… மன நோயாளியா? மதவாத நோயாளியா?

இந்தியா சிறப்புக் கட்டுரை

கடந்த ஜூன் மாதம் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தால் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரண்டு மாதங்கள் ஆகியும் இந்த துயர சம்பவத்தின் வலியும், வேதனையும் அகலவில்லை.

இந்த நிலையில்,  ஜூலை 31 அன்று அதிகாலையில், மும்பையை நெருங்கிக் கொண்டிருந்த மும்பை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் ஒருவர், தனது உயரதிகாரி மற்றும் மூன்று அப்பாவி முஸ்லிம் பயணிகளை சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு நில்லாமல், சுட்டுக்கொல்லப்பட்டவர் தனது காலுக்கடியில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராட, அவரை பாகிஸ்தானி என்றும், மோடிக்கு ஓட்டுப்போடுங்கள் என்றும் சற்றும் மனசாட்சி இல்லாத மிருகமாய் அந்த ஆர்.பி.எஃப் வீரர் துப்பாகியுடன் பேசும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வெறுப்பு பிரச்சாரத்தின் அடையாளமாய் மாறி நிற்கிறது.

மனதை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவத்தின் முழு பின்னணி என்ன? அடுத்தடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? குற்றவாளி உண்மையில் மனநோயாளியா? வெறுப்பு பிரச்சாரத்தின் தூண்டுதலால் நடந்த துயர சம்பவமா? என்பது குறித்து விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

cbi starts investigation

நடந்தது என்ன?

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து கடந்த ஜுலை 30ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மஹாராஷ்டிராவின் மும்பை நோக்கி புறப்பட்டது 12956 என்ற எண் கொண்ட மும்பை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்.

அதில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் ஆர்.பி.எஃப் சப் இன்ஸ்பெக்டர் டிகா ராம் மீனா (57) தலைமையில் ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள்ஸ் நரேந்திர பர்மர், அமே ஆச்சார்யா மற்றும் சேத்தன் சிங் ஆகியோர் பாதுகாப்பு பணிக்காக பயணம் செய்தனர்.

இவர்கள் அனைவருக்கும் பி5 பெட்டியில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது ஆரம்பம் முதலே பதற்ற நிலையில் இருந்த சேத்தன் சிங்கை கண்ட சக காவலர்கள், கையிலுள்ள ஏ.ஆர்.எம்.1 என்ற நவீன துப்பாக்கியை தூர வைத்துவிட்டு ஓய்வெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

அதனை ஏற்க மறுத்த சேத்தன், உயரதிகாரி டிகா ராம் மீனாவிடம் தனக்கு இன்று ஒருநாள் விடுப்பு வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த டிகாவும் ஆர்.பி.எஃப் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு சேத்தனுக்கு பதில் வேறு காவலரை அனுப்புமாறு தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால் சில மணி நேரங்களில், தான் சரியாகிவிட்டதாகவும், பணியை தொடர்ந்து செய்வதாகவும் சேத்தன் மாற்றி கூறியுள்ளார். மேலும் ஆச்சார்யாவை தாக்கி, அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக 20 தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கியை பறித்து தன் வசம் வைத்துகொண்டதோடு, அதிலிருந்த பாதுகாப்பு அம்சத்தையும் நீக்கியுள்ளார்.

பின்னர் அதிகாலை 5 மணி அளவில் ஆச்சார்யாவும், பார்மரும் தங்களது கண்காணிப்பு பணிக்காக மற்ற பெட்டிகளுக்கு சென்றனர்.

அப்போது தனியாக இருந்த டிகா ராமுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் சேத்தன். அது முற்றிய நிலையில், துப்பாக்கியை எடுத்து டிகா ராமை நோக்கி 4 ரவுண்ட் சுட்டுள்ளார். ரத்தம் தெறிக்க உயிரிழந்த டிகா ராமின் சத்தம் கேட்டு பயணிகள் பதறியடித்து தூக்கத்தில் இருந்து எழுந்தனர் அப்போது அதே பெட்டியில் பயணித்த 62 வயதான காதர் பன்புர்வாலா என்ற இஸ்லாமிய முதியவரையும் சுட்டு கொன்றுள்ளார் சேத்தன்.

அடுத்த 40 நிமிடங்களில் துப்பாக்கியுடன் அடுத்தடுத்த கோச்சுகளுக்கு  சென்ற சேத்தன் சமையலறை பெட்டியில் இருந்த சதர் முகமது உசேன் என்பவரை சுட்டுக்கொன்றான்.

தொடர்ந்து எஸ்6 என்ற 2ஆம் வகுப்பு பெட்டிக்கு சென்று அங்கிருந்த அஸ்கர் அப்பாஸ் அலி (48) என்பரையும் சுட்டு தள்ளினார்.

மேலும் ரத்தவெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிய அலியின் அருகே நின்றபடி, துப்பாக்கியை ஏந்தியபடி கூலாக,  “நான் சுட்டுக்கொன்றவர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள். ஊடகங்கள் இவர்களை (முஸ்லிம்களை) அவ்வாறு தான் காட்டுகின்றன. இந்தியாவில் வாழ விரும்பினால் மோடிக்கும், யோகிக்கும் மட்டுமே வாக்களிக்க வேண்டும்” என்றும் மிரட்டியுள்ளார்.

4 பேரை அடுத்தடுத்து துடிதுடிக்க ரயில்வே போலீஸே சுட்டுக் கொன்றதால் மற்ற பயணிகள் அச்சத்தில் உதவி கேட்டு அலறினார்கள். தகவலறிந்த மற்ற இரு காவலர்களும் ரயிலில் நடந்துள்ள துப்பாக்கிச் சூடு குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதற்கிடையே அங்கிருந்த பயணிகளுள் ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுக்க, ரயில் மீரா ரோடு மற்றும் தாஹிசார் ரயில் நிலையங்களுக்கு இடையே நின்றது. அப்போது துப்பாக்கியுடன் குதித்து வெளியே தப்பி ஓடியுள்ளார் சேத்தன். அவரை துரத்தி சென்ற அரசு ரயில்வே போலீசாரையும் (ஜி.ஆர்.பி) நோக்கி துப்பாக்கி காட்டி சேத்தன் மிரட்டிய நிலையில் கால் தவறி கீழே விழுந்துள்ளார்.

துப்பாக்கி அவரிடம் இருந்து சில அடி தூரம் தள்ளி விழுந்ததை கண்டு சுதாரித்து கொண்ட ரயில்வே போலீசார், சேத்தனை அப்படியே அமுக்கியதோடு, துப்பாக்கியையும் அதில் மீதமிருந்த 8 துப்பாக்கி குண்டுகளையும் கைப்பற்றினர்.

மேலும் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்த அனைவரின் சடலங்களும் அடுத்து வந்த போரிவலி ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கண்டிவலியில் உள்ள அம்பேத்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

நான்கு உயிர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற சேத்தனை கைது செய்து  போரிவலி சிறையிலடைத்த போலீசார் அவர் மீது ஐபிசி 302, ரயில்வே சட்டம் 152, ஆயுத சட்டம் 3, 25, 27 உள்ளிட்ட கடும் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மும்பை நீதிமன்றத்தில் (ஆகஸ்ட் 1) சேத்தன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை ரயில்வே போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து விசாரிக்க கூடுதல் ஆர்.பி.எஃப் இயக்குனர் தலைமையில் 5 பேர் கொண்ட உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

சேத்தனால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆர்.பி.எஃப் உதவி ஆய்வாளார் டிகா ராம் குடும்பத்தினருக்கு காப்பீடு, பென்சன் உள்ளிட்டவைகளுடன் சேர்ந்து ரூ.55 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.  உயிரிழந்த மற்ற 3 பயணிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் ஆர்.பி.எஃப் காவலர்களுக்கு பாதுகாப்புக்காக வழங்கப்படும் ஆர்.கே. 47 துப்பாக்கியின் நவீன தயாரிப்பான ஏ.ஆர்.எம்.1 துப்பாக்கிகள் அளிப்பதை மறுபரிசீலனை செய்யவும் ரயில்வே முடிவெடுத்துள்ளது.

RPF soldier who shot innocents

*யார் இந்த சேத்தன் சிங்?*

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸை சேர்ந்தவர் சேத்தன் சிங். ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிளாக பணிபுரிந்த இவரது தந்தை 2009 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், சேத்தன் சிங்கிற்கு அந்த பணி வழங்கப்பட்டது.

முன் கோபம் கொண்டவராக அறியப்படும் சேத்தன் சிங் அடிக்கடி தன்னுடன் வேலைப்பார்க்கும் சக காவலர்களுடன் வாக்குவாதத்திலும், கைகலப்பிலும் ஈடுபடுவராம். முன்னர் மேற்கு ரயில்வேயின் ரட்லம் பகுதியில் பணிபுரிந்த அவர், சக ஊழியரை தாக்கியதாக ஏற்கெனவே அவர் மீது புகார் பதிவாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தான் அவரது கோரிக்கையின்படி பவாநகரில் இருந்து மும்பையின் லோயர் பரேலுக்கு மாற்றப்பட்டார்.

சேத்தன் சிங்கிற்கு பிரியங்கா சவுத்ரி(35) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஹத்ராஸில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இரண்டு வாரத்திற்கு முன்னதாக விடுப்பில் இருந்து பணிக்கு திரும்பிய சேத்தன் தற்போது இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.

RPF soldier who shot innocents

*இந்திய ரயில்வேயில் இது முதல்முறை!*

இதுகுறித்து பேசிய ஜிஆர்.பி கமிஷ்னர் ரவிந்திர ஷிஸ்வே, ”இந்திய ரயில்வே வரலாற்றில் ஓடும் ரயிலில் ஆர்.பி.எஃப் காவலர் ஒருவர் சுட்டுக்கொன்றுள்ளது இதுவே முதல்முறை. சேத்தனின் நடவடிக்கை அறியப்படாமல் இருந்தது ஆச்சரியமாக உள்ளது. அவரது முந்தைய குற்ற நடவடிக்கைகள் குறித்தும் தற்போது அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு விசாரிக்கும்” என்று அவர் கூறினார்.

அதே வேளையில், டிகா ராம் மற்றும் சேத்தன் ஆகியோர் வெவ்வேறு பணியிடங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கிடையே முன் பகை இருக்க வாய்ப்பில்லை என்றும், மேலும் டிகா ராம் சுடப்படும் போதும் வேறு RPF வீரர்கள் யாரும் நேரில் கண்ட சாட்சியாக இல்லாததால், சேத்தன் டிகா ராமை எதற்காக சுட்டார் என்பதில் குழப்பம் நிலவுகிறது.

இதற்கிடையே துப்பாக்கிச் சூடு நடத்திய 4 பேரை கொன்ற சேத்தன் சிங் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 6 மாதங்களாக அவர் மன நல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) மனநல மருத்துவ பேராசிரியர் டாக்டர் நந்த் குமார் கூறுகையில், “ஒரு நபர் இதுபோன்ற தீவிர நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன் சில அறிகுறிகள் தென்படும். மற்றவர்களுக்கு எதிராக வன்முறை மற்றும் தன்னை தானே தாக்கி கொள்பவராகவும் இருப்பார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஆர்.பி.எஃப் சப் இன்ஸ்பெக்ட்ர் மற்றும் 4 பயணிகள் என 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது அரசியல் ரீதியாகவும் விவாதிக்கப்படுகிறது.

*வெறுப்பு பிரச்சாரத்தின் விளைவு?*

முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த சம்பவத்தின் வெறுப்பு பிரச்சாரத்தின் விளைவுக்கு ஒரு சான்று என்று கூறியுள்ளது.

காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பதிவில், “ஆர்பிஎஃப் கான்ஸ்டபிளால் நடத்தப்பட்ட ரத்தக் கொலைகள், அதிகமாக உருவாக்கப்பட்ட வெறுப்பு பிரச்சார சமூக ஊடகத்தின் ஒரு விளைவாகும். வெறுப்பின் பூதம் பாட்டிலில் இருந்து இப்போது வெளியே வந்துவிட்டது. அதை மீண்டும் உள்ளே வைக்க நிறைய கூட்டு முயற்சி தேவைப்படும்.

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் எம்பி அசாதுதீன் ஒவைசி, இந்த சம்பவத்தை முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்றும் முஸ்லீம் விரோத வெறுப்பு பேச்சு மற்றும் அதனை ஆதரிக்கும் பிரதமர் மோடியின் வெளிப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்திய அரசின் கோரிக்கையின் பேரில் அவரது ட்வீட் சில மணி நேரங்களில் எக்ஸ் நிறுவனத்தால் முடக்கப்பட்டது.

RPF soldier who shot innocents

ஏற்கெனவே இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான பாஜக ஆளும் மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் தாக்குதல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சிறுபான்மை மக்களான பழங்குடியினத்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பாஜக அரசு உதவி செய்கிறது என்றும், கலவரத்தை தடுக்க மாநில மற்றும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

இதற்கிடையே நாடு முழுவதும் அவ்வபோது தலித், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் பாஜக தலைவர்களின் வெறுப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நூற்றுக்கணக்கான பயணிகள் மேற்கொண்ட ரயில் பயணத்தில் 3 இஸ்லாமியர்கள் மட்டும் குறிவைத்து சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் நாட்டு மக்களிடையே பலத்த சந்தேகத்தையும், அரசியல் கட்சிகளின் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

“நீதிமன்ற நடவடிக்கைகளால் கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை” – அமலாக்கத்துறை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நிராகரிப்பு: ஓ.பி.ஆர். எம்பி. பதவி இழப்பு!

+1
0
+1
0
+1
0
+1
7
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *